சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 31 August 2025

பூங்கோதை

 மல்லிபூ ....

   பிச்சிபூ.....

முல்லைப்பூ ....

         என

தொண்டை வரள  

கூவி விற்றவளின் 

கொண்டையில்     

பூ வில்லை.....

பூ விற்கும் பூங்கோதைக்கு தலைநிறைய பூ வைக்க ஆசைதான் ஆனால் இயலவில்லை. சின்ன வயசுல இருந்து அவளுக்கு பூ வைக்கிறதுன்னா ரொம்ப ஆசை. அவளை அவளுடைய சினேகிதிங்க பூங்கோதைன்னு முழுப்பேரை சொல்லி கூப்பிட மாட்டாங்க. பூவு பூவுன்னு தான் கூப்பிடுவாங்க.  பூங்கோதைன்னு என்று முழு பெயரும் அழகா கூப்பிட வேண்டியதுதானே அப்படின்னு அவங்க அம்மா கத்துவாங்க. ஆனாலும் அவளுகளும் பூவுன்னு தான் கூப்பிடுவாங்க இவளும் பூவுன்னு கூப்பிட்டா சந்தோசப்படுவா..

சின்ன வயசுல அவங்க அம்மா அழகா தலைவாரிபின்னி பூ வைச்சு பள்ளிக்கு அனுப்புவாங்க. அவள் பெரியவள் ஆனப்ப தாய் மாமன் அவ்வளவு நிறைய பூ வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். இப்பவே கல்யாணத்துக்கு பூ வெச்சாச்சு போல இருக்கு எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.

அவள தாய்மாமனுக்குத்தான் கொடுக்கிறது என்று சின்ன வயசுல இருந்தே பேச்சு அந்தப் பகுதியில் தாய்மாமனுக்குத்தான் அதிகம் பேர் பொன்னைக்கட்டி கொடுப்பார்கள். அதனால அவளுக்கு நிச்சயதார்த்துக்கு பூ வைக்கும் போது கூட நிறைய பூ வாங்கி வந்தான் மாமன். இத்தனைக்கும் சீசன் இல்லாத போது, இவ்வளவு கூட விலை கொடுத்து ஏன் வாங்கினே என்று அவஅம்மா தம்பிட்ட சத்தம் போட்டா. பூங்கோதைக்கு பூவுன்னா ரொம்ப இஷ்டம்க்கா என்றான் தாய்மாமன்.

அவ தாய் மாமனுக்கு பொண்ணு கொடுப்பதில் அவங்க அப்பாவுக்கு அதிகம் இஷ்டம் இல்லை. குடிப்பான், குணம் சரியில்லைன்னு அவருக்கு இஷ்டம் இல்லைன்னு அவ அம்மாவிடம் சொல்லிப் பார்த்தார். அவனுக்கு என்ன குறைச்சல் மேஸ்திரி வேலை பாக்குறான் கட்டட வேலை நிறைய இருக்கு கை நிறைய சம்பாதிக்கிறான், அப்புறம் என்ன, தம்பிக்கு தான் கொடுக்கணும்னு அவ அம்மா ஒத்த கால்ல நின்னா. வேற வழி இல்லாம சம்மதம் கொடுத்தார்.

அப்புறம் என்ன, கோயில்ல கல்யாணம் வீட்ல சாப்பாடு அப்படின்னு யாரும் ஜாம் ஜாம் என்று கல்யாணம் நடந்துச்சு. சீக்கிரமா ரெண்டு பிள்ளை குட்டி ஆச்சு. ஆனால் பீடி, குடின்னு இருந்ததுனால பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டான். 

ஒத்த பொம்பள புள்ள அப்படின்னு செல்லமா வளர்த்த பூவோட நிலமையை பார்த்த அவளோட அப்பா அம்மா சீக்கிரம் போய் சேந்துட்டாங்க.

மாமனும் பெருசா பணம் காசு சேர்த்து வச்சிட்டு போகலை.அம்மா, அப்பாவும் பெருசா எதுவும் வைக்கலை. அதனால வேற வழி இல்ல புள்ள குட்டிய காப்பாத்தனும், வயத்த கழுவனும்னு நாலு வீட்டுக்கு வேலைக்கு போனா. மிச்ச நேரத்துல பூ கட்டி வியாபாரம் பண்ணி பொழப்ப நடத்தினா..

அவ்வளவு நல்ல வடிவானவள் தான். அழகானவள், துணை இல்லாமல் இருக்கான்னு ஆளாளுக்கு தூண்டி போட்டு பார்த்தாங்க. ஆனாலும் கவுரவமா வாழ்ந்தாள். 

அவளுக்கும் பூ வைக்க ஆசைதான். ஆனால் பூ வைக்கிறத சமுதாயமும், சம்பிரதாயமும் ஏத்துக்காது அந்த பூவை வித்தா வீட்டுசெலவுக்கு ஆச்சு அதனால பூ வைக்கிற ஆசையை தூரப்போட்டாள்.

விசேஷ நாட்கள் கோயில் பக்கத்துல பூ விற்பாள். மத்த நாட்களில் வீதிகளில் எடுத்துட்டு போய் வித்துட்டு வருவாள்.

