எனக்கும் சைக்கிளுக்குமான தொடர்பு சிறு வயதிலிருந்தே உருவானது.
எனது தந்தையார் சைக்கிள் மெக்கானிக் என்பதால், லீவு நாட்களில் சைக்கிள் ஓவர் ஐலிங் செய்யும்போது கூடவே அவருக்கு உதவி செய்வேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு, அவருடைய நண்பர் கந்தனுடைய சைக்கிள் கடையில் என்னுடைய லீவு நாட்களை கழிப்பேன். வாடகை சைக்கிளுக்கு கணக்கு எழுதுவது , சைக்கிள்களை துடைத்து பராமரிப்பது ஆகிய வேலைகளை செய்வதுதான் என்னுடைய வேலை. காற்றடிப்பது. பஞ்சர், சில்லறை வேலை பார்ப்பதற்கான கூலி எல்லாம் எனக்கு சேரும். எப்படியோ லீவு நாட்களில் தேற்றும் காசை படிப்பிற்கு பயன்படுத்திக் கொள்வேன்.
எனக்கு எங்க அப்பா சைக்கிள் வேலை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அவருக்கு இடது கையில் இரண்டு விரல்கள் மட்டுமே இருந்தன. பிறவியிலேயே மூன்று விரல்கள் கிடையாது. முதல் விரலும் கடைசி விரலும் மட்டும்தான், அதுவும் சிறியதாக இருக்கும். ஆனாலும் மிக வேகமாக சைக்கிள்களை கழட்டி மாட்டுவார். அவர் வேலை பார்க்கும் இடத்திலேயே எல்லோரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். அவ்வளவு சுறுசுறுப்பாக அதே நேரம் நேர்த்தியாக வேலை செய்வார்.
எங்கள் பகுதியில் உள்ளவர்கள் எல்லாம் அப்பா வேலை பார்த்த பயணியர் சைக்கிள் ஹவுசில் தான் போய் சைக்கிள் வாங்குவார்கள். எங்கள் ஊருக்கு சென்றால், சீனி அத்தான் மாட்டிக் கொடுத்தது, சீனி அண்ணன் சீனி அம்மான் அல்லது சீனி அப்பச்சி பற்றி ஏதாவது ஒரு உறவு முறை சொல்லி அவர் மாட்டிக் கொடுத்த சைக்கிள் என்று பெருமையாகச் சொல்வார்கள். அப்படி அவர்கள் பிரபல்யமாக இருந்தார்.
அந்த காலத்தில் சைக்கிள் வேலை பார்ப்பது ஒரு பெரிய வேலையாக தான் இருந்தது. ஏனெனில் அன்றைக்கு சைக்கிள் வைத்திருப்பவர் வசதியானவர். மோட்டார் சைக்கிள் என்பது ஊருக்கு பத்து பேர் வைத்திருந்தால் பெரிய விஷயம்.
அந்த காலத்தில் அட்லஸ், ஹெர்குலீஸ் என்று பல சைக்கிள்கள் இருந்தாலும் ராலி செய்து வைத்திருப்பது ஒரு பெருமை, கெத்து... கொஞ்சம் கூடுதல் வசதியுள்ளவர்கள் தான் அதை வைத்திருப்பார்கள்.
அதையும் விதவிதமாய் அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள் முன்னாடி பாருக்கு ஒரு கவர், சக்கரத்தில் உள்பக்கம் சுற்றியுள்ள பிரஷ் மாதிரி கலரில் ஒரு அலங்காரம், இன்று சில ஸ்போக்ஸ் கம்பிகளுக்கு பாசி மாதிரி எல்லாம் மாட்டியிருப்பார்கள்..
சைக்கிளுக்கு லைட் என்பது மிக முக்கியமானது. ஆரம்ப காலத்தில் எண்ணெய் விளக்கு தான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய் அல்லது மண்ணெண்ணெய் விளக்கு.
வசதியானவர்கள் தான் டைனமோ லைட் வைத்திருந்தார்கள் பின்னாளில் எல்லோரும் டைனமோ லைட்டுக்கு மாறிவிட்டார்கள்.
அதேபோல சைக்கிளுக்கு ஒரு லைசென்ஸ் உள்ளூராட்சி நிர்வாகம் வழங்கியிருப்பார்கள். ஒரு சின்ன தகர வில்லை முன்னால் மாட்டி இருக்க வேண்டும். இவையெல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால், சைக்கிளில் லைட் இல்லாமல் போவது, பின்னாடி சிவப்பு டேஞ்சர் லைட் இல்லாமல் இருப்பது, லைசென்ஸ் விலை இல்லாமல் இருப்பது, சைக்கிளில் இருவர் பயணம் செய்வது இதெல்லாம் இந்தியாவின் சட்ட ஒழுங்கை பாதிக்க கூடிய மிக பயங்கரமான குற்றம் போல கருதி போலீஸ்காரர்கள் பிடிப்பார்கள். சமயத்தில் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் அவர்களுக்கு காசு கொடுத்துவிட்டு வீட்டுக்கு போக வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் பெரிய குற்றவாளிகளை போல போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று உட்கார வைத்து விடுவார்கள். இதை அனுபவித்தவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்...
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், சைக்கிளில் இருவர் சென்றதற்கே போலீஸ் பிடித்த காலம் போய், லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் நான்கு பேர் ஏன் 5 பேர் வரை கூட ஏற்றிக் கொண்டு சுற்றுகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்பதால் தான்.
