அந்தக் காலத்துல எப்படி இருந்தது தெரியுமா.
இந்த மாதிரி பிலாக்கானம் பாடாத பெருசுகள் யாராவது இருப்பார்களா என்று பார்த்தால், அநேகமாக வாய்ப்பே இருக்காது. எல்லா பெரிசுகளும் வழக்கமா சொல்ற பாட்டு இதுதான்.
அதுல பெருசா பீத்தல் என்னன்னா, நல்லா சாப்பிட்டு உடம்பை வைத்து இருந்தோம் பா. அந்த காலத்துல சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது தெரியுமா.. ஆனால் உண்மையை போய் பார்த்தோம்னா தெரியும் சாப்பாட்டுக்கு மனுசன் அதிகமா தாளம் போட்டது காலத்துலதான்.
வரலாற்றை ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் சரி, இலக்கியத்தை பார்த்தாலும் சரி, அல்லது அவரவர் சுய அனுபவத்தை பின்னோக்கி பார்த்தாலும் சரி, உணவு என்பது அந்த காலத்தில் மிகப்பெரிய விஷயமாக இருந்தது.
வரலாற்றில் பஞ்சங்கள் காரணமாக, லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் என்று கூட சொல்லலாம், மக்கள் உணவு கிடைக்காமல் மடிந்திருக்கிறார்கள். அதனால் தான் கஞ்சி தொட்டிகள் எல்லாம் திறக்கப்பட்டு இருந்தன.
அதேபோல இலக்கியத்திலும் பசி கொடுமையைப் பற்றி ஏராளமாகப் பார்த்திருக்கிறோம். புலவன் வீட்டில் அடுப்பிலே பூனைக்குட்டி சுருண்டு படுத்த கதை எல்லாம் படிக்கத்தான் செய்திருக்கிறோம்.
அதே போல விவசாய புரட்சி, பசுமை புரட்சி, வெண்மை புரட்சி இவைகள் எல்லாம் வரும் வரையில் மக்கள் மூன்று வேளை வயிறாற சாப்பிட்ட கதை எதார்த்தத்தில் இல்லாத விஷயமே.
ஆறு மாத பயிர் விளைந்த காலத்திலே, அறுவடை என்பது குறைவாகத்தான் இருக்கும். அதுவும் மழை குறைந்தாலோ, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ அந்த விளைச்சலும் இருக்காது. குறுகிய கால பயிர்கள் நிறைய மகசூல் எல்லாம் வந்த பிறகு தான், அரசின் நலத்திட்டங்கள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில், ஏன் இலவசமாக வந்த பிறகு பட்டினி சாவு என்பது குறைந்திருக்கிறது.
அதேபோல பல வகையான காய்கறிகள், இறைச்சி போன்றவை மிக அதிகமாக கிடைப்பது இந்த காலத்தில் தான். அந்த காலத்திலே என்று பீத்துபவர்கள் காலத்திலே தீபாவளிக்கும் திருவிழாக்களுக்கு மட்டும் தான் பலகாரங்கள் இறைச்சி போன்றவை அதிகம் கிடைத்தது.. சாப்பிட்டிருக்கிறோம்.
கவிஞர் கந்தர்வன் ஒரு நடுத்தர குடும்பத்தை பற்றி எழுதியிருக்கும் போது, அவர் வீட்டிற்கு வெளியே ஆரஞ்சு பழ தோல்கள் கிடப்பதை பார்த்து வீட்டிற்கு வந்தேன் நண்பர் கேட்பார். என்ன யாருக்கும் உடம்பு சரி இல்லையா என்று. அதாவது பழங்கள் என்றாலே யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்பது மட்டும் வாங்கி சாப்பிட்ட காலம் இருந்தது என்பது தான் உண்மை.
அதேபோல துணிமணி என்றாலே, தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் என்று ஏதாவது பண்டிகை காலங்களோ அல்லது வீட்டில் விசேடமோ வந்தால் மட்டும் தான் புது துணி வாங்கிய வழக்கம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நிறைய பேர் வீட்டிலே பிள்ளைகளுக்கு பள்ளி சீருடை தான் திருவிழாக்களுக்கும் எடுத்து புது துணி தைப்பது வழக்கம். அதேபோல பெரியோர்களுக்கான ஆடையும் அதிகம் வாங்கியது இல்லை. பண்டிகை காலங்களில் தான் ஜவுளிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். மற்ற காலங்களில் ஈ ஓட்டுவர். நவீன நைலான் தொழில் புரட்சிக்குப் பிறகு தான் நிறைய துணிமணிகள் மிகக் குறைந்த விலையில் கிடைத்தன. மக்கள் அதிகம் பயன்படுத்தலாயினர்.
