சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 31 October 2025

நினைவலைகள் 9

 நான் பணியேற்ற காலங்களில் பெரும்பாலான மருந்துகள் சாகா வரம் பெற்றவை... என்ன குழப்பமாக இருக்கிறதா?! அப்பொழுதெல்லாம் பெரும்பாலான மருந்துகளுக்கு காலாவதியாகும் தேதி எக்ஸ்பைரி டேட் போடப்படுவதில்லை.யுனிசெப் மூலம் வழங்கப்படும் மருந்துகளுக்கு மட்டுமே காலாவதி தேதி போடப்பட்டிருக்கும். 

பின்னர் பத்து ஆண்டுகள், அதன் பிறகு ஐந்து ஆண்டுகள், அதன் பிறகு 3 ஆண்டுகள் என்று குறுகிக்கொண்டே வந்தது. காலாவதி தேதி குறிப்பிடாமல் எந்த மருந்தும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை. அப்படியானால் இப்பொழுது மூன்று ஆண்டுகள் காலாவதி தேதி குறிக்கப்பட்டு இருக்கக்கூடிய மருந்துகள் அதன் முன்னர் 5 ஆண்டுகள் ஏன் பத்தாண்டுகள் வரை வழங்கப்பட்டது. அப்போது அவை விஷமாகிவிட்டனவா விஷத்தையா நாம் கொடுத்தோம் என்ற சந்தேகம் வருகிறதா? 

இல்லை காலம் போகப் போக மருந்தின் வீரிய தன்மை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வரும் காலாவதியான மறுநாளிலேயே மொத்தமும் வீரியம் இல்லாமல் போய்விடாது என்பதுதான் விஷயம். ஆனால் சில மருந்துகள் காலாவதிக்கு பின்னர் அதனுடைய தன்மை மாறி விஷத்தன்மையாக மாறுமா என யோசிக்க வேண்டும்.

காலாவதி என்பதன் பொருளென்னவென்றால் ஒரு மருந்து பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று உற்பத்தியாளரால் உத்தரவாதம் அளிக்கப்படும் தேதி இது.

மருந்தில் உள்ள செயலில் உள்ள பொருட்கள் காலப்போக்கில் உடைந்து போகக்கூடும், எனவே அதன் காலாவதி தேதியைக் கடந்த ஒரு மருந்து எதிர்பார்த்தபடி செயல்படாமல் போகலாம்.

காலாவதியான பிறகு, மருந்து பயன்படுத்த பாதுகாப்பானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஏனெனில் அதன் வேதியியல் கலவை மாறியிருக்கலாம். மருந்தின் வேதியியல் கலவை மாறக்கூடும், இது அதன் வீரியத்தைக் குறைக்கலாம் அல்லது ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

எனவேதான் காலாவதியான எந்த மருந்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் நான் வேலைக்கு வந்த காலத்தில் இந்த அளவுக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு பெருமளவு இல்லாது இருந்தது ஆனால் இன்றைக்கு மருந்தாளுநர்களிலிருந்து பயனாளிகள் வரை விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.ஆனால் நான் முதலில் பணியில் சேர்ந்து உடனையே எனது மருத்துவ அலுவலர் மரு. கோபண்ணா அவர்கள் இந்த பதிவேட்டினைப் பற்றி விளக்கமாகச் சொல்லி தொடர்ச்சியாக ஆய்வு செய்வார்.  

 காலாவதியை கண்காணிக்க கூடிய பதிவேட்டை பராமரிக்கிற வேலையை மருந்தாளுனர்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறோம்இதன் பயனாக நம்முடைய நிலையங்களில் காலாவதி தேதிக்கு முன்னர் பயன்படுத்த இயலாத மருந்துகளை தேவைப்படும் நிலையங்களுக்கு மாற்றி விடுவோம். மற்றவர்களுக்காவது பயன்படும் அல்லவா.. 

. நான் பணிபுரிந்த இடங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் மற்ற மருந்தாளுநர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கக்கூடிய மருந்துகளை பெற்று பயன்படுத்தினேன். அப்பொழுதெல்லாம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இருந்து எங்கெங்கு உபரியாக மருந்து இருக்கிறது என்று கடிதங்கள் அனுப்புவார்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி மருந்துகளை மாற்றிக் கொள்வோம்.

இதே வழக்கத்தில் நான் கடைசியாக மருந்து கிடங்கு அலுவலராக ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றிய போது, அம் மாவட்டத்திலிருந்த அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும் உபரி மருந்துகளை பெற்று மருத்துவமனையில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 

அம்மாதிரி ஒரு முறை ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெறப்பட்ட மருந்துகளை எனது மையக்கிடங்கில் இருந்து மருந்தகத்திற்கு வழங்கிய போது, மருந்துகள் மூன்று மாதம் காலாவதி தேதி இருந்தது. அங்கு ஓடுகிற ஓட்டத்தில் ஒரே வாரத்தில் முடிந்துவிடும். அந்த மருந்தும் குறிப்பிட்டு தேதிக்கு முன்னதாகவே நோயாளிகள் பயன்படுத்தி விடுவார்கள். அதனால் யாருக்கும் கெடுதலும் இல்லை. நிலையத்தில் உள்ள மருந்து தட்டுப்பாட்டை குறைப்பதற்கு ஒரு சிறு துளி அளவு உதவி செய்யும் அவ்வளவுதான். 

என்னை பிடிக்காத ஒரு மருந்தாளுநர். நன்பர் இருந்தார் வேக வேகமாக இந்த மருந்துகளை தூக்கிக்கொண்டு முதல்வரிடம் போய் கெட்டுப் போன மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கச் சொல்லி மருந்து கிடங்கு அலுவலர் கட்டாயப்படுத்துகிறார் என்று புகார் சொன்னார். 

முதல்வர் என்னை கூப்பிட்டு அனுப்பினார். நான் விவரத்தை சொன்னேன். அப்புறம் அந்த மருந்தாளுநரிடம் கேட்டார். காலாவதி தேதி என்றால் என்ன தெரியுமா, அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றாவது தெரியுமா. உங்களுடைய மருந்தாளுனர்களுக்கு உதவி செய்யும் நோக்கிலும், மக்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கிலும் தானே அவர் மருந்துகளை வாங்கி கொடுக்கிறார். ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறீர்கள். என்று திட்டி விட்டு என்னிடம் எழுத்து மூலமாக எழுதி தருமாறு கூறினார். 

இது ஒரு பெரிய விஷயம் இல்லை விட்டு விடுங்கள் மேடம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். 

நம்முடைய ஆட்கள் எவ்வளவு விவரமான, பெருந்தன்மையான ஆட்கள் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் அவ்வளவுதான்.. 

Thursday, 30 October 2025

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது


சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

 

மூளைக்கு வல்லாரை

  முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

   எலும்பிற்கு இளம்பிரண்டை


பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி


கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு


நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி


முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்


உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே


கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!


விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை


 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்கு

மணத்தக்காளி


நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 


தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 


குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை


கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி


வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு


கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே


உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே


அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!!

