திரைப்பட உலகில் முதன்முதலாக லட்ச ரூபாய் சம்பளம் பெற்ற நடிகர் யார் தெரியுமா?!
கே பி சுந்தராம்பாள் தான் முதன்முதலாக நந்தனார் படத்தில் நடிப்பதற்காக அசன் லால் சேட் என்ற தயாரிப்பாளரிடம் ஒரு லட்ச ரூபாய் ஊதியமாக நடித்தார்.
அந்த திரைப்படம் உலகத்தையே ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கிய செய்தி அது.
தனது கணவர் எஸ் ஜி கிட்டப்பா காலமான பிறகு கே பி சுந்தராம்பாள் திரைப்படத்திற்கு முழுக்கு போட்டு சென்று விட்டார்.
அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்த அசன் லால் சேட் மீண்டும் கே பி சுந்தராம்பாள் அம்மையாரை நடிக்க வைக்க திட்டமிட்டு அணுகிய போது அந்த அம்மையார் மறுத்துவிட்டார். திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்திய போது அவரை துரத்துவதற்காக கேபி சுந்தராம்பாள் அம்மையார் சரிப்பா நடிச்சா லட்சம் ரூபா தருவியா என்று கேட்டிருக்கிறார். அவரை துரத்துவதற்காக அந்த அம்மையார் லட்ச ரூபாய் கேட்கப்போக மறு பேச்சு பேசாமல் லட்சம் ரூபாய்க்கான காசோலையில் கையெழுத்துட்டு அசன்லால் நீட்ட அந்த அம்மையாருக்கு வழி இல்லாமல் போய் நடிக்க வேண்டியதாகிவிட்டது.
படம் ஓடாமல் நஷ்டமாகி போனது வேறு விஷயம் ஆனால் அதுதான் அந்த நாளில் நடிப்பதற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.
அந்த காலத்தில் திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் மாத சம்பளம் தான் வழங்கப்பட்டது. கதாநாயகி, கதாநாயகி சற்று அதிகமாகவும், மற்றவர்களுக்கு குறைவாகவும், கலைஞர் தொழில்நுட்பங்களுக்கு ஓரளவுக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. இருந்தாலும் பெரிய நடிகர்களுக்கும் சின்ன நடிகர்களுக்கும் ஊதிய வித்தியாசம் என்பது மிகப்பெரிய அளவிலான விகிதாச்சார வேறுபாடுகள் இல்லை.
அதேபோல படத்தை தயாரிக்கும் ஃபிலிம் போன்ற கச்சா பொருட்களும், பட தயாரிப்புக்கான செலவுகளும், செட்களுக்கான செலவுகளும் என்ற அளவில் தான் இருந்தது. மிக பிரம்மாண்டமான செலவுகளோடு தயாரிக்கப்படுவதில்லை.
வட்டி தொழிலில் ஈடுபட்ட சேட்டுகளும், செட்டியார்களும், இன்னும் சில முதலாளிகளும் திரைப்படத்துறையில் இறங்கிய பிறகு தான், திரைப்படத்துறை லாபம் சம்பாதிப்பதற்கான தொழிலாக மாறியது. அப்போது பிரம்மாண்டமான திரைப்படங்கள் , திரைப்படங்களைப் பற்றிய விளம்பரங்கள், என்றெல்லாம் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன .
அப்போதுதான் மேற்கத்திய திரைப்படங்களைப் போல கதாநாயகர்கள், நாயகிகளுக்கு அளவு மீறிய விளம்பரங்களும், அவர்கள் புகழ் பாடும் கூத்துக்களும் உருவானார்கள்.
திரைப்பட கதாநாயகர் ஆடல் பாடல் தெரிந்தவர், நடிப்பில் வல்லவர், நல்லவர் என்றெல்லாம் பத்திரிகைகள் மூலமாக நிறைய செய்திகளை வெளியிட்டு மக்களை கவர்க்கின்ற வேலைகள் நடைபெற்றன. கதாநாயகன் கதாநாயகிகளுக்காகவே படம் ஓடுகின்ற சூழ்நிலையை திட்டமிட்டு உருவாக்கினார்கள்.
இப்படி உருவானது தான் ஸ்டார் வேல்யூ சிஸ்டம். அவர்களுக்கு மிக அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டது. அதற்கு உதாரணம்தான் முதலில் கூறிய கே பி சுந்தராம்பாளுக்கு வழங்கப்பட்ட லட்ச ரூபாய் சம்பளம்...
ஊதிய வித்தியாசங்கள் மிகப் பிரமாண்டமான விகிதாச்சார மாறுபாட்டில் போய் நின்றது. கதாநாயகனுக்கும் நாயகிக்கும் வழங்கப்படக்கூடிய சம்பளம் மொத்த திரைப்பட செலவில் பெரும் பகுதியை விழுங்கலாயின.
