சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 14 August 2025

சும்மா வரவில்லை சுதந்திரம்

 


நான் சிறுபிள்ளையாய் இருக்கும்போது நாமக்கல் கவிஞரின் பாடலை குருட்டு மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன் "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது"

 இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார்?

 காந்தி தாத்தா வாங்கி கொடுத்தார்!

என் அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார். வெள்ளைக்காரன் என்ன சுதந்திரத்தை விற்றானா? காந்தி தாத்தா தான் போய் வாங்கினாரா!

இந்தியாவிற்கு சுதந்திரம் லட்சக்கணக்கான பேர் உயிரைக் கொடுத்து, உடல், பொருள், ஆவியை கொடுத்து சகல தியாகங்களும் செய்த பின்னர் கிடைத்தது. எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடியதால் கிடைத்தது. பல தலைவர்கள் போராடினார்கள். மகாத்மா காந்தியும் போராடினார். வரலாற்றை ஒழுங்காக படிப்பா, அதுதான் நல்லது. என்று அறிவுரை கூறினார் அதன் பிறகு தான் பல புத்தகங்களையும் தேடிப்பார்த்தேன். கேட்டு தெரிந்து கொண்டேன். 

நம் நாட்டு வரலாற்றை படிக்கையிலே வெள்ளையர்கள் இங்கு வரும்போது ஒரு நாடாக இருக்கவில்லை. நூற்றுக்கணக்கான நாடுகள் நிறைந்த துணைக்கண்டமாக தான் இருந்தது என தெரிந்தது. 

மக்களோ ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒன்னும் கவலை இல்லை என்ற மனப்பாங்கில் இருந்தனர். 

இதற்கு அவர்களைக் குறை கூறி பயனில்லை. காரணம் ஆண்டவர்களும், அவர்களுக்கு பக்கத்துணையாக இருந்தவர்களும், மக்களை சனாதானத்தின் பெயரால் நான்கு வர்ணங்களாக பிரித்து உழைக்கின்ற பெரும்பான்மை மக்களை தங்கள் காலடியிலேயே வைத்திருந்தார்கள். 

தாங்கள் கட்டிக் கொடுத்த அரண்மனையில், ஆலயங்களில், நுழைவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கோபுரத்தை மட்டும் கும்பிட்டு செல்லுமாறு வைக்கப்பட்டிருக்கும் மக்களிடம் எப்படி குறை காண முடியும். 

ஆதலால் மன்னர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகும் போதும் சரி அன்னியர்கள் ஆக்கிரமிப்பு நடந்த போதும் சரி வெறும் பார்வையாளர்களாகவே இருந்து விட்டார்கள். 

ஏராளமான குறுநில மன்னர்களிடமும், நவாபுகளிடமும், வணிகம் புரிய வந்த கிழக்கிந்திய கம்பெனிகள் கடன் கொடுத்து வரி வசூலிக்க ஆரம்பித்து, ஒட்டுமொத்தமாக எல்லா பிரதேசங்களையும் தங்கள் ஆளுகைக்குள்ளே கொண்டு வந்து விட்டார்கள். 

திறந்த வீட்டில் நாய் நுழைவதைப்போல, சுக்கல் சுக்கலாய் கிடந்த பிரதேசங்களுக்குள் பிரிட்டிஷ் காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்ச்சிக்கீசியரும் ஒண்ட வந்த பிடாரிகளாய் உள்ளே நுழைந்து, ஊர்ப்பிடாரிகளாக மாறிப் போனார்கள். அவர்களுக்குள் பங்கு போட அடித்துக்கொண்ட சண்டையில் வென்ற பிரிட்டிஷாரின் ஆளுகைக்குள் ஒட்டுமொத்த பிரதேசமும் வந்தது. அதனால் விளைந்த நல்ல காரியம் ஒரே ஆளுகைக்கு உட்பட்ட முழு பிரதேசமாக, இந்தியா என்ற பெயரோடு அவதரித்தது. 

ஆட்சிகளை இழந்த எல்லா ராஜாக்களும் தங்களுக்குள் உள்ள பூசல்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்து, முஸ்லிம் போன்ற மத, இனம், சாதி போன்ற வேறுபாடுகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு, ஓய்ந்து போன முகலாயப் பேரரசர் ஷா ஆலத்தை இந்திய பேரரசராக அறிவித்து இந்து மன்னர்களும் இஸ்லாமிய மன்னர்களும் இன்னும் பிற நிலப்பிரபுகளும் படைவீரர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய முதல் சுதந்திரப் போர் தான் 1857 ல் நடந்த சிப்பாய்க் கலகமாகும். 

அதற்கு முன்னர் ஆங்காங்கே கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு எதிராக சிறு மன்னர்கள் வரி கொடுக்க மறுத்து நடத்திய போர்கள் உண்டு. அவை சுதந்திர உணர்ச்சிக்கு நடைபெற்ற போர் என்பதை விட தங்கள் சுய ஆளுகைக்கான போர் என்று சொல்லலாம். ஆனாலும் பிற்காலத்தில் சுதந்திர உணர்ச்சியை தூண்டும் வரலாற்று நிகழ்வுகளாக அமைந்தன. 

