சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 31 December 2025

செந்தமிழ்ப் பாவை 15

 குளிர்ந்த நிலவு போன்ற முகம் கருகிப் போக, இனிக்கும் செவ்விதழ்கள் வறண்டு போக, மலர் போன்ற சிவந்த விழிகள் குழிவீழ, உடுக்கை போன்ற சிற்றிடையும் துவண்டு போக, இளமையின் பூரிப்பில், கணவன்/கணவர் தங்கையுடன் இரவெல்லாம் மகிழ்ந்து, பொழுது புலர்ந்தும் உறங்கிக் கொண்டிருக்கும் இளம் தமிழ்ப்பெண்ணே, உங்கள் திருவாயால், மனங்கமல மகிழ்ந்துரைத்திடும் தமிழுக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்தே நொடியில் விழித்தெழுந்து போராட வாருங்கள் என வேட்கையுடன் அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்... 

பொருள்:

பெருஞ்சித்திரனார், தமிழ் மொழியின் வீழ்ச்சியைக் கண்டு வருந்தி, இளமையின் சுகங்களில் மூழ்கியிருக்கும் தமிழ்ப் பெண்களை, தமிழுக்காக எழுந்து போராட அழைக்கும் வேட்கை மிகுந்த வரிகள் இவை.

'இளம் தமிழே', 'புலர்ந்தேலோ' போன்ற சொற்கள், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஏற்பட்ட நெருக்கடியை உணர்த்தி, விழிப்புணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றன. 

இளம்பெண்களின் மயக்கமான நிலையைப் பற்றிப் பேசுகின்றன; இரவெல்லாம் கணவர்/கணவரின் தங்கை அணைப்பில் இருந்து, விடியற்காலையில் சிறுதுயில் கொள்கின்ற பெண்களை, அவர்களின் அழகிய வாய்மொழியில் தமிழ் இனிமைக்கு இடர் நேர்ந்துவிட்டது, உடனே எழுங்கள்! என்று எழுப்பக் கோருகின்றன. இது ஒரு விடுதலையை நோக்கிய, தமிழ்த் தாயின் பெருமையைப் போற்றும் புரட்சிக்கல்விப் பாடல். 

***********************

திங்கள் முகங்கருகச் செவ்விதழும் தாம்வறளச் செங்கண் குழிவீழச் சிற்றிடையும் சோர்ந்துவிழப் பொங்கும் இளம்பருவப் பூரிப்பில் நுங்கணவர் தங்கை அணைப்பில் இராமுழுதும் சேர்ந்திருந்தே செங்கதிர்ப் போழ்தில் சிறுதுயிலும் கொள்ளுகின்ற மங்கையரீர் நுந்தம் மணிவாய் கமழ்தமிழுக் கெங்கும் இடர்வர வுற்றதுகாண் இந்நொடியே பொங்கி எழுவீர் புலர்ந்தேலோ ரெம்பாவாய் !15.


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இது பகுத்தறிவின் காலக்கணக்கு... "நேரம் என்பது மாயை" என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அறிவியல்-தத்துவக் கருத்து, புத்தாண்டைப் பார்ப்பதில் ஒரு புதிய பரிணாமத்தைத் தருகிறது....

உண்மையில் இயற்பியல் விதிகள் படி

➤கடந்து போன "நேற்று" என்பதும், இன்னும் வராத "நாளை" என்பதும் இப்போது இல்லாத காலங்கள்.

➤நாம் வாழ்க்கையை "நாட்காட்டி" எனும் ஒரு கற்பனைக் கோட்டில் மட்டுமே அளவிடுகிறோம்.

➤அண்டம் உருவானதிலிருந்து ஒரே உண்மை "தற்போது" என்பதில் தான் உள்ளது.

மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் மிதக்கும் பூமி என்ற சிறு தூசி அளவுள்ள ஒரு கிரகத்தில், 350 கோடி ஆண்டு கால பரிணாம வளர்ச்சியால் உருவான ஒரு சிந்திக்கும் திறன் கொண்ட நவீன வகை உயிரினம் மட்டுமே... வேறு எந்த தனிப்பட்ட பெருமையும் நமக்கு இல்லை.. 

