தடை செய்க! தடை செய்க! காதலை தடை செய்க!?! காதல் மனங்களை தடை செய்க!!!
இப்போது நடந்து வரும் ஆணவக் கொலைகளை பார்த்தால் இந்த கோஷத்தை தான் முழங்க வேண்டி இருக்கிறது.
நாம் சனாதனத்தை மீற முடியாது. சனாதனக் கொள்கைகளை மாற்றவும் முடியாது. சனாதனம் உருவாக்கிய ஜாதியை ஒழிக்க முடியாது. ஒழிக்க கூடாது. ஏனெனில் நால்வகை வர்ணத்தையும் பகவான் படைத்ததாயிற்றே! அவரே நினைத்தாலும் மாற்றமுடியாதாமே... சரிதானே...!
ஆனால் இந்த காதல் எங்கிருந்து வருகிறது என்பதை பற்றி சற்று யோசித்து தான் பார்ப்போமே..
நம் மக்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பிரிக்க முடியாத ஒரு அம்சம் உண்டு என்றால் அது திரைப்படங்கள் தான்.
யார் பேச்சை கேட்கிறோமோ இல்லையோ சினிமாக்காரர்கள் பேச்சை கேட்காமல் இப்போது வாழ்க்கை இல்லை. அந்தத் திரைப்படங்களிலேயே வலிந்து வழிந்து காட்டப்பட்டது காதலைப் போற்றி தான்.
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என்று இந்த காலத்தில் நடிகர்களில் இருந்து அந்த காலத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், எம்ஜிஆர் சிவாஜி ஏன் அதற்கு முன்னால் தியாகராஜ பாகவதர், பி. சின்னப்பா என்று எல்லா நடிகர்களும் நடித்த படங்களிலும் காதலை உருகி உருகி காட்டி இருப்பார்கள்..
நாடுகள் தாண்டி, மாநிலங்கள் தாண்டி, மொழிகள் தாண்டி, இனங்கள் தாண்டி, ஜாதிகள் தாண்டி, வர்க்க பேதங்கள் தாண்டி, விதவிதமாய் காதலித்திருப்பார்கள்.
கண்டவுடன் காதல் காணாத காதல், மோதலினால் காதல் என்றெல்லாம் வகை வகையாய் காதலித்திருப்பார்கள். காலம் காலமாக பார்த்த தலைமுறை இதனால் கெட்டுப் போக வாய்ப்பு இருப்பதால் திரைப்படங்களை தடை செய்தால் காதலை தடை செய்யலாம் என்று தோன்றுகிறது.
அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது அவர்களை கேட்டால் நாங்கள் புராண கதைகளையும் புராண நாடகங்களையும் பார்த்து தானே ஆதி காலத்தில் இருந்து சினிமா எடுக்க ஆரம்பித்தோம் என்பார்கள். ஆகவே முருகன் குறத்தியை மணந்த காதலித்து மணந்த வள்ளி திருமணத்திலிருந்து பவளக்கொடி போன்ற புராண நாடகங்களையும் தடைசெய்ய வேண்டுமே...
அது சரி அந்த நாடகங்களையும் மூட்டை கட்டி தூக்கி எறிந்து விடலாம் என்று சொல்வார்கள்.
இது புராணக் கதைகளிலும் இலக்கியங்களிலும் உள்ளது தானே என்பார்கள்.
அது சரி... ராமாயணத்திலும், மகாபாரதத்திலும், இதர புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும் சமகால இலக்கியங்கள் வரை இல்லாத காதலா.
. அதிலும் வர்ணங்கள் தாண்டி ஏன் தேவர்கள் அசுரர்களை காதலித்த கதை கூட உண்டே... அப்படியானால் புராணக் கதைகளையும் தடை செய்து விடலாமே...
அடடே... அப்படியெல்லாம் புராணங்களை தடை செய்து விட முடியாதே... அது காலம் காலமாக நமக்கு இருந்து வரும் நம்பிக்கை ஆயிற்றே.
புராணங்களை தடை செய்தால், மகாபாரதத்தில் ஒரு பகுதி தானே பகவத் கீதை. அதில் தானே வர்ணத்தை படைத்தார் பகவான். அப்ப பகவத்கீதையும் தடை செய்து விடலாமே..
ஆக எப்படி பார்த்தாலும் காதல் என்பது காலம் காலமாய், எல்லா உயிரினங்களுக்கும் குறிப்பாய் மனித இனத்திற்கு சொந்தமான சொத்தாயிற்றே... இது உலகம் முழுவதும் உள்ளது விஷயமாய் இருக்கே. இதை எப்படி தடை செய்வது...
ஒரு படித்த மேதை சொல்கிறார். பெற்றோரிடம் அனுமதி பெற்று காதலித்தால் தப்பில்லை. அவர் ஒரு டாக்டர், மகாமேதை, உலக மகா அறிவாளி, எல்லோரும் தரம், கல்வித் தகுதி பார்த்து, வசதி பார்த்து, சொத்து பார்த்து, சம தகுதியாய் இருக்கிறதா என்று பார்த்து அப்பா அம்மாவிடம் ஒரு அப்ளிகேஷன் கொடுத்து அனுமதி பெற்று காதலிக்க வேண்டியது தானே. ஏனென்றால் அவர் எல்லாம் அப்படித்தான் காதலித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..
அட மேதைகளா... காதல் என்பது இயற்கையாய் தோன்றுவது. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் இது உண்மை காதலா,நம்பிக்கைக்குரியதா என்று....
குறத்தியை மணந்த முருகனை வணங்கி விட்டு, காதல் மனம் செய்த அத்தனை தெய்வங்களையும் வணங்கி விட்டு, சாதி இரண்டொழிய வேறில்லை என்று அவ்வையார் பாடலை படித்துவிட்டு, பறத்தியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா எலும்புக்குள்ளும் தசைக்குள்ளும் இலக்கமிட்டு இருக்குதோ என்று பாடிய சித்தர்களையும் வணங்கிக் கொண்டு, ஆதியில் இருந்ததில்லை ஜாதி இது இடையிலே வந்த வியாதி என்று கூறிய பட்டினத்தாரையும் வணங்கிக் கொண்டு, திரும்பத் திரும்ப ஜாதி பெயராலே அடித்துக் கொண்டு.,இயற்கையாய் மனித குலத்திற்கே சொந்தமான காதலை அழிக்க துணிந்து விட்ட மேதைகளே...
சிந்தித்துப் பாருங்கள்... இல்லாவிட்டால் புராணங்கள் எல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு ஜாதியைக் கட்டிக் கொண்டு அழுங்கள்..
No comments:
Post a Comment