Wednesday, 29 October 2025

நினைவலைகள் 8

 ஒரு நாட்டின் மிகப்பெரிய செல்வம் என்பது மனித வளம் என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. ஆனால் அதே நேரம் மக்கள் தொகை பெருக்கம் என்பதும் ஆபத்தை விளைவிக்க கூடியது. அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவை வழங்குவதில் அதீத மக்கள் தொகை பெருக்கமும் அதீதமான நகர் மையமாதலும் ஏராளமான பின் விளைவுகளை தரக்கூடியது.

இந்தியா போன்ற நீண்ட கால காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகள் , பொருளாதாரக் கட்டமைப்பு சரியான முறையில் அமைக்கப்படாமலிருந்தன. மேலும் போதிய தொழில் வளர்ச்சி, நவீன விவசாய வளர்ச்சி இல்லாததாலும் சுதந்திரம் கிடைத்த போது வறுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் நம்நாடு சிக்கி தவித்தது. 

அப்போது மக்கள் தொகை பெருக்கத்தால் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத நிலையில் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களை கடைபிடிப்பதில் அரசு முனைப்பாக இருந்தது. குறிப்பாக 70களில் குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் உச்சத்தை அடைந்திருந்தது.

 இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம், மூன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற கோஷம் அதிகமாக ஒலித்தது. 

பின்னர் அதுவே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோஷத்தோடு களம் இறங்கியது. 

75-76 அவசர நிலை காலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் மிக மும்முரமாகவும் முனைப்பாகவும் நடைமுறைப்படுத்தியது. அதனால் ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள் அரசு மாற்றத்தில் போய் சேர்ந்தது. அதைப்பற்றி நாம் இதை இங்கு பேசப்போவதில்லை. 

ஆனால் திட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட போது அரசு ஊழியர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். அதிலும் மருத்துவத் துறை, சுகாதார துறையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழியர்கள் விரட்டப்பட்டார்கள். இதில் மருந்தாளுனர்களும் தப்பவில்லை என்பதுதான் விஷயம். அதனால்தான் மருந்தாளுனர்களுக்கும் குடும்ப நல திட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நம்முடைய அனுபவங்களை இங்கு பேச விரும்புகிறேன். 

நான் வேலைக்கு சேர்ந்து 1978 இல் அவசரநிலை பிரகடனம் நீக்கப்பட்டு விட்டது, புதிய அரசாங்கங்கள் அமைந்துவிட்டன என்றாலும், கடுமையாக விரட்ட படாவிட்டாலும், குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள், திட்டங்கள் ஓரளவு வேகத்தோடு தான் நடந்து கொண்டிருந்தன. 

நான் வேலை பார்த்த திருவரங்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி சராசரியாக 20 வேசக்டமி அறுவை சிகிச்சைகள் முகாம் காலங்களிலும், மற்ற நாட்களில் குறைந்த அளவிலாவது நடந்து கொண்டே தான் இருந்தன. 

அந்த நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை, கிடங்குகளில் பெற்று, பராமரித்து, வழங்கி வந்து கொண்டிருந்தோம். அது போக இதர கருத்தடை சாதனங்களையும் பராமரிக்க வேண்டிய வேலை இருந்தது. 

அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் மாவட்ட சுகாதார அலுவலர் மருந்தாளுனர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் குடும்ப நலத்திட்டத்திற்கு குறியீடு நிர்ணயம் செய்து அறுவை சிகிச்சைகள் செய்ய ஏற்பாடு செய்தார். அப்பொழுதெல்லாம் அதிகாரியினுடைய வாய்மொழி உத்தரவை எதிர்த்து பேசி செயல்பட முடியாது என்பதால் பேருக்கு ஒருவரை குடும்ப நிலை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். நான் மட்டுமல்ல, அந்த நேரத்தில் பணிபுரிந்த எல்லா மருந்தாளுநர்களுமே அறுவை சிகிச்சைக்கு ஆள் பிடிக்கத்தான் செய்தோம். அனைத்து பணியாளர்களும் செய்யும்போது நாம் மட்டுமென்ன விதிவிலக்கா என்ன.. 

இதுபோக புத்தாக்க பயிற்சி முகாம்கள் மகப்பேறு மையங்களிலும், பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வந்தன. பொதுமக்களிடையே பிரச்சாரத்தை கொண்டு செல்வதற்காக உள்ளூர் பிரமுகர்கள் மக்களை எல்லாம் அழைத்து வந்து சிறப்பு கூட்டங்கள் நடத்தி குடும்ப நலத்திட்டங்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.

கூட்டங்களில் மருத்துவ அலுவலர், விரிவாக்க அலுவலர், ஆணையர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். எனது மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபண்ணா அவர்கள் என்னையும் கூடவே அழைத்துச் செல்வார். அவர் போகிற இடங்களில் என்னையும் பேச வைப்பார். மைக் முன்னால் நின்று முதல் முதலாக பேசியது இது மாதிரி குடும்ப நல புத்தாக்க பயிற்சி முகாம்களில் தான். அவர் ஒலிபெருக்கி கூச்சத்தை நீக்கிடும் வண்ணம்,என்னை உற்சாகப்படுத்தி பேச வைத்தார். அதை ஒருநாளும் மறக்க இயலாது.

பிற்காலத்தில் வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இது போன்ற புத்தாக்கபயிற்சி முகாமில் அங்கிருந்த விரிவாக்க அலுவலர் நோட்டீஸில் எனது பெயரை போட்டு விட்டு என்னையும் பேச ஏற்பாடு செய்தார். மாவட்ட குடும்ப நல அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சார அதிகாரி மருந்தாளுனரை எல்லாம் எதற்கு பேச வைக்கிறீர்கள் என்று அவரை கடிந்து இருக்கிறார்.இவர் கடுப்பாகி போய், ஏன் சார் எழுதப் படிக்கத் தெரியாத ஊராட்சி மன்ற தலைவரை எல்லாம் கூப்பிட்டு பேச வைக்கிறீர்கள், நன்றாக மக்களிடையே பழகி இயல்பாக பேசக்கூடிய சாரை பேச வைத்தால் என்ன குறைந்து விடப் போகிறது என்று கடுப்படித்து விட்டார்.

எனக்கு தகவல் தெரிந்ததும் சங்கடப்பட்டு போனேன். அதிலிருந்து எந்த அரசு கூட்டங்களிலும் பேசுவதே இல்லை.. 


 இருந்தாலும் பின்னாளில் நான் எம் ஏ, எம் பில் ஆகிய படிப்புகளை மக்கள் தொகையியல் பற்றி தான் படித்தேன். அது வேறு விஷயம்... 


சும்மா வரவில்லை சுதந்திரம் 2


முகம் தெரியாத, பெயர் தெரியாத, அல்லது சமூகம் மறந்து போன லட்சக்கணக்கான பேரின் தியாகத்திற்கு பிறகு கிடைத்ததே சுதந்திரம்


இவர் ஹைதராபாத் சமஸ்தானத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மசூதியின் இமாம் மௌலவி அலாவுதீன் ஹைதர் சாஹிப். 1857 சுதந்திரப் போரின் போது பிரிட்டிஷ் ரெசிடென்சி மீதான தாக்குதலை வழிநடத்தியதற்காக அவரது பெயர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மௌலவி அலாவுதீன் ஹைதர் சாஹிப் தண்டனை விதிக்கப்பட்டு செல்லுலார் சிறைக்கு (கலா பானி) அனுப்பப்பட்ட முதல் கைதி ஆவார்.