பூமியில் உதித்த பிற உயிரினங்களை தாண்டி, சிந்திக்க திறன் கொண்ட மனிதர்கள் கூட்டமாக வாழ ஆரம்பித்து, சமூகமாக மாறி பின் இனங்கள்,மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், அரசுகள். பேரரசுகள் பல்வேறு நிலைகளை கண்டான். 

அவரவர் மொழிக்கும் இனத்துக்குமான கால வர்த்தமானங்களையும் கணக்குகளையும் கண்டான். பல்வேறு புத்தாண்டுகளையும் உருவாக்கிக் கொண்டான். தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு சீன புத்தாண்டு என பல புத்தாண்டுகளைக் கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் ஆங்கில புத்தாண்டின் வரலாறு கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். 

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு:

ஆரம்ப ரோமானியர்கள் மார்ச் 1-ஐ புத்தாண்டு தினமாகக் கொண்டாடினர். ரோமானியக் கடவுள் ஜனஸ் (ஜனஸ்) என்ற பெயரில் ஜனவரி மாதம் சேர்க்கப்பட்டது, மேலும் ஜனவரி மாதத்தின் தொடக்கமே புத்தாண்டாக மாறியது.ஜூலியஸ் சீசர் கி.மு. 45-ல் ஜூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தி, ஜனவரி 1-ஐ புத்தாண்டாக அறிவித்தார்.  

ஜூலியன் நாட்காட்டி வந்த பிறகு, ஐரோப்பாவின் சில பகுதிகளில் மார்ச் 25 அல்லது டிசம்பர் 25 போன்ற தேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

1582-ல் கத்தோலிக்க திருச்சபையால் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஜனவரி 1-ஐ மீண்டும் புத்தாண்டு தினமாக மீட்டெடுத்தது. 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் படிப்படியாக கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டன. 1752-ல் இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து மற்றும் காலனிகள் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 1-ஐ புத்தாண்டு தினமாக ஏற்றுக்கொண்டது. ஆங்கிலேயரின் காலணி ஆதிக்கத்திற்குப் பிறகு அந்தக் காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளும் ஆங்கில புத்தாண்டினைக் கொண்டாட ஆரம்பித்தனர்

எது எப்படியோ தற்கால ஆங்கிலப் புத்தாண்டு  இன்று, கிரிகோரியன் நாட்காட்டியைப் பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது என்பது வரலாறு....... 

அது சரி, அது ஏன் ஆங்கில புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது என்று தெரியவில்லை.. 

ஆனாலும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் நாளாக மாறிவிட்டது. 

நள்ளிரவு பன்னிரண்டுமணி அடித்த நொடியில் இரைச்சல் போட்டு விடிய விடிய கூத்தடிக்கும் இளைஞரிலிருந்து, கோவில் கோவிலாக படையெடுக்கும் பெருசுகள் வரை, அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் படையெடுக்கும் அரசு ஊழியர்களிடம், அரசியல் தலைவர்களுக்கு மாலை அணிவித்து காக்கா பிடிக்கும் தொண்டர்கள் வரை என சாதி, மத பேதமின்றி எல்லோரும் கொண்டாடும் பொது பண்டிகை நாளாக ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 

"புத்தாண்டு" என்றால் என்ன????அது தமிழ் புத்தாண்டு அல்லது ஆங்கில புத்தாண்டு என்று எதுவாக இருந்தாலும்.....

இது மனித மனத்தின் ஒரு அற்புதமான "மானசீகக் கட்டமைப்பு". கனவுகளைத் தூண்டும், மாற்றத்திற்கான உந்துதலைத் தரும், புத்துணர்வை ஏற்படுத்தும் ஒரு மனிதக் குறியீடு.... வரலாற்றுக்கு ஒரு அளவீடு.... அவ்வளவே.... 

நாம் வேண்டுவதெல்லாம் சமாதானமும், சமத்துவமும், சாதி மத பேதமில்லா அமைதியும், ஆனந்தமும், மனித நேயமும்நிறைந்த வாழ்க்கையே அந்த இனிய குறிக்கோள் நிறைவேறிட அனைவருக்கும் ஆனந்தமான ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...





