சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 17 July 2025

நிஜ முகம்

 ராஜன் ஒரே பரபரப்பாக இருந்தான். அவனுடைய நன்பன் கணேசன் ஊரில் இருந்து வந்திருந்தான்.ராஜனும், கணேசனும்  நெருங்கிய நண்பர்கள். உடன்படித்தவர்கள். படிக்கிற காலத்திலேயே மிகவும் நெருக்கமாக இருந்ததற்கு காரணம், இருவரும் ஒரே மாதிரியான குடும்ப பின்னணி அதுதான் வறுமை.. 

இரண்டாவது ஒரே மாதிரியான எண்ணம் கொண்டவர்கள். இரண்டு பேரும் சினிமா அரசியல் என்று ஒரே மாதிரியாகவே பேசிக் கொண்டு திரிவார்கள். ரெண்டு பேரும் வேறு வேறு மாவட்டங்களில் வேலை செய்தாலும் சந்தித்து விட்டால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

 ராஜனுக்கு திருமணம் ஆகிவிட்டது திருமண ஏற்பாடு செய்ததெல்லாம் அவனது கட்சித்தலைவர் தான்.ராஜனுக்கு தன் கட்சி மீது அளவு மீறிய நம்பிக்கை. அதனால் அவனது கட்சியோ, கட்சி தலைவர்களோ எது சொன்னாலும் அவனுக்கு வேத வாக்கு. இங்குள்ள மாவட்ட தலைவர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மிகச்சிறந்த பேச்சாளர். பெரும் இலக்கியவாதியும் கூட பேசினால் நாள் பூரா கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  அவருக்கு தெரியாத விஷயமே இல்லை எனலாம். தெரியவில்லை என்றாலும் தெரிந்த மாதிரியாக பிரமாதமாக பேசுவார். நல்ல பகுத்தறிவாளர், சிந்தனையாளர், முற்போக்குவாதி, பெண் உரிமைவாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சாதி மத பேதங்கள் இல்லாதவர். அப்படித்தான் ஊரில் அவருக்கு நல்ல பெயர்.யாரிடம் பேசினாலும் அவருடைய பேச்சு தான் எடுபடும். எடுத்த காரியத்தை முடிப்பதற்கு எல்லா வித்தைகளையும் பயன்படுத்தக் கூடியவர். அதனால் ராஜனுக்கு அவரிடம் அளவு மீறிய மரியாதை உண்டு.  எல்லாரிடமும் மிகவும் சகஜமாக பேசுவார். வயதில் சிறியவர்களிடம் வாடா போடா என்று அழைத்தாலும் அவர் உரிமை எடுத்துக் கொள்ளும் பாங்கில் எல்லோரும் மயங்கி விடுவார்கள். 

நாட்டில் எல்லா பிரச்சனைகளுக்கும் ஜாதி மத பிரிவினைகள் தான் காரணம். இவற்றை தீர்ப்பதற்கு ஒரே வழி கலப்புத் திருமணம் என்று அடித்துப் பேசுவார். நிறைய திருமணங்களும் செய்து வைத்திருக்கிறார். அந்த வகையில் தான் ராஜனுக்கும் கலப்பு திருமணம் செய்து வைத்தவர் அவர்தான். 

அவன் நண்பன் கணேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூட வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக ராஜனுக்கு செய்தி வந்தது. ஒரு நாள் அந்த பெண்ணே நேரடியாக ராஜனை சந்தித்து தங்களது விஷயத்தை கூறினாள். தங்களது காதலுக்கு ஜாதி தான் தடையாக இருக்கிறது என்றும், கணேசன் உறுதியில்லாமல் மழுப்பலாக பேசுவதாக அவள் கூறினாள்.

ராஜனுக்கு நண்பனின் காதல் செய்தி கேட்டு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஜாதி காரணமாக கணேசன் உறுதியில்லாமல் இருப்பதை கேட்டு வருந்தினான். அவனிடமே நேரடியாக பேசி விரைவில் நல்ல முடிவு காண்பதாக கூறி அவளை அனுப்பி வைத்தான்.  

அந்த வார இறுதியில் கணேசன் ராஜனை சந்திக்க வீட்டிற்கு வந்தபோது இதைப் பற்றி பேசினான். கணேசன் தனக்கு ஒன்றும் தடை இல்லை என்றும் தனது தாயார் தான் தனது ஜாதியிலேயே பெண் பார்க்க சொல்லி பிடிவாதமாக இருப்பதாக கூறினான். 

ராஜன் தலைவரை சந்தித்து பேசினால் இந்த பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கண்டுவிடலாம். கணேசன் தாயாரை அவர் சரி கட்டி விடுவார் என்று நம்பினான். சரி இருவருமே நேரில் சென்று தலைவரை சந்தித்து பேசி நல்ல முடிவு காணலாம் என்று முடிவு எடுத்தனர். 

இருவரும் கட்சித்தலைவரை பார்க்க கிளம்பினார்கள்.தலைவரை பார்க்க போனால் கூட்டமாக இருந்தது. எப்பொழுதுமே அவரை சுற்றி கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். கலகலப்பாக ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் சந்தோஷமாக வரவேற்றார். 

என்னப்பா ரெண்டு பேரும் அதிசயமா சேர்ந்து வந்து இருக்கீங்க என்று சிரித்தவாறே வரவேற்றார். பொதுவாக சில விஷயங்கள் பேசிய பிறகு என்னப்பா ஏதும் முக்கிய விஷயம் உண்டா என்று கேட்டார். 

சொந்த விஷயமாக உங்களிடம் பேச வேண்டும் என்றவுடன் சிறிது நேரம் காத்திருக்க சொல்லிட்டு மற்றவர்களிடம் பேசி அனுப்பி விட்டு இவர்களிடம் பேச ஆரம்பித்தார். 

கணேசன் திருமண விஷயம் என்றவுடன் குஷி ஆகிவிட்டார்.

 குடும்பத்தாரை விட தன்னை மதித்து தன் ஆலோசனை கேட்கிறார்கள் என்றால் அவருக்கு சொல்ல வேண்டுமா என்ன. எப்பொழுதுமே அவரை துதி பாடி அவரிடம் ஆலோசனை கேட்டால் அல்லது உதவி கேட்டால் நன்றாக பேசி வழிகாட்டுவார்.

காதல் விஷயம் என்றவுடன் பிரகாசமாகி பெண்ணைப் பற்றியும், படிப்பு, வேலை பற்றியும் விசாரித்தார்.

வேலை பார்க்கிற பெண் என்றவுடன் நல்ல விதமாக முடிக்க வேண்டியதானே என்று கேட்டார். ஜாதி பற்றியும் அதனால் ஏற்பட்ட தடங்கல் பற்றியும் கூறியவுடன் பெண்ணின் ஜாதி என்ன என்று கேட்டார்.

ஜாதி இன்னதென்று சொன்னவுடன் பிரகாசமாய் இருந்த அவரது முகம் சற்று இருண்ட மாதிரியாக தெரிந்தது. பிறகு சமாளித்துக் கொண்டு சற்றே இளித்த மாதிரியாக அந்த ஜாதி, எஸ் சி எல்லாம் வேண்டாம் பா என்றார். 

இருவரும் திடுக்கிட்டார்கள். ராஜன் அவர் முகத்தை சற்று உற்றுப் பார்த்தான். 


சிரித்த முகத்திற்கு பின்னால், ஒரு ராட்சத, அருவருப்பான முகம் மின்னலாக தோன்றி மறைந்தது போல் இருந்தது அவனுக்கு.......

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...