இன்று எனது தகப்பனாருடைய 25 ஆவது நினைவு நாள்..
எங்களுக்கு ஆசானாய் வழிகாட்டியாய் நண்பனாய் இருந்த எங்கள் தகப்பனார் இன்று எங்களை விட்டு பிரிந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
ஒரு மனிதர் வாழ்நாளில் இருக்கும்போது நினைப்பதை காட்டிலும் அவர் இறந்த பிறகு தான் அவரது அருமை பெருமைகள் அதிகமாக நினைவுக்கு வரும். வாழ்கின்ற காலத்தில் தெரியாத பல விஷயங்களை பின்னாளில் நினைத்துப் பார்க்க, பெருமையாகவும், பெருமிதமாகவும், அதே நேரத்தில் அந்த பிரிவுகள் மிகவும் துன்பத்தைத் தருவதாகவும் அமைகின்றன.
அவர் நல்ல ஆசானாய் வழிகாட்டியாய் கல்வியை தூண்டுபவராக இருந்தார். அவர் மூன்றாம் வகுப்பு தான் படித்திருந்தாலும் அசாத்தியமான நினைவாற்றலால், பல்வேறு விஷயங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
அவர் திண்ணைப் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே பள்ளியில் பாடும் பாடலை எல்லாம் கூட எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.
அவர் திண்ணை பள்ளிக்கூடத்தில் படித்த பாடலான
"அந்திக்கு போறோம் நாங்கள் அகந்தனில் விளையாடாமல் சிந்தையாய் விளக்கு முன்னே சுவடிகள் அவிழ்த்து பார்த்து வந்தது வராததெல்லாம் வகையுடன் படித்துக் கொள்ளுங்கள் கட்டி இந்திரன் சேவல் கூவ எழுந்திருந்து வாரோம் ஐயா எங்களை அனுப்புங்க ஐயா இணையடி சரணம் தானே" என்ற பாடலை அழகாக சொல்லுவார்.
குருட்டு மனப்பாடம் செய்வது, அர்த்தம் தெரியாமல் படிப்பது எல்லாம் தவறு என்று சொல்லுவார்.
அறம் செய விரும்பு ஆறுவது சினம்
என்று என் தம்பி சத்தம் போட்டு கண்ணை மூடிக்கொண்டு கத்துவான்.
அப்பா கிண்டலாய்
அரம் செய்வது இரும்பில் ஆறுவது பாயாசம் என்று கிண்டல் அடிப்பார்.
பிறகு அவரே சரியான வரிகளை சொல்லி அர்த்தம் சொல்லி இவ்வாறு புரிந்து படிக்க வேண்டும் இல்லை என்றால் வெறும் சப்தத்தை காதில் வாங்கிக் கொண்டு கத்தி பழகினால் அர்த்தமில்லாமல் படிக்க வேண்டி இருக்கும் என்று புத்திமதி சொல்லுவார்.
அவர் ஒரு வேடிக்கையான மனிதர். பல கிண்டல் பாடல்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பார். பிறகு சரியான வழிமுறைகளையும் சொல்வார். தம்பியை படிக்கச் சொன்னால் தலைவலி என்பான்.
உடனே அதற்கு ஒரு பாட்டு சொல்லுவார்
"தலைவலி வந்தால் தகுதியான மருந்தைக் கேள் மலைதனிற் போய் பெரியதோர் பாறாங்கல்லை வண்டியில் ஏற்றி வந்து தலைதனை கீழே வைத்து தாங்கியே ஓங்கி போட்டால் தலைவலி இருந்த இடம் தன்னாலே மறைந்து போகும்" என்பார்.
அப்பா தலையே இருக்காது என்று சொல்லி சிரிப்போம். ஆமாம் தலைவலியும் இருக்காது அல்லவா என்பார்.
வயிற்று வலி வந்தால் என்ன செய்வது என்போம்.
" அரளிச் சாறு அரைப்படி காற்படி நல்லெண்ணையோடு அண்ணாக்க சாப்பிட்டால் கொட்டு மேளம் கொட்டி கூதலும் காயலாம்" என்பார்.
ஆமாமா செத்துப் போயிட்டா என்ன நெருப்பு வச்சு கொளுத்திடுவாங்க. குளிர் தெரியாம போயிரும்ல என்று சிரிப்போம்.
அதேபோல படிக்கச் சொன்னால் கண்வலி என்பான்.
"கண் வலி வந்தால் கருத்தான மருந்தை கேள்.. கள்ளிப்பால் இரண்டு சொட்டு காலை மாலை விட்டு வந்தால் கண்ணிலே பாம்பு பூச்சி பல்லியெல்லாம் பதமாய் குடியிருக்கும்" என்பார்.
எங்க அம்மா படிக்கிற பிள்ளைகளை என்னத்துக்கு ஏதாவது ஏட்டிக்கு போயிட்டு சொல்லி கெடுக்கிறீங்களே என்று சத்தம் போடுவார்கள். எல்லாம் வேடிக்கைக்கு தானே, நம்ம பிள்ளைகளுக்கா தெரியாது. எல்லாம் புத்திசாலி பிள்ளைகள் என்று சொல்லிவிட்டு உடலுக்கு நலத்தை அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டும் சும்மா சும்மா அது குறையும் நோயாக சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்.
ஓநாய் நீதி என்றொரு பாடலை கூறுவார்.
ஓநாய்:
நான் குடிக்கும் நல்ல நீரை
ஆட்டுக்குட்டியே ......
நீ ஏன் நான்கு காலால்
கலக்குகிறாய் ஆட்டுக்குட்டியே?
ஆட்டுக்குட்டி:
நீர் குடித்த மிச்சமன்றோ
ஓநாய் அய்யாவே........
ஒதுங்கி நின்று குடிக்கின்றேன்
ஓநாய் அய்யாவே........
ஓநாய்:
போன வருடத்திலே
ஆட்டுக்குட்டியே ......
போக்கிரித்தனமாய்
பேசினாய் ஆட்டுக்குட்டியே .?.....
ஆட்டுக்குட்டி:
போன வருடத்திலே
ஓநாய் அய்யாவே.......
நானிந்த பூமியிலே
பிறக்கவில்லைஓநாய் அய்யாவே.......
ஓநாய்:
உன் தாயே வைதிருக்கும்
ஆட்டுக்குட்டியே ...
அதற்க்குஉன்னைத்தானே
கொன்றிடுவேன்ஆட்டுக்குட்டியே ...
ஆதிக்க வெறியர்கள், அக்கிரமக்காரர்கள், கொடுங்கோலர்கள் அப்பாவி மக்கள் மீது செலுத்துவதற்காக எந்தவிதமான நீதியும் கூறுவார்கள் என்பதை பற்றிய பாடல் இது..
படிக்கின்ற காலத்திலும் சரி, வேலைக்கு வந்த பிறகும் சரி மிகவும் நட்போடும், அன்போடும் நடத்துவார்.
நான் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்கும் போது, எங்கள் நிலையமும் குடியிருப்புகளும், சுற்று முற்றும் ஆள் நடமாட்டமே இல்லாத ஊரை விட்டு வெகு தொலைவில் இருந்தது.
எனக்கு கடிதம் எழுதும் போது உனது திறந்து வெளி சிறைச்சாலை எப்படி இருக்கிறது என்று கேட்டு எழுதுவார். கவிஞர் கந்தர்வன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருப்பார். அதேபோல கவிஞர் கந்தர்வனும் என் தந்தையாரிடம் மிகவும் பாசமாக இருந்தார். என் அப்பா அவரைப் பற்றி விசாரித்து எழுதியதை நான் கூறுவேன்.
அப்போது அப்பாவின் கடிதத்தைக் காட்டிய போது அவர் படித்துவிட்டு சிரித்தார். அந்த நேரத்தில் மதுரையில் அனைத்து உலக எம்ஜிஆர் ரசிகர் மன்ற மாநாடு நடந்தது. அதைப்பற்றி அப்பா கடிதம் எழுதும் போது உலகத்தில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக வானர உலகில் இருந்து வந்த ரசிகர்களின் சேட்டை தாங்க முடியாது என்று எழுதி இருந்தார். இதை படித்துவிட்டு கந்தர்வனும் விழுந்து விழுந்து சிரித்தார். உங்க அப்பா பயங்கரமான ஆளா இருக்கிறார் என்று சொல்லி சிரிப்பார்.
எங்களுக்கு நல்ல நண்பனாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார்.
வறுமையிலும் செம்மையாக வளர்த்தார். எக்காரணம் கொண்டும் கடன் வாங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 75 76 காலங்களில் ஆனந்த வருட பஞ்சம் என்று சொல்வார்கள். அரிசிக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. அரிசி சோறு எல்லாம் மக்கள் மறந்து மரவள்ளிக்கிழங்கும் கிடைத்ததுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா அப்போது கூட கடன் வாங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கடன் வாங்கி கறிச் சோறு சாப்பிடுவதை விட பட்டினி கிடந்த சாவது மேல் என்று சொல்லுவார். அதனால் தான் என் வாழ்நாள் முழுவதும் யாரிடமும் கடன் படக்கூடாது என்பதில் மிக உறுதியாக வாழ்ந்து வருகிறேன்.
பெண்களை மதிப்பதில் முன்னுதாரணமாக இருப்பார். எல்லா பெண்களையும் அம்மா என பொருள்பட ஆத்தா என்றுதான் அழைப்பார். என் மனைவியை கூட ஆத்தா என்று தான் கூப்பிட்டு மென்மையாக ஏதாவது சொல்லுவார். பெண்களை எக்காரணம் கொண்டும் கைநீட்டி அடிக்க கூடாது என்று சொல்லுவார். பெண்களை கைநீட்டி அடிப்பவன் ஆம்பளையே இல்லை என்று சொல்லுவார். அவர் வாழ்நாளில் என் அம்மாவை கைநீட்டி அடித்ததே இல்லை.
எங்களுக்கு எல்லாமுமாய் இருந்த எங்கள் தகப்பனார் இன்று எங்களை விட்டு பிரிந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன...
We miss you Dad...

No comments:
Post a Comment