Tuesday, 30 December 2025

செந்தமிழ்ப்பாவை 14

மான் விழிகளை போன்ற அழகான கண்களை உடையவளே! செந்தமிழ் கற்று பண்டிதரானோர் தாம் கற்ற மொழியை பணம் சேர்க்கும் பேச்சு வியாபாரி ஆயினர் பலர்.. அவரே அவ்வாறானால் மற்றவர் எவ்வாறிருப்பர்... மொழி அருமை உணர்ந்தவர் மொழிக்காக உரிமைக்குரல் எழுப்பினாலோ ஆள்பவர் அவரை அடக்கி அழிக்க முனைகிறார்.... மொழிக்காக போரிடுவது குற்றமென கூறி கொடுஞ்சிறைக்குள் அடைத்து குரலை நெறிக்கிறார். 

மொத்த தமிழினமும் ஊமையராய் மாறிடுமுன்னர், தாய்ப்பாலோடு தமிழ் பாலை ஊட்டிடும் பெண் குலத்தோரே இழந்திடும் உரிமைதனை காக்கவல்லார்.. பொற்கொடி போன்றவளே!!! இனியும் உறங்குதல் முறையோ? விழித்தெழுவாயே! என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார். 

*********************

கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!

மற்றவரைக் கேட்பேன்! மான்விழியே! நாட்டுநலம்

உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாளோ

கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!

குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!

முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுனம்

பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!

பொற்றொடியே துஞ்சல் புரையேலோ ரெம்பாவாய்! 14

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 22

 ஒரு மருந்தாளுனருக்கு மருந்தைப் பற்றி நினைப்பு வருவது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள மருந்து என்ற அதிகாரமும், "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து" என்ற குறளும் தான். அந்த அதிகாரத்தில் பத்து பாடல்கள் இருந்தாலும் இந்தக் குறளை மட்டும் தான் அடிக்கடி கூறுவர். ஏனெனில் அதில் உள்ள மருந்துழைச்செல்வான் என்பவன் மருந்தாளுனர் என்ற கருத்தின் அடிப்படையில் தான்.

அக்குறள் பாடப்பட்ட காலத்தில் இருந்த மருந்துகள் எல்லாம் பச்சிலைகளும் பொடிகளும் தான். இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதம் என்ற பிரிவு உள்ளது. அதில் தைலம், கஷாயம் போன்ற வகைகள் வரும். இதே போல உலகம் எங்கும் அந்தந்த பகுதிகளில் ஏராளமான மருத்துவ முறைகளும் மருந்துகளும் உள்ளன. உலகெங்கும் பிரசித்திமானவை அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறை, ஹோமியோபதி என்று அழைக்கப்படும் ஜெர்மானிய மருத்துவமுறை, யுனானி என்று அழைக்கப்படும். அராபிய மருத்துவ முறை, மற்றும் சில. 

தற்பொழுது இங்கு புழக்கத்தில் உள்ள மருந்துகள் எல்லாம் அலோபதி எனும் மேற்கத்திய முறை மற்றும் அது உருவாக்கிய மருந்துகள், மருத்துவ முறைகள்... காலம் காலமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் ஒரு முறையான மருந்து மருந்தியல் துறை என்பது பதினெட்டாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் தான் உருவானது. 

மருந்தியல் என்பது மருந்துகளின் விளைவுகள், அவை எவ்வாறு அதன் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்கிறது. ஒரு மருந்து என்ன செய்கிறது மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறது மருந்தியல். 

1828 ஆம் ஆண்டு ஃபிரெட்ரிக் வோலர் கனிமப் பொருட்களிலிருந்து யூரியாவை ஒருங்கிணைத்து, உயிர் சக்தி கோட்பாட்டை தகர்த்தபோது செயற்கை கரிம வேதியியல் பிறந்தது. மருந்தியலின் பிறப்பு தேதி அவ்வளவு தெளிவாக இல்லை. 19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில், உடலியல் வல்லுநர்கள் பல மருந்தியல் ஆய்வுகளை மேற்கொண்டனர்

1842 ஆம் ஆண்டில், கிலாட் பெர்னார்ட், அம்பு விஷம் கியூரே நரம்புத்தசை சந்திப்பில் தீவிரமாக நரம்பு தூண்டுதல்களால் தசையின் தூண்டுதலை குறுக்கிடுகிறது குறிப்பிட்டார்.

முதல் பல்கலைக்கழக இருக்கை நிறுவப்பட்டபோதுதான் மருந்தியல் ஒரு தனி அறிவியலாக உருவானதாகக் கருதப்படுகிறது. வால்டர் ஸ்னீடரின் கூற்றுப்படி, இது 1847 ஆம் ஆண்டு, ருடால்ஃப் புச்செய்ம் எஸ்டோனியாவில் உள்ள டோர்பட் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டபோது நடந்தது. 

