தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
மறைத்த நாளழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ...
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? .. .
பெண்கள் தங்கள் முகமலரை முகத்திரையால் மறைத்துக்கொள்வது பற்றி பாரதியாரின் "கண்ணன் பாட்டு" கவிதையில் தில்லி துருக்கர் செய்த வழக்கமடி" என பாடியிருப்பார்.
பர்தா என்பது தெற்காசியாவில் சில முஸ்லீம், ஜோராஸ்ட்ரியன் மற்றும் இந்து சமூகங்களில் பெண்கள் அணியும் ஒரு வகை ஆடை. இது முகத்தை மறைக்கும் ஒரு முக்காடு (புர்கா) அல்லது பொதுப் பார்வையில் இருந்து பெண்களை மறைக்கும் ஒரு சமூக நடைமுறை உள்ளது. இதற்கு ஏராளமான காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பர்தா. தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளில் சமீபத்தில் வெளிவந்த படம்.
பர்தா என்றால் முஸ்லீம் சமுதாய பெண்கள் போடும் பர்தா என நினைத்துக்கொண்டிருக்கிறோம். இன்றும் வட இந்தியாவில் ராஜஸ்தான் இந்து சமுதாயப்பெண்கள் போடும் பர்தா போல இது ஆந்திராவில் ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் வயதுக்கு வந்துவிட்டால் அதன் பின் தன் வீட்டிற்குள் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி , திருமணம் ஆனபின் கணவன் என முக்கிய குடும்பத்தினர் முன்பு மட்டுமே தங்கள் முகத்தை காட்டமுடியும், இறந்து விட்டால் கூட முக்காடு போட்ட பர்தாவுடன் தான் கட்டையில் வேகவேண்டும் என்ற ஒருவிதமான மூட நம்பிக்கையில் உள்ள கிராமம். இந்த பர்தாவுக்கு இக்கிராமத்தின் பூசாரி , ஜூவாலா என்ற ஒரு பெண்ணின் கதையும் அவளின் சாபம் காரணமாகவே இந்த முக்காடு என்றும் கூறுகிறார். அப்படி எந்த வயது வந்த பெண்ணாவது முக்காடு பர்தா இல்லாமல் இருந்தால், இக்கிராமத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளை ஜூவாலாத்தாய் கொன்றுவிடுவாள் என்றும் ஆண்டாண்டு காலமாக பரப்பப்பட்டு வந்த கதையாகும். அப்படி பர்தா இல்லாத பெண்ணை யாராவது பார்த்துவிட்டால், அந்தப்பெண்ணை வெள்ளை ஆடை உடுத்தி, கையில் கல்லைக்கட்டி, கிணற்றில் ஊரே கூடி இறங்கச்செய்து தற்கொலை (கொலை.) செய்து கொள்ளும் ஒரு கொடூரமான மூடப்பழக்கத்தை கடைபிடிக்கும் கிராமமாக இருக்கிறது.
இந்தக்கிராமத்தில் சுப்பு என்ற (அனுபமா பரமேசுவரன்) பெண். இவளுக்கும் இதே கிராமத்தை சார்ந்த ராஜேஸ் என்பவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. திருமண நிச்சயத்தன்று ராஜேசின் நகரத்து நண்பன் ஒருவன் கொண்டுவரும் ஒரு ஆங்கில இன்கிரிடபிள் வுமன் என்ற பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் சுப்புவின் பர்தா இல்லாத அழகிய படம் இருப்பதைக்காணும் உறவினர்கள் திருமணத்தை நிறுத்துகிறார்கள். சுப்புவோ பர்தா இல்லாமல் தான் எப்பொழுதும் இருந்தது கிடையாது என்றும் அந்தப்போட்டோவுக்கு தான் போஸ் கொடுக்கவில்லை என்றும் கதறுகிறாள். ஊரார் இவள் பேச்சை மதிப்பதில்லை. அதனுடன் நில்லாமல் ஜூவாலாஅம்மாவின் சாபம் கழிய சுப்புவை உயிர்த்தியாகம் செய்யவேண்டும் என்று பூசாரியின் தலைமையில் கூக்குரல் இடுகிறார்கள். சுப்புவும் வெள்ளை ஆடை உடுத்தி, பர்தாவுடன் கையில் கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்குகி
