சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 7 July 2025

காலதர்

 பாரதி காலதரின் அருகில் வந்து மிக்க மகிழ்ச்சியோடு அந்த திண்டில் அமர்ந்தாள்.

 காலதர் என்றவுடன் குழம்பி விட வேண்டாம். அந்த சாளரத்தின் தூய தமிழ் பெயர். சாளரம் என்றாலே உங்களுக்கு புரியுமே.. வேறொன்றும் இல்லை ஜன்னல் தான். போர்த்துகீசிய மொழியில் உள்ள வார்த்தை, ஜன்னல் தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அது போகட்டும். 

சரி பாரதி கதைக்கு வருவோம். அவளுக்கு சாளரம் என்றால் மிகவும் விருப்பம். ஏனெனில் அவள் சிறு வயதில் குடியிருந்தது ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டில். சந்துக்குள் அவளுடைய வீடு கடைசியாக இருந்தது. அந்த வீட்டுக்கு ஜன்னல் எல்லாம் கிடையாது. காற்று வருவதற்கு கூட வழி இல்லாத வீடு. வாசலுக்கு வந்தாலோ அதென்ன பொம்பள புள்ள வெளியில போய் நிற்கிறது என்று அம்மா திட்டுவாள். 

அவள் பெயர் தான் பாரதி. ஆனால் சுதந்திரம் எல்லாம் ஒன்றும் கிடையாது. இரு பாலர் சேர்ந்து படிக்கும் பள்ளியில் பெண்கள் படித்தால் கெட்டு விடுவார்கள் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் பக்கத்தில் உள்ள மகளிர் பள்ளியில் அவளை சேர்த்து விட்டார்கள்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும், கல்லூரியில் சேர்த்து விடச் சொல்லி கெஞ்சினாள். அம்மா முடியவே முடியாது என்று மறுத்து விட்டாள். ஒரு வழியாக அவளது அப்பாவின் ஆதரவின் பேரில் மகளிர் கல்லூரியில் இளங்கலை தமிழ் பிரிவில் சென்று சேர்ந்தாள்.

வகுப்பில் பேராசிரியர் புறநானூற்றுக்கதையினை சுவாரசியமாய் விவரித்துக் கொண்டிருந்தார். 

பாண்டிய நாட்டு அரசன் திருவீதி உலா வந்த கதை.. அரசனோ பேரழகன்.. ஆடவரே மயங்கிடும் வண்ணம் அழகு கட்டிடங் காளை... பெண்களுக்கோ சொல்ல வேண்டாம் கனவிலும் நினைவிலும் காண விரும்பும் நாயகன் அவன்..

நாயகியோ வணிகர் குலத்து பெண். வீட்டிலோ கட்டுப்பாடு அதிகம். ஆடவர் யாரையும் காணவிடாமல் வீட்டிற்குள்ளேயே பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். மன்னனின் திருவீதி உலா காட்சியை மாடத்தில் நின்று காண விரும்பினாள்..  வாசலில் நிற்கவும் தடை. மாடத்தில் நின்று காணவும் தடை. காலதரை திறந்து வைத்து காணவும் தடை. கெஞ்சினாள்.... அனுமதி மறுக்கப்பட்டது.. கதவை லேசாகத் திறந்து உள்ளிருந்து மட்டுமே காண அனுமதித்தார்கள்.

ஆதவனை காண காத்திருந்த தாமரை மலர் போல் காலதரில் தலை சாய்த்து பார்த்திருந்தாள்... அழகான பெண் யானை மீது அலங்கரித்த அம்பாரி மீது அமர்ந்திருந்த பாண்டிய மன்னன் அனைவரையும் பார்த்து அகமகிழ்ந்தவாறு கையசைத்து வந்தார்.. யானை ஆடி அசைந்து வந்தது, மெதுவாக வந்தாலும், குதிரை வேகமாக கடந்து செல்வதை போல, தான் இருக்கும் இடத்தை மன்னன் வேகமாக கடந்ததாக அவள் கருதி வருந்தினாள்.


பாரதிக்கு கதையை கேட்டதும் என்னவோ போல இருந்தது. தன் கதை சொல்வது போல நினைத்து வருந்தினாள். தனக்கு வாசலின் நிற்பதற்கும் அனுமதி இல்லை. எட்டிப் பார்ப்பதற்கு கூட ஜன்னல் இல்லை. நினைத்து நொந்து போனாள். கனவில் வரும் நாயகன் பாண்டிய மன்னனாக இருக்கக் கூடாதா, அல்லது தற்போதைய நட்சத்திர நாயகனாக இருக்கக் கூடாதா என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டாள். ஒரு வழியாக படிப்பு முடிந்ததும், அம்மாகாரியின் வற்புறுத்தலால், குடும்பத்தார் உடனடியாக திருமணம் செய்து வைத்து தங்கள் கடனை கழித்துக் கொண்டார்கள்.

கட்டிய கணவன் கனவில் வந்த கதாநாயகன் போல் இல்லாவிட்டாலும் சுமாராக இருந்தார். நடுத்தர குடும்பம். அந்த வீட்டுக்கு போனால், அதுவும் கட்டுப்பாடு நிறைந்த குடும்பம் தான்.

திருமணம் நடந்ததும் தனக்கு சுதந்திரக் காற்று கிடைக்கும் என்று நம்பி இருந்து அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வீட்டிற்கு போன புதிதில் கணவனிடம் சற்று சத்தமாய் சிரித்து விட்டாள். 

வெளியில் இருந்து மாமனாரின் கொடூரமான வசவு குரல் கேட்டது 

அது என்ன தேவிடியா சிரிப்பு..

நொறுங்கியே போய்விட்டாள். வேற என்ன செய்வது.. வாழ்நாள் முழுக்க கற்றுக் கொண்ட பாடத்தின் படி அமைதியாகிவிட்டாள்..

 இவளது நல்ல காலம் கணவனுக்கு வேலை கிடைத்து வெளியூருக்கு தனிக்குடித்தனம் செய்ய புறப்பட்டார்கள். கணவன் நல்ல வீடாக வாடகைக்கு பார்த்து வந்தான். ஓரளவு சுமாரான வீடு. அடுப்படி, தனி படுக்கையறை, வரவேற்பறை எல்லாம் இருந்தது. மாடியில் தான் வீடு. இவள் போய் சுற்றிப்பார்த்து வந்தாள்.

ஒரு பெரிய சாளரம் இருந்தது. உட்கார்ந்து கொள்கிற அளவுக்கு  திண்டும் இருந்தது. ரொம்ப சந்தோசப்பட்டு போனாள். ஓடிப் போய் திண்டில் அமர்ந்து சாளரத்தின் வழியாக சுற்றிப் பார்த்தாள்.. தெருவே தெரிந்தது.


 அவளுக்கு சுதந்திரம் கிடைத்தது போல் இருந்தது..... 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...