நவீன மருந்தியல் நிறுவனர் என்று பொதுவாக அங்கீகரிக்கப்படுபவர் ஆஸ்வால்ட் ஷ்மிடெபெர்க் (1838–1921). ,. 

1866 ஆம் ஆண்டு இரத்தத்தில் குளோரோஃபார்மின் அளவீடு குறித்த ஆய்வறிக்கையுடன் தனது மருத்துவ முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவ்வாறு துவங்கிய மருந்தியல் இன்று உலக அளவில் மனித குல உடல் நலம் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு, முன்னேற்றத்திற்கு பெரிதளவுக்கு உதவி வருகிறது. 

இன்று, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி அல்லது மருந்தகக் கல்லூரியிலும் ஒரு மருந்தியல் துறை உள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஃபார்முலாக்கள் அந்தந்த நாட்டு பார்மகோபியாக்களாக(Pharmacopea ) பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தயாரிக்க உதவுகின்றன. உதாரணமாக BP, USP, IP என உலகெங்கும் உருவானது. 

ஆரம்ப காலத்தில் தாவரங்கள், கனிமப் பொருட்கள், விலங்கு சார்ந்த பொருட்கள், பின்னர் வேதிய பொருட்களை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 

நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் மருந்தகங்களில் நம் முன்னோடி மருந்தாளுனர்கள் மாத்திரைகள், சாறுகள், சிரப்புகள், கசாயங்கள், பொடிகள் (Pilula, succus, Infusum, Oleum, Liquor, syrup, extractum, ungendum) போன்ற மருந்துகளை தயாரித்து வழங்கினார்கள்.

20-ஆம் நூற்றாண்டு: வேதியியல் முறைப்படி செயற்கை மருந்துகள் (Synthetic drugs ), தயாரிக்கப்பட்ட பின்னர் மருந்துத் துறை ஒரு பெரிய தொழிலாக உருவானது.

1930-களில்இயற்கைப் பொருட்களிலிருந்து செயலியில் உள்ள மூலக்கூறுகளை பிரித்தெடுத்து, அதன் செயற்கை வடிவங்களை உருவாக்கும் பணி தொடங்கியது. அதன் பின் ஏராளமான மருந்துகள் சேர்க்கை முறையில் தயாரிக்கப்பட்ட நடைமுறைக்கு வந்தன.

 நம் ஆரம்ப காலத்தில் மருத்துவமனைகளில் மருந்தாளுனர்கள் தயாரித்த கலவை மருந்து, பவுடர், களிம்புகள் எல்லாம் காணாமல் போய் நவீன மருந்துகள் ஏராளமாய் வந்துவிட்டன. 

கலவை மருந்துகளை தயாரித்து கொடுத்த கடைசி தலைமுறை நானாக தான் இருப்போம் என நினைக்கிறேன். ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட மருந்துகள் புழக்கத்தில் இருந்த நிலைமை மாறி, இன்றைக்கு அதி நவீனமான, புதிதாக அறிமுகமான மருந்துகள் கூட அரசு மருத்துவமனைகளில் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழங்கும் அளவிற்கு தமிழக மருத்துவத்துறை வெகுவாக முன்னேறி உள்ளது. அதற்கு ஏற்ப மருந்தாளுனர்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதுதான் மிகப்பெரிய பெருமை. அதற்கு காரணம், தமிழக அரசு உருவாக்கிய தமிழ்நாடு சேவை கழகம் மிக நவீனமான முறையில் அத்தியாவசியமான மருந்துகள், சிறப்பு மருத்துவ பிரிவு மருந்துகள் என வகைப்படுத்தி இலவசமாக இங்கு வழங்குவதும் முக்கிய காரணமாகும். 

அதே போல மருத்துவ துறையில் பட்டய படிப்பு, தாண்டி பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்பு  B. Pharm, M. Pharm, Pharm D என நிறைய படித்தவர்கள் வந்துவிட்டனர். பட்டய படிப்பு மருந்தாளுநர்கள் அரசு பணியில் இருந்து கொண்டே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் உருவானதும் ஒரு காரணம்.

 துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டாமலே போனது வருத்தமாக தான் உள்ளது.

 அதேபோல வளர்ந்து வரும் நவீனத்திற்கு ஏற்ப தொடர் மருத்துவக் கல்வி அனைத்து மருந்தாளுநர்களுக்கும் வழங்கப்பட வேண்டியது மிக அவசியம்.... 


Monday, 29 December 2025

செந்தமிழ்ப் பாவை 13..

 கெண்டை மீன் போன்ற அழகான விழிகளை உடையவளே! தண்டமாகிய ஆயுதமேந்திய எதிரிகள் ஆண்களின் சிண்டைப் பிடித்துவிட்டார்கள் பார்... பெருமிதத்துடன் கம்பீரமாக வாழ்ந்த எம்தமிழர் இவ்வுலகில் அடிமையாக வாழ்வதுவோ?! இப்பூவுலகில் பீடும் பழம்பெருமையும் கொண்ட வாழ்வு பாழ்பட்டுப் போவதுவோ?! விலங்குகள் போல் உண்பதும் உறங்குதலும் உயர்ந்த நிலை எனக்கொள்வதுவோ?! 

பெண்ணெனப்படும் பேறுபெற்றாள் விழிப்புணர்வு பெற்றால் பேருரிமை பெற்றலாகாதோ?? 

பெண்களின் தொண்டே பெருந்தொண்டு ஆகாதோ!! விழித்தெழுந்து வீரச்சமர் புரிய வாவென்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்.... 

********************

தண்டைப் பிடித்தவரோ தாவித் தமிழரின்

சிந்தைப் பிடித்தனர்காண்! செம்மாந்த எந்தத்தமிழர்

ஆண்டை நிலத்தில் அடிமையுறத் தாழ்வதுவோ?

பண்டைப் பெருமையும் பாழ்பட்டுப் போவதுவோ?

உண்டிங் குறங்குவதே ஓங்குநிலை என்பதுவோ?

பெண்டிர் விழிப்புற்றால் பேருரிமை வாயாதோ?

தொண்டிற் பெருந்தொண்டு தோகையர்தம் தொண்டன்றோ?

கெண்டை விழியே! கிளர்கேலோ ரெம்பாவாய்! 13

🙏 🙏 

எது உங்கள் எல்லை?


எல்லைகள் என்பவை மக்களை வெளியே வைத்திருக்க உதவும் சுவர்கள் அல்ல.

அவை பின்வருவனவற்றை வரையறுக்கும் கட்டமைப்புகள்:

நீங்கள் எங்கு முடிகிறீர்கள், மற்றவர்கள் எங்கு தொடங்குகிறார்கள்.. 

நீங்கள் எதை ஏற்றுக்கொள்வீர்கள், எதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.. 

உங்கள் ஆற்றல் எவ்வாறு செலவிடப்பட வேண்டும்.. 

அவை இல்லாமல் போனால் நீங்கள் மற்றவர்களின் நெருப்புக்கு விறகாக மட்டுமே இருப்பீர்கள்... 
 
1. எல்லைகளை அமைத்தல்

உங்களுக்குத் தேவைகள் இருப்பதற்காக பிறரிடம் மன்னிப்பு கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் ஆசைகளும் முக்கியமானவை.

நீங்கள் தொடர்ந்து உங்களை கடைசியாக வைக்கும்போது, ​​அந்த இடத்திற்குத்தான் தகுதியானவர் என்று மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள்.

உங்கள் சொந்த வாழ்க்கையில் உங்களுக்கு நீங்களே முன்னுரிமை அளிக்க அனுமதி கொடுங்கள்.

உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் , உங்களது முன்னுரிமையை விட்டு கொடுத்து விடாதீர்கள், இதன் பொருள் சுயநலமாக இருப்பதல்ல., ஆனால் உங்களை நீங்களே விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.... 

2. நேர வரம்பு

உங்கள் நேரமானது வரையறுக்கப்பட்டதே. அதைத் தீவிரமாகக் காத்துக்கொள்ளுங்கள்.

அறிவிப்புகளை அணைத்துவிடுங்கள்.

கவனக் குவிப்பு நேரங்களைத் திட்டமிடுங்கள்.

"நான் நாளை உங்களைத் தொடர்புகொள்கிறேன்" என்று சொல்லுங்கள்.