அதேபோல குடியிருப்புகளை பொருத்த மட்டிலும் அனேக மக்கள் வாடகை வீட்டில் தான் குடியிருந்தனர். அதுவும் ஒண்டு குடித்தனமாக ஓட்டு வீடுகளில் குடியிருந்தது தான் உண்மை. நடுத்தர வர்க்கத்தை பொறுத்தமட்டிலும் அரசு குடியிருப்புகளில் போட்டி போட்டுக் கொண்டு குடியிருப்பவர். ஆனால் சமீப காலங்களில் தான் சொல்லப்போனால் 30 40 ஆண்டுகளுக்குள் தான், அதுவும் வீட்டுக்கடன் வந்தபின்னர் நிறைய பேர் சொந்த வீடு கட்டியது ஓரளவுக்கு வசதியாக இருப்பது சாத்தியமாய் இருக்கிறது.
அந்த காலத்துல வாகன வசதியை பொருத்தமட்டிலும் அதுவும் ஒன்றும் பெரிதாக இல்லை. போக்குவரத்து சாதனங்கள் மிகவும் குறைவு. பள்ளிக்கு பேருந்திலோ, இருசக்கர வாகனங்களிலோ பயணம் செய்ய வசதி இல்லாமல் நடந்தே பள்ளிக்கு சென்ற காலம் தான் நினைவுக்கு வருகிறது. பெரியவர்களும் பெரும்பாலும் நடராஜா தான். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் சைக்கிளில் போவார்கள். மிதிவண்டி வைத்திருந்தால் கொஞ்சம் வசதியானவர் என்று அர்த்தம். மோட்டார் சைக்கிள்கள் மிக மிக அரிது. கார் சொல்லவே வேண்டாம். ஆனால் இன்றோ எல்லா ஊர்களுக்கும் பேருந்து வசதியும், மாணவர், பெண்களுக்கு இலவச பேருந்தும், மாணவர்களுக்கு இலவச சைக்கிளும் வந்துவிட்டது. இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இல்லாத வீடு எனலாம் கார்களும் அநேகமாக பெருகிவிட்டது.
வாழ்நாள் முழுக்க ரயிலிலோ, விமானத்திலோ, பயணமே செய்யாதவர்கள் நிறைந்திருந்த காலம் உண்டு. ஆனால் இன்று எல்லாம் மாறி, ஓரளவிற்கு எல்லோரும் வசதியான பயணம் செய்வது, தொலைதூரப் பயணம் செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.
வானொலி கேட்பது என்பது ஊருக்குப் பொதுவில் இருந்த வானொலி பெட்டியில் செய்திகளும், பாடல்களும் கேட்பதற்கு காத்திருந்த காலம் உண்டு. அரிதாக ஒரு சில வீட்டில் மட்டுமே வானொலி இருந்தது.
தொலைக்காட்சி வந்த காலத்தில் யாராவது ஒருத்தர் வீட்டில் தொலைக்காட்சி இருக்கும் ஓசியில் பார்ப்பதற்கு ஊரே நிறைந்திருக்கும்.
ஆனால் இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள் நேரம் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பது சகஜமாக உள்ளது.
ஊருக்கு ஒரு தொலைபேசி இருந்த காலம் போய் ஆளுக்கு ஒன்று இரண்டு அலைபேசிகள் வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் பேசுவதும், பாட்டு கேட்பதும், படம் பார்ப்பதும் விளையாடுவதும் என்று எல்லாமே மாறிப்போனது.
அத்தனை வசதிகளும், பணக்காரர்களுக்கும், நடுத்தர ஆட்களுக்கு கூட கிடைக்காத காலம் மாறி, இன்று எல்லோருமே ஓரளவு உணவு, உடை, இருப்பிடம், தொழில் நுட்பம் வசதிகள், வாகன வசதிகள் எல்லாம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனாலும் இன்னும் அந்தக் காலத்தில் நாங்கள் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம் என்று பீத்திக்கொள்கிறார்கள். என்ன செய்வது.
No comments:
Post a Comment