உலகில் எந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆட்சியாளர்களாகவும் அரசுப் பணிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து கொண்டு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு ஆபத்து என்று கூப்பாடு போடுகிறார்களோ அந்த நாடு பாசிசத்தை நோக்கி நடை போடுகிறது என்று அர்த்தம். அழிவை நோக்கி போகிறது என்று கொள்ளலாம்.
தங்களுடைய கலாச்சாரம், பொருளாதாரம் அழிகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றால்,அது தங்களை வளர்த்துக் கொள்ளும் கேவலமான குறுகிய புத்தி அரசியல் என்பது தெளிவாகும்.
தாங்களே ஆண்ட பரம்பரை, தாங்களே ஆளப்பிறந்தவர்கள், தங்களுடைய அகண்ட பிரதேசத்திற்குள் எல்லாம் அடக்கம் என்று எங்கெல்லாம் பிரச்சாரம் நடக்கிறதோ அங்கெல்லாம் வலதுசாரி பிற்போக்குத்தனமான சிந்தனையாளர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி பேசி ஆட்சிக்கு வந்து அக்கிரமங்கள் செய்த எந்த அரசும் நிலைக்கவில்லை. நிலைக்க போவதுமில்லை. நிலைத்ததாக வரலாறு இல்லை.
முன் காலத்தில் வாளை ஏந்தியவர்கள், வாள்வலிமையாலும், போர் தந்திரங்களாலும் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை உருவாக்கினார்கள். அது சில காலமோ, நீண்ட காலமோ நீடித்திருந்தாலும், நிலையாக இருந்தது இல்லை. அசைக்கவே முடியாது என்று நம்பிக்கொண்டிருந்த சாம்ராஜ்யங்கள் எல்லாம் அடி மண்ணோடு சாய்ந்து போனது தான் வரலாறு.
கிரேக்க, ரோமானிய, மவுரிய பேரரசுகள் எல்லாம் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன.
இவ்வாறு இனவெறி மொழிவெறி மதவெறி போன்றவை தலையெடுத்து நிற்கும் எல்லா நாடுகளிலும் மக்களெல்லாம் அதே சிந்தனையோடு மோதல்களில் ஈடுபடுபவர்கள் என்ற அர்த்தமல்ல. இன்னும் சொல்லப்போனால் உலகில் எல்லா நாடுகளிலும் வாழும் மக்கள் சமாதானமான அமைதியான வாழ்க்கையை மட்டுமே விரும்புவார்கள். எனவே, அமைதியான, வாழ்க்கையில் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் குறுகிய வெறி தூண்டப்பட்டு, அதற்கு சில நேரம் மக்கள் ஆட்படும்போது உள்நாட்டு கலவரங்களும், குழப்பங்களும், அழிவுகளும் மட்டுமே நிறைந்திருக்கும். மக்களின் நிம்மதி குறைந்திருக்கும்.
ஜெர்மனியிலும் ஆளப்பிறந்தவர்கள் ஆரியர்கள் மிக உயர்ந்த வம்சம் நாங்கள் தான் யூதர்களால் ஜெர்மானியர்களுக்கு ஆபத்து என்று கூக்குரலிட்டு, பொய்யே பேசி ஆட்சிக்கு வந்து, பல அக்கிரமங்கள் செய்த ஹிட்லரும் மண்ணோடு மண்ணாக மடிந்தான்.
பழம்பெருமையும் பொய்யையும் மட்டுமே திரும்பத் திரும்ப பேசி வாய்ச்சவடால் ஆட்சிக்கு வந்து பாசிசத்தை உருவாக்கிய முசோலினியும், அவனால் ஏமாற்றப்பட்ட மக்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டான்.
இலங்கையில் முன்னொரு காலத்தில் பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் மக்கள் போராடும்போது ஒன்றுபட்டு தான் இருந்தார்கள். போராடினார்கள்.
ஒரு வழக்கில் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் வழக்குகளை சந்திக்கும் போது, வாதாடி வெற்றி கண்டு சிங்கள பௌத்தபிக்குகளை மீட்ட வழக்கறிஞர் தமிழர்.
அவரை அலங்கரித்த தேரில் வைத்து அந்த தேரை இழுத்து வந்து பௌத்த பிக்குகள்.
ஆனால் பிற்காலத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டுவதன் மூலமே ஆட்சிக்கு வர முடியும் என்று எண்ணிய சிங்கள அரசியல்வாதிகள், ஐக்கிய தேசியக் கட்சியானாலும் சரி, சுதந்திரக் கட்சியானாலும் சரி இனவெறியை வெகுவாக தூண்டினர். மோதல்களை வளர்த்தனர். அதன் மூலம் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்த பின்னரும் சிறுபான்மை தமிழர்களால் தான் தங்களுக்கு ஆபத்து என்ற பிரமையை உருவாக்கி அதன் மூலம் உள்நாட்டு கலவரத்தை பெரிய அளவுக்கு உருவாக்கினர். அந்த நாடு எவ்வளவு பெரிய பொருளாதார சீரழிவுகளை சந்திக்க நேரிட்டது என்பதை அனைவரும் அறிவோம்.
ஒரு காலத்தில் உலகம் எங்கும் பெரும்பான்மை நாடுகளால் வெறுக்கப்பட்டு, அனாதைகளாய் நாடு நாடாய் திரிந்த யூதர்கள், ஏகாதிபத்தியத்தின் உதவியோடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய பின்னர், ஆதரித்த பாலஸ்தீனர்களை அழித்து,அகண்ட யூத சாம்ராஜ்யம் என்ற சியோனிச கனவுகளோடு அக்கிரமங்களை புரிந்து கொள்ளுங்கள் வருகின்றனர். .பாலஸ்தீன மக்களையே இன அழிப்பு செய்ய முயற்சி செய்து வருகின்றனர் .உலகமே எதிர்த்து நின்ற போதும். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் உதவிகளோடு அக்கிரமங்கள் செய்து வருவதை உலகமே அறியும்.
தடுத்து நிறுத்த வகையின்றி வழி தெரியாமல் ஐக்கிய நாடு சபை திண்டாடுவதையும் அறிவோம்.
இதுபோல பல உதாரணங்களை உலகமெங்கும் நம்மால் காண முடியும்.
ஏன் நம் நாட்டில் கூட சில மதவாத சக்திகள், சிறுபான்மை இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கு ஆபத்து நேரிட்டது, நேரிடுகிறது, நேரிட போகிறது,என பெரும்பான்மையினர் மக்களிடையே ஒரு பிரமையை உருவாக்கி, மதவெறியை வளர்த்து வருகின்றனர் என்பதை அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் அறிவர்.
போன்ற குறுகிய இன, மத, மொழி வெறி தூண்டப்பட்டு ஆட்சிக்கு வந்த வெறியாளர்களால் வளர்ச்சியை ஒருபோதும் அளிக்க முடியவில்லை, அழிவைத்தான் அந்த நாடுகளுக்கு தந்திருக்கிறது என்பது உலக வரலாறு.
இதை அறியாமல், புரியாமல் இதன் பின்னே ஆட்டு மந்தைகளாய் செல்லும் மக்கள் அதற்கான விலையை கொடுக்கத்தான் வேண்டி இருக்கும்..
No comments:
Post a Comment