அணுகக்கூடியவராக இருப்பது என்பது எப்போதும் கிடைக்கக்கூடியவராக இருப்பதைக் குறிக்காது. உங்கள் நேரம் முதலில் உங்களுக்கே சொந்தமானது.

உங்கள் நேரம் உங்களுடையது... பயனின்றி பிறருக்கு தூக்கி கொடுத்து விடாதீர்கள்... 

3.உணர்ச்சிப்பூர்வமான எல்லை

மற்றவர்களின் உணர்வுகள் உங்கள் பொறுப்பல்ல.

நீங்கள் சுமக்காமல் அக்கறை காட்டலாம். நீங்கள் சரிசெய்ய முயற்சிக்காமல் செவிசாய்க்கலாம்.

அவர்களின் எதிர்வினை அவர்களுக்கு உரியது. உங்கள் மன அமைதி உங்களுக்கு உரியது பிறருக்கு உதவி செய்ய வேண்டும், தவறில்லை... நீங்களே தூக்கி சுமக்க முயற்சிக்காதீர்கள்.. 

4. சொல்லால் அமைக்கும் எல்லை

'வேண்டாம்' என்பது ஒரு முழுமையான வாக்கியம். மன்னிப்புக் கேட்காமல் அதைப் பயன்படுத்துங்கள்.

நீங்கள் விரும்பாத ஒரு விஷயத்திற்கு ஒவ்வொரு முறையும் 'ஆம்' என்று சொல்லும்போது, ​​உங்களுக்குத் தேவையான ஒரு விஷயத்திற்கு 'இல்லை' என்று சொல்கிறீர்கள்.

உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை மகிழ்விப்பதை விட, உங்கள் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.எது வேண்டும், எது வேண்டாம் என்பதை யதார்த்தத்தைக்கொண்டு முடிவு செய்யுங்கள்... 

5. ஆற்றல்  எல்லை

உங்கள் ஆற்றலே உங்களுக்கு மிகவும் விலைமதிப்பற்ற வளம். அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.

ஓய்வு என்பது உற்பத்தித்திறனுக்கான வெகுமதி அல்ல. அது உயிர்வாழ்வதற்கான ஒரு தேவை.

ஆற்றல் குறைபாடு என்பது உங்கள் இயல்பான நிலை அல்ல.

உங்கள் ஆற்றல் தீர்ந்துபோவதற்கு முன்பே எப்போதும் அதை நிரப்பிக்கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை உபயோகமற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் உங்களுக்காக மட்டுமே பயன்படுத்துமாறு சேமித்து வையுங்கள்.

6. தரங்களின் எல்லை

நீங்கள் நேசிக்கும் ஒருவருக்குப் பரிந்துரைக்காத சிகிச்சையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

மோசமான நடத்தைக்கு விரிவான நியாயங்கள் தேவையில்லை.

அவமரியாதைக்கான உங்கள் சகிப்புத்தன்மை, மேலும் அதிக அவமரியாதைக்கான அழைப்பாக மாறுகிறது. அவமரியாதையை சகித்துக் கொள்ளாதீர்கள் மேலும் அவமரியாதையையே அளித்துடும்.. 

7. சுய-பராமரிப்பு எல்லை

உங்கள் சொந்த நாட்காட்டியில் உங்களுக்காகவே ஒரு தவிர்க்க முடியாத சந்திப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களைப் பராமரிப்பது என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல. உங்கள் நல்வாழ்வில் கவனம் செலுத்துவது சுயநலம் அல்ல.

மற்றவர்களுக்காக நீங்கள் கொடுப்பது எவ்வளவு முக்கியம், அதே அளவு முக்கியமானது, உங்கள் ஆற்றலை மீண்டும் நிரப்பிக்கொள்ள நீங்கள் தனியாகச் செயல்களும் ஆகும். உங்கள் நல்வாழ்வை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள முடியும்... 

8. பரஸ்பரப் பரிமாற்றத்தின் எல்லை

உறவுகளில் சமநிலை இருக்க வேண்டும். முழுவதும் கொடுப்பவராகவோ அல்லது முழுவதும் பெறுபவராகவோ இருப்பது மனக்கசப்பை உருவாக்கும்.

நீங்கள் எப்போதும் ஆதரவளிப்பவராகவும், ஒருபோதும் ஆதரவைப் பெறாதவராகவும் இருக்கