2025 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றான சிவப்பு தபால் பெட்டிகள் நடைமுறையில் இருந்து அகற்றப்பட உள்ளனவாம்.
அதேபோல பதிவுத் தபாலும் இனி மேல் இருக்காதாம்...
இத்தகவலை முகநூலில் ஒரு நண்பர் பதிவிட்டு இருந்தார். சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
தொலைக்காட்சி தகவல் அதுபோலவே உள்ளது. ஆனால் அது தவறான தகவல் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது... மகிழ்ச்சியே....
சற்று பின்னோக்கி தபால்கள் வந்த கதை பற்றி நினைத்துப் பார்த்தேன்...
அந்தக்காலத்தில் தபால் பட்டுவாடா என்பது நம் நாட்டில் பொதுவாக பெரிதாக இருந்ததில்லை. அரசு முறை செய்திகளை லிகிதங்களாக தூதர்கள் மூலமாக அரசு அனுப்பி வைக்கும். தொலைதூரத்திற்கு புறாக்கள் மூலமாக செய்திகள் துணுக்குகளாக புறாக்களின் கால்களை கட்டி அனுப்பி வைக்கப்படும் என்று படித்திருக்கிறோம்.
இலக்கியங்களிலே அன்னம் விடு தூது, தோழிகள் மூலமாக தூது விடுதல் என்றெல்லாம் படித்திருக்கிறோம். காதலனுக்கு காதலியும், காதலிக்கு காதலனும், உருகி உருகி காதல் கடிதம் தோழிகள் மூலமாக அனுப்புதலை படித்திருக்கிறோம்.
திருமணம் போன்ற சுபச் செய்திகளையும், சாவு செய்திகளையும் ஆட்கள் மூலமாக அந்த காலத்தில் சொல்லி அனுப்புவார்கள், அல்லது நேரில் சென்று அழைப்பார்கள். ஆக சாதாரண மக்களுக்கு கடிதம் என்பது இல்லாத ஒரு விஷயம்..
அதைவிட முக்கியமான விஷயம் ராஜ்யங்கள் மிகப் பெரிதாகவோ அல்லது மிக சுருக்கமானதாகவோ இருந்தாலும், பொதுமக்களை பொருத்தமட்டில், சாதாரண தகவல் தொடர்புகள் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளே மட்டும் தான்..
ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய தேவைக்காகவும், மக்கள் வசதிக்காகவும் தபால் தந்தி முறை கொண்டுவரப்பட்டது. டல்ஹௌசி பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த போது இந்தியாவில் தபால் தந்தி அறிமுகப்படுத்தப்பட்டது.
தபால்களும் பணப் போக்குவரத்துகளும் தபால் தந்தி துறை மூலமாக நடைபெற்றது. அதனால் ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு தபால் நிலைய தபால்களுக்கு பணம் கொண்டு செல்கிறது கட்டிக்கொண்டு கையில் வேல் கம்புடன், தபால் பையை சுமந்து சென்றதாக கூறுவார்கள்..
அந்தக் காலத்தில் முழு நேர தபால் நிலையங்களும் பகுதி நேர தபால் நிலையங்களும் திறக்கபட்டன. பகுதி நேர தபால் நிலையங்களில் வேறு வேலை செய்கிறவரும் தபால் நிலைய அதிகாரிகளாக பணியாற்றி இருக்கிறார்கள். எங்கள் சொந்த ஊரான வெள்ளலூரில் வீரமணி ஐயர் பள்ளி ஆசிரியராகவும், பகுதி நேர தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாகவும் பணியாற்றியதாக என் அப்பா சொல்லுவார். தபால் நிலைய அலுவலர்களும், தபால் காரரும், ஓரளவு படித்தவர்கள் என்பதால் கிராமப்புற மக்களுக்கு தபால் எழுதி தருவதும், வருகின்ற தபால் படித்து காட்டுபவராகவும், மற்ற நல்லது கெட்டது போன்ற விசயங்களுக்கு உதவி செய்யக்கூடிய, வழிகாட்டக் கூடிய ஆட்களாக இருந்திருக்கிறார்கள்.