1857 புரட்சியின் நாயகன் ஜகூர்-உல்-ஹுசைன் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்... இந்தச் செய்தி அக்கால செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது.


ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளத்தைச் சேர்ந்த பெண்கள். புகைப்படம் அலிப்பூர் சிறையிலிருந்து எடுக்கப்பட்டது. ஆண்டு 

1757 முதல் ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்தனர்.


அவர் ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரர், இந்தியாவில் அவரைப் பற்றி ஒரு திரைப்படம் கூட எடுக்கப்பட்டுள்ளது. அவர் பெயர் பலே கான்

இந்திய புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் அவர்களின் தியாகங்களால் கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாம் அவர்களை நினைவில் கொள்வதில்லை. எவ்வளவு வருத்தமாக இருக்கிறது.

இந்த ஐந்து பேரில் ஒருவரையாவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?


1857 புரட்சியின் ஒரு நாயகன் ஆங்கிலேயர்களால் சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் -

1857 புரட்சியை அடக்கிய பிறகு, ஆங்கிலேயர்கள் புரட்சியாளர்களைக் கைப்பற்றி கலா பானி, பர்மா மற்றும் சிங்கப்பூருக்கு அனுப்பினர்.

1870களில் பீகாரின் ஷாஹாபாத் பகுதியைச் சேர்ந்த அஹிர்கள் -

1857 புரட்சியின் நாயகனான பாபு குன்வர் சிங்கின் கோட்டையாக ஷாஹாபாத் பகுதி இருந்தது. 1857 புரட்சியில் பாபு குன்வர் சிங்கிற்கு ஆதரவளிப்பதில் ஷஹாபாத்தின் அஹிர்கள் முக்கிய பங்கு வகித்தனர்...



ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட ஒரு புரட்சியாளர்.


Tuesday, 28 October 2025

தந்தையை தேடுகிறேன்


 இளைஞரால்

 வெறுக்கப்படும்,

 மூத்தவர்களால்

 விரும்பப்படும்,

வளமையான

கவிதை இது..... 


தந்தை எல்லோருமே.... 


குழந்தையாயிருக்கையில்

கதாநாயகனாய்

 காட்சியளித்தார்...


இன்னும்

வருடங்கள் கழிகையில்

ஏமாளியாய் தெரிந்தார்... 


இளைஞனான போது

 வில்லனாய்

 மாறிப்போனார்.. 


அனுபவம்

 வருகையிலே 

அறிஞனாய் தெரிந்தார்..


ஆதரவு 

தேடுகையில்

 அகப்படாமல் போனார்.. 


இரத்த கண்ணீர் 

வடிக்கையில்

இல்லாமலே போனாரே... 




மறக்க முடியாத தோழர்கள் 3


 பெரிய அளவுக்கு அடுக்குமொழி சொற்களோ, அலங்கார வார்த்தைகளோ, இலக்கியப் புனைவுகளோ, இலக்கிய மேற்கோள்களோ இல்லாமலேயே, எளிமையான வார்த்தைகள், அன்றாட வாழ்வில் புழங்கும் சொற்றொடர்கள், சுலபமாக புரிந்து கொள்ளும் உவமைகள், இவைகளால் மொத்த கூட்டத்தையும் கட்டியாளும் எளிய பேச்சாளர் சமூக சிந்தனையாளர் தோழர் நன்மாறன் ஆவார்.

முதன்முதலாக நான் அவரை சந்தித்தது ஒரு மதுரை மஹால் அருகில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில்தான். எளிய உருவமும், மக்களை கவரும், எளிய ஆனால் மனதைக்கவ்வும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, அவர் மேடையை விட்டு இறங்கியதும் நானும் எனது நண்பர்கள் அப்துல்ராஜா மற்றும் தாமரைச்செல்வனும் அவரை சந்தித்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தோம்.

கைகுலுக்கிய மூவரும் சிறுவர்களானாலும் புன்னகையோடு எங்களை வரவேற்று அன்புடன் பேசினார். சிறிது நேரத்தில் எங்கள் முகவரிக்குத் தெரிந்து கொண்டு நேரில் வந்து சந்திக்கிறேன் என்று வழியனுப்பி வைத்தார் . சிறுவர்கள் என்று அலட்சியம் காட்டாமல் மறுநாளே எங்களைத் தேடி இஸ்மாயில் புரத்தில் வசித்து வந்த எனது நண்பன் அப்துல் ரசாக் வீட்டிற்கு தனது தோழர்களோடு வந்து சேர்ந்தார்.

வழக்கம்போல நானும் தாமரைச்செல்வனும் ராஜாக் வீட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். உங்களைத் தேடி ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெளிய வந்து பார்த்தால் தோழர் நன்மாறன், ஈசிஏஅனந்தன், ஜீவானந்தம், ரகுமத் ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள். 

பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து பொதுவான விஷயங்களை பேச ஆரம்பித்தோம். சமூகப் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேசவந்தது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்ற சமூக கொடுமைகள் ஒழிய சோசியலிசம் தான் சரியான பாதை என்பதை எங்களுக்கு விளக்கினார் . அதிலிருந்து தொடர்ந்து எங்கள் நட்பு. தேடித் தேடி இளைஞர்களை சந்தித்து அவர்களோடு பேசி அவர்களை ஒரு சமூக மாற்றத்திற்கு செய்யும் உன்னதமான பணியை தொடர் நன்மாறன் கொண்டிருந்தார். 

அதன் பின்னால் அவர்களோடு இணைந்து சோசியலிஸ்ட் வாலிபர் முன்னணி என்ற அமைப்பில் நானும் எனது நண்பர்களும் பணியாற்ற ஆரம்பித்தோம். கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். நிறைய கூட்டங்கள், நிகழ்ச்சிகள், போராட்டங்களில் பங்கேற்றோம். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பார்த்தவுடன் புன்னகைத்து எங்களை அழைத்து பேசுவார்.

பின்னாளில் அரசு பணி கிடைத்து மதுரையை விட்டு புதுக்கோட்டை சென்ற பிறகு அவரோடு இருந்த தொடர்பை விட்டு போயிற்று. இருந்தாலும் ஆங்காங்கே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவரை சந்தித்து பேசுவேன். பழைய நிகழ்வுகள் நண்பர்களை பற்றி எல்லாம் பேசிக் கொள்வோம். 

வெகு காலம் கழித்து மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் நான் பதவி உயர்வு பெற்றபோது அவர் அங்கு நோயாளியாக சிகிச்சை பெற வந்திருந்தார். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் முதல்வர் அவர்களை சந்திக்க வந்திருந்தார். நான் எனது துறை தலைவர் என்ற முறையில் முதல்வரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, ​​முதல்வர் தோழர் நன்மாறனை அறிமுகப்படுத்தினார் வேண்டியிருந்தது உதவிகள் செய்து கொடுங்கள், அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் மிக எளிமையானவர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். 

இருவருமே பரஸ்பரம் வெளியில் காட்டிக் கொடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வணக்கம் தெரிவித்துக் கொண்டோம். உண்மையில் அவர் மருத்துவ உதவிகள் கேட்பதற்கு கூட மிகவும் கூச்சப்பட்டார். 

தனியாக சந்தித்து பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். அப்போது மேற்கு வங்காளத்தில் பொதுவுடைமைக் கட்சி படுதோல்வி அடைந்தது. பொதுவாக தேர்தலில் பின்னடைவுகளை சந்தித்து இருந்த நேரம். இந்த பின்னடைவுக்கு என்ன காரணம் என்று அவரிடம் விசாரித்தேன். 

அவர் பதிலுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றெல்லாம் பொறுமையாக விசாரித்தார். 

நான் சொன்னேன் மீன் தண்ணீருக்குள் இருக்கும் வரை தான் அதற்கு உயிர் இருக்கும். வெளியில் எடுத்து விட்டால் அது கருவாடு தான். பொதுவுடைமைக் கட்சி மக்களோடு இருக்கும் வரை தான் அவர்கள் ஜீவனோடு இருக்க முடியும். அதிகாரம் கிடைத்து மக்களை விலகிச் சென்றால் கஷ்டம் தான் என்றேன்.

 ஏனெனில் அரசின் தன்மை அவ்வாறு.. அரசு எந்திரம் என்பது நிலையாக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி இருக்க கூடிய சக்தி தானே. ஆட்சி பொறுப்பிற்கு யார் வந்தாலும், அரசில் பணியாற்றக்கூடிய ஊழியர்களும், அரசின் கொள்கையும், செயல்பாட்டு அமைப்பும் மாறாமல் ஆதிக்கத்தோடு அவ்வாறு வந்தால் மக்களை விட்டு விலகி தானே செல்ல நேரிடும். நேற்று வரை வெள்ளைக்காரனிடம் பணியாளர்களாக இருந்தவர்கள் தானே, சுதந்திர இந்தியாவிலும் பணியாளர்கள். அவர்கள் தான் இன்றும் பணியாளர்கள் அவர்களின் செயல்பாட்டில் மாற்றம் வராமல் எப்படி மக்களுக்கு சேவை செய்ய இயலும் தோழர் ஏ கே ஜி சொன்ன மாதிரி ஒருவன் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ செயல்பட ஆரம்பித்து விட்டால் கெட்டுச்சீரழியாமல் மீண்டும் வருவது என்பது எளிதான காரியம் அல்ல ஆனால் ஏனெனில் அதிகார போதை ஆடம்பரங்கள் அவ்வாறு சீரழிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு என்று ஒரு முறை எழுதி இருந்ததாக நினைவு. 

சிறிய அளவில் தொழிற்சங்கங்களிலோ, அல்லது வெகுஜன இயக்கங்களிலோ பொறுப்புக்கு வந்த உடனே ஆணவம் தலைக்கேறி தான் சொல்கிறபடி தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்கிற எண்ணம் வரும்போது, ​​ஆட்சி பொறுப்பே கைக்கு வரும் போது அதிகார போதையும் ஆணவமும் தலைக்கேறுவது இயற்கை தானே, மக்களை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டதனால் தான் தோல்வி அடைந்திருப்பார்கள் என்று எனது கருத்தை கூறினேன். 

அவரும் சிரித்துக் கொண்டே இருக்கலாம் இன்று மக்களிடம் கூடுதலாக சென்றடைய வேண்டும் என்கிற படிப்பினை தான் என்று கூறிவிட்டு மீண்டும் பேசுவோம் என்று கூறினார். துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை.. 

மக்களையும், நாட்டையும் மிகவும் நேசித்த மிகவும் எளிமையான அருமையான, மறக்கமுடியாத தோழர் அவர். 


இன்று அவருடைய நினைவு நாள்.


Monday, 27 October 2025

தேவரம்மா அத்தை..

 மிக நீண்ட நாள் கழித்து எங்கள் உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது மதுரையிலே தேவரம்மா அத்தை எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவர்கள் இறந்து சில காலம் ஆயிற்று என்றார்கள். தொடர்பு அதிகம் இல்லாததால் தெரிவிக்க இயலவில்லை என்றார்கள். மிகவும் வருத்தமாக இருந்தது.  

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். நாம் பொதுவாக ஆசிரியரை தான் எழுத்தறிவித்தவன் என்று சொல்கிறோம். படிப்பதற்கு ஆர்வமூட்டி வழிகாட்டுபவர்களை நம் மாதிரி எதுவும் சொல்வதில்லை.

சிறுவயதில் படிக்கின்ற காலத்தில் பாடத்தை தாண்டி கதை, இலக்கியம் அறிவியல் என்று மற்ற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பொதுவாக யாரும் ஊக்குவிப்பதில்லை.

ஆனால் அதிர்ஷ்டவசமாக மிகச்சிறிய வயதிலேயே வாசிக்கும் பழக்கம் எங்களுக்கு ஏற்பட எங்கள் சுற்றுப்புறம் அமைந்தது. அப்போது எல்லாம் மதுரையில் நிறைய வாசகசாலைகள் இருக்கும் அதில் தினசரி, வாரந்திர பத்திரிகைகள் போடப்பட்டிருக்கும். எங்கள் வீட்டு வாசலில் சிவாஜி ரசிகர் மன்றம் இருந்தது. அதில் பேசும் படம் அம்புலி மாமா போன்ற புத்தகங்கள் போடுவார்கள். அதைவிட எனக்கு சிறப்பாக அமைந்தது நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில் இருந்த தேவரம்மா அத்தை வீடு தான்.

அப்பொழுதெல்லாம் ஒரு காம்பவுண்ட்டிற்குள் ஏழு, எட்டு குடித்தனங்கள் குடியிருப்பார்கள். நாங்கள் குடியிருந்த பசுபதிஅத்தை வீட்டில், வீட்டு சொந்தக்காரரான பசுபதி அத்தை வீட்டைத் தவிர இந்த நான்கு குடித்தனங்கள் இருந்தன.

அதில் ஒன்றுதான் தேவரம்மா அத்தை குடி இருந்தது. பொதுவாக காம்பவுண்டு வீட்டில் பல்வேறு ஜாதியினர் இருப்பார்கள். யாரும் என்ன ஜாதி என்று யாரையும் கேட்டுக் கொண்டதில்லை. எல்லோரையும் உறவு முறை வைத்துதான் அழைப்பது தான் வழக்கம். அவர்களின் உறவினர்களையும் இதே மாதிரி முறை வைத்து சித்தப்பா பெரியப்பா மாமா என்று அழைப்பது தான் வழக்கம் அதில் நாங்கள் பெரும்பாலும் அந்த வீட்டில் தான் கெதியாய் கிடப்போம் அதற்கு பல காரணங்கள் உண்டு. ஏனென்றால் அப்போதைக்கு ரேடியோ வைத்திருந்த ஒரே வீடு அவர்கள் வீடு மட்டுமே. எங்கள் தெருவிலேயே இரண்டு மூன்று வீடுகளில் மட்டும் தான் ரேடியோ இருந்தது. ஒலிச்சித்திரம் கேட்கவும், பாடல்கள் கேட்கவும் அங்குதான் கதியாய் கிடப்போம். அதுபோக கல்கி குமுதம் போன்ற வார பத்திரிகைகள் அவர்கள் தான் வாங்குவார்கள். ஏழெட்டு வயது இருக்கும் போதே புத்தகம் புரட்ட ஆரம்பித்தது அவர்கள் வீட்டில் தான்.

ஆரம்பத்தில் புரட்டி படம் பார்க்க ஆரம்பித்தது, பிறகு அம்புலி மாமா, வாண்டு மாமா சித்திரக் கதைகள், 007 பாலு, சிலையைத்தேடி,மூன்று மந்திரவாதிகள்..... என பட்டியல் நீண்டது ..