ஒரு நாள் என்னவோ தெரியல, அன்னைக்குன்னு பூ அதிகமா விக்கல. கோயில் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள். ஒரு பெரியவர் நிறையவே பூ கேட்டார். இவ எடுக்கும் போது, கூட வந்த அம்மா அவரோட கையை பிடித்து வேண்டாம்னு சொல்லிட்டு கூட்டிட்டு போயிட்டாள். போகும்போது புருஷன் கிட்ட விசேஷத்துக்கு பூ வாங்குறோம். தாலி அறுத்தவட்டயா வாங்கறது அப்படீன்னா.

இவளுக்கு சுறுக்குன்னு இருந்தது. கூனிக்குறுகிப்போனாள்.தூக்கம் வரவில்லை ராவெல்லாம் யோசிச்சு பார்த்தா. 

அடுத்த நாள் மாலை ஒரு ஸ்டிக்கர் பொட்ட வச்சுட்டு. தலைக்கு கொஞ்சமா பூ வச்சுட்டு,கோவில் வாசலில்பூவிற்க உக்காந்தாள். 

Saturday, 30 August 2025

மலிந்து விட்டனவா மாநாடுகள்..

 பொதுவாக உலகமெங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், தங்களுடைய செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், தங்கள் அமைப்புகளை வளர்த்துக்  கொள்ளவும் மாநாடுகள் நடத்துவது வழக்கம்.


அமைப்பு ரீதியான செயல்பாடுகள் பற்றியும், தங்கள் உறுப்பினரிடம் கடந்த காலங்கள் பற்றிய விமர்சனம் செய்யவும், எதிர்காலத்திற்கான திட்டமிடுதலுக்காகவும் நடத்துவார்கள். 


பொது மாநாடுகள் சில தலைப்புகளில், அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்காகவோ மக்களை திரட்டி அதன் மீது விளக்கமளித்து தங்களது கொள்கைகளை பரப்பும் செயலில் ஈடுபடுவார்கள். 


பெரும்பாலும் காங்கிரஸ் இயக்கம், பொதுவுடமைக் கட்சிகள், திராவிட இயக்க கட்சிகள் தங்களுடைய மாநாடுகளை நடத்துவது வழக்கம். 


பொதுவுடமை கட்சிகளுடைய மாநாடு அமைப்பு ரீதியாக மிகவும் திட்டமிட்டு கறாராக நடத்துவார்கள். பொதுச் செயலாளர் அறிக்கை, அமைப்பு ரீதியான அறிக்கை, என கடந்த மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடையில் நடைபெற்ற வேலைகள், சந்தித்த பிரச்சனைகள், அமைப்பு ரீதியாக ஏற்பட்ட பலம், பலவீனங்கள் ஆகியவற்றை அறிக்கையாக சமர்ப்பித்து, அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெறவும், செயலாளர் அவை குறித்து விளக்கம் அளித்து, எதிர்கால திட்டமிடுதலை அறிவித்தல் வழக்கம். 


திராவிட இயக்கங்களுடைய மாநாடுகளும் அவ்வாறு தான் நடைபெற்றது. 1957க்கு முன்னாள் சமூக இயக்கமாக வந்த திராவிட முன்னேற்ற கழகம், அரசியல் கட்சியாக தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக மதுரை திருப்பரங்குன்றம் மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து தேர்தலில் பங்கேற்கலாமா என வாக்கெடுப்பு நடத்தி, ஜனநாயக பூர்வமாக தேர்தலில் பங்கேற்பது என அறிவித்தார்கள். அவ்வளவு சிறப்பாக எந்த இயக்கமாவது ஜனநாயகப்பூர்வமாக செயல்பட்டிருப்பார்களா என்பது தெரியவில்லை.


1943 இல் இந்திய பொதுவுடமைக் கட்சி 23 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான 10 நாட்கள் பம்பாயில் நடைபெற்றதாகவும், பொதுச்செயலாளர் ஜோஷிஅறிக்கை சமர்ப்பித்து 9 மணிநேரம் பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதே போல காங்கிரஸ் பேரியக்கங்களும் 1895 லிருந்து ஆண்டிற்கு ஒரு முறையாவது தேசிய மாநாடுகள் நடத்தி பல்வேறு விஷயங்களை விவாதித்து வருகின்றனர். குறைந்தது இரண்டு நாள், மூன்று நாட்களாவது நடைபெற்றதாக வரலாறு. 


அதேபோல பல்வேறு அமைப்புகள், மாநாடுகளை கூட்டி கருத்துருவை உருவாக்குதல், கருத்துக்களை கொண்டு சென்று சேர்த்தல் என செயல்பட்டுள்ளனர். 


ஆனால் இதெல்லாம் மாறி சினிமா கவர்ச்சியை நம்பி அரசியல் என்று வந்த பிறகு மாநாடுகள் எல்லாம் நலிந்து ஒரு கேலிக்கூத்தான நிகழ்வுகளாக மாறி போய் விட்டன. 


மாநாடுகள் என்றால் ஏராளமான மக்களை திரட்டி நாட்டை ஸ்தம்பிக்க வைப்பது தலைவர்கள் பேசுவதை மக்கள் கேட்டுக்கொள்வது, அல்லது வேடிக்கை பார்த்துவிட்டு போவது என்று மாறிவிட்டன. 