இந்துக்களும், முஸ்லிம்களும், சீக்கியர்களும், இன்ன பிற மதத்தாரும், சாதி மத பேதங்களை தாண்டி ஒன்றிணைந்து நடத்திய அந்த மாபெரும் எழுச்சியானது, ஒருங்கிணைப்பு குறைவு, தொழில்நுட்பக் குறைபாடுகள், தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைகள், ஆயுத பற்றாக்குறை, உள்ளிட்ட இன்னும் பிற சில்லறை காரணங்களால் தோல்வி அடைந்தது, மேலும் பிரிட்டிஷாரின் குயுக்தியான செயல்பாடுகள், பிரித்தாளும் சூழ்ச்சி ஆகியவையும் தோல்விக்கு காரணமாக அமைந்தன,. இந்துக்கள் முஸ்லிம்களிடையே பூசலை தோற்றுவிக்க பல்வேறு சித்து விளையாட்டுகளை செய்தனர். அதற்கு சிறந்ததோர் உதாரணம், சிப்பாய்க் கலகத்தின் போது பைராக்கிகள் எனப்படக்கூடிய சனாதன சாமியார்களை தூண்டிவிட்டு பாபர் மசூதி இருந்த இடம் ராமஜென்ம பூமி என்ற பிரச்சனையை கிளப்பிவிட்டது தான். அது அப்போது தோல்வி அடைந்தாலும், பிற்காலத்தில் விஸ்வரூபமாகி இந்தியா முழுக்க கொழுந்து விட்டெரியக்கூடிய மாபெரும் பிரச்சனை ஆனதை நாம் இன்று கண்கூடாக காண்கிறோம். 

அதன் பிறகு வந்த ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு படிக்க சென்ற நடுத்தர வர்க்கத்தினர், அறிவு ஜீவிகள் அந்நாடுகளில் கண்டு, கற்ற அரசியல் கல்வி, பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். காலப்போக்கில் உருவான காங்கிரஸ், முஸ்லிம் லீக், பொதுவுடைமை கட்சிகள் நடத்திய சுதந்திரப் போராட்டமானது பிற்காலத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியது.

தனி நபர்கள் ஆயுத போராட்டத்தில் இருந்து மக்களை திரட்டும் போராட்டங்கள், சத்தியா கிரகங்கள்,என போராட்டங்களும், அவற்றை அடக்க அரசு பயங்கரவாதமும் தொடர்ந்தது. 

உலக அளவில் வளர்ந்து விட்ட பிரிட்டிஷ், பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள் பல காலணி நாடுகளை உருவாக்கின. காலணி கிடைக்காத வளர்ந்து விட்ட மற்ற நாடுகளுக்கும், வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளுக்குமான போட்டி, இரு உலக போர்களை உருவாக்கியது. அப்போர்கள் உலக வரைபடத்தையே மாற்றி அமைத்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவானது, மாபெரும் பொதுவுடமை அரசான சோவியத் யூனியன், பிரிட்டன் பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட அணி பாசிசத்தை வெற்றி கொண்டது. அவ்வெற்றி உலக மக்களிடையே குறிப்பாக காலணி ஆதிக்கத்துக்குட்பட்ட நாட்டுமக்ககளிடையே மாபெரும் எழுச்சியை உருவாக்கியது.

இந்தியாவில் கப்பற்படை எழுச்சி ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது. தால்வார் என்ற கப்பலிலே இருந்த மாளுமிகள் பிரிட்டிஷ் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் கொடிகளை ஏற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர்ப்பிரகடணம் செய்தனர். அது இந்தியா முழுக்க ராணுவத்தினிடேயும், மக்களிடையேயும் மாபெரும் சுதந்திர எழுச்சியை உருவாக்கியது. இனி நேரடியாக நம்மால் இந்தியாவை ஆள முடியாது என உணர்ந்து கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது நரித்தந்திரமான வேலைகள் மூலமாக இங்கு உள்ள குறுகிய மதவெறி சக்திகளை தூண்டிவிட்டு மத கலவரங்களை உருவாக்கினர். அதன் விளைவாக இந்தியா பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிளவுபட்டு, தங்களுக்கு தோதான ஆட்சி மாற்றத்தை பிரிட்டிஷ் சார் செய்துவிட்டு வெளியேறினர்.

சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் இரண்டரை லட்சம் பேர் தங்கள் உயிரை தியாகம் செய்து,ஏராளமான தியாகிகள் ஜாதி, மத, இன பேதமின்றி தியாகம் செய்து கிடைத்த சுதந்திரத்தை மதித்து காப்பதே நமது லட்சியமாக கொள்வோம்.


No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...