 தீபாவளி வந்துவிட்டால் கல்கி தீபாவளி மலர், விகடன் தீபாவளி மலர் வாங்குவார்கள். அதில் உள்ள படங்களை பார்ப்பதற்கு, கதைகளை படிப்பதற்கும் சண்டை போட்டுக் கொள்வோம்.. 

அதன் பிறகு எழுத்துக்கூட்டி பொன்னியின் செல்வன் என ஏராளமாய் கதைகள் படித்தது அவர்கள் வீட்டில் தான். அதன் பிறகு அவர்கள் ஏராளமாய் வந்த கதைகளை எல்லாம் பைண்டிங் செய்து வைத்திருப்பார்கள் அவற்றையும் எடுத்து படிப்போம் பொதுவாக குழந்தைகள் புத்தகங்கள் எடுப்பதை உரிமையாளர்கள் விரும்ப மாட்டார்கள் கிழித்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் அத்தை ஒருபோதும் எங்களை தடுத்ததில்லை. எங்கள் மீது பிரியம் அதிகம் காரணம் அவர்களுக்கு குழந்தை இல்லை.

மாமாவின் மூத்த மனைவி கைக்குழந்தை இருக்கையில் இறந்து விட்டதால் அத்தையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். 

அந்த பையனின் பெயர் அழகிய மணவாளன் என்ற செல்வம். எனக்கு அப்பா வைத்த பெயர் செல்வம். தாத்தா நட்சத்திரம் பார்த்து வைத்த பெயர் கார்த்திகேயன். ஆகவே மாமாவோ, அத்தையோ அல்லது யாராவது செல்வம் என்று கூப்பிட்டால் இரண்டு பேரும் ஓடுவோம். அதனால் அவரை பெரிய செல்வம் என்றும், என்னை சின்ன செல்வம் என்றும் அழைத்தார்கள்.

அத்தையின் கணவர் மாமா சுந்தர ராமானுஜம் சொந்தமாக மருந்து கடை வைத்திருந்தவர். பிற்காலத்தில் இயலாமல் மதுரை பாண்டியன் சூப்பர் மார்க்கெட் மருந்தாளுனர், மருந்து கடை பிரிவு மேலாளர் பொறுப்பு வகித்தவர். துரதிஷ்டவசமாக மற்றவர்கள் செய்த தவறுகள், திருட்டு காரணமாக நிர்வாக பொறுப்பு ஏற்ற இவருக்கு நிறைய தொகை தண்டமாக கட்ட வேண்டி இருந்தது.

ஒரு கட்டத்தில் கட்டவேண்டிய தொகைக்காக நீதிமன்ற ஜப்தி நடவடிக்கை மேற்கொண்ட போது வீட்டில் அமீனா புகுந்து தையல் மெஷின், ரேடியோ, மற்றும் சில பொருட்களையும் கைப்பற்றி சென்றனர். 

ஆமை வீடு புகுந்தம் அமீனா வீடு புகுந்தும் உருப்படாது என்று சொல்வார்கள். எல்லோரும் துயரப்பட்டோம். சில நாட்களில் அவர்களது ஒரே பையன் செல்வம் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். 

செல்வம் என்ற பெயரை அழைத்தாலே அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள் என்பதால் எல்லோரும் என்னை செல்வம் என்று அழைப்பதை விடுத்து கார்த்தி அழைக்க ஆரம்பித்தார்கள். அந்த செல்வத்தோடு செல்வம் என்ற எனது பெயரும் செத்துப் போனது... 

மிகவும் செல்வக்காக இருந்த மாமாவும் சூப்பர் மார்க்கெட் வேலையை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்றார். சில வருடங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.. 

பிறந்து வீட்டில் மிகவும் செல்வக்காக வளர்ந்த தேவரம்மா அத்தை, வீட்டில் புகுந்த கணவரும் பையனும் இறந்த பிறகு, அவர்களது சகோதரி வீட்டில் அடைக்கலமானார். அவர் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். பிற்காலத்தில் சத்துணவு மையத்தில் சமையலராக வேலை பார்க்க வேண்டிய கொடுமை நேரிட்டது. 


அவர்கள் வீட்டில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பின்னாளில் ஒரு துண்டு காகிதம் கிடைத்தாலும் அதை படிக்கின்ற பழக்கம் அங்கிருந்துதான் வந்தது. அதேபோல இன்று என் வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன என்றால், அதற்கு தூண்டுகோல் அத்தை சேர்த்து வைத்த புத்தக குவியல் தான் காரணம். எப்போது சந்தித்தாலும் ஏதாவது படித்த கதையைப் பற்றியோ புத்தகங்கள் பற்றியோ பேசுவோம். அந்த அளவுக்கு நல்ல வாசிப்பு பழக்கம் உள்ளவர்.

அவருக்காகவே செத்துப்போன எனது செல்வம் என்ற பெயரை பின்னாளில் அரசு பணியில் இருக்கும் போது எழுதுவதற்கு வசதியாக புனைபெயராக புதுகை செல்வா என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். எனது பிளாக் கூட "புதுகை செல்வா" என்ற பெயரில் வந்ததற்கு காரணம் அதுதான். 

சும்மா வரவில்லை சுதந்திரம்..

 சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது குழந்தைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி ஒரு பாடல் பாடப்பட்டது. "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுதே" என்ற நாமக்கல் கவிஞருடைய பாடலை பாடினார்கள். 

இதைக் கேட்டவுடன் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கத்தி இன்றி ரத்தம் இன்றி சும்மாவா கிடைத்தது சுதந்திரம். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கு மேல் உயிர் தியாகம் செய்து கோடிக்கணக்கான பேர் தங்களது சொத்துக்களை உடல் பொருள் ஆவி என அனைத்தையும் தியாகம் செய்து மக்கள் இயக்கமாக மாறிப்பெற்ற சுதந்திரத்தை மிக எளிமையாக சொல்லி விட்டார்களே என்ற வார்த்தை தான் அது. அவருடைய பாடல் மீது எனக்கு வருத்தம் இல்லை. அந்த தியாகம் மக்களுக்கு போய் சேரவில்லையே என்கிற வருத்தம் தான். 


இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சி,அதற்கு முன்னரே எங்கும் அங்கு நடந்த பல்வேறு அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான போர்கள் , என பல்வேறு போராட்டங்களாக தொடர்ந்து, கடைசியாக நடைபெற்ற கப்பற்படை எழுச்சி வரை நடைபெற்ற அனைத்து போராட்டங்கள், மக்கள் இயக்கங்கள், அப்படி தியாகங்களுக்கு பிறகு சுதந்திரம் கிடைத்தது என்ற வரலாற்றை மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது தேசபக்தி உள்ள ஒவ்வொருவரது கடமை. எனக்கு கிடைத்த பல்வேறு புகைப்படங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்..




1857 பிரிட்டிஷ் புரட்சியின் நாயகன் நானா சாஹேப்பின் தோழரான ஜ்வாலா பிரசாத்தின் தனித்துவமான புகைப்படம், பிரிட்டிஷ் சிறையிருப்பில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளார். 


