உலகிலேயே ஒரு சொல் பெயர் சொல்லாகவும், இனத்தின் பெயராகவும், வினைச் சொல்லாகவும் வினைப் பொருளாகவும் பண்பு பொருளாகவும் இருக்கிறதென்றால் அது பறை என்ற சொல்லாகத்தான் இருக்கமுடியும். பறை என்பது ஒரு சொல் எத்தனை விதமாக பொருள்களை கொண்டிருக்கிறது என்று ஆய்வு செய்தால் வியப்பிற்குரிய ஒன்றாகும்.
பறை என்ற சொல் இசைக்கருவியின் பெயராகவும், செய்தி சொல்வதாகவும், பேசுதலாகவும், ஒரு இனத்தின் பெயராகவும் பல அர்த்தங்களை குறிக்கிறது.
பறை என்பது ஒரு தமிழிசைக் கருவி. பறை என்பது தோலால் செய்யப்பட்ட தாள இசைக்கருவி. இது தோற்கருவிகளின் பொதுப்பெயர் ஆகும். இது .போர்ப்பறையாக போர்க்களத்தில் வீரத்தை வெளிப்படுத்தவும், எதிரிகளை மிரட்டவும் வெறியாட்டுப்பறையாக வெறியாட்டங்கள், திருவிழாக்கள் போன்ற சமயங்களிலும் , போர் வெற்றி, தோல்வி, அரசாணைகள் போன்ற செய்திகளை அறிவிக்க அறிவிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களான பெரு மழை,வெள்ளம்,புயல் போன்ற அறிவிப்புகளை எச்சரிக்கவும் பறை பயன்படுத்தப்பட்டது.இசை நிகழ்ச்சிகளிலும் பறை பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் கூறும் நல்லுலகம், புவியமைப்பின் தன்மைக்கேற்ப ஐவகை நிலங்களாக பிரிக்கப்பட்டு, வாழ்வியலில் பெருமையை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
அவ்வாறு அனைத்து ஐவகை நிலங்களிலும் பறை என்ற இசைக்கருவி எவ்வாறெல்லாம் இருக்கிறதென்று காணலாம்,
குறிஞ்சிப் பறை என்பது குறிஞ்சி நிலத்தோடு தொடர்புடைய பறையாகவும்,முல்லைப்பறை என்பது முல்லை நிலத்தோடு தொடர்புடைய பறை யாகவும்,,மருதப்பறை என்பது மருத நிலத்தோடு தொடர்புடைய பறையாகவும்,நெய்தற்பறை என்பது நெய்தல் நிலத்தோடு தொடர்புடைய பறையாகவும், பாலைப்பறை என்பது பாலை நிலத்தோடு தொடர்புடைய பறையாகவும், இருந்திருக்கிறது.
பறையெனும் இசைக்கருவி பண்டைய தமிழர் வாழ்வில் பல்வேறு இடங்களில் எவ்வாறெல்லாம் பயன்பட்டிருக்கிறதென்பதை காண்போம்.
பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து, தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது. "பறை" என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார். தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையர்குடியின் குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. . 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் மட்டுமே இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.
படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)
பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.
பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)
முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).
பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)
முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)
வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.
வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.
வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).
பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.
தமிழர் பண்டைக் காலத்தில் சுமார் 70 வகையான தோற்கருவிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். இவை, ‘அடக்கம், அந்தரி, அமுதகுண்டலி, அரிப்பறை, ஆகுளி, ஆமந்திரிகை,ஆவஞ்சி, உடல், உடுக்கை, உறுமி, எல்லரி, ஏறங்கோள், ஒருவாய்க்கோதை, கஞ்சிரா,கண்விடுதூம்பு, கணப்பறை, கண்டிகை, கரடிகை, கல்லல், கல்லலகு, கல்லவடத்திரள், கிணை, கிரிக்கட்டி, குடமுழா, குண்டலம், கும்மடி, கைத்திரி, கொட்டு, கோட்பறை, சகடை, சந்திரபிறை _ சூரியபிறை, சந்திரவளையம், சல்லரி, சல்லிகை, சிறுபறை, சுத்தமத்தளம், செண்டா, டமாரம், தக்கை, தகுணித்தம், தட்டை, தடாரி, தண்டோல், தண்ணுமை, தபலா, தமருகம், தமுக்கு, தவண்டை, தவில், தாசரிதப்பட்டை, திமிலா, துடி, துடுமை, துத்திரி, துந்துபி, தூரியம், தொண்டகச் சிறுபறை தோலக், நகரி, நிசாளம், படவம், படலிகை, பம்பை, பதலை, பறை, பாகம், பூமாடுவாத்தியம்,பெரும்பறை, பெல்ஜியக்கண்ணாடி மத்தளம், பேரி, மகுளி, மத்தளம், முரசு, முருடு,முழவு, மேளம், மொந்தை, விரலேறு என்பனவாகும்.
‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ எனப் பொருள்படும் ‘அறை’ என்ற சொல்லினின்று ‘பறை’ தோன்றிற்று. ப்+அறை--_பறை, அறை_பேசு அற்.(அடக்கியிருந்து நெருங்கிச்சேர்) +ஐ_அறை, அடிஅடித்து உரக்க ஒலி எழுப்புவது போலச் சொல் ‘அறை’ (பெயர்) சொல் (நன்னூல் 458).
பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி ‘பறை’ எனப்பட்டது. இதனைச் சங்கப் புலவர்
‘ஓர்த்தது இசைக்கும் பறை’ (கலி. 92:21, பழ.37:4) என்று குறிப்பர். போரில் அடைந்த வெற்றியைப் பறையால் சாற்றியதை, ‘இன்னிசைப் பறையொடு வென்றி நுவல’ (புற 225:10) என்றும் திருமணத்தின் போது பறையால் நாள் குறித்த செய்தியை நாலடியார்‘பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணம் செய்து கடிப்புக்க... (86) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்(23).
திருமண மண்டபம் முழங்க மண வாத்தியமாக நின்றவை, அன்றைக்கே, அங்கேயே அந்த மனிதர்க்குப் பிணப்பறையாய் ஒலித்தலும் உண்டு என நினைத்து, மாட்சிமையுடையோர் மனமானது, பிறவிப் பிணியினின்று நீங்கும் வழியையே உறுதியாய்ப் பற்றியிருக்கும் என நாலடியார் திருமணம் மற்றும் இறப்பு மங்கல அமங்கல நிகழ்ச்சிகளில் பறை பயன்படுத்தப்பட்டதை கூறுகிறது.
ஒரு செய்தியைப் பலரிடத்தும் சொல்லிக் கொண்டு திரிவதைப் ‘பறையடித்தல்’ என்று கூறுவது நாட்டுப்புற வழக்கு. இவற்றால் செய்தி அறிவித்தல் என்ற பொருளில் வழங்கிய ‘பறை’ என்ற சொல் நாளடைவில் செய்தியறி விப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தோற்கருவிக்கு உரிய சிறப்புப் பெயராகி வழங்கியுள்ளமை புலனாகின்றது. காலவோட்டத்தில் அதன் புழக்க மிகுதியால் பறையுடன் தொடர்புடைய பலவித தோற்கருவிகளின் பொதுப்பெயராக ஆகிய ஒரு பரந்தப் பொருளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தையும் நாம் அறிதல் வேண்டும்.
‘அறைபறை’ -_ வினைத்தொகை. அறை _ தெரிவி, சொல்லு, வரையறுத்துச்சொல்லுதல். அறைதல் _ இது வழிப்பொருள்
“அறைபறை யன்னர் கயவர்’’ (குறள்:1076)
“எம்போல் அறைபறை கன்னாரகத்து’’ (குறள்:1180)
“அறைபறை யெழுந்ததால்’’ (சிலப்:3.25:194)
“அறைபறை யெழுந்தபின்’’ (சிலப்.: 3.26:1)
“அறைபறை’ என்றன அரசர் கோமான்’’(கம்ப.பால 290:4)
“அறைபறை நின்று மோதிட’’ (திருப்புகழ். 774)
என அனைத்து இடங்களிலும் ஓங்கி ஒலிக்கச் செய்ததல், சொல்லுதல் என்ற வழிப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் அறைந்து ஒலியெழுப்பப் பயன்படுத்திய தோற்கருவிகளைப் ‘பறை’ எனும் பொதுப்பெயரால் குறிப்பிட்டுள்ளனர்.