இது குறித்து உதாரணங்களை கூறினால் அவ்வளவு சிறப்பாக இருக்காது அல்லது கோபித்துக் கொள்வார்கள் என்பதால் அவற்றைப் பற்றி எழுத விருப்பமில்லை .

 ஆனால் எது எப்படியோ மாநாடுகள் என்றால் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், மதுபான கடைகள் ஆகியவற்றிற்கு கொண்டாட்டம். மக்களுக்கு திண்டாட்டம்....

 மற்றவகையில் அறிவுபூர்வமாக செயல்படுவது என்பது அபூர்வமாக கொண்டு போகிறது.. 



Thursday, 28 August 2025

சிந்தனைக்கு சில மொழிகள்

சொர்க்கத்துக்கான பாதை நரகமானது.. 
நரகத்துக்கான பாதையோ
சொர்க்கமானது.... 

செயலற்று சிந்தித்த 
பலமணி நேரத்தைவிட
சிந்தனையற்று சில நேர
செயல்பாடு மேலானது... 
போர்க்களத்தில் தோட்டக்காரனாய் இருப்பதைவிட      தோட்டத்தில்                  வீரனாக இருப்பதுமேல்.... 
சில நேரங்களில் நல்லவர்களை மோசமான இடங்களிலும் மோசமானவர்களை ஆலயங்களிலும் காணலாம்
தங்கள் திறனைப் பார்த்து, அவர்கள் அதற்கு ஏற்ப வாழவில்லை என்பதை அறிந்த ஒருவரை விட வேறு யாரும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
புறம் பேசுபவர்களிடம் அமர்ந்தால், எழுந்து செல்ல நேரிடும் போது நம்மையும் புறம் பேசுவார்கள்.. 
நீரை பற்றி கற்பதாலே      நீந்தி விட முடியாது
சினத்தை கட்டுப்படுத்திடும் போது நமக்கே தெரியும், எத்தனை மயிர் பிளக்கும் வாதங்களில் இருந்து விலகுகிறோம் என்று... 
அலைகளை ஒருபோதும் கட்டுப்பட்டிட இயலாது, ஆனால் இயலும் நீந்துவதன் மூலம்.... 
காதலையும் சாவையும் தவிர எல்லாவற்றையும் தேடு.. 
ஏனெனில் அவை இரண்டும் தானே உன்னை தேடி வரும்
கட்டாயம் செய்திடு அக்காரியத்தை, ஏனெனில் அவர்கள் சொன்னார்கள் உன்னால் முடியாதென்று.... 
நல்ல தகுதியான உடம்பு, அமைதியான மனம், அன்பு நிறைந்த இல்லம் இவற்றை நீ ஒருபோதும் வாங்க முடியாது, ஆனால் சம்பாதிக்க இயலும்... 
எது உனக்கானது இல்லையோ, அதை நீ உணரும் வரை உன்னை வருத்திக் கொண்டே இருக்கும்.. 
ஒழுக்கம் கொடூரமானது, ஆனால் வருத்தம் உங்களை உடைத்துவிடும்.
நான் நீ நினைப்பது இல்லை நான் நீ நினைப்பது நீ தான்

 

மோசமான வேலை Dirty job

 

கிடைக்கும் வேலை நல்ல வேலையா, மோசமான வேலையா,  சமூகத்திற்கு நன்மை அளிக்குமா அல்லது கெடுதல் அளிக்குமா என்று தீர்மானிக்கும் உரிமை , வேலையில்லாமல் அவதிப்படும் யாருக்கும் கிடைப்பதில்லை. மனைவி, குழந்தையுடன் வேலையில்லாமல், குடியிருக்கும் வீட்டிற்கு மூன்று மாதமாக வாடகைகூட கொடுக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் ஃபர்ஹாத் கிடைக்கும் வேலை எதுவானாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார். 


டர்ட்டி ஜாப் என்பது 2018 ஆம் ஆண்டு கோஸ்ரோ மசூமி இயக்கிய ஈரானிய குற்ற நாடகத் திரைப்படமாகும், இது வேலையின்மை சட்ட மாணவர் ஒருவர் மதுவை விற்று அமெரிக்காவிற்கு குடிபெயர கிரீன் கார்டை வென்றதைப் பற்றியது. அவரது குடும்பத்தினர் ஈரானுக்குத் திரும்ப முடிவு செய்த பிறகு, அவர் ஒரு கடினமான சூழ்நிலையில் விடப்பட்ட பிறகு அவரது உணர்ச்சிக் குற்றச்சாட்டு மற்றும் போராட்டத்தைப் பற்றி படம் பின்தொடர்கிறது. இந்த திரைப்படம் ஈரானில் படமாக்கப்பட்டது மற்றும் பிரைம் வீடியோ, டூபி மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் காணலாம்.