1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்த போது ஆயிரக்கணக்கான வீரர்கள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். சரண் அடைந்தவர்களும் மக்களும் பயப்படுவதற்காக பீரங்கி வாயில் கட்டி வைத்து சுட்டுக்கொன்றனர்




1857 புரட்சியின் தலைவர் பேகம் ஹஸ்ரத் மஹால் பிரிட்டிஷ் சிறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மம்மு கான் அவர்களின் அரிய படம்.



மூன்று புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்களின் கைகள் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டன. இறுதியில், அவர்கள் தூக்கிலிடப்பட்டனர், அடிமைத்தனத்தின் தளங்களிலிருந்து இந்தியாவை விடுவித்தனர், இன்று நாம் திறந்தவெளியில் சுவாசிக்கிறோம்.


இந்தியாவை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவித்த மாபெரும் புரட்சியாளர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.. 

Saturday, 25 October 2025

சினிமாவும், அரசியலும், சுதந்திர மனிதர்களும்!

 சினிமாவும், அரசியலும், சுதந்திர மனிதர்களும்!


- இயக்குநர் ராஜூ முருகன்



எனது கிராமம், பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூர் பகுதியைச் சேர்ந்தது. இடதுசாரி மற்றும் திராவிட இயக்கங்கள் செழித்து வளர்ந்த நிலப்பரப்பு. என் சிறுவயதில் ஒரே நாளில் நான் கண்ட இருவேறு சம்பவங்கள் இன்றும் என் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளன. ஓர் அதிகாலையில், பக்கத்து ஊரில் விவசாயக் கடன், கந்துவட்டிப் பிரச்சனை காரணமாக ஒரு எளிய மனிதர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடனடியாக, மருத்துவமனைக்கு வெளியே கூடிய சிவப்பு துண்டணிந்த இடதுசாரித் தோழர்கள், அந்த மரணத்திற்கு நீதி கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்குடும்பத்தினரும், இருபது முப்பது தோழர்களும் மட்டுமே இருந்தனர். பொதுஜனம் யாரும் அதில் பங்கேற்கவில்லை. கடந்து சென்ற பலரும் வேடிக்கை பார்த்தனர், சிலர் முகம் சுளித்து அதிருப்தியுடன் சென்றனர். அழுகுரலும் கோஷங்களும் மட்டும் காற்றில் கரைந்தன.


கரகாட்டமா, கல்வியா?


அதே நாளின் மாலையில், அதே ஊரில், மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் சந்தியில் ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரக் கூட்டம். அவர் அப்போதுதான் கட்சி அரசியலுக்கு வந்திருந்தார். அந்த சந்தியில் மக்கள் வெள்ளம். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து திரண்டு வந்து நின்றனர். டியூப் லைட் வெளிச்சத்தில், வேனின் மேல் பாதி தெரிய நின்ற ஜெயலலிதாவின் கைசைகக்கு மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அது ஒரு திறந்தவெளி திரையரங்கைப் போலத்தான் இருந்தது. மக்கள் அவரை ஒரு சினிமா நட்சத்திரமாகவே கொண்டாடினர். அப்போது எனக்கு ஆச்சரியம், காலையில் சக மனிதர் ஒருவர், பலரின் பொதுவான பிரச்சனையில் சிக்கிச் செத்ததற்கு வராத இந்த மக்கள், மாலையில் ஒரு சினிமா நட்சத்திரத்தைப் பார்க்க மொத்தமாக ஏன் திரண்டிருக்கிறார்கள்? என்னைக் கூட்டிப் போயிருந்த சுப்ரமணியம் தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார்: “பள்ளிக்கூடம் இருக்கும்போது கரகாட்டம் வெச்சா, நீ எதுக்கு போவ? கரகாட்டத்துக்குத்தான போவ! அது மாதிரி தான் இந்தப் பயலுவளும்... எல்லாம் ஜிகினா கட்டும் இடமாப் பார்த்துதான் திமுதிமுன்னு கூடும்க.” அவரது வார்த்தைகள் எனக்குக் குழப்பத்தை அளித்தது.


மெய்யான நாயகர்கள்


அதன் பிறகு, வாசிப்பும் இடதுசாரி இயக்கத் தோழர்களுடனான தொடர்பும் என் பார்வையை மாற்றின. வெகுநாட்களுக்குப் பிறகு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்கள்’ புத்தகத்தைப் படித்தபோது குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.


களப்பால் குப்பு, ஜாம்பவானோடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் என எண்ணற்ற தோழர்கள் மக்களுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றிய அறிமுகமோ விவரமோ அப்பகுதி மக்களுக்கே இல்லை. தங்கள் வாழ்வில் சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தாத, எங்கோ இருக்கும் சினிமா நடிகர்களைக் கொண்டாடும் இந்த மக்களுக்கு, தங்களுக்காகப் போராடி உயிரையே கொடுத்த தோழர்களைப் பற்றித் தெரியாதது எவ்வளவு பெரிய அவலம்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மக்கள் பணியைத் தங்கள் அன்றாட இயல்புகளில் ஒன்றாகச் செய்துவரும் தோழர்களை பெரும்பான்மையான மக்கள் கண்டுகொள்வதில்லை, மதிப்பதில்லை, சமயங்களில் புறக்கணிக்கிறார்கள். ஆனால், தங்கள் வாழ்வில் அபத்தங்களை நிகழ்த்தும், அறியாமையை விதைத்து மோசடி செய்யும் நபர்களைக் கொண்டாடுகிறார்கள். இது ஒரு பெரும் துன்ப முரண்.


எதிர்காலத்தை இழக்கலாமா?


சித்தார்த்தன் புத்தனானதும், மார்க்ஸ் நாடற்றவராக வாழ்ந்தபோதும் மனித குலத்துக்காகச் சிந்தித்துக் கொண்டே இருந்ததும், பெரியார் கடைசி மூச்சு வரை பேசிக் கொண்டிருந்ததும், அம்பேத்கர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புவரை எழுதிக் கொண்டிருந்ததும் அறியாமை இருளிலிருந்து மக்களை விடுவிக்கத்தானே! இன்னமும் மக்கள் அரசியல்மயமாகாமல், அறிவு விடுதலை அடையாமல் இருப்பது வருத்தத்தையும் கோபத்தையும் தருகிறது. சமூக ஊடகங்கள் ஒரு புதிய ஜனநாயகத்தை உருவாக்கும் என நம்பினோம்.


ஆனால் நடந்தது என்ன? நாயக வழிபாட்டின் உச்சமாகவும், பொய்ச் செய்திகளின் கூடாரமாகவும், அபத்தங்களும் வன்மங்களும் நிறைந்த தலைமுறையின் களமாகவும் அல்லவா இணைய உலகம் ஆக்கிக் கொண்டிருக்கிறது! மக்களுக்கான உண்மையான ஊடகங்கள் எத்தனை இருக்கின்றன? பணத்திற்காகவும் ஆதாயங்களுக்காகவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் கேவலமான வேலையைத்தானே பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்? இதன் உச்சமாக, ஒரு நடிகரின் கூட்ட நெரிசலில் சிக்கி அநியாயமாக நாற்பத்தியொரு பேர் சாகிறார்கள். இந்த மோசமான சூழலில்தான் நாம் இருக்கிறோம். இந்த மக்கள் பலியாடுகள். அதிகார பீடத்திற்காகக் காலகாலமாக அறுக்கப்படும் பலியாடுகள். அந்த அதிகாலையில் தூக்கிட்டுத் தொங்கியது ஒரு மனிதரல்ல... நமது எதிர்காலம் என்றே இப்போது தோன்றுகிறது.


