வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இவ்
வையத்தில் வாழும் மனிதருக்கெல்லாம்.....
தனிமனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்....
இந்த சிறுமிகள் உங்களிடம் ஒரு அழுத்தமான கேள்வியைக் கேட்கிறார்கள்.
பசி உலகில் எல்லோருக்கும் பொதுவானது. அதை ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமை, அரசன், குடிமகன், முதலாளி, தொழிலாளி என வர்க்க பேதம் அறியாது...
பசி அரசியல் ஆப்பிரிக்கன், அமெரிக்கன், ஐரோப்பியன் என்று கண்ட பேதங்களோ, நாடு பேதங்களோ அறியாது..
பசி படித்தவன், படிக்காதவன், ஞானி, மூடன் என பேதம் அறியாது..
பசி ஆரியன், திராவிடன் என இன பேதமறியாது
ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஹிப்ரூ, இந்தி, தெலுங்கு, தமிழ் என மொழி பேதம் அறியாது..
பசி கிறிஸ்தவன், இஸ்லாமியன், பௌத்தன், யூதன், இந்து, சீக்கியன் என மத பேதம் அறியாது.
ஏன், ஆறறிவு உள்ளது, ஓரறிவு உள்ளது என்று எந்த உயிரின பேதமும் அறியாது.
புல் பூண்டிலிருந்து , ஆடு, மாடு, சிங்கம், புலி, யானை, மனிதன் வரை அனைவருக்கும் பொதுவானது பசி.
காலம், நேரம், இடம், சந்தர்ப்பம் பார்த்து வருவதில்லை பசி.
பசி இருப்பதால் தான் உயிரோடு இருப்பது உலகிற்கு தெரிகிறது.
பசியுடன் தான் உயிரினங்கள், ஒன்றை ஒன்று வேட்டையாடி தின்று பசி அடங்குகிறது.
ஆனால் எந்த ஜீவராசியும் தனது பசி அடங்கிய பிறகு, அடுத்தவரை பசியால் துடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதில்லை, ரசிப்பதும் இல்லை. தன் பசி தீர்ந்ததும் தானே அகன்று விடுகிறது.
மனிதன் மட்டுமே தன் பசி தீர்த்து விட்டு பிறரை பசியால் துடிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறான். ரசிக்கிறான். மகிழ்கிறான்..
பசி, நோக்காடு, சாக்காடு போன்ற துயரங்களைக் கண்டு மனம் வெதும்பி மனித குலம் உய்வுற மார்க்கம் கண்ட புத்தரும், இயேசுவும், மகாவீரரும், திருவள்ளுவரும் இது போன்ற ஏராளமான மகான்கள் இந்த பூமியில் தான் பிறந்திருக்கிறார்கள்..
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் பிறந்த பூமி இது....
பல்வேறு முன்னேற்றங்கள் காண இயந்திரப் புரட்சி தொழில் புரட்சி விவசாய புரட்சி வெண்மை புரட்சி என பல முன்னேற்றங்களை காண உழைத்திட்ட ஏராளமான விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இம் மண்ணிலே தான் பிறந்திருக்கிறார்கள்..
இயற்கை பஞ்சத்தால் உயிரினங்கள் பசிக் கொடுமையால் வாடி மடிந்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள கூடியதே.
ஆனால் செயற்கையாய் பஞ்சத்தை உருவாக்கி, லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்த சர்ச்சில்களும் ஹிட்லர்களும் முசோலினிகளும் இது போன்ற கொடூரமான அரக்க மனம் படைத்த ஆட்சியாளர்கள் இதே மண்ணில் தான் பிறந்திருக்கிறார்கள்.
அதே வரிசையில் இன்று பாலஸ்தீன இன மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்து, பட்டினி போட்டு சாகடித்துக் கொண்டிருக்க கூடிய இஸ்ரேலிய ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணை போகும் அமெரிக்க ஐரோப்பிய ஆட்சியாளர்களும் இன்று அரக்க மனம் படைத்தவருக்கு சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இயற்கையின் நீதியிலிருந்து இட்லர் முசோலினிகளும் எந்த அரக்கமனம் படைத்த அக்கிராமக்காரர்களும் தப்பியதாக வரலாறு கிடையாது..
அதுவே வரலாறு இதுவரை சொல்லிக்கொடுத்த பாடம்..
No comments:
Post a Comment