கதை கண்ணோட்டம்

இந்த படம் ஃபர்ஹாத்தை மையமாகக் கொண்டுள்ளது. சட்டம் பயின்ற மாணவரான ஃபர்ஹாத்திற்கு வேறு வேலை கிடைக்காததால் கள்ளத்தனமாக மது விற்கும் வேலையை மேற்கொள்கிறார். துளி கூட மது வாசனை பிடிக்காத அவர் வேறு வழியில்லாமல் அந்த தொழிலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தனது மாமனார், மனைவி எல்ஹாம் உட்பட யாருக்கும் தெரியாமல் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் தொழில் இருப்பதாக அவர்களை ஏமாற்றிவிட்டு, மது செய்கிறார்.   அவர் அமெரிக்க கிரீன் கார்டு பெற்று தனது மனைவி எல்ஹாம் மற்றும் மகன் நவிட்டுடன் தனது பன்முகத்தன்மை விசாவைப் பெறும் முயற்சியாக துருக்கிக்குச் சென்றார் செல்கிறார்.அவர் கடைசியாக ஒரு திருமண விருந்துக்கு சென்று சேர்ந்த மதுவின் விஷத்தன்மை காரணமாக பலர் இறக்கின்றனர். பலருக்கு கண் பார்வை பறிபோகின்றது. இந்த நிகழ்வு எதுவும் தெரியாமலேயே அவர் விசாரிக்கும் முயற்சியில் துருக்கிக்கு குடும்பத்தோடு சென்று விடுகிறார். துருக்கியில் இருக்கும்போது, ​​தான் கொண்டு சேர்த்த மதுபானங்களின் விஷத்தை காரணமாக பலருக்கு மரணம் மற்றும் குருட்டுத்தன்மை ஏற்பட்டது.


ஃபர்ஹாத் குற்ற உணர்வு மற்றும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார். மதுவிலக்கு போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு கள்ள மது தயாரித்தவரை கைது செய்கின்றனர். அவர் தப்பித்துக் கொள்வதற்காக ஃபர்ஹாத் மீது கைகாட்டி, திசைதிருப்பி விடுகிறார். மிகவும் நேர்மையான ஃபர்ஹாத்தின் மனைவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இரானுக்கு திரும்ப வலியுறுத்துகிறார். 


விஷம் பற்றிய செய்தி ஃபர்ஹாத்தை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் எதிர்பாராத சம்பவத்தால் அமெரிக்காவிற்கு குடிபெயரும் அவரது கனவுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. .


நேர்மையான மனிதரான    ஃபர்ஹாத்திற்கு குற்ற உணர்ச்சி ஒரு புறம், வெளிநாடு செல்லும் கனவு சிதைவுறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை மறுபுறம், தன் மனைவி மாமனாரிடம் மறைந்து அதனால் ஏற்பட்ட சங்கடமான நிலை, பையன் மீதான பாசம் எல்லாம் சேர்ந்து அவரை ஆட்டி படைக்கிறது.


பொருளாதார நெருக்கடி, வேலை இல்லா திண்டாட்டம், மதுவினால் ஏற்படும் சமூக பிரச்சனை அனைத்தையும் பிரதிபலிக்கக்கூடிய மிக அற்புதமான சமூகம் உணர்வுள்ள திரைப்படம் ஆகும்.


 ஃபர்ஹாத்தாக நடித்திருக்கும் பெட்ராம்ஷெரிஃபி மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

எல்ஹாமாக நடித்த எல்ஹாம் நமு தனது கனவனோடு ஏற்பட்ட முரண்பாடுகள், மது விற்பனையில் கனவன் ஈடுபட்டதை அறிந்து படும் ஏமாற்றங்கள் அனைத்தையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். 

நவீட்டாக வரும் குழந்தை நட்சத்திரமாக சாம்வாலிபூர் நடித்துள்ளார். 


வெளியான ஆண்டு: 2018

இயக்குனர்: கோஸ்ரோ மசுமி

Wednesday, 27 August 2025

காத்திருங்கள்

காத்திருங்கள்..                  காலம் கனியும் வரை காத்திருங்கள்... 


அததற்கான காலம்வரை அதிக நேரம் கொடுத்திடுங்கள்... 


மண் விதையை      முளைத்திட அவசரப்படுத்துவதில்லை.. 


விடியல் வேண்டுமென விரட்டுவதில்லை          சூரியன் இருளினை .... 


மெதுவாகக் கட்டப்பட்டது      வீழ்ந்து விடுவதில்லை விரைவில் ஒருபோதும். 


ஒவ்வொரு தாமதமும்  அடித்தளத்தை வடிவமைக்கிறது.. 


ஒவ்வொரு மௌனமும் உங்கள் வேர்களை வலுப்படுத்துகிறது.. 


காத்திருங்கள்           விளைவு அற்புதமாக இருந்திடவேண்டுமெனில்..  


 காத்திருங்கள்                காலம் கனியும் வரை காத்திருங்கள்...         

நம்பமுடியாத உண்மைகள்...




















 

Monday, 25 August 2025

அனைவரும் உறவினர்

 அனைவரும் உறவினர்கள்-

 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 

உலகிலுள்ள மக்கள் யாவரும் உறவினர்.

இவை உரைப்பதற்கு எவ்வளவு அருமையாக இருக்கிறது. 


நான் சில ஆண்டு காலம் புதுடில்லியிலே பணியாற்ற வேண்டி இருந்தது. 

அதேபோல சில காலம் அபுதாபிக்கு சென்றிருந்தேன். அங்கு யாராவது தெரிந்த முகம் இருக்காதா என்று ஏங்கி பார்ப்பது உண்டு. ஆசிய நாட்டு முகச்சாயலில் இருந்தால் கூட அருகில் சென்று பேசத் தோன்றும். அபுதாபியில் சில நேரம் பாகிஸ்தானியர் பங்களாதேஷ் மக்களுடன் பேசி இருக்கிறேன். நமக்குத் தெரிந்த இந்தியில் நாம் பேசினால், அவர்களுக்கு தெரிந்த இந்தியில் பதில் அளிப்பார்கள். அப்போது நமக்கு ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் வரும். அதேபோல இலங்கை வாழ் மக்களைக் கண்டால் தமிழிலே கதைக்கும் போது மகிழ்வாய் இருக்கும்.


