சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 12 July 2025

ஆன்மீகவாதிகளா... அறிவிலிகளா..

 ஆன்மீக கருத்துக்கள், நம்பிக்கைகள் வேறு.. புராணக் கதைகள் வேறு.. இவை இரண்டும் ஒன்றென்று நம்பினால், அவர் ஆன்மீகவாதியாக இருக்க முடியாது.

சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வரக்கூடிய கருத்துக்கள், கருத்து பரிமாற்றங்கள், இவை அனைத்தும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. 

ஒருவர் புராண கதைகளை பற்றி அவருடைய கருத்துக்களை கூறினால், ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர், கதைகளை நியாயப்படுத்தி கருத்து கூறலாமே தவிர, ஆபாச வசவு மொழிகளை பதிவிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஒருவருக்கு நம்பிக்கை உள்ளது என்று கூற எவ்வளவு உரிமை உள்ளதோ, அந்த அளவுக்கு தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூற மற்றவருக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை ஒருவர் மறுப்பாரேயானால் அவர் சமூகத்தில் வசிக்கக்கூடிய மனிதராக இருக்க முடியாது.

 ஒரு காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ராஜாஜியும், நாத்திகத்தின் பால் பற்று கொண்ட பெரியாரும் சாகும் வரை நண்பர்களாகவே இருந்தார்கள் என்றால், அவரவர் கருத்துக்களை நம்புவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் தங்களுக்கு உரிமை உண்டு, மற்றவருக்கும் உரிமை உண்டு என்ற செயல்பாட்டின் அடிப்படையில்தான். இதை யாரும் மறுப்பாரேயானால், அவருக்கு ஆத்திகத்தின் மீதும் நம்பிக்கை இல்லை, நாத்திகத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று தான் பொருள்.

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நான் மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்லக்கூடிய உரிமை உனக்கு வேண்டும் என்பதற்காக என் உயிர் உள்ளவரை போராடுவேன் என்றான் ரூசோ. 

சரி விஷயத்திற்கு வருவோம்.. ஒரு நண்பர் கண்ணப்ப நாயனார் படத்தை பார்த்துவிட்டு, அதில் கண்களை பறித்து சிவனின் கண்ணில் பதிக்கின்ற காட்சி எப்படி அறிவியலுக்கு முரணானது, என்று அறிவியல் பூர்வமாய் கருத்துக்களை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பற்றி ஒரு சகோதரர் விமர்சனம் செய்கின்ற போக்கில் மிகக் கேவலமான வசவுகளை வெளியிட்டு இருந்தார். 

ஆதரவான கருத்துக்களை கூறுவோரையும் அசிங்கமாக திட்டி இருந்தார். மொத்த குடும்பத்தில் உள்ள பெண்களையும் சம்பந்தமில்லாமல் பெரியாரையும் இழுத்து வசவு பாடியிருந்தார்..

புராணக் கதைகளை பற்றி பாரதியார் ஒரு பாடலில் எழுதி இருப்பார்.. 

"உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது

உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.


கடலினைத் தாவும் குரவும்-வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்

வந்து சமன்செயும் குட்டை முனியும்,


நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த-திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்.


ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்

உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்

நன்று புராணங்கள் செய்தார்-அதில்

நல்ல கவிதை பலபல தந்தார்.


கவிதை மிகநல்ல தேனும்-அக்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;

புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை

போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்..... 


நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மொனமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நா தன்னுள் இருக்கையில் என்று ஒரு சித்தர் பாடி இருப்பார். 

இவ்வாறு சமயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே பலவிதமாய் பாடி இருப்பார்கள். 

ஏன் நாத்திகம் கூட ஆத்திகத்தின் ஒரு பகுதி என்று நம்புவார்கள் உண்டு. அப்படி இருக்கையிலே புராணத்தின் மீதோ, ஆத்திகத்தின் மீதோ யாராவது கருத்து கூறினால் அவர்களை கேவலமாக ஒருவர் வசவு பாடினார் என்றால், அதுவும் சம்பந்தமில்லாத அவரது குடும்பபெண்களை அசிங்கமாக திட்டி கருத்துக்கள் கூறுபவர் யாராக இருந்தாலும், அவர் நிச்சயமாக ஆன்மீகவாதியாக இருக்க முடியாது, அறிவிலியாக தான் இருக்க முடியும். 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...