சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 14 October 2025

நினைவலைகள் 5



 பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களுக்கு போகக்கூடாது என்று கூறினார். 

என்ன நண்பரே இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

அவர் மிகவும் கௌரவமாக வேலை பார்த்திருந்தால், திருப்பி அங்கே நுழையும் போது அந்த கௌரவம் குறைவதாக இருந்தால் மனதிற்கு வேதனையாக இருக்கும். நாம் வேலை பார்த்தபோது மிகவும் கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து அந்த இடத்துக்கு நுழையும் போது அந்த நெருடல் இருந்து கொண்டே இருக்கும். அதனால் இயன்றவரை உள்ளே நுழையக்கூடாது என்று கூறினார். 

என்ன நண்பரே, இப்படிக் கூறுகிறீர்கள்.. என்று எனது மறுப்பை தெரிவித்த போது, ​​அவர் உனக்கு இப்பொழுது தெரியாது, பின்னால் அனுபவத்தில் தெரிந்து கொள்வாய்.. என்று சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.

நிஜமாகவே நிறைய வருடங்கள் கழித்து, நான் வேலை பார்த்து அலுவலகத்திற்கு சென்றேன். நான் துறை தலைவராக இருந்ததால், அங்கு பணிபுரிந்தவர்களின் பெயர் பட்டியலில் எனது பெயரை பார்த்தேன்.

நான் பணிபுரிந்த போது பட்டியலில் எனது பெயருக்கு  பின்னால் எம். ஏ, எம் பில், டி. பார்ம், என்று போட்டிருந்தது. தற்பொழுது அப்படிப்பு பி. ஏ, டி ஃபார்ம். ஆக குறைந்து போனது. 

எனக்கு அதைப் பார்த்ததும் கோபத்தை விட வருத்தம் தான் அதிகமாக இருந்தது. எவ்வளவு பேருக்கு அந்த படிப்பை போட்டதில் வன்மம் இருந்திருக்கிறது என்பது புரிந்தது. 

நான் வேலை பார்த்த காலத்தில் எல்லா இடங்களிலும் மிகுந்த கௌரவமாகத்தான் மதிக்கப்பட்டு இருந்தேன். எனது வயதுக்கு மீறிய அளவிற்கு மரியாதைகள் கிடைத்தன. அதே போல என்னை விட உயர்ந்த பகுதியில் இருப்பவர்களை விட எனக்கு மரியாதை கிடைத்தது. அது நம்முடைய செயல்பாடுகளின் அடிப்படையில் என்பதால், எனக்கு ஒன்றும் பெரிய பிரமையோ, கர்வமோ ஏற்படவில்லை. 

எனக்கு தெரியும் எவ்வளவு பெருமைகள் கிடைக்கிறதோ, அதே அளவுக்கு அவமானங்களும், கஷ்டங்களும் வரும். அதனால் இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும்போது நமக்கு எந்த பாதிப்பும் சங்கடமும் வராது என்று பழகி விட்டேன். 

ஆனாலும் ஒரு முறை ஒரு பெண் அதிகாரி ஆஃப்டரால் டி பார்ம் என்று பேசிவிட்டார். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. நாம் டி பார்ம் படித்தது நமது குடும்ப சூழ்நிலையை வைத்து தான் தேர்ந்தெடுத்தோமே தவிர, நமது திறமை குறைவு எந்த அடிப்படையில் எடுக்கவில்லை.

இதற்காக டி ஃபார்ம் படிப்பை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ணிவிட வேண்டாம். மேலும் பட்டப்படிப்புகள் உயர்பட்டப் படிப்புகள் படிக்க வாய்ப்பு  மருந்தாளுனராக சேர்ந்து விட்டால் கிடைப்பதில்லை. மற்ற படிப்புகள் எல்லாம் பதவியில் இருந்து கொண்டே படிக்கலாம். மருந்தாளுனர்களுக்கு மட்டும் தான் இப்போதுதான் மேற்படிப்பு படிப்பதற்கு அனுமதி கிடைக்கிறது. ஒருவேளை அப்போழுதே இந்த வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயமாக பட்டப்படிப்பு மேல் படிப்பு படித்திருப்பேன்.

எனவே எனது ஆசையை தீர்த்துக் கொள்வதற்கு தொலைதூரக் கல்வியில் எம் ஏ, எம். பில் போன்ற படிப்புகளைப் படித்தேன். ஆய்வியல் நிறைஞர் (எம் பில்) படிப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிய அளவிற்கு உழைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களுடன் தொடர்புடைய காரணிகள்(factors associated with high risk pregnancies in Pudukkottai district ) என்ற தலைப்பில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிமார்களிடம் ஆய்வுகள் நடத்தி எனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து இருந்தேன்.

அவ்வாறு படித்து பெற்ற பட்டம் தான் எம். பில். எனக்கு பிஎச்டி படிக்க ரொம்ப ஆசை. பிஎச்டி படிக்க என்னை பல்கலைக்கழகத்தில் நிரம்பவும் ஆதரித்தார்கள். ஆனால் பிஎச்டி படிப்பதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டால் ரொம்ப பேருக்கு வயித்தெரிச்சல் தாங்க முடியாது என்பதால் அந்த ஆசையை கைவிட்டு விட்டேன். 

ஏனென்றால் நான் எம். பில் படிக்கும்போது சில நன்பர்கள்?! ஏன் மண்டை உடைத்துக் கொண்டு இதெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறாய். மேலும் மேலும் படிப்பதனால் என்ன சாதிக்கப் போகிறாய், ஒரு ரூபாய் கூட சம்பளத்தில் உயரப் போகவில்லையே என்றெல்லாம் என்னை உற்சாகப்படுத்தியவர்கள் உண்டு??!! . 

அதனாலேயே phd படிப்புக்கான கனவை கைவிட்டு விட்டேன். ஆனால் அதன் பிற்காலத்தில் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும்போது என் தலைமையில் கூட்டம் நடைபெறும் போது கூட அழைப்பிதழில் என் பெயருக்கு பின்னால் எம் ஏ எம் பில் டி பார்ம் என்று போட மாட்டார்கள். 

ஏன் என்று கேட்டால் நாங்கள் எல்லாம் வெறும் டிபார்ம் என்று போட்டுவிட்டு உனக்கு மட்டும் பெரிய படிப்பெல்லாம் போட்டால் அது எங்களுக்கு கௌரவ பிரச்சனை ஆக தெரிகிறது என்று சொல்லிவிட்டார்கள். சரி அது அவர்களுடைய பெருந்தன்மையென்று நினைத்துக் கொண்டு விட்டு விட்டேன். 

ஆனால்  எவ்வளவு பேருக்கு மனதில் எவ்வளவு வன்மமாக பதிந்து இருக்கிறது என்பதை அந்த பெயர் பலகையை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். 

சரி இப்படியும் சில மனிதர்கள்...



 



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...