 அதேபோல டெல்லியில் இருந்தால் போதும் சரி, வெளிநாட்டிலும் சரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நம்மூரை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் வரும். மணிப்பிரவாளமாக தமிழ், மலையாளம், தெலுங்கில் சில வார்த்தைகள், ஹிந்தியில் சில வார்த்தைகள், ஆங்கிலம் என கலவைமொழியாய் எல்லாம் கலந்து பேசுவோம். அந்த உரையாடல் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றால் மகிழ்ச்சி மிக அதிகம் ஆகிவிடும். அப்புறம் நமது மாவட்ட காரர் என்றால் சொல்லவே வேண்டாம். நமது தாலுகா, நமது ஊர் ஏன் நம் தெருக்காரர் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

ஒருமுறை வேட்டி சட்டையோடு டெல்லியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக ஓடோடி வந்து தமிழை கண்டேன், தமிழரை கண்டேன், என்று மகிழ்வோடு கைகுலுக்கி சென்றார்.

 தெரியாத ஊரில் தன் இனத்தவரை கண்டால் எப்படி மகிழ்வார்கள் என்பதை உணர்ந்து பார்த்தால் தான் தெரியும். இருந்தாலும் கூட இது சரியான உணர்வு தானா?! யாருமே தெரியாதவர் இருக்கும்போது, ​​நமது தேசம், நமது மாநிலம், என்று ஆசைப்படுபவர்கள் சுருங்கி, சுருங்கி, சுருங்கி தெருக்காரர், உறவினர் என்றால் உச்சாணி கொம்புக்கு போய் விடுகிறோமே. இது நல்ல உணர்வு தானா?! 


பொதுவாக பார்த்தால் நன்றாக தோன்றினாலும், நம் தமிழ் கூறும் நல்லுலகு நமக்கு கற்றுக் கொடுத்தது அதுதானா.


யாதும் ஊரே, யாவரும் கேளிர்;தீதும், நன்றும், பிறர் தர வாரா;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு

வானம் தண் துளி தலைஇ ஆனாது,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே!

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார்

(புறநானூறு - 192)


எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.

என உரைத்ததல்லவா தமிழ் கூறும் நல்லுலகு. 


காக்கை குருவி எங்கள் ஜாதி என உரைத்த பாரதி எல்லா உயிரினங்களையும் தனது உறவினராக பார்த்தான். 

புல்லாகி பூடாகி என உரைத்த மாணிக்கவாசகர் எல்லா ஜீவராசிகளிலும் தன் உயிராக பார்த்தார். 

எல்லா உயிரினங்களையும் தன் உறவினராக, எல்லா ஊரையும் தனது ஊராக பார்த்த நேசித்த பேரறிவினையும், பேரன்பினையும் போதித்தது தமிழ் இலக்கியங்கள். 

ஆகவே தான் பாரதிதாசன் தனது புதிய ஆத்திச்சூடியில் "அனைவரும் உறவினர்" என உரைத்தான். 


அடுத்த வரியாகவே "ஆட்சியை பொதுமை செய்"என ஆட்சியை-பல நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள ஆட்சி அனைத்தையும், பொதுமை செய்-பொதுவான ஒரே ஆட்சி ஆக ஆக்க வேண்டும்      என்றுரைக்கிறார். 


இதையேதான் ரவீந்திரநாத் தாகூர் "பயம் இல்லாத மனம் எங்கே இருக்கிறது"என்ற பாடலில் இவ்விதமாக கூறுகிறார். 

பயம் இல்லாத மனம் எங்கே இருக்கிறது

மனம் பயமின்றியும் தலை உயரமாகவும் இருக்கும் இடத்தில்

அறிவு சுதந்திரமாக இருக்கும் இடத்தில்

உலகம் துண்டுகளாகப் பிரிக்கப்படாத இடத்தில்

குறுகிய உள்நாட்டுச் சுவர்களால்

வார்த்தைகள் வெளிவரும் இடத்தில்

சளைக்காத முயற்சி அதன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டுகிறது..

காரணம், இந்த உலகம் துண்டு துண்டுகளாக, பகைமை நிறைந்ததாக, சுயநலம் மிக்கதாக, பேராசை கொண்டதாக, அச்சம் மிகுந்ததாக இருக்கிறது. 


அதனால் தான், சாதி, மத, வர்க்க பேதங்கள், உள்ளிட்ட அனைத்து சமூக அவலங்களும் நீங்கி உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாக, சமூக நீதி நிறைந்த தேசத்தில் அனைத்தையும் பொதுமையாக கொண்ட தேசத்தில் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றுரைக்கிறார். 

உலகத்தார் அனைவரையும், விரோத பாவம் நீங்கி, தன் உறவினர் போல் பாவிக்கும் பண்பை இவ்வுலகம் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறது. 

அனைவரும் உறவினர்கள் என எண்ணி ஒற்றுமையுடன் இவ்வுலகம் வாழும் நாளே நன்னாள் அதுவே பொன்னாள் ஆகும்.. 

