சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 12 August 2025

தொலைபேசியா... தொல்லை பேசியா

 நான் தஞ்சை பேருந்து நிலையத்திலே 90 களில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வித்தியாசமாக தானே சிரித்துப் பேசி நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். ஆளைப் பார்த்தால் மிகவும் நாகரீகமாக ஆடை அணிந்து, படித்தவரை போல் காட்சி அளித்தார். ஆனால் காவாங்கட்டையில் கை வைத்தவாறு, தலையை சாய்த்தவாறு சிரித்து, சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது எனக்கு புரியவில்லை. இந்த வயதிலேயே, இப்படி நாகரிகமாக காட்சியளிக்க கூடியவர் இப்படி மனப்பிறழ்ச்சி அடைந்தவர் போல காட்சி அளிக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.


சிறிது நேரத்தில் அவர் கையை மாற்றும்போது தான் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன். நான் தவறாக நினைத்ததை எண்ணி வருந்தினேன்.


அந்த காலத்தில் இம்மாதிரி அலைபேசியை வைத்துக்கொண்டு பேசுவது என்பது புதிதான ஒன்று. அது உலகமெங்கும் பெரிதாக வந்திருந்தாலும், நம்மைப் பொருத்தமட்டில் அந்தக் காலத்தில் அது ஒரு புதிய விஷயம் தான்.


திரு சுஜாதா அவர்கள் எழுதிய கம்பியூட்டரின் கதை புத்தகத்தைப் பற்றியும் அதில் வந்த கேலி சித்திரத்தை பற்றியும் நாங்கள் கிண்டலாக கூறுவது உண்டு.


மாடு மேய்த்துக் கொண்டிருப்பவருக்கு அவரது மனைவி, ஒரு மரத்தடியில் இருந்தவாறு அங்கு பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசியில் சீக்கிரம் சாப்பிட வருமாறு அழைப்பாள். இம்மாதிரியான கேலிச்சித்திரத்தை புத்தகத்தில் பார்த்த ஞாபகம். 


 இந்தியாவில் சாம் பிட்றோடவும், சுஜாதாவும் மட்டும்தான் இவ்வாறு தகவல் தொடர்பில் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் பேசுவோம்..


ஏனென்றால் எங்கள் காலத்தில் தொலைபேசியை திரைப்படத்தில் மட்டுமே கண்டவர்கள் அதிகம். அதை வாழ்நாளிலேயே பயன்படுத்தாதவர்கள் மிக அதிகம். இன்னும் சொல்லப்போனால் தொலைபேசியில் எந்தப் பக்கம் காதை வைத்து, எப்படி பேசுவது என்று கூட தெரியாத மக்கள் நிறைய பேர் உண்டு. சொன்னால் கேலி செய்வார்கள். அதுதான் உண்மை.


அப்படியே தொலைபேசி இருந்தால் உள்ளூர் தொலைபேசியின் பயன்பாடு மிக குறைந்த தூரத்திற்கு தான். வெளியூர்களுக்கு, வெறும் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் கூட கால் புக் பண்ணி தான் பேச முடியும். அதன் பின் விடிவுகாலமாக எஸ்டிடி வந்தது. நொடி கணக்குகளில் ஏறிக் கொண்டே போகும். வெளியில் எஸ்டிடி பூத்துகளில் அந்த திரையை பார்த்துக்கொண்டே பேசுவோம். 30 நொடிக்கு ஒரு முறை காசு ஏறிக் கொண்டே போகும். எனவே மிகச் சுருக்கமாக செய்திகளை மட்டுமே பேசுவோர் தப்பித்து கொள்வார்கள். விவரம் தெரியாமல் பேசினால்  தாறுமாறாக பில் வந்து சேரும். வீட்டில் தொலைபேசி வைத்திருக்க் கூடியவர்களுக்கு எஸ் டி டி பில் ஏறுகின்ற விஷயம் அப்போது தெரியாது. மாதாந்திர பட்டியல் வரும்போதுதான் ஹார்ட் அட்டாக் வருவது போல இருக்கும். 


