சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 23 January 2026

அசுத்தமான பிராணி..

 


மாட்சிமை தங்கிய காட்டு சிங்க ராஜா தனது சிங்க ராணி வேட்டையாடி கொண்டு வந்த விலங்கை சாப்பிட்டுவிட்டு, ராணி சகிதமாக தர்பாருக்கு வந்து அமர்ந்தார். 

அவர் என்றைக்கு வேட்டைக்கு போய் இருக்கிறார்., ராணி வேட்டை ஆடுவதை தின்றுவிட்டு இருக்க வேண்டியதுதானே.... அது அவருடைய பிரச்சனை அது எப்படியோ போகட்டும், அது அவர்களின் குடும்ப பிரச்சனை... 

தெம்பாக வந்து அமர்ந்தார். மற்ற எல்லா விலங்குகளும் வந்து அமரலாயினர். அவருடைய பிரதான மந்திரியான யானையார் மட்டும் வர காணோம். கூட இருந்த நரி மந்திரியார் நைசாக சிங்க ராஜாவை சீண்டி விட பார்த்தார். 

 "எப்ப பார்த்தாலும் யானையார் ஆடி ஆடி சபைக்கு வருவதற்குள் காலம் கடந்து விடுகிறது" 

சிங்கராஜா சொன்னார்.. "அதற்கென்ன செய்வது அவர் உடல்வாகு அப்படி.. , கொஞ்சம் பொறுத்துதான் ஆரம்பிப்போமே என்ன கெட்டுப் போச்சு" என்றார். லேசான பிளிறலுரடன் யானையார் அசைந்தாடி லேசாக நொண்டியவாறு தர்பாருக்கு வந்து அமர்ந்தார். 

சிங்க மகாராஜா யானையாரைப்பார்த்து பாசத்தோடு கேட்டார் "ஏன் நொண்டின மாதிரி வருகிறீர்களே".

"அசிங்கம் பிடிச்சவங்க காட்டையே அசுத்தமாக்கிட்டாங்க... கால் வச்சு நடக்க முடியல, கால்லே காயமாகி போச்சு.."  என்று யானையார் புலம்ப ஆரம்பித்தார்.. 

 சிங்க ராஜாவுக்கு அதிர்ச்சியாகி விட்டது. நாம விலங்குகளை சாப்பிட்டு போட்ட எச்சத்தை தான் யானை திட்றார் போல இருக்கு என்று முழிக்க, சிங்க ராணி குறுக்கிட்டு" நம்ம குழந்தைகள் எல்லாமே முழுசா சாப்பிடுறாங்களே வீணடிக்கிறது இல்லையே" என்று பதிலளித்தார். 

அதற்குள் நரியார் தலையிட்டு "அப்படியே மிச்சம் விழுகிற இறைச்சியை நாங்க சாப்பிட்டுடுவோமே அப்படி எல்லாம் குப்பையாக்கறது இல்லையே" என்றார்.

யானையார் வாய் திறந்து ஏதோ சொல்ல முயற்சியில் கழுகார் சொன்னார்" நீங்க எல்லாம் மிச்சம் வைக்கிறத எங்க கழுகினம் சாப்பிட்டு இன்னும் சுத்தமா ஆக்கிருமே.. அப்படி எல்லாம் குப்பையாக வருவது இல்லையே" என்றார்.

சிங்க ராஜா கர்ஜித்து அப்படி எந்த பிராணி காட்ட அசுத்தம் ஆக்குவது என்று கத்தினார். 

“கழுதைப்புலிகள் தான் கண்ணா பின்னா வென்று வேட்டையாடி தின்கிறார்கள் என்று நரி குறுக்கிட்டு கூறினார்கள். 

கழுதைப்புலியார் எழுந்து பவ்யமாக "சிங்கராஜா எங்களுக்கே பத்தாம கெடச்சது எதுவா இருந்தாலும் நாங்க முழுசா சாப்பிடுறோம்.. அப்படி எல்லாம் அசுத்தமாக்குறது இல்ல" என்றார். 

உடனே ஆளாளுக்கு அந்த விலங்கா இருக்குமோ, இந்த விலங்கா இருக்குமோ என்று இரைய ஆரம்பித்தார்கள். 

உடனே ஓநாயார் பன்றி தான் என்று போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார். காட்டுப்பன்றியோ " நாங்கள் கண்ட இடத்தை அசுத்தம் ஆக்குவது இல்லை. சுத்தமான இடத்தை அசுத்தமாக்கிறவங்க நாங்க இல்லை. "என்றார். 

முயலா இருக்குமோ அதாக இருக்குமோ இதாக இருக்குமோ என்று ஆளாளுக்கு சொல்ல, எல்லா விலங்குகளும் எழுந்து "இயற்கையில் என்ன இருக்கோ அத நாங்க கெடுக்கிறதே கிடையாது" என்றார்கள். 

