பொதுவாகவே போதை என்பது அறிவை மயக்குவது. சிந்தனையை மழுங்கடிப்பது.அடிமைப்படுத்தக்கூடியது. சிக்கிவிட்டால் எளிதில் மீண்டு வர இயலாதது... அது மது போதனை ஆனாலும் சரி, மத போதையானாலும் சரி, மனதையும் ஆன்மாவையும் அடிமைப்படுத்த கூடியது. கவலைகளை மறக்கச் செய்து ஆனந்தத்தை காட்டுவது போல அடிமைப்படுத்துவது அவ்வளவுதான்.
என்னடா மதுவையும் மதத்தையும் ஒப்பிடுகிறானே என்று நீங்கள் வருத்தப்படலாம். சிந்திப்போமே...
மது உடலில் புகுந்து, உடலில், மூளையில் மாற்றத்தோடு மதி மயக்கத்தையும் உண்டாக்கி, சிந்தனையை மழுங்கடித்து விடும். செய்யத்தக்கது, செய்யத் தகாதது என்று சிந்தித்துப் பார்க்காமல் ஆசைப்படுவதை அடைவதற்கு எந்த தவறையும் செய்யத் தூண்டுவது..
முதலில் விருந்தாளியை போல நுழைந்து எஜமானனை போல் மாறி மனிதனை அடிமையிலும் கேவலமாக மாற்றி விடக் கூடியது மதுபோதை...
ஆனால் மதபோதை வேறுவிதமானது மூளைக்குள் நுழைந்து சிந்தனையை மயக்கத்தில் ஆழ்த்திவிடக்கூடியது...
நான் சமய நம்பிக்கையையோ, இறை நம்பிக்கையையோ குறை சொல்லவில்லை, அது தனி மனித சுதந்திரம். தனிமனித ஒழுக்கத்தையும், சீர்மையையும், சமூக ஒழுக்கத்தையும், கட்டமைப்பையும் உண்டாக்க உருவான உயரிய சிந்தனை. அது மனித நேயத்தை மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளையும், இயற்கையையும் நேசிக்க சொல்லித் தருவது.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்லி இருப்பதைப் போல புல்லாய், பூடாகி, புழுவாய், மரமாகி பல்விருகமாய், பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய, கணங்களாய், வல்அசுரராய், தேவராகி எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என்று சொல்வதன் மூலம் சகல ஜீவராசிகளிலும் இறைவனை கண்டு நேசிக்க சொல்லித் தருவது மத நம்பிக்கை.
அன்பே சிவம் என்பது மத நம்பிக்கை.
ஒரு கன்னத்தில் அறிந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லிக் கொடுத்தது இயேசுவின் மதநம்பிக்கை.
உலகெங்கும் அமைதி நிலவிட அமைதி மார்க்கத்தை ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுத்தது இஸ்லாம்.
அதேபோல பௌத்தம் சமனம் என்று எல்லா மத நம்பிக்கைகளும் சக மனிதர்களையும் இயற்கையையும் நேசிக்கச் சொல்லித் தருவது
. ஆனால் அதைத் தாண்டி என் மதம்தான் உயர்ந்தது மற்றவை எல்லாம் தாழ்ந்தது அல்லது பொய் என்று கூறி மல்லுக்கு நிற்பது மதவெறி. அது மத போதையினுடைய மறு வெளிப்பாடு. அது தன் மதத்தில் உள்ளேயே உள்ள மற்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்வதுமில்லை, மதிப்பதில்லை. இந்த மத போதையினுடைய வெளிப்பாடு தான் ஒவ்வொரு மதத்திற்குள்ளும் அடுத்த மதத்தின் மீதும் தொடுக்கப்படும் அடக்குமுறை, தாக்குதல்கள், சண்டைகள் அழிவுகள் எல்லாம்....
மதமெனும் மாமாயை" என்ற சொற்றொடர், "மதம் என்ற பெரிய மாயை" அல்லது "மதம் என்ற மிகப்பெரிய மாயத்தோற்றம்" என்று பொருள்படும். இது பொதுவாக மதத்தின் பெயரால் நடைபெறும் தவறான விஷயங்களையும், குழப்பங்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
மதம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வேண்டியது. ஆனால், சில சமயங்களில் அது மனிதர்களைப் பிரிப்பதற்கும், சண்டையிடுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. இதுவே "மதமெனும் மாமாயை"
வள்ளலார் "மதமெனும் மூடகுணத்தின் தொடர்புகளாகிய, ஆணவம், கன்மம், மாயை, மாமாயை, திரோதமை" என்ற வரிகள் மூலம், மதத்தின் பெயரால் வெளிப்படும் தீய குணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்,.
அதன் விளைவை உலகமெங்கும் காணலாம் ஒரு மதத்திற்கு உள்ளேயே உண்டான சண்டைகளிலிருந்து பிற மதங்களின் மீதான தாக்குதல் வரை அனைத்திற்கும் அடிப்படை காரணம் மதபோதையே, மத சகிப்பின்மையே, பிறருடைய கருத்துக்களை மதிக்காத ஆணவப் போக்கே எனலாம்..
ஆக எல்லா போதைகளிலிருந்தும் விடுபடுவது, தனிமனித நன்மையிலிருந்து, சமூக அமைதி, முன்னேற்றம் அனைத்திற்கும் நல்லது. இதை உணரும் நாள் எந்நாளோ அதுவே உலகிற்கு நன்னாள்...
சிறப்பான பார்வை
ReplyDelete