தபால்காரர் உரிய முகவரிக்கு தபால்கள், மணி ஆர்டர் பணத்தை கொண்டு செலுத்துகின்ற பணியை செய்து வந்தார்.
தபால் நிலையங்கள் சிறுசேமிப்பு திட்டம், தபால்கள், மணி ஆர்டர், போஸ்டல் ஆர்டர், போன்ற பணபரிவர்த்தனைகளோடு, தந்தி, வானொலி பெட்டி வைத்து கொள்ள லைசென்ஸ் அனுமதி வழங்கும் பணிகளையும் செய்து வந்தது.
மணி ஆர்டர் என்றால் வேறொன்றும் இல்லை, வேண்டியவர்களுக்கு பணத்தை தபால் நிலையத்தின் மூலமாக அனுப்பினால் உரியவருக்கு சென்று சேர்க்கப்படும். அதேபோல போஸ்டல் ஆர்டர் என்றால் அரசுப் பணிகளுக்கு பணம் செலுத்த வேண்டிய தபால் நிலையங்களில் பத்திரங்கள் மூலமாக செலுத்துதல் ஆகும்.
நான் படிக்கின்ற காலத்தில் அரசு கல்லூரிகளுக்கு போஸ்ட் ஆர்டர் மூலம் பணம் செலுத்தி தான் விண்ணப்பம் சமர்பித்தேன்.
அதேபோல வேலைக்கு வந்த காலத்தில் வீட்டிற்கு மணி ஆர்டர் மூலமாகத்தான் பணம் அனுப்புவது வழக்கம். அதே போல முதன்முதலாக வானொலி பெட்டி வாங்கிய போது தபால் நிலையத்தில் விண்ணப்பித்து லைசன்ஸ் பெற்றது, வருடா வருடம் பதிவு செய்தது நன்றாக நினைவில் உள்ளது.
அதையெல்லாம் இப்போது சொன்னால் வேடிக்கையாக இருக்கும், நம்ப மாட்டார்கள்.
நவீன தகவல் தொடர்பு முறை முதலில் பலியானது தந்தி.
தொலைக்காட்சி பெட்டியில் உள்ளிட்ட பல்வேறு நவீன சாதனங்கள் வந்த பிறகு வானொலி பெட்டியே காணாமல் போனது. அதற்கு முன்னரே லைசென்ஸ் கானாமல் போனது.
இந்தியா தாராள மயம், உலகமயமாக்கல் போன்ற கொள்கை மாற்றங்களை மேற்கொண்ட போது, சேவை துறைகள் அனைத்தும் கலைக்கப்பட்டோ, கைவிடப்பட்டோ, அல்லது நீர்த்துப் போகவோ ஆக்கப்பட்டன.
அதன் விளைவாக கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தகவல் தொடர்பு எல்லாவற்றிலும் தனியார் மயம் ஊக்குவிக்கப்பட்டு அரசினுடைய சேவை குறைக்கப்பட்டுள்ளது வருகின்றன.
அரசு லாப நஷ்ட கணக்கு பார்க்கும் நிலைக்கு வந்து விட்டதால், சேவை துறைகள் செயலிலிழந்து போகின்றன. முதலில் தபால்துறையில் கூரியர் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனங்களை அனுமதித்ததின் விளைவு தபால் துறையையும் பாதித்துவிட்டது. இப்பொழுது லாப நஷ்டம் பார்த்து பதிவு தபாலை நீக்கி உள்ளார்கள். இனிவரும் காலங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படபோகின்றன தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தகவல் தொடர்பு என்பது சேவை துறை என்பதை மறந்து விடக்கூடாது.
No comments:
Post a Comment