மதி மந்திரி நரியாரும்" நம்ம விலங்கினத்தைச் சேர்ந்தவங்க யாருமே அப்படி எல்லாம் காட்டை அசுத்தமாக்குறது இல்ல.. அப்படியே வர்ற கழிவ கூட தாவரங்கள் எல்லாம் பயன்படுத்துது. நாம கெடுக்கிறது இல்ல... இங்கே எல்லாம் அசுத்த பிராணி யாருமே கிடையாது" என்றார்.. 

கொஞ்சம் அமைதியானதும் சிங்கராஜா யானையாரிடம்" யார் தான் அசுத்தம் ஆக்குகிறது" என்று கேட்டார்.

யானையார் பொறுமையோடு பேச ஆரம்பித்தார்.. 

" நான் இங்கே இருக்கக்கூடிய நம்ம காட்டு விலங்குகள் எதையுமே குறை சொல்லல... எல்லாமே இந்த மனுஷ பதருங்க செய்யும் வேலை தான்... இந்த மனுஷ பதருங்க தான் அவங்க ஊரை கெடுத்ததும் இல்லாம நம்ம காட்டுக்குள்ளேயும் புகுந்து நாசம் பண்றாங்க... கண்டதை சாப்பிட்டு கண்ட இடத்துல வீசிட்டு போயிடுறாங்க... இந்த குடிகார ஜென்மங்கள் எல்லாத்தையும் குடிச்சிட்டு பாட்டில வீசி எறிஞ்சிட்டு போயிடறாங்க. கண்ணாடி பாட்டில் உடைஞ்சிடுது.. காட்டுக்குள்ள நாங்க போகும்போது எங்க கால்ல குத்தி புண்ணாகி எங்க யானையெல்லாம் நிறைய பேர் செத்துட்டு இருக்காங்க.. பிளாஸ்டிக் சாமான்களையும் கொண்டு வந்து இங்கே கொட்டிறாங்க.. அதனால நம்ம காடும் குப்பையாகிட்டு வருது.. நாம போற பாதையை அவங்க இஷ்டத்துக்கு மடிச்சுக்கிட்டு நாசம் பண்றாங்க. "

கோபமா புலி உறுமியது.." சிங்கராஜா! நம்ம காட்டுக்குள்ள அவங்க புகுந்து அட்டகாசம் பண்ணி வீடெல்லாம் கட்டிட்டு நம்மள, புலி ஊருக்குள்ள புகுந்துருச்சு. காட்டுக்குள்ள புகுந்துவிட்டதுன்னு கலாட்டா பண்றாங்க. கூண்டு வச்சு பிடிக்கிறாங்க... சுட்டு கொல்றாங்க... என்ன அநியாயம் இது.. கேக்குறதுக்கு நாதி இல்லையா?! "

நரியாரும் இடையில புகுந்து சொன்னார்" காட்டை அவங்க பறிச்சுகிட்டு, வன பாதுகாப்பு சட்டம்னு அவங்களே போட்டு வனத்துக்குள்ள இருக்குறவங்கள துரத்தி கொன்னுட்டு இருக்காங்க"

இருக்கிறதிலேயே வயது முதிர்ந்த நரியார் சொன்னார்" அட நீங்க வேற! அவங்க காட்டுக்குள்ள இருக்குற விலங்குகளை மட்டும் கொல்லலை. மற்ற மனிதர்களையே வாழ விடாமல் துரத்தி நாசம் பண்ணிட்டு இருக்காங்க"

சிங்கராஜா ஆச்சரியப்பட்டு" என்ன மனுஷங்க மனுஷங்களையே கொடுமை படுத்துறாங்களா" என்றார்..

நரியார்" காக்காவை கேட்டு பாருங்க அது சொல்லும்" என்றார் 

காகம் பவ்யமாக கூறியது" ஆமா மகாராஜா... மனுசங்க தான் வாழ்வதற்கு என்று ஊரெல்லாம் ஒழுங்கா கட்டி சுத்தமாய் இருக்கிறது என்று ஏற்பாடெல்லாம் பண்ணிட்டா கூட ஒருத்தனும் மதிக்கிறது இல்ல... தான் வாழ்ந்தா அடுத்தவன் நாசமா போகட்டும்னு சொல்லி பொது இடத்துல, அடுத்தவன் இடத்துல, கண்ட கண்ட இடத்தில குப்பையை கொட்டுறது, சாக்கடைய விடுறதும், அடுத்தவன் பொருளை திருடி திங்கிறது, காட்டை அழிக்குறது, மத்தவங்க நாட்டை அழிக்குறதுன்னு மகா கேவலமா வாழ்ந்துட்டு இருக்காங்க... ஆனா கேட்டா நாங்க ஆறறிவு படைச்சவங்க, படிச்சவங்க, நாகரிகமானவங்க, அப்படின்னு சொல்றாங்க". 

சிங்கராஜா இறுதியா சொன்னாரு "ஓ இருப்பதிலேயே கேவலமான அசுத்தமான பிராணி மனுஷ பதருங்கதான். அவங்கள விட்டு நாம விலகி இருக்க தான் நமக்கு நல்லது என்றார்... 




No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...