திரைப்படங்கள் ஓடுவதற்காகவே காட்சிகள், வசனங்கள், பாடல்கள், சண்டைக்காட்சிகள், நாட்டியங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டன.
இதன் விளைவு எதார்த்தத்தை மீறிய மிகைப்படுத்தப்பட்ட காட்சி அமைப்புகள், தொழில்நுட்ப ரீதியாக, சிறப்பாக, ரசிக்கத்தக்கதாக, மக்களை கவர்வதாக இருந்தாலும், மக்களை விட்டு, எதார்த்தத்தை விட்டு, திரைப்படங்கள் செல்லலாயின.
புராண, சரித்திரக் கதைகளை விட்டு சமூகப் பிரச்சினைகளை சார்ந்த திரைப்படங்கள் நிறைய வரலாயின. ஏழை பணக்காரன் வித்தியாசம், வறுமை, சாதிக் கொடுமை பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்கள் பேசப்பட்டன. நல்ல வசனங்களாகவும் திரைப்பட பாடல்களாகவும் நல்ல கருத்துள்ள விஷயங்கள் இடம் பெறலாயின.
அதே நேரத்தில் பிற்போக்குத்தனத்தை நியாயப்படுத்த கூடிய, பல திரைப்படங்கள் நமது கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் மூளை சலவை செய்கின்ற வேலையையும் செய்தன.
எது எப்படி இருந்தாலும், சமூகப் பிரச்சினைகளை மக்கள் சந்தித்து போராடும் மாதிரியான கதையம்சங்கள் இல்லாமல், கதாநாயகன் அவருடைய வல்லமையாலேயே தீர்க்கிற மாதிரியான படங்கள் மட்டுமே திரைப்படத் துறையை ஆக்கிரமித்தன.
மக்களுடைய சமூக உணர்வு மழுங்கடிக்கப்பட்டது, எவனாவது ஒரு கதாநாயகன் அல்லது ஒரு நாயகன் வந்து நம் பிரச்சினையை தீர்ப்பான் அவனுடைய சிந்தனை அறியாமலே அவன் மூளையில் ஆழமாக பதிந்தது தான் இந்த ஸ்டார் வேல்யூ சிஸ்டத்தினால் உருவான மிகப்பெரிய சமூக பாதிப்பு.
திரைப்படத்தில் நல்லவனாக நடிப்பவன் நிஜ வாழ்க்கையில் நல்லவனாகவும், புரட்சிக்காரனாகவும், வில்லனாக நடிப்பவன் நிஜ வாழ்க்கையில் கெட்டவனாகவும் மோசமானவனாகவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போன.
அதற்கேற்றார் போல் கதாநாயகன் பேசுகிற வசனங்கள்,பாடல் வரிகள் எல்லாம் அவருடைய சொந்த சிந்தனை போலவே மக்கள் மனதில் பதிந்து போயின. பாடலை எழுதியவர்கள், வசனம் எழுதியவர்கள், எல்லாம் காணாமல் போய் அந்த கருத்துக்களின் சொந்தக்காரர்களாக கதாநாயகர்கள் மாறிப் போனார்கள்.
சில நடிகர்களுக்கு இரவல் குரல், எல்லோருக்கும் இரவல் பின்னணி பாடகர் குரல், பாடல் வரிகள் இரவல், இசை இன்னொருவருடையது, சண்டைக்காட்சியில் டூப் போட்டு அடிபடுவதும், சாவதும் வேறு ஒருவர், என்றாலும் புகழ் மட்டும் கதாநாயகன் நாயகிகளுக்கு...
இது மிகப்பெரிய சமூக அவலம் அல்லவா.
இந்த லட்சணத்தில் இவர்களுக்கு ரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்கள், பின்னாளில் அரசியல் கட்சிகள்..
இதில் வாழும் எட்டாவது வள்ளல்,நவீன கர்ணன் என்றெல்லாம் புகழ்மாலைகள் வேறு. நான் கேள்விப்பட்டவரை ஒரு மிகப்பெரிய நடிகர் ஏராளமாக தானங்கள் மேடைகளில் அறிவித்து விட்டு வந்து விடுவார். ஆனால் அவற்றை அவரது மேலாளரிடமிருந்து பெறுவதற்கு நாலு ஜோடி செருப்பு தேய்ந்து விடும் என்று வேடிக்கையாக சொல்வார்கள்..
இந்த அவலத்தின் தொடர்ச்சி தான், திரைப்பட நடிகர்கள் எல்லாம் மக்கள் பிரச்சினையை தீர்க்க வந்த அவதார புருஷர்களாக, அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவை சீரழித்த ஸ்டார் வேல்யூ சிஸ்டம் அரசியலையும் பொதுவாழ்வையும் சீரழிக்க ஆரம்பித்துவிட்டது.
இதை காலத்தின் கொடுமை என்று சொல்லாமல் வேற என்ன சொல்வது....
No comments:
Post a Comment