இந்தத் தலைப்பை படித்தவுடன் ஏராளமானோர் என்னை திட்டுவார்கள் என்பது தெரியும். இருந்தாலும் இதை விமர்சனம், சுய விமர்சனம் என்ற முறையில் தான் எழுதுகிறேன். தவறில்லை என்று நான் நம்புகிறேன் ..
உண்மையில்...
எனக்கு நினைவு தெரிந்த வரை நம் நாட்டில் முன்பெல்லாம் எல்லோருமே தாய் மொழி கல்வி மூலம் தான் படித்தோம். பெரும்பாலும் அரசு பள்ளியில் தான் படித்தோம். இன்று இந்தியாவிலேயே ஓரளவுக்கு படித்த மக்கள் நிறைந்த தமிழகம்.
வெளிநாடுகளிலும், இந்தியாவில் முழுக்க பல பகுதிகளில் நல்ல உயர்ந்த பணியில் தமிழர்கள் இருப்பது பெருமைக்குரிய விஷயம். இஸ்ரோவில் இருந்து ஏராளமான விஞ்ஞானக் கூடங்களிலிருந்து, மருத்துவ நிலையங்கள் வரை, தொழிற்சாலைகளில் இருந்து கல்வி நிறுவனங்கள் வரை தமிழர்கள் படித்து நன்கு நல்ல உயர்ந்த பதவிகளில் இருக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் .அது இல்லை என்று யாராவது மறுப்பார்கள் வீம்புக்கு வேண்டுமானால் இருக்கலாமே தவிர அதுதான் உண்மை.
இவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் தாய்மொழி கல்வியும், குறிப்பாக அரசு பள்ளிகளிலும் உதவி பெறும் பள்ளிகளிலும் படித்தவர்கள் தான். அந்த வசதி படைத்தவர்கள் கூட அங்கு தான் படிக்க வைத்தார்கள்.
பெரிய கோடீஸ்வரர்களும் சினிமாக்காரர்களும் தொழிலதிபர்கள் வேண்டுமானால் கொடைக்கானலிலும் ஊட்டியிலும் கான்வெண்டில் படிக்க வைத்திருப்பார்கள். மற்றபடி எல்லோருமே சாதாரண பள்ளிகளில் படித்தவர்கள் தான்.
ஆனால் இந்த இருபது ஆண்டுகளுக்குள் தான் ஏராளமான தனியார் பள்ளிகளும், முழுக்க முழுக்க ஆங்கிலக் கல்வி முறையும் கல்வியும் மும்மொழிக் கல்வியும் தமிழகத்தில் பரவி உள்ளன.
உண்டு உறைவிட பள்ளிகளும் மிகப் பிரம்மாண்டமான வசதி உள்ள பள்ளிகளும் பெருத்து விட்டன. இல்லாத அவை இல்லாத ஊர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நம் மாதிரி தனியார் பள்ளிகள் பெருகிவிட்டன. வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர வர்க்கம், மிக மிக சாமானியர்கள் வரை இன்று தனியார் பள்ளியில் தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.
இந்த ட்ரெண்ட்டை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கமே...
தமிழிலேயே படித்து மருத்துவரானவரும் பொறியியலாளரானவரும், ஆசிரியரானவரும் பல்துறை வித்தகர்களும் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வியில் சேர்த்து விடும்போது, சாதாரண மக்கள் ஆங்கில பள்ளியில் சேர்க்க ஆசைப்படுவதில் என்ன அதிசயம் இருக்க முடியும்.
எனக்கு தெரிந்து ஒரு தமிழ் பற்றாளர். தாய்த்தமிழ் மொழி கல்விக்காக நிறைய இயக்கங்கள் கண்டவர்.. தாய்மொழி கல்விக்காக நூல்கள் எழுதியவர். மக்களை திரட்டி இயக்கங்களெல்லாம் கண்டவர். ஆனால் அவர் வீட்டுக்கு பிள்ளைகளை ஆங்கில கல்வியில் தான் சேர்த்திருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் சீருடைகளில் இருந்து எல்லா வகை ஒழுக்கங்களும் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல தான் கிடைக்கும் என்றாரே பார்க்கலாம்..
இதைவிட கூத்து ஒரு தமிழாசிரியர் தனியார் பள்ளியில் வேலை பார்த்தார். வேலைக்கு போகும் போது வேஷ்டி சட்டை தான். நெற்றி நிறைய பட்டை குங்குமத்தோடு போவார். மிகவும் அமைதியான குரலில் மட்டுமே பேசுவார். அதற்கு மேல் அவர் பையனும் சிறுவயதிலேயே பட்டை அடித்து திரிவான். அவருக்கு அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு பேண்ட் சர்ட் இன் பண்ணிதான் போவார். நெற்றியில் திருநிறையும் காணோம். சத்தத்திற்கும், அலப்பறைக்கும் பஞ்சமே இல்லை. தன் பையனை மட்டும் ஆங்கில கல்வியில் சேர்த்து விட்டார்.
இது மாதிரி நூறு காட்சிகளை நாம் தினசரி காணலாம்..
இது மாதிரி அரசு பள்ளிகளில் வேலை பார்த்துக் கொண்டு அல்லது, அரசு பணிகளில் இருந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழி கல்வி சேர்த்து விடுவது மிக அதிகமாகி விட்டது. இவர்களை பார்த்து வசதி குறைவானவர்கள் கூட கடன் வாங்கியாவது ஆங்கில வழிக் கல்வி, தனியார் பள்ளிகளிலே சேர்த்து விடும் அவலம் தான் நீடிக்கிறது.
இதே லட்சணத்தில் போனால் தமிழ் படித்தோரின் எண்ணிக்கை மிக அரிதாகிவிடும் அவலம் தான் இருக்கிறது. இதற்கு பெரும்பகுதி நடுத்தர வர்க்கத்தாரே காரணம்.
இதற்கு கூசாமல் இவர்கள் சொல்லும் காரணம், அரசின் கல்விக் கொள்கை, அல்லது தங்கள் வீட்டில் மனைவிமார் கட்டாயப்படுத்துகிறார்கள்....
இது மாதிரி ஏதாவது சில்லறை சாக்குப் போக்குகளை சொல்லிக்கொண்டே வளர்ந்து வந்த பாதையை மறந்துவிட்டு, தாய்மொழி கல்வியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இது யாரையும் குறை சொல்வதற்காக எழுதப்பட்டது அல்ல..
மேலும் தொடரும்ம்ம்.....
No comments:
Post a Comment