மக்களைப் படி!


உங்களை மகிழ்விக்கும் ஒரு நடிகரையோ, திரைக் கலைஞரையோ கொண்டாடுவதோ, போய்ப் பார்ப்பதோ தவறில்லை. ஆனால், உங்களுக்கான அரசியலை, தலைவரை வெறும் கொண்டாட்டங்களில், புல்லரிப்புகளில், பிம்பங்களில் மட்டுமே தேடாதீர்கள். அது வேறு, இது வேறு என்ற தெளிவு கொள்ளுங்கள். உங்களின், உங்கள் பிள்ளைகளின், இந்த நிலத்தின் எதிர்காலத்தைத் தனிமனித பிம்ப மயக்கத்தில் தொலைக்காதீர்கள். அரசியல் என்பது மக்களுக்கான பெரும் தத்துவத்தை உருவாக்கி, அதை விழுதுகளாக்கும் மாபெரும் செயல்பாடு. அதனால்தான் மாவோ ‘மக்களைப் படி’ என்றார். இடதுசாரி இயக்கங்களில் உறுப்பினராகச் சேரக்கூட, முதலில் களத்தில் மக்கள் பணியாற்றிப் பயிற்சி எடுத்த பின்னரே அட்டை பெற முடியும் என்பது விதியாக உள்ளது. மக்களைப் படிக்காமல், அவர்களின் பிரச்சனையின் வேர்களை அறியாதவர் எப்படி அவர்களுக்காகப் பேச முடியும்?


வாச்சாத்தி மாதிரி வழக்குகளில் பணபலம், அதிகார பலம் எதுவுமில்லாமல், முப்பதாண்டுகளுக்கும் மேலாக உறுதியாகப் போராடி நீதியை வென்றெடுப்பதெல்லாம், மக்களைப் படித்து நேசிப்பதை வாழ்வாகக் கொண்ட தோழர்களால் மட்டுமே சாத்தியம்.


உங்களை ஒரு பண்டமாக, ஓட்டாகப் பார்க்கும் தேர்தல் வியாபார அரசியல் சூழலில், உங்களது அரசியல் தேர்வு மிக மிக முக்கியம். உங்களை உயிரோடும் உணர்வோடும் பார்க்கும் இதயப்பூர்வமான நல்லரசியல் பாதையை நோக்கிச் செல்லுங்கள். அதுவே உங்களை உயிருள்ள, உணர்வுள்ள, மானமுள்ள மனிதராக்கும்!


சினிமாவும் அரசியலும்!


சினிமா ஒரு தொழில், பொழுதுபோக்கு, வியாபாரம் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அந்தக் கலைக்கென சில அடிப்படை நோக்கங்கள் உண்டு என்பதும் உண்மை. 1916-இல் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ‘பர்த் ஆஃப் அ நேஷன்’ என்ற மௌனப்படம், தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் அலையை உருவாக்கியது. ஆனால், கருத்தியல் ரீதியாக கறுப்பினத்தவரைக் கொடூரமாகச் சித்தரித்து, நிறவெறியைத் தூண்டுவதாக இருந்தது. இதனால் பல மாநிலங்களில் படத்தைத் தடை செய்ய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சினிமா எவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அன்றே உலகுக்குச் சொன்னது. இதன் இயக்குநர் டி.டபிள்யூ.கிரிபித் பொது வெளியில் மன்னிப்புக் கோரி, பிராயச்சித்தமாக ‘இன்டாலரன்ஸ்’ என்ற இன்னொரு படத்தை எடுத்தார்.


மற்றொரு படம், 1925-இல் ரஷ்யாவில் எடுக்கப்பட்ட ‘பேட்டில்ஷிப் போத்தம்கின்’. 1905-இல் ஜார் மன்னனுக்கு எதிரான எழுச்சியை அப்படியே ஆவணப்படுத்தியிருந்தது. மக்களின் உணர்வுகளை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த இந்தப் படத்தை ரஷ்ய அரசாங்கமே தயாரித்தது. புரட்சியின் முக்கியத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறையினரும் உணர வேண்டும் என்பதற்காகவே இதைப் பயன்படுத்தினர். இது ஒரு பிரச்சாரப் படம். ஆனால், கலை ரீதியாக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது. ‘ஒரு சாதாரண குடிமக்களைக் கூட போல்ஷ்விக்காக மாற்றக்கூடிய சக்தி இந்தப் படத்திற்கு உண்டு’ என ஹிட்லரின் தளபதிகளில் ஒருவரான கோயபல்ஸ் சொல்லுமளவிற்கு இருந்தது.


சினிமா என்ற கலை, ஒரு சமூகத்தை எப்படி அரசியல்மயப்படுத்தத் துணை செய்ய முடியும் என்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே நமக்கு உதாரணங்கள் இருக்கின்றன. சினிமா என்பது வெறும் கவர்ச்சி மட்டுமல்ல, அது நம்மை அரசியல்மயப்படுத்தும் கலை ஆயுதம் என்பதையும் உணரும்போதுதான் அந்தக் கலை அதன் நோக்கத்தையும் மேன்மையையும் அடைகிறது!


சுதந்திர மனிதர்கள்


மறுபடியும் நான் மக்களிடமே வருகிறேன். இது எல்லாவற்றுக்குமான தீர்வு என்பது நம்மை நாம் அறியும் சுய விழிப்புணர்வில்தான் இருக்கிறது.


1936-இல் பம்பாயில் அம்பேத்கர் ஆற்றிய மதமாற்றப் பிரகடன மாநாட்டு உரையில் உள்ள இந்தச் சொற்கள் முக்கியமானவை: “சுய உணர்வோடு தன்னுடைய உரிமைகள், பொறுப்புகள், கடமைகளை எவர் உணர்கிறாரோ... சூழ்நிலையின் அடிமையாக எவர் இல்லையோ, அவரையே நான் சுதந்திரமானவர் என்பேன். பகுத்தறியும் தன்மையை இழக்காதவர் எவரோ, பிறரின் கைப்பாவையாக இல்லாமல் அறிவும் சுயமரியாதையும் உள்ளவரோ, அவரே சுதந்திரமானவர் என்பேன்... சுருக்கமாக, தனக்குத் தானே எஜமானன் யாரோ, அவரே சுதந்திர மனிதர்.”


சாதி, மதம், கடவுளின் பெயரால் மட்டுமல்ல, அறிவுச் சுரண்டல், பிம்ப மோசடி எதன் பெயரால் நடந்தாலும் அது ஒடுக்குமுறையே. அரசியல் விழிப்புணர்வு அடையாத இந்த தேசத்தின் அத்தனை மக்களும் ஒடுக்கப்பட்டோரே. உங்கள் விடுதலைக்கான சாவி உங்களிடம்தான் உள்ளது. இந்தக் கும்பல் மனோபாவம், ஆட்டுமந்தைத் தனம், நாயக வழிபாடு எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, எப்போது நீங்கள் சுய அறிவோடு பகுத்தறிந்து உங்களுக்கான அரசியலைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அப்போதுதான் எல்லாம் மாறும். அதற்கான பணிகளைத்தான் பல்வேறு வடிவங்களில் இடதுசாரி இயக்கங்கள் செய்கின்றன. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற மார்க்சின் வார்த்தைகள் உங்கள் ஒவ்வொருவரிடமும்தான் இருக்கிறது.


