சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 10 October 2025

துப்புரவு?!

 சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி எனது பள்ளி வரலாற்று ஆசிரியர் கோபால் சார் படம் நடத்தும் போது மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற நகரங்களை பற்றி பெருமிதமாக எடுத்து கூறுவார். 


நாங்கள் மொஹஞ்சதாரோ, ஹராப்பா என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டோம். அவரிடம் சந்தேகங்கள் கேட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விளக்க ஆரம்பித்து விடுவார். 


அதற்கு அவர் சொன்னார் "இறந்தவர்களின் புதை மேடு" என்ற பொருள். இறந்தவர்களின் புதை மேடு என்று ஒரு நகர் உருவாகி இருக்க முடியுமா என்று கேட்டதற்கு, அதன் உண்மையான பெயர் என்னவாக இருந்திருக்கும் என்று தெரியாது, ஆனால் அந்த நகர் ஒரு ஒட்டுமொத்த புதைமேடாக மாறிப்போன கதையை கூறினார். 


மிகவும் சிறப்பாக வளர்ந்த ஒரு நாகரிகமான அமைப்பு, கட்டுமானப் பணிகள் குளியல் குளங்கள், கழிவுநீர் வெளியேற்ற பாதைகள் என்றெல்லாம் சிறப்பாக அமைந்தது. நகரம், காலப்போக்கில் அழிந்து போனது என்று கூறினார்.


அழிந்து போனதற்கான காரணம் பற்றிய வினவிய போது படையெடுப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு காரணங்கள் என்று கூறினார். மேலும் கொள்ளை நோய்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறினார். அதற்கு என்ன தரவுகள் உள்ளதென்று தெரியாது. ஆனால் பெருகிவிட்ட மக்கள் தொகை அமைப்பில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் சரியாக வெளியேற்றப்பட்டு விட்டால் பெரும் கொள்ளை நோய்கள் விளைவித்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என்று கூறினார்.


கடந்த காலங்களில் உலகம் எங்கும் கொள்ளை நோய்களான காலரா, பிளேக் போன்ற நோய்களால் ஏற்படும் குப்பைமேடுகளும் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் கேடுகளுமே காரணம் என்பதை நாம் அறிவோம். 


இவ்வளவு ஏன் நம் காலத்தில் கூட டெல்லி மாநகரம் எங்கும் பிளேக் நோய் ஏற்பட்டு குவிந்துள்ள குப்பைமேடுகளில் ஒரு குறிப்பிட்ட தட்பவெட்ப நிலை கிருமிகள் உருவாகி வளர்ந்திருப்பதை கண்டறிந்து அதை ஒழிப்பதற்கு பாடுபட்டதை நாமே அறிவோம். 


உலகமெங்கும் எந்திர புரட்சிக்குப் பிறகு தொழில் வளர்ச்சி அடைந்ததால் நகர்மயமாதல் என்பது தவிர்க்க முடியாத அம்சமாக மாறிப்போனது. ஏராளமான மக்கள் குவிக்கின்ற இடத்திலே கழிவு நீர் அகற்றுதல் குப்பைகளை அகற்றுதல் என்பது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக மாறிப்போனது. ஏராளமான கொள்ளை நோய்கள் போன்ற பிரச்சினைகள் காரணமாக பாதாள சாக்கடை உருவாக்கம், குப்பைகள் அகற்றுதல் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஓரளவு இந்த பிரச்சினைகள் வளர்ந்த நாடுகளில் தீர்க்க பட்டன. 


துரதிஷ்டவசமாக வளரும் நாடுகள் அல்லது பின்தங்கிய நாடுகளில் சுகாதார மேம்பாடுகளுக்கான திட்டமிடுதலிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும், கழிவுநீர், குப்பை அகற்றுவதிலும் போதுமான அளவுக்கு முன்னேற்றங்கள் இல்லாத நிலையுள்ளது அதனால் தொற்றுநோய்களால் வரக்கூடிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. 


மனிதக் கழிவை மனிதனே அகற்றி தலையில் சுமக்கும் அவலங்களை நானே சிறுவயதில் நேரில் கண்டிருக்கிறேன். தமிழகம் போன்ற ஓரளவு வளர்ந்த மாநிலங்களில் அந்த நிலை மாறிவிட்டாலும், இந்தியா முழுக்க இன்னும் முழுமையாக மாறிடவில்லை. இன்னும் அதே சூழல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல கழிவு நீர் அகற்றம், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளில் இன்னமும் ஏராளமான பிரச்சனைகள் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதற்கு போதுமான திட்டமிடுதல் இல்லாமல் இருப்பதும், துப்புரவு பணியாளர்கள் தேவைக்கேற்ற அளவுக்கு நியமிக்கப்படாமல் இருப்பதுமே காரணம். நியமிக்கப்படக்கூடிய துப்புரவு தொழிலாளர்களுக்கு கூட நிரந்தரமான, நியாயமான சம்பளம், ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் இல்லாத கொடுமை தான் உள்ளது. 

துப்புரவு பணிகள் பெரும்பாலும் தற்காலிக பணியாகவும், நிறுவனங்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருவதால் அவர்களுக்கான பணி பாதுகாப்பு என்பது இல்லாத நிலை உள்ளது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பிரிவை பட்டியலின பிரிவினை சார்ந்தவர்களே இந்த பணியை செய்து வருவதாலோ என்னவோ அவர்களுக்கு உரிய நியாயமான கோரிக்கைகள் கூட கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன.

 இவர்களை ஒப்பந்த பணியில் நியமிப்பதன் மூலம் அரசுக்கு நிதி செலவினங்களை குறைக்கும் அளவிற்கு, அறிவுரை வழங்கும் கேவலமான, மனிதத் தன்மையற்ற, அயோக்கியத்தனமான அதிகாரிகளும் அதிமேதாவிகளும் இருக்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்ல. இந்த கேவலமான ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும் அரசினை என்னவென்று சொல்ல?!. 


உண்மையில் மனித சமூகத்திற்கு அவர்கள் செய்யக்கூடிய மாபெரும் தொண்டினை மதித்து பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, அவர்களை மனிதனாவது நடத்தி நியாயமான வாழ்க்கையை வாழ்வதற்கு அரசு உத்தரவாதம் செய்ய வேண்டாமா?!. 


இவர்களுடைய பிரச்சனையைப் பற்றி அரசும் கண்டு கொள்வதில்லை, சமூகமும் கண்டு கொள்வதில்லை, இலக்கிய படைப்பாளிகளும் கண்டு கொள்வதில்லை. 


எனக்கு தெரிந்தவரை " விட்னஸ்" என்று ஒரு அருமையான திரைப்படம் வந்தது. விட்னஸ் இயக்குனர் தீபக் இயக்கத்தில் ரோகினி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.



இந்த பணியில் ஈடுபட்டு இறந்து போன ஒரு இளைஞன். அவனது சாவு பற்றி நியாயத்திற்காக போராடும் தாய் மற்றும் அவளது சங்கத்தினர் படும் அவதியையும் எதார்த்த நிலை பிரதிபலித்த அற்புதமான திரைப்படம். ஆனால் பெரிய அளவுக்கு வெற்றி பெற்றதாக தெரியவில்லை. 


அரசும், ஒட்டுமொத்த சமூகமும் எல்லோருடைய வாழ்வையும் பாதிக்கும் சுற்றுச்சூழலை பற்றி துளி கூட அக்கறை இல்லாமல் இருந்தால், உண்மையில் நாம் வளர்ந்து விட்ட சமுதாயத்தில் தான் இருக்கிறோமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...