Saturday, 23 August 2025

படுகொலை இல்லம். திரைப்படம்





"படுகொலை இல்லம்"

"தி ஸ்லாட்டர்ஹவுஸ்" திரைப்பட விமர்சனம். 

 "தி ஸ்லாட்டர்ஹவுஸ்" என்று குறிப்பிடப்படும் முக்கிய பாரசீக திரைப்படம், அப்பாஸ் அமினி இயக்கிய 2020 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய குற்ற நாடகத் திரைப்படமாகும். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஈரானுக்குத் திரும்பும் அமீரைப் பின்தொடர்ந்து கதை அமைந்துள்ளது. தனது தந்தை பணிபுரியும் இறைச்சி கூடத்தில் ஒரு குற்றத்தை மறைப்பதில் ஈடுபடுகிறார்.

அமீர் தாயை இழந்து , பிழைப்பு தேடி பிரான்ஸுக்கு சென்ற இடத்தில் அங்குள்ள போலீஸ்காரனின் எலும்பை முறித்து காயப்படுத்தியதற்காக நாடு நடத்தப்பட்டு, மீண்டும் இரானுக்கு வந்து தந்தையிடம் சரண் அடைந்தவன்.அமீரின் தந்தை அபேத், மோட்வல்லி என்பவரது இறைச்சிக்கூடத்தில் காவலராக பணியாற்றியவர். அவரது கவனக்குறைவால் மூவர் இறைச்சி கூடத்தில் குளிரூட்டறையில் இறந்து விடுகிறார்கள். 

தகப்பனாரின் கெஞ்சலாலும் பாசத்தை மீற முடியாமலும் அந்த மூன்று பிணங்களை அப்புறப்படுத்தி புதைப்பதற்கு உதவி செய்கிறார் அமீர். இறந்து போன ஹாசேனுடைய மகளும் மகனும், தந்தையும் அவருடைய மைத்துனர்களும் இருவருடைய நிலை தெரியாமல் தேடி வருகிறார்கள். 

அபேத்தினுடைய முதலாளி மோட்வல்லி பெரிய அளவிலான இறைச்சி வெட்டும் தொழிலை நடத்தி நஷ்டம் அடைந்ததால், வெளி உலகத்திற்கு இறைச்சி வெட்டு தொழிலை செய்கிற மாதிரி பாவனை செய்து கொண்டு, அமெரிக்க டாலர் கள்ளப் பரிவர்த்தனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஈராக்கில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படும் டாலர்களை கைமாற்று தொழிலை செய்து வந்த ஹாசேன் மற்றும் மைத்துனர்கள் இருவரையும் திட்டமிட்டு குளிரூட்டும் அறையில் தள்ளிவிட்டு கொலை செய்து விடுகிறார். ஆனால் அபேத்தினுடைய கவனக்குறைவு என்று அவன் மீது பழி போட்டு அவரையும் அவரது மகன் அமீரையும் பயன்படுத்தி பிணங்களை அப்புறப்படுத்தி விடுகிறார். முதலாளி. 

அமீர், அவன் அறியாமலேயே அந்த கள்ள பரிவர்த்தனை கூட்டத்திலே சேர்ந்து பணியாற்ற ஆரம்பிக்கிறான். ஒருபுறம் தந்தையாரோடு பொருளாதார நெருக்கடி சம்பந்தமான மோதல், மறுபுறம் ரசீதுனுடைய மகனும் மகளும் தொடர்ச்சியாக தந்தையை தேடி அவனிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அலைவது, ஹாசேனுடைய சாவுக்கு யார் காரணம் என்று அறிந்து கொண்டு இறுதியாக அவனது மகளிடம் தெரிவித்து பிரச்சனைக்கு தீர்வு காண்கிறான். 

மனசாட்சி உள்ளவனாக, தந்தை மீது பாசம் கொண்டவனாக, தன்னை அறியாமலே தவறான பக்கம் சென்றாலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க முயற்சிப்பது என அமீராக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.. 

பிணத்தை அப்புறப்படுத்தி விட்டு அபேத் படும் அவஸ்தை, மகன் மற்றும் குடும்பத்தார் மீது கொண்டுள்ள பாசம், பொருளாதார பிரச்சனை, மகனுடன் மோதல் என அபேதாக நடித்திருப்பவர் பிரமாதமாக நடித்திருப்பார். 

கொல்லப்பட்ட தந்தை மற்றும் உறவினர்களை தம்பியுடன் விடாமுயற்சியுடன் தேடும் பெண் அஸ்ராவாக நடித்த பரன்கோசாரி மிக இயல்பாக நடித்துள்ளார். 

இறைச்சி கூட முதலாளியான மோட்வல்லியாக நடித்தவர், தனது சுய லாபத்திற்காக எல்லா தகிடுதித்தங்களையும் செய்து கொண்டு வெளி உலகில் மிக அமைதியானவர் போல காட்சியளிப்பவராக புதுவிதமான வில்லனாக நடித்துள்ளார். 

இரான் நாட்டின் பொருளாதார நெருக்கடி, பணம் சம்பாதிக்க நடைபெறும் கள்ளபரிவர்த்தனை, பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனிதர்கள் இவற்றை வைத்து பின்னப்பட்ட யதார்த்தமான பாரசீக திரைப்படம் இது. 