நன்றி: தீக்கதிர்.

Friday, 24 October 2025

தீபாவளி இல்லாத கிராமம்...

 ஒரு வழியாக தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடி முடித்து விட்டோம். .தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் காற்றின் தரக் குறியீடு, நேற்று சென்னையில் 400-ஐயும், கோவையில் 300-யும் காற்று மாசுபாடு குறியீடு வலையைத் தாண்டியுள்ளது.   நாட்டின் சில பகுதிகளில் தீபாவளி பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு 875 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.நம்மால் இயன்ற அளவுக்கு வெடி, வான வேடிக்கை, பட்டாசு, மத்தாப்பு என தூள் பரப்பி ஒரு வழியாக குப்பையாக்கி முடித்தாயிற்று.


 இயன்றவரை சுற்றுச்சூழலை மாசு படுத்தி நாசமாக்கி முடித்து விட்டோம் என்ற பெருமை, கிராமத்தில் தொடங்கி மாநகரம் வரை ஒட்டுமொத்த தமிழகத்தையே ஏன் இந்தியாவையே சாரும்.

 

இன்னொரு பக்கம் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளில், தினமும் சரியாக, 150 கோடி ரூபாய், வார விடுமுறை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாக, மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி வரை மூன்று நாட்களில் மட்டும், 789.85 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. 

 கடந்த ஆண்டு, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களில் மது விற்பனை, 650 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 140 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளன.


 டாஸ்மார்க் சாதனைகள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் விற்பனை என்று பெருமை பீத்திக் கொண்டிருக்கிறோம்.


 இது போன்ற ஆடம்பரங்களினாலும், வெட்டி பீத்தல் செலவுகளாலும் பொருளாதார செலவினங்களும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளும் அதிகமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது முடித்து விட்டோம்.

 நடுத்தர மக்கள் தங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை அழித்தும் ஏழை எளிய மக்கள் நிறைய கடனாளியாக்கி இருக்கிறோம்.


இத்தகைய கூத்துக்களுக்கு இடையில் இந்தியாவில் ஒரு கிராமம் மட்டும், அமைதியாக தீபாவளியை கடந்து சென்று இருப்பது வித்தியாசமாகவும் இருக்கிறது. இது இந்த ஆண்டு கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலைதான். இத்தனைக்கும் அந்த ஊர் முழுக்க இந்துக்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமம். இத்தனைக்கும் அந்த ஊரில் நாத்திகர்களோ, பொதுவுடமை கட்சியோ கிடையாது. . இது வேறு எங்கும் இல்லை... நம் தமிழகத்தில், சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுகாவில், ஏரியூருக்கு அருகில் உள்ள எஸ் மாம்பட்டி, தும்பைப்பட்டி என்னும் கிராமம் தான்.


அதில் ஒரு மிகப்பெரிய பொருளாதார தத்துவமும் அடங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 71 ஆண்டுகளுக்கு முன்னால் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெரிய அம்பலகாரரும், தும்பைபட்டி கிராமத்தின் பெரிய அம்பலகாரரும், மல்லாக்கோட்டை பெரிய அம்பலகாரரும்,தீபாவளி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ​​மக்கள் இது போன்ற திருவிழாக்களில் நிறைய செலவு செய்து கஷ்டப்படுகிறார்கள் என்ற பேச்சு வந்திருக்கிறது. சாமிக்கு சாமி கும்பிட அப்படி எல்லாம் செலவு கணக்கு பார்க்க முடியுமா என்று ஒருவர் கூற, அதற்காக கடன் பட்டு கடனாளியாகி கொண்டாட வேண்டுமா இன்னொருவர் கூறுகிறார். அதுவும் தீபாவளி வரும் நேரம் விவசாய வேலைகளை ஆரம்பித்து மும்முரமாகும் நேரம். கையில் இருக்கும் பணத்தை எல்லாம் விவசாயத்திற்கு செலவு செய்து விட்டு தீபாவளிக்கு கடன் வாங்குவது சரியா என்றெல்லாம் பேச்சு வந்தது. அப்போது ஒருவர் நமது திருவிழா என்பது பொங்கல் தானே. விவசாயிகளுக்கு அது தானே பெருவிழா. தீபாவளிக்கு இவ்வளவு செலவு செய்வதை விட்டுவிட்டு, நம் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடலாமே என்று பேசியிருக்கிறார். அப்படியே செய்யலாம் என்று மற்றவர்கள் ஆமோதிக்க, அது சரி நாம் முடிவு எடுத்தால் போதுமா நம் மக்கள் ஒத்துக் கொள்வார்களா என்று யோசித்து இருக்கிறார்கள்.


அதற்காக மூன்று கிராம பொதுமக்களையும் அழைத்து பொதுவாக உள்ள காடு காவலன் கோவிலில் கூட்டம் நடத்தி விரிவாக பேசினார்கள். கடன் வாங்கி கஷ்டப்பட்டு நொந்து போனதால், மக்களும் சரி இனிமேல் நம் பகுதியில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். 


நல்ல வேலையாக இது இந்துக்களின் பண்டிகையை நிறுத்துவது இந்து விரோதம் என்றெல்லாம் பேசுவதற்கு அப்போதைக்கு அங்கு ஆள் இல்லை போல் இருக்கிறது.


காடு காவலன் கோயிலில் சத்தியம் செய்த பிறகு எஸ். மாம்பட்டி, தும்பைபட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திர பட்டி, வலையபட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைபட்டி உள்ளுட்ட 13 ஊர் மக்கள் இன்றுவரை தீபாவளி கொண்டாடுவதில்லை. அதற்காக புத்தாடைகளனிவதோ, பலகாரங்கள் செய்வதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கிடையாது. அவர்கள் அந்த ஊரில் இருந்தாலும், வேறு எந்த ஊருக்கு சென்று வசித்தாலும் தீபாவளி கொண்டாடுவதில்லை. ஆனால் சபதம் செய்த மற்ற இரண்டு கிராமத்து மக்களால் கடைபிடிக்க முடியவில்லை. பெண்ணை கட்டிக் கொடுத்திருக்கிறோம், தலை தீபாவளி அது என்று சாக்கு போக்கு சொல்லிவிட்டு மீண்டும் தீபாவளி கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஆனால் தும்பை பட்டி மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சுற்று வட்டார கிராமங்கள் எதிலும் தீபாவளி இன்று வரை கிடையாது. 


அதேபோல கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அருகில் இருப்பதால் தீபாவளி நேரங்களில், அவர்கள் பட்டாசு வெடிப்பதோ மத்தாப்புகள் கொளுத்துவதோ கிடையாது..


எல்லா கிராமங்களும் தீபாவளியை விட வேண்டும் என்று சொல்லவில்லை.நல்ல துணிமணி எடுத்து கொள்வதையோ நல்ல பலகாரங்கள் ஆக்கி உண்பதையோ விட வேண்டும் என சொல்லவில்லை.. 


 ஆனால் காசை கரியாக்கி, காற்றை மாசாக்கி,  கைக்காசை செலவாக்கி கொண்டாடுவதை குறைத்து கொண்டாலே ஓரளவுக்கு குடும்பத்தையும் தேசத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றலாமே. 


எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...