றாள். அதே சமயம் ஜூவாலாம்மாவின் கோவிலுக்கு செல்லும் இரண்டு பெண்கள் சூறைக்காற்று வீசுவதையும், விளக்கு அணைவதையும் கண்டு, ஜூவாலாம்மா சுப்புவின் உயிர் தியாகத்தை ஏற்கவில்லை எனக்கூற சுப்பு கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றப்படுகிறாள். ஆனால் ஜூவாலாம்மாவின் கோபம் தீரவில்லை... விளக்கு காற்றுக்கு அணைந்திருக்கும் என பூசாரி கூறி, பலி கேட்கிறார். சுப்புவின் அத்தை சங்கீதா, சுப்புவை காப்பாற்ற, புகைப்படம் எடுத்த அந்த போட்டோ கிராபரை அழைத்து வந்து உண்மையை நிரூபிக்கிறேன் எனக்கூறுகிறார். இக்கிராமத்தில் உள்ள ஒரு பெண் இந்த மூன்று வாரத்தில் பிரசவிக்க இருக்கிறாள். அதற்குள் அந்த போட்டோ கிராபரை அழைத்து வரவேண்டும், அல்லது சுப்பு உயிர் தியாகம் செய்யவேண்டும் என்ற உத்திரவாதத்தோடு, போட்டோ கிராபர்(கெளதம்) வாசுதேவ மேனன்) இமாசலப்பிரதேசத்தில் தர்மசாலாவில் உள்ளதை அறிந்து கொண்டு அங்கு செல்கிறார்கள். டெல்லியில் இருந்து இவர்களை அமி என்ற (தர்சனா ராஜேந்திரன்) பெண் பொறியாளர் அழைத்துச் செல்கிறார். அதன் பின் நடப்பது என்ன?
கெளதம் வாசுதேவன் கிடைத்தாரா? சுப்பு சொல்வது உண்மைதானா? ஜூவாலம்மாவின் சாபத்தில் இருந்து ஊர் காப்பாற்றப்பட்டதா? இந்த ஊரின் பெண்கள் பர்தா போடும் வழக்கம் எவ்வாறு ஒழிக்கப்பட்டது என்பதை அறிய வேண்டுமா... இப்படத்தினை பாருங்கள்!
இது சுப்பு என்ற பெண்ணின் கதை மட்டுமல்ல, அவரை காப்பாற்ற துடிக்கும் அவளது அத்தை, உதவி செய்யும் அமியை பற்றிய கதையும் தான்.
பர்தாவில் சிக்கித் தவிக்கும் சுப்பு, வாழ்நாள் எல்லாம் தனது குடும்பத்திற்காகவே உழைத்துக் கொட்டும் குடும்பப் பெண்மணி அவளது அத்தை சங்கீதா, தனது திறமை எல்லாம் கொட்டி முன்னேற துடித்தாலும் பெண் என்பதால் மட்டுமே வாய்ப்புகள் மறுக்கப்படும் பொறியாளர் அமி ஆகியோர் விடுதலை பெறத்துடிக்கும் கதை இது.
முகத்தையோ, உடல் கவர்ச்சியையோ பிறர் பார்த்து கெடுக்க துணியும் ஆண் சமூகத்திலிருந்து பாதுகாக்க தான் பர்தா என்று ஆயிரம் கதைகள் விட்டாலும், பர்தா போட்டாலும், போடாவிட்டாலும், கவர்ச்சியை காட்டினாலும், காட்டாவிட்டாலும் பல்லு போன கிழவியிலிருந்து இளம் குழவி வரை பாதுகாப்பற்று வாழும் சூழல் உள்ளது என்பதை சனாதனவாதிகள் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.
இது அதீத எனக்கூறி மக்களை ஏமாற்றும் சக்திக்கு எதிரான படம். பெண்ணியவாதிகள், மூட நம்பிக்கை ஒழிப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், ஆண்-பெண் சமத்துவம் பேசுபவர்கள், ஆன்மீகம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சதிகளை அம்பலப்படுத்துவோர் மட்டுமல்ல அனைவரும் காணவேண்டிய படம் பர்தா.
இஸ்லாமிய நாடுகளான ஈரான் போன்ற நாடுகளில் இந்த முகத்திரை எனும் பர்தா கொடுமைக்கு எதிராக பெண்கள் மீது கொண்டு எழுந்து போராடிக் கொண்டிருக்கின்ற காலம் இது. எங்கும் பெண்ணடிமை தனத்தை போதிக்கும் இந்த பர்தா முறைஒழிய பெண்ணியவாதிகள் மட்டுமல்ல அனைத்து ஜனநாயகவாதிகளும் இந்த முறையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியகாலமிது.
அமேசான் பிரைமில் வெளிவந்தஅருமையான திரைப்படமிது...
No comments:
Post a Comment