தலைப்பு: தி ஸ்லாட்டர்ஹவுஸ் (பாரசீக: கோஷர்கா)

ஆண்டு: 2020

இயக்குனர் மற்றும் எழுத்தாளர்: அப்பாஸ் அமினி

நடிகர்கள்: அமீர் ஆக அமீர்ஹோசைன் ஃபாத்தி, மோட்வல்லியாக மணி ஹாகிகி, அஸ்ராவாக பரன் கோசாரி, அபேத் ஆக ஹசன் பௌர்ஷிராசி ஆகியோர் நடிக்கின்றனர்.

பாரசீகம் மற்றும் அராபிய மொழியில் வந்த வித்தியாசமான திரைப்படம் இது. 


நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?!

 நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?! நடிகர்கள் நாடாள ஆசைப்படலாமா!என்ற கேள்வி அடிக்கடி அதிகம் கேட்கப்படுகிறது

ஏன் வரக்கூடாது யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வருவதற்கு உரிய வயது வேண்டும்.

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.. ஆண்பால், பெண்பால், திருநங்கைகள் எந்தப் பிரிவை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், விவசாயி, தொழிலாளி, முதலாளி, வேலை இல்லாதவர், நடிகர், எந்த தொழில் புரிபவராகவும், ஏன் பிச்சைக்காரராக கூட இருக்கலாம்.

எந்தப் படிப்பு படித்தவராகவும், ஏன் படிக்காதவராகவும் கூட இருக்கலாம். படித்தவர்கள் மட்டும் என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. எழுதப் படிக்கத் தெரியாமலேயே தனது நினைவாற்றினாலே இந்தியாவை ஆண்ட அக்பர் பேரரசர் உண்டு என்பது வரலாறு. நமக்கு எதுக்கு வரலாறு, அதைப் பேசினால் சண்டைக்கு வந்து விடுவார்கள். பெரிதாக பள்ளி படிப்பு படிக்காத காமராஜரும், கலைஞரும், முதல்வராக இருந்து ஜொலிக்க வில்லையா என்ன. நிறைய படித்துவிட்டு முட்டாள்தனமாக ஆட்சி நடத்துபவர்களும் இல்லையா என்ன. 

நல்ல ஆரோக்கியமான உடல்நலம், மனநலம் உள்ளவராக இருக்க வேண்டும். மனநலத்திற்கு என்ன சான்றிதழ் வாங்கி வர முடியும். அது அவரவர் செயல்பாட்டில் தெரிந்துவிடும். சரி, அதைப் பற்றி நான் பேசி இன்னொரு விவாதத்தை துவக்க விரும்பவில்லை. 

அரசுக்கு ஒழுங்காக வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். வரிஏய்ப்பு  செய்யாமல், தில்லுமுல்லு செய்யாமல், நேர்மையாக இருக்க வேண்டும், மக்கள் நலன் மீது அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும், நல்ல சிந்தனையாளராக, செயல்பாட்டு திறன் உள்ளவராக, அன்பானவராக, உளறாதவராக, எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் சொந்த புத்தி உள்ளவராக இருக்க வேண்டும்.

ஒழுக்கமானவராக, பிறருக்கு முன்மாதிரியாக இருப்பவராக, சுய கட்டுப்பாடு உள்ளவராக இருக்க வேண்டும். 

 இதெல்லாம் சட்டத்தில் கிடையாது. ஒரு பேச்சுக்கு தான் சொல்கிறேன்.

இப்படி எல்லாம் சொன்னால், அவர் எப்படி, இவர் எப்படி என்று ஒப்பிட்டு கேவலமாக பேசுவார்கள். ஒருபோதும் நேர்மையானவர்களை ஒப்பிட்டு, இவர் அவரை விட சிறந்தவர் என்று சொல்ல மாட்டார்கள். கேவலமான நடவடிக்கை உள்ளவரை ஒப்பிட்டு, அவரை ஏற்றுக் கொண்டீர்களே, இவர் ஏற்றுக் கொண்டீர்களே என்று பேசுவார்கள். இருந்தாலும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன். 

நடிகர்களை பற்றி பேச்சு வந்ததால் இந்த குறிப்போடு முடித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட காலத்தில் விஸ்வநாத தாஸ் என்று ஒரு ராஜபார்ட் நாடக நடிகர் இருந்தார். அவர் வள்ளி திருமண நாடகத்தில் எப்போதும் முருகன் வேடம் தான் போடுவார். அவர் எப்போது நாடகத்திற்கு வந்தாலும், கதர் ஆடை அணிந்து தேச பக்தி பாடல்களை பாடுவார். உடனே மேடையிலேயே, அல்லது மேடையை விட்டு இறங்கிய உடனேயே பிரிட்டிஷ் போலீஸ் அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பி விடும். சிறையில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் வந்தவுடன் அடுத்த நாடகத்தில் தேச பக்தி பாடல்களை பாட ஆரம்பித்து விடுவார். இப்படி பலமுறை தேச பக்தி போராட்டத்திற்காக சிறை சென்றவர் விஸ்வநாததாஸ். 

இப்படி நடித்துக் கொண்டிருக்க இலையே மேடையிலேயே முருகன் வேடத்தில் அமர்ந்தவாறு உயிர் துறந்து சரித்திரம் படைத்தார் அதேபோல கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தனக்குக் கிடைத்த அத்தனை சந்தர்ப்பத்திலும் சமூக முன்னேற்ற கருத்துக்களை கூறி நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவ்வாறு நல்ல உதாரணங்களை நிறைய சொல்லலாம். நமக்கு வேண்டியது, நல்ல சிந்தனை உள்ள, மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தீர்க்கக் கூடிய, அன்பு, அறநெறி கொண்டு ஆளக்கூடிய, அரசியல்வாதிகள் தான் வேண்டும். 

அவர் என்ன தொழில் செய்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த தகுதிகள் இல்லை என்றால் சினிமா துறையில் கிடைத்த புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவது என்பது, மக்களை ஏமாற்றி சுரண்டும் செயலே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 சினிமா துறையில் மட்டும் தான், மற்றவர்களுடைய சிந்தனை, பாடல்கள், கருத்துக்கள், எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, திரையில் முகம் காட்டுபவருக்கே, கருத்துக்கள் சொந்தமானதாக நம்பக்கூடிய மக்கள் நிறைந்திருப்பதால் இதைக் கூற வேண்டியது அவசியம் ஆகிறது.


வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும் பொய்யகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்ஙனும் மேலோர்


-பாரதி

Thursday, 21 August 2025

ஆயுசுக்கும் கூட வரவா....

 

ஆத்தோரம் போற புள்ள

ஆயுசுக்கும் கூட வரவா.... 


வேலையில்லா வெட்டி பசங்க

வெரட்டி வருவாங்க..


குடிக்க காசுக்காக

கொலைகூடசெய்வாங்க... 


குரங்கு புத்திகாரங்க

குலைத்திட திரிவாங்க..


சாதி வெறி கொண்டு

சழக்கர்கள் திரிவாங்க... 


அழகான பொண்ண பாத்தா

அனுபவிக்க துணிவாங்க... 


அழகான துணையாக 

ஆயுசுக்கும் கூட வரவா....


பார்த்தாலே புரியுமே...

பாசமோ, நேசமோ, 
காதலோ, எல்லாமே 
காசுக்கு பின்னாலே... 


கலையும், திறமையும், கவர்ச்சியின் முன்னே கவிழ்ந்திடும் தன்னாலே.... 
கண்ணுக் கழகாய்
கனவன் வேண்டுமென்று காத்திருந்த கன்னி
கடைசியில் போனாளே.. 

ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியென்றால்


ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியெனில்
அனுமதித்திடவாரோ எளிதில் 


அனைவரும் ஒன்றாய் அன்போடு அளவளாவி அமர்ந்திருந்த காலம் 
அன்று.... 

ஆளுக்கொரு திசையாய் அவரவர் கையில் அலைபேசியோடு அமர்ந்திருப்பது இப்போது.... 
என்னவென்று தெரியாமல் எட்டியிருந்து பார்க்கையில் ஆமாம் என்ற கருத்து 
அருகாமையில் சென்றால் அதுவே இல்லை என்றானது.... 

ஊரில் உள்ளவர் உரைப்பதை கேட்டால் 
ஊர் போய் சேர 
ஒரு நாளும் முடியாது

அவரவர்க்கு ஆயிரம் 
எண்ணம் 
அவரவர் தேவைப்படி
எட்டியிருந்து பார்ப்பவர் 
எண்ணப்படி மட்டுமே 
 எல்லாம் தெரியும்.. 
உள்ளது உள்ளபடி
உண்மையில் நடப்பது
அவரவர்க்கே தெரியும்... 
இதில் சொல்வதற்கு 
என்ன இருக்கிறது... 
அங்கம் குறைந்தாலும் 
சாதிக்க நினைப்பவருக்கு 
அது ஒன்றும் தடையில்லை. உள்ள உறுதியும் ஊக்கமும் திறமுமிருந்தால் சாதிக்க 
தடையேதும் இல்லை
ஒரே காட்சி 
சிந்தனையும் வழிகாட்டலும் அவரவர் எண்ணப்படி... 

அறிவியல் புதுமைகள் இல்லாத காலத்தில் கூட ஆனந்தமாய் இருந்தோம் அன்று.. 
அனைத்தும் கிடைத்தும் பதுமைகளானோம் இன்று...
அன்னையின் அருமை அறிந்த அளவு அப்பனின் அருமை புரிவதில்லை பலருக்கு
சொந்த நாவிருந்து இரவல் நாவினால் இன்னல் தானே வரும்... 
அவசியமான காலத்தில் கூட அமைதியாக இருப்பது சில நேரம்... 
திட்டமிடுகையில் எளிமையானதாம் வாழ்க்கை. 
செயலிலே காணுவாய்
 பெரும் சோதனையாய்.. 
இளமை இருக்கையில் பணம் நீ துரத்தி, 
பணம் சேரும்கால்
முதுமை உனைத்துரத்தும்
பெரு மழையோ புயலோ வெள்ளமோ இடையூறு ஆயிரம் தடைகள் தாண்டி வரும் உணவை நீ தள்ளாதே....
கால வெள்ளத்தில் 
காணாமல் போகும் இளமையும் செல்வமும்
இருக்கிற வரையிலே நேர்மையாய் அனுபவி... 

 

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...