இதைப் பற்றி எழுதுவதென்றால் மகாபாரத கதை போல ஏராளமான கிளைக் கதைகள் எழுத வேண்டியிருக்கும்.
பிற்காலத்தில் லூனா மேக்னம் சுவேகா போன்று லேசான ரக மோட்டார் சைக்கிள்கள் வந்தன. மிக வசதியானவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து நார்டன், ராயல் என்ஃபீல்டு எஸ்டி போன்ற மோட்டார் பைக்குகளையும் லேம்ரேட்டா வெஸ்பா போன்றவையும் ஸ்கூட்டர்களையும் வைத்திருப்பார்கள்.
அவர்களுக்கு மிகக் குறைவு தான். பெரும்பாலும் சைக்கிள்கள் தான். ஊரெல்லாம் நிறைய வாடகை சைக்கிள் கடைகள் நிறைந்திருந்தன.
முன்பெல்லாம் சைக்கிள் இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வந்த பிறகு சைக்கிள் என்பது அதிகப்பழக்கத்திற்கு வந்துவிட்டது.
அதேபோல அரசு ஊழியர்களுக்கு மிதிவண்டி வாங்க அரசாங்கத்திற்கு முன்பணம் கொடுப்பார்கள். நான் மூன்று, நான்கு முறை முயற்சி செய்தேன். எனக்கு கிடைக்கவே இல்லை. பெரும்பாலும் இயக்குனரகத்திலும் மாவட்ட அலுவலகத்திலும் உள்ளவர்களே எடுத்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு. எனது நண்பர் தேவன் மட்டும் சண்டை போட்டு முன்பணம் பெற்று பஜாஜ் சைக்கிள் வாங்கினார். பஜாஜ் சைக்கிள் என்று ஒன்று இருப்பது அவர் வாங்கித் தான் தெரிந்தது...
ஆனால் காலங்கள் மாறி இன்று மோட்டார் சைக்கிள் இல்லாத வீடே இல்லை என்று முன்னேற்றமடைந்துள்ளோம்.
இது போல எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயங்களை கூறலாம். அதிகமாக பேசினால் சுவாரசியம் குறைந்து போகும் எனவே வரலாற்று ரீதியாக சில காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
1944 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு அழகான பழைய புகைப்படம் இது.
மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்வதைக் காட்டுகிறது. பின்னணியில் நாடாளுமன்ற கட்டிடம் தெரிகிறது. இந்த சைக்கிளில் செல்பவர்கள் உயர் பதவியில் இருந்திருக்க வேண்டும், அந்த நேரத்தில் சைக்கிளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு பெருமையாக இருக்கிறது இருந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் பாபுக்களும் அதிகாரிகளும்.
இடது கம்பத்தின் வலதுபுறத்தில் ஒரு சிறிய நீரூற்று தெரியும். நவ் தோ கியாரா படத்தின் "ஹம் ஹை ரஹி பியார் கே" பாடலின் தொடக்கத்தில் காட்டப்பட்டுள்ள அதே நீரூற்று இது.
முன்பு, டெல்லி மிகவும் அமைதியாக இருந்தது, கார்கள் அல்லது பைகளுக்கு எதுவும் இல்லை, ஆனால் இன்று, இந்த இடம் போக்குவரத்து சத்தம் மற்றும் நெரிசலால் பரபரப்பாகும் இருந்தது இல்லை.
2000ல் நான் டெல்லியில் வசித்த போது சைக்கிள்களை மாயாபுரி சவுக் பகுதியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். தொழிலாளிகள் நிறைய சைக்கிளில் வருவார்கள். மற்றபடி நகரின் மற்ற பகுதிகளில் நான் சைக்கிளை பார்த்ததே இல்லை.
புதுடெல்லி சவுத் பிளாக்கிற்கு அருகிலுள்ள விஜய் சௌக்கின் புகைப்படம் இது 1955
கீழே உள்ள புகைப்படத்தில், கபூர்தலா மகாராஜா சைக்கிள் ஓட்டுவதை நீங்கள் பார்க்கலாம் . அவர் சைக்கிள் ஓட்டும் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். மகாராஜா அமர்ந்திருக்கிறார், அவருடைய இரண்டு ஊழியர்கள் சைக்கிளை ஓட்டுகிறார்கள்.
இது 1890களின் அரிதான புகைப்படம்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் வீரர்கள் பயன்படுத்திய சைக்கிள்
1891 ஆம் ஆண்டு கபூர்தலாவின் மகாராஜா மிதிவண்டியில் சவாரி செய்தார். இந்த மிதிவண்டியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அதில் இரண்டு சக்கரங்கள் அல்ல, மூன்று சக்கரங்கள் உள்ளன. இந்த புகைப்படம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது.
1934ல் சைக்கிளின் விலை ரூ 18/-மட்டுமே. அன்று தங்கம் 1 பவுன் விலை ரூ 28.81/-என அறிவீராக...
![]() |
இவ்வாறு அதிக பழக்கத்தில் இருந்த சைக்கிள்கள் மாறி, இப்போது அடிக்கடி சைக்கிள்கள் என்றால் ஸ்போர்ட்ஸ் மாடல் தான் என்ற நிலை ஏற்படுகிறது. அன்றாட வாழ்வில் பயன்படும் முன்பு பயன்படுத்தப்பட்ட மிதிவண்டிகள் காணாமலே போய்க்கொண்டிருக்கின்றன. இருந்தாலும் சைக்கிள் யுகம் என்பது ஒரு மறக்க முடியாத யுகம் தானே....







No comments:
Post a Comment