பெரும்பாலான மக்கள் வீடுகளில் தொலைபேசி கிடையாது. தொலைபேசி வைத்திருப்பவர் வீட்டிற்கு சென்று ஓசியில் பயன்படுத்துவதுண்டு. அதனால் வரும் மான, அவமான பிரச்சனைகளையும் சந்திப்பதுண்டு. தொலைபேசிக்கு பூட்டு போட்டு வைத்திருப்பார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது. எல்லோரும் ஓசியில் பேசிவிட்டு அவர்கள் பணம் கட்டுவது கடினம் தான். 


இரண்டு ஜி அலைக்கற்றைகள் வந்த பிறகு தொலைபேசி தொடர்பு அமைச்சர் ராசா புண்ணியத்தில் ஓரளவு தொலைபேசிக்கான கட்டணத் தொகை எளிமையானது, குறைவாகவும் ஆனது. ஆனால் அவர் பெயரும் சிலரது சதியால் ரிப்பேரும் ஆனது..


தொலைபேசிகள் போய் அலைபேசிகள் வந்த பிறகு எல்லாம் மாறிப்போனது.


 முதன் முதலில் என் மகன் அலைபேசி வாங்க சொன்ன போது இதெல்லாம் நமக்குத் தேவை இல்லை என்று மறுத்துவிட்டேன் எனது மகனும் மனைவியும் தான் சொன்னார்கள். நரிக்குறவர்கள் கூட கையில் அலைபேசி வைத்துக் கொண்டு அலைகிறார்கள்,  அரசு பணியில் இருந்து கொண்டு அலைபேசி வைத்துக் கொள்வதற்கு அழுகிறீர்களே, என்று கட்டாயப்படுத்தி என் கையில் அலைபேசியை தினித்து விட்டனர். 


களத்திலே மேய விட்ட மாடு எவ்வளவு தூரம் அனுமதிக்கப் போகலாம் என்றால் கட்டுக்கயிறு அனுமதிக்கும் தூரம் வரை, என்பது போல கையடக்க அலைபேசியை கையில் கொடுத்துவிட்டு எங்கு இருக்கிறீர்கள் என்று மணிக்கொரு முறை அழைத்து கட்டுக்குள் வைத்திருக்கும் காலமாகிவிட்டது. 


குரல் அழைப்பு மட்டும் போதாது என்று முகம் காட்டி பேசும் பேச்சாகி விட்டது. அங்கிருக்கிறேன், இங்கே இருக்கிறேன் என்று விடும் புருடாக்கள் எல்லாம் பொடி பொடியாய் போயின. 


பட்டன் டைப்பிங் உள்ள அலைபேசி பேசுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். அதையும் இன்றுள்ள அலைபேசிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறோம் என்பது தெரியும். பேசுவதற்கு மட்டுமே இருந்த அலைபேசி ஒரு கையடக்க கணினியாகவே செயலாற்றக் கூடிய அளவிற்கு மாறிவிட்டது அதில் உள்ள பயன்பாடுகள் உடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது பெரியவர்களிடம் இருந்து சிறு குழந்தை வரை அலைபேசிக்கு அடிமையாகாத ஆட்களே இல்லை எனலாம்.


அழுகின்ற குழந்தைக்கு அம்புலியை காட்டி அமுதூட்டிய காலம் போய் அலைபேசி காட்டி அமரும் காலம் இது.


அலைபேசி வந்த பின்பு அகிலத்தின் அத்தனையும் வந்து சேர்ந்தது, அதோடு நம் தரவுகளும் ரகசியங்களும் வெளியே போய்க்கொண்டிருக்கின்றன தெரியாமலேயே... 


அறிவியலின் அத்தனை கண்டுபிடிப்புகளும் நம் ஆற்றலை பெருக்கிட ஆன்மாவையும் அறிவையும் மங்கிட வைக்க அல்ல... 


சாளரத்தை திறந்து வையுங்கள்: காற்று உள்ளே வரட்டும் என்றார்கள்.. 

உள்ளே வருவது வெறும் காற்று மட்டும் தானா, அல்லது விஷ கிருமிகளா, காலம் தான் பதில் சொல்லும்...

 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...