ஆதியில் மனிதர்களும், விலங்குகளும் தாவரங்களில் உள்ள கனி, காய்களை புசித்தும், விலங்குகளை வேட்டையாடி புசித்தும் வாழ்ந்து வந்தனர்.
மனிதன் மட்டுமே விதைகளை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்க முடியும் என்று கண்டறிந்த போது, மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபட்டு இயற்கையை பயன்படுத்தி வாழும் உயர்நிலைக்கு மாறினான்.
மற்ற எல்லா ஜீவராசிகளும் இயற்கையில் இருப்பதை அப்படியே பயன்படுத்தி வாழ்ந்து வந்தன.
அடுத்தபடியாக இயற்கையின் அம்சங்களான, காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றால் வரும் நன்மைகளை தீமைகளையும் கண்டு பிரமித்தனர், அஞ்சினர். அதன் விளைவு வழிபாட்டு முறைகளாக மாறின.
முதன்முதலாக இயற்கையில் உராய்வின் மூலமாக உண்டான தீயினை தானே சிக்கிமுக்கி கற்களை பயன்படுத்தி மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பாகும்.
அதன் அடுத்த நிலை நெருப்பை பயன்படுத்தி உணவை சமைத்து உண்ணும் அடுத்த நிலைக்கு மனிதன் மாறினான்.
அதற்கு அடுத்தபடியாக ஆற்றங்கரை ஓரங்களில் விவசாயம் செய்து குழுக்களாக வாழ ஆரம்பித்தான்.
காணும் பொருட்களின் வடிவங்களை வித்தியாசப்படுத்தி கண்டறிய ஆரம்பித்தான். அதன் விளைவாக அவன் கண்டுபிடித்தது தான் வட்டம் என்ற வடிவம். அதன் மூலமாக உருவாக்கியது தான் சக்கரம் என்பது. அதுதான் முதன் முதலில் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் பயணப்படுவதற்குமான அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு.
வேறொன்றும் இல்லை...... திகிரி என்ற சொல்லிலிருந்து கிளம்பியது தான் இந்த ஆராய்ச்சி. திகிரி என்ற சொல் அடிப்படையில் வட்ட உருவத்தைக் குறிக்கிறது.
திகிரி என்ற அழகான தமிழ் சொல்லிற்கு வட்டம், வட்ட வடிவம், சக்கரம், தண்டசக்கரம், ஆணை, என பல பொருட்கள் உண்டு. அவற்றைப் பற்றி கீழே காண்போம்
1. சக்கரம்
2. குயவர்கள் மண்பாண்டம் செய்யப் பயன்படும் சக்கரம்
3. சக்கராயுதம்
4. மன்னனின் ஆட்சி
5. கதிரவன்
6. தேர்
7. மூங்கில்
8. மலை
போன்ற பல பொருட்களில் இந்த சொல் பயன்பாட்டில் உள்ளது
முத்தைத் தரு பத்தித் திருநகை என்ற திருப்புகழில்
"பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக"என்று அருணகிரிநாதர் பாடியிருப்பார்.
வட்ட வடிவமானவை திகிரி. இங்கு சூரியனும் திகிரிதான். அதுவும் எப்படி? பட்டப்பகல் வட்டத் திகிரி. திகிரின்னா சக்கரம். பட்டப்பகல்னா பெருவெளிச்சம். பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி என்று பொருள் படும்.
சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தில் ஒன்பது அரசர்கள் சோழன் கிள்ளி வளவனிடம் போர்புரியும் போது அவருடைய மைத்துனன் சேரன் செங்குட்டுவன் உதவிக்கு வந்து அந்த ஒன்பது அரசர்களை ஒரு பகற்பொழுதில் அழித்தார் என உரைக்கிறார் இளங்கோவடிகள்.
"ஒன்பது குடையும் ஒரு பகலொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப்படுத்தோய்..."
"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கொட்டு
மேரு வலம்த்திரி தலான்."
என சிலப்பதிகாரம் மங்கள வாழ்த்து பாடல் வரிகளை அறிவோம்..
வட்டவடிவினை திகிரி என பிங்கலநிகண்டுவில் பிங்கலமுனிவர் எழுதியுள்ளார்.
தண்டசக்கரம் என்பதை திகிரி என்ற சொல்லால் பின்வருமாறு காணலாம்.
" தெரித்த பன்மணி மாடமேல் திகழ்ந்தபொற் குடத்து
விரித்த தண்கதிர்க் கடவுள்நின் றசைதல்வேட் கோவர்
திரித்து விட்டசக் கரமென லாகும்அத் திகிரி
பரித்த பச்சைமண் ணென்னலாம் அதற்பயில் களங்கம்" . 76
நிலாமணி முற்றத்தில் வைத்த பொன்னாலியன்ற குடத்தின்மேல் கலை நிரம்பிய சந்திரன் நின்றசைதல், குயவர் சுழற்றி விட்ட சக்கரத்தின் அசைவினை ஒக்கும். அச்சந்திரனிடத்துள்ள மறு அச்சக்கரத்தில் ஈரக்களிமண்ணெனல் தகும். எனவே, பொற்குடம் அச்சக்கரத்தினின்றும் அறுத்தெடுத்த குடமொக்கும் என்க என காஞ்சிப்புராணத்தில் திருநகரப்படலத்தில் சிவஞான முனிவர் விளக்கியுள்ளார்.
திருமாலின் சக்கராயுதத்தினை திகிரி என ராமாயணத்தில் கம்பர் கூறியுள்ளார்.
காலநேமி மேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர. 40).
(எ. கா.) குலால்மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல (கம்பராமாயணம்)
ராமாயணம் என்று பல இடங்களில் "திகிரி" புழங்குகிறது.
"சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட் டயோத்தி வந்தான்" என்று கம்பனும் பாடுகிறான்.
அரசாணையினை திகிரி என மணிமேகலையில் சீத்தலைசாத்தனார் விளம்புகிறார்..
(எ. கா.) தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22, 16).
தேரினை திகிரி என பின்வருமாறு " ... சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் "ஞானாமிர்தம் எனும் நூலில் வாகீச முனிவர் கூறுகிறார் . 7, 17).
வண்டியினை திகிரி என்ற சொல்லால் யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதியில் சந்திரசேகரபுலவர் குறிப்பிட்டுள்ளார் .
சூரியனை திகிரி எனும் சொல்லால் "விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி *அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது . 53)
" ... செருமிகு திகிரி வெல்போர் செல்வ - போரின்கண் மேம்பட்ட
ஆழிப்படையாலே வெல்லாநின்ற போரினையும் உடைய திருவருட்செல்வனே"
என பரிபாடல் கூறுவதை காணலாம்.
மூங்கிலினை திகிரி என பிங்கலநிகண்டிலும், மலையினை திகிரி என திவாகர நிகண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிடுவாரும் உண்டு.
எப்படி ஆயினும் தமிழர்கள் மறந்து போன திகிரி என்ற சொல்லானது ஏராளமான அர்த்தங்களை கூறியுள்ளது. மறைந்து போன, வழக்கொழிந்து தமிழ் சொற்களை தேடி கொணர்ந்து ஆராய்ந்தால் தமிழ் மொழி மேலும் சிறக்க வாய்ப்பாக அமையும்..
No comments:
Post a Comment