பறை என்பது ஓடும் இசையை ஒழுங்குபெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என்பர். பறை என்பதனைக் கொட்டு, மேளம், முழவு என்று குறிப்பிடுவர்.
பறை – கருப்பொருள்
இசைக்கு இன்றியமையாத _ நெருங்கிய தொடர்பு உடைய பறையினைத் தொல்காப்பியர் கருப்பொருள்களுள் ஒன்றாகக் கொண்டமை பண்டைத் தமிழரின் இசையறிவுக்குச் சிறந்ததொரு சான்றாகும்.
தொல்காப்பியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பிரிவில் கருப்பொருள்களுள் ஒன்றாகப் பறை குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.
“தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப’’
(தொல்.பொரு.அகத்திணையியல்.18)
என்ற தொல்காப்பியக் கருப்பொருள் நூற்பாவின் வைப்பு முறையில் ‘பறை’வைக்கப்பட்டுள்ள பான்மை தோற்கருவிகளின் தொன்மைச் சிறப்பினை அறிய உதவுகின்றது. இந்நூற்பாவில்
பறை = கொட்டு, முழவு
செய்தி = செம்மையான தொழில்
யாழ் = பெரும்பண்
யாழ்பகுதி = சிறுகிளைப்பண்
எனச் செய்திக்கு (தொழிலுக்கு) முன்னும் புள்ளுக்குப் பின்னும் இசைக்கருவிகள் தொழிலோடு வைத்து எண்ணப்பட்டுள்ளது. ‘இனக்குழு மக்கள் செய்தொழிலுக்குச் செல்லும் முன் குழு உணர்வைப் பெறப் பறையைப் பயன்படுத்தினர் என்றும் செய்தொழிலுக்குப் பின்னர் உள்ளக் கிளர்ச்சி பெற யாழிசை நுகர்ந்தனர் என்றும் இந்த வைப்பு முறைக்கு விளக்கம் தரலாம் என கோ.கண்ணன் ‘பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு தொழில்களை மேற்கொண்ட தமிழ் மக்கள் அத்தொழில்களில் ஏதாவதொரு வகையில் பறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆகையால் தொல்காப்பிய நூற்பாவிலும் இக்கருவியை முன்வைத்துத் குறிப்பிட்டுள்ளனர் என்றும் கருத இடமுண்டு.
நிலவியல் பாகுபாட்டில் தமிழரின் பண்பாட்டை முழக்கும் கருவியாக பறை செயல்பட்டு வந்துள்ளது என்பதை விளக்கும் சூடாமணி நிகண்டு (ப.135) குறிப்பும் இதற்கு ஒரு சான்றாகும்.
நாராயணனே, நமக்கே பறை தருவான் - திருப்பாவை 1.
இறைவா நீ தாராய் பறை! ஏலோர் எம்பாவாய். - திருப்பாவை 28
இற்றைப் "பறை" கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு (தி:29 - டு இசைப்பாரே (தி:26
பறை=நோன்புக்கான இசைக்கருவி என்றும்,
பறை=யாம்பெறும் சன்மானம் என்றும்,
பறை=பேரின்பக் கூலி...என்றும் திருப்பாவை யில் கூறப்படுகிறது.
" பரவுவாரவர் பாவம் பறையுமே"- தேவாரம்.
"பார்வையைந்த பறைந்தாள் விளவின்"- பெரும் பாணாற்றுப்படை.
பறை என்றால் நீக்குதல்:-
"பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே"
- சீவக சிந்தாமணி.
பறை என்றால் வட்டம்:-
" பறைக்கட் பீலி தோகை"- அகநானூறு.
பறை என்றால் விரும்பும் பொருள் என்றெல்லாம் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு.
ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,பெருகிவரும் புனலை அடைக்க,உழவர் மக்களை அழைக்க,போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,வெற்றி தோல்வியை அறிவிக்க,வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,விதைக்க,அறுவடை செய்ய,காடுகளில் விலங்குகளை விரட்ட,மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,இயற்கை வழிபாட்டில்,கூத்துகளில், விழாக்களில்.இறப்பில் எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. சகல பகுதி இனத்தாருக்கும், சாதிக்கும் பொதுவாக பயன்பாட்டில் இருந்த பறை இசையானது தற்காலத்தில் பறை ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவியாக உள்ளது.
கோயில் திருவிழாக்கள், மதச் சடங்குகளின்போது பறை இசைக்கப்படும். இதுதவிர, இறுதி ஊர்வலத்தின் போதும் பறை இசைக்கப்படுகிறது. சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.
பறை பிற தாளக் கருவிகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்பது காலப்போக்கில் தமிழர்கள் அறியாமல், இக்கருவியிலிருந்து வளர்ச்சிப் பெற்ற பிற தாள இசைக் கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது நம்முடைய அடையாளங்களை நாமே மண்ணில் மிதித்துப் புதைப்பதற்குச் சமமாகும்.
பறை அனைத்துச் சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் செயல்திறன் மிக்க கருவியாகப்பயன்பட்டது. ஆனால், பறையர், சக்கிலியர் இன மக்களைத் தவிர பிற இனத்தினர் இதைத் தீண்டாமையின் வடிவமாகவே கருதி, பறையைப் புறக்கணித்து விட்டனர்.
தற்காலத்தில் தலித் மக்களின் பண்பாட்டு அடையாளமாகவும், சமூக விடுதலையின் அடையாளமாகவும் பறையை முன்னிறுத்தி தலித் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இடதுசாரி இயக்கத்தினரும் கலைநிகழ்ச்சிகளிலும் ஆட்டங்களிலும் பயன்படுத்திவருகின்றனர்
"பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்
பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே
"பறைசாற்றுதல்" எனும் சொல்லும் "பறை" எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.
இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் உள்ளன. இவை இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த "பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை "பறையன்", "பறையன் போன்று" எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.
தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த "பறை" எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)
இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை + தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.
இங்கே "வகே" எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் "வகை" எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன
இவ்வாறு பறை என்ற சொல் வினைச்செயலாக அறிவித்தல், படி அளத்தல், பேசுதல், வெளிப்படுத்துதல் என்று பல பொருள்பட பல மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இசைக்கருவியாக, பொருளாக, இனத்தின் பெயராகசெயலாக, தமிழ் மக்களோடு பின்னிப் பிணைந்து இருக்கக்கூடிய பறை என்ற சொல்லானது தாழ்த்தப்பட்டவர்களுடைய சொல்லாக மாற்றப்பட்டு, மதிப்பிழந்து, கீழ் நிலையில் பயன்படுத்தக்கூடிய சொல்லாக மாறி இருப்பது, தமிழ் கூறும் நல் உலகில் வேதனை படக்கூடிய ஒன்று. வரலாற்றையும், இலக்கியத்தையும், இழிவுபடுத்தக்கூடிய ஒன்று.
10.8.25 அன்று நடைபெற்ற நட்பு தமிழ் வட்டம், மதுரை 7ஆம் ஆண்டு விழாவில் சமர்ப்பிக்க நான் தயாரித்த ஒரு சொல் ஆய்வரங்க கட்டுரை
அருமை -
ReplyDeleteமிகச் சிறப்பான ஆய்வு! பறை எனும் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு தமிழர் பண்பாட்டையே விளக்கிய விதம் பறை எந்த அளவுக்குத் தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதைக் காட்டுகிறது. அதே நேரம், வெறும் தமிழர் வாழ்வியல் பற்றிய விளக்கத்தோடு நிறுத்தாமல் இதே சொல் பிற மொழிகளில் எப்படிப் பயன்படுகிறது என்பதையும் சேர்த்து எடுத்துக்காட்டியது இதை ஓர் ஒப்பீட்டு ஆய்வுக் கட்டுரையாகவும் திகழச் செய்கிறது! அருமை! அருமை!! தொடருங்கள்!
ReplyDelete