சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 19 July 2025

சமத்துவம்

 இலக்கிய கூட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த தமிழ் மாறன் குழந்தையின் அழுகுரல் கேட்டு எரிச்சல் அடைந்து கத்தினார்.. 

"ஏய் அங்க என்ன பண்ணிட்டு இருக்க. குழந்தை கத்திட்டே இருக்கு." 

 அவரது மனைவி கிச்சனிலிருந்து பதிலளித்தார். 

"அது என்னமோ தெரியல காலையில அழுதுட்டே இருக்கு என்ன அமத்தினாலும் அடங்கமாட்டேங்குது..." 

"சரி சரி அமைத்தி தொல.. கூட்டத்துக்கு போகணும்..?" 

" குழந்தைக்கு வயித்துக்கு பத்தாது போல இருக்கு, பால் பத்தல.. ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன் ஒன்னும் கண்டுக்கவே இல்ல.." 

"அதுக்கு என்ன பண்ணனும்கிற..?"

மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவர் மனைவி வாய்க்குள் முனங்கினாள்..

தமிழ் மாறன் ஒரு பெரிய இலக்கியவாதி. பேச்சாளர். கவிஞர், தமிழாசிரியர்.. சொல்லிக் கொண்டே போகலாம். 

அருவி கொட்டுவது போல வார்த்தைகள் சரளமாகிவிழும் கணீரென்ற குரல். எப்பேர்ப்பட்ட கூட்டத்தையும் கட்டுக்குள் வைக்க கூடிய சிறந்த பேச்சாளர்.

எந்த தலைப்பில் பேசினாலும் மிகப் பிரம்மாண்டமாக பேசக் கூடியவர். குறிப்பாக பெண் விடுதலை பற்றி பேசினால், மிகச் சிறந்த உதாரணங்களை எல்லாம் எடுத்துப் பேசக் கூடியவர். இலக்கியத்தில் ஆரம்பித்து இன்றைய சினிமா வரை எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுவார். ஆண், பெண் சமத்துவத்தைப் பற்றி பேசும்போது திருமணம் என்றால் அது வெறும் சடங்குகளல்ல, அடிமைத்தனம் அல்ல, சமத்துவத்தின் சின்னம். தாலி போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் என்று பட்டுக்கோட்டையாருடைய பாடலை எல்லாம் பிரமாதமாக பாடி பேசுவார். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லுவார். 


இன்றைக்கு கூட அவர் மகளிர் தினத்திலே சிறப்புரை ஆற்ற வேண்டும். அதனால் தான் கிளம்புவதில் தாமதம் என்று கத்திக் கொண்டிருந்தார்.

 தெரியாத்தனமாக விழா குழுவினர் அவரது மனைவியையும் கட்டாயம் அழைத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இவர் சிரித்து மழுப்பி பார்த்தார். அவர்கள் கட்டாயப்படுத்தியதால், வேறு வழியில்லாமல் மனைவியை கிளம்ப சொல்லிக் கொண்டிருந்தார். 

அவரது மனைவி பெயர் பாரதி. பெயருக்கு தான் பாரதி, புதுமைப்பெண்ணெல்லாம் கிடையாது. சரியான பயந்தாங்கொள்ளி.

கூட்டத்தில் பேசுவதற்கு இவர்களை அழைத்துப் போக கார் வந்து விட்டது. 

ஒரு வழியாக கூட்டத்திற்கு கிளம்பி போனார்கள். கூட்டத்தில் மேடையில் தமிழ் மாறன் அமர வைக்கப்பட்டார். அவரது மனைவி கீழே அமர போகும்போது அவரையும் மேடையிலேயே அமர சொன்னார்கள். அந்தம்மா கனவரைப்பார்க்க, அவரும் கண்ணசைவிலேயே உத்தரவிட்டார். 

 வேறு வழி இல்லாமல் அவரது மனைவி மேடையிலே அவர் அருகில் அமர்ந்தார். சிறப்புரை எப்போதும் போல மிக பிரமாதமாக பேசினார். ஏராளமான கைதட்டுகள், மாலை மரியாதை எல்லாம் சிறப்பாக கிடைத்தன.

வீட்டில் பெண்களை சமமாக மதிக்க வேண்டும், சமமாக கூட இல்ல மிக உயர்வாக மதிக்க வேண்டும், ஏனெனில் பெண்கள் இல்லை என்றால் யாருக்கும் வெற்றி இல்லை. வீட்டில் அனைவரும் வேலைகளை பங்கு போட்டு செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசினார். 

விழா முடிந்தது வீட்டிற்கு விழா குழுவினர் பத்திரமாக காரில் அனுப்பி வைத்தார்கள். வீட்டிற்கு வந்தவுடன் விழா குழுவினர் விட்டுவிட்டு கிளம்பினார்கள். 

தமிழ்மாறன் மனைவியிடம் தலை வலிக்கிறது காபிபோட்டு கொண்டு வா என்று உத்தரவிட்டார்.

சொல்லி வைத்தார் போல் பிள்ளையும் அழ ஆரம்பித்தது.

 "கொஞ்சம் பொறுங்க ஒண்ணாத்தானா போயிட்டு வந்தோம், எனக்கும் அசதியா தான் இருக்கு. கொஞ்சம் பொறுங்க" என்றாள். 

"தடிக்கழுதை எதுத்தா பேசுற,, சொன்னவுடனே சவடால மேடைல வந்து உக்காந்துட்ட" என்று கத்தினார். 

அவள் ஏதோ பதில் பேச ஆரம்பித்தாள். 

பளார் என்று அறை விழுந்தது.


ஏதோ விட்டுப் போனதை கொடுப்பதற்காக விழாக் குழுவில் வந்த ஒருவர் வீட்டிற்கு வந்தார். 

ஐயா என்று அவர் அழைத்த குரல் கேட்டு தமிழ்மாறன் மனைவி வெளியே வந்தாள்.

அவரைப் பார்த்தவுடன் தமிழ் மாறன் மனைவி கலங்கிய கண்களோடு அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள்..... 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...