"போர்: ஒருவரையொருவர் அறிந்திருந்தும் படுகொலை செய்யாத மக்களின் லாபத்திற்காக, ஒருவரையொருவர் அறியாத மக்களின் படுகொலை."--பால் வலேரி
உலகில் போரில் அவசியம் தான் என்ன?
எந்த காலத்தில் யாவது அதை நியாயப்படுத்த முடியுமா யோசித்துப் பாருங்கள்?
உலகத்தில் நடைபெற்ற எல்லா போர்களுமே ஏதோ ஒரு தரப்பு அநீதி அல்லது இருதரப்பு அநீதிகளின் மோதலாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, நிச்சயமாக இரு தரப்பு நீதிக்கான போர் என்பது இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
மனித குலம் நாகரீகம் அடைவதற்கு முன்னால் உணவுக்கும் தங்குமிடம் ஆகிய தேவைக்கான சண்டை என்பது இயற்கையானது. அது வாழ்வதற்கான போராட்டம் அது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது தவிர்க்க இயலாதது. (Survival of the fittest).
ஆனால் வளர்ச்சி அடைந்த பின்பு கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்பட்டோரை பார்த்து பொறாமை அடைந்து வளர்ச்சி அடையாதவர்கள் நடத்திய போர் தான் ஆரம்ப காலமான போர்கள் அநீதியான போர்கள்.
உதாரணத்திற்கு சிந்து சமவெளி பகுதிக்கு கீழ்ப்புறமாக இருந்த பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த, நகர நாகரீக வளர்ச்சி அடைந்த திராவிடர்களை அடக்குவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்ததுதான் இந்தியாவின் முதல் அக்கிரமமான போராட்ட இருந்தது.
அது இங்கு மட்டுமல்ல, உலகில் எல்லா பகுதிகளிலுமே சேர்த்து வைத்த சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவும், ஆக்கிரமித்து அடிமைப்படுத்துவதற்காகவும் நடந்த போர்கள் தான் இதுவரை வரலாறு கண்டிருக்கிறது.
மனிதன் கண்ட அரசுகள் யாவும் தாமே விரும்பி ஏற்றவை அல்ல. வலிமையானவர்கள் மற்றவர்களை அடக்கி உருவாக்கிய அரசுகள் தான் உலகமெங்கும் இருந்தது. அவை சிறு இன குழுக்களாகவும், சிறு பிரதேசங்களாகவும், சிறிய அரசுகளாகவும், அவர்களை விழுங்கிய பேரரசுகளாகவும், சாம்ராஜ்யங்களாகவும் உலகம் எங்கும் உருவானது.
காலம் காலமாக நிலையான அழிக்க முடியாத அரசு என்று இருந்ததே இல்லை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த பேரரசு காணாமல் போய் அந்த பேரரசு உருவாவது என்பது வரலாற்று விதி.
குப்த பேரரசும், மௌரிய பேரரசும், சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்களும் முகலாயப் பேரரசும் இது போன்ற எல்லா அரசுகளும் மாறி மாறி உருவாவதும் அழிந்து போவதும் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தது. சாஸ்வதமான, நிலையான, அழியாத பேரரசு என்பதை உலகில் எப்பொழுதுமே கிடையாது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். அப்படி ஆக்கிரமிப்பாளர்கள் படையெடுத்து வரும்போது அந்தப் பிரதேசங்களுடைய சொத்துக்களை சூறையாடுவதும் மக்களை கொன்று குவிப்பதும் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தது.
போர் என்றால் மன்னர்களும், தளபதிகளும், வீரர்கள் மட்டும் அடித்துக் கொண்டு சாவதில்லை. ஒன்றும் அறியாத பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் இதுவரை கோடிக்கணக்கான பேர் இறந்து இருக்கிறார்கள். அது சொத்துக்களும் சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்டன. இல்லை என்று யாராவது சொன்னால் அவருக்கு வரலாறு தெரியவில்லை என்று அர்த்தம். இல்லை என்றால் புளுகுகிறார் என்று அர்த்தம்.
நவீன தொழில் புரட்சிக்கு பிறகு விற்பனை சந்தைகளுக்கான போட்டி, பொறாமை, அதனால் உருவான காலனி ஆதிக்கம், அதை கைப்பற்றுதல், அதற்கான போர்கள். சிறுசிறு போர்களில் இருந்து உலகப்போர்களாக மாறி இன்று வரை நிகழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை போர்களும் ஆகும்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மனித உரிமைகள், அகதிகள் பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் ஆகியவற்றிற்கான உரிமைகள் என்பதெல்லாம் நிறைய பேசப்பட்டு தீர்மானங்கள் ஆக வந்திருந்தாலும், அவைகளை மேலாதிக்கம் கொண்டோர் ஒருபோதும் மதிப்பதில்லை.
எல்லா மனிதர்களும் ஏதேனும் ஒரு மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் மத நம்பிக்கையற்றவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எல்லா மதங்களும் அன்பு, கருணை என்று போதித்தாலும், அம்மதத்தைச் சார்ந்தோர் துளி கூட அவற்றை மதிப்பதில்லை. சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் என்று கட்டிக்கொண்டு அழுகிறார்களே தவிர மதங்கள் சொல்லி சொல்கின்ற கோட்பாடுகளை ஒருபோதும் மதிப்பதில்லை. ஆனால் தங்கள் மதம் தான் மிகச் சிறந்தது என்று பீத்திக் கொள்வதில் யாரும் குறை வைப்பதில்லை.
இதுவரை போர்கள், என்று வந்துவிட்டால் சாதாரண மக்களுடைய உடைமைகள், உயிர்கள் பாதுகாக்கப்படுவதில்லை. ஏன் உணவை கூட போருக்கான தந்திரமாக பயன்படுத்தி, உணவு, தண்ணீர் கிடைக்காமல் பட்டினி போட்டு மக்களை சாகடிக்க இவர்கள் தயங்குவதில்லை.
போர்களின் அவசியத்தை யாராவது ஒருவர் இதுவரை நிரூபித்தால் வரை நாமும் ஆதரிக்கலாம். இல்லையென்றால் இந்த அக்கிரமமான போர் ஒழிய வேண்டும் என்று தான் அத்தனை சமாதானத்தை விரும்பக் கூடிய மக்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.
ஒழியட்டும் போர்கள்... உருவாகட்டும் சமாதான சகவாழ்வு...
No comments:
Post a Comment