' கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது,
கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும், நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாகிரகத்தாலும் சந்திக்கும்' - ஜெயகாந்தன்.
தலைப்பைக் கூட கூட்ட நெரிசல் மரணங்கள் என்று தான் வைத்து இருக்கிறோம்.
நெரிசல் என்பது பெரிய விலங்குகளின் ஒரு குழு திடீரென்று ஒரே திசையில் ஓடத் தொடங்கும் ஒரு சூழ்நிலை , குறிப்பாக அவை உற்சாகமாகவோ அல்லது பயமாகவோ இருப்பதால். இந்த சொல் பெரும்பாலும் விலங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், மனிதர்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கும் நிகழ்வுகளும் உள்ளன .
ஆனால் ஜெகே சொல்கிற மாதிரி கூட்டங்களில் மரணங்கள் நிகழ்வதில்லை. ஏனெனில் அறிவைத் தேடுவதற்காக நடக்கும் இடம் கூட்டம்.
அது வலதுசாரி தத்துவத்திற்கும் கூடலாம், இடதுசாரி தத்துவத்திற்கும் கூடலாம்.இனம், மொழி கலாச்சாரம் முன்னேற்றம் அல்லது பாதுகாப்பு என்று ஏதேனும் ஒரு இலக்கு, ஏதோ ஒரு அறிவை தேடுகிறதா அல்லது மாற்றத்தை தேடுகிற இடமாக இருக்கும்.
ஆனால் கும்பல் இலக்கில்லாமல் கூடுவது, கட்டுப்பாடு அற்றது, சரியான வழிகாட்டக் கூடிய தலைமை இல்லாதது, யாருக்கும் கட்டுப்படாதது.
கிரிக்கெட் நட்பு ரீதியாக விளையாடும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. ஜென்டில்மேன் கேம் என்று அழைக்கப்பட்ட கிரிக்கெட், வெறும் காசு பார்ப்பதற்கான விளையாட்டாக மாறிப்போனது. ஐபிஎல் ஆரம்பித்த பிறகு துயரம் இன்னும் அதிகமானது. கல்கத்தா, ஹைதராபாத், சென்னை, பஞ்சாப் டெல்லி என்று எத்தனை அணிகள் இருந்தாலும் எதுவுமே உள்ளூரைப் பிரதிபலித்த அணி கிடையாது. எல்லோருமே விலைக்கு வாங்கப்பட்டவர்கள் மட்டுமே. பாதிப்பேர் வெளிநாட்டினர். இதில் எப்படி பிரதேச வெறி வந்து, மக்கள் முட்டாள்தனமாக நசுங்கிச் சென்றார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று மட்டுமல்ல, கேலிக்கூத்தான ஒன்று.
ஆன்மீகம் என்பது மனிதனை நெறிப்படுத்தக்கூடியது அமைதி படுத்தக் கூடியது சாந்தமாக்கக்கூடியது என்று சொல்லப்பட்டாலும், கட்டுப்பாடற்ற, சுயசிந்தனையும், ஒழுங்குமுறை இல்லாத செயல்களால் ஏற்பட்ட துக்க நிகழ்வாக மாறிப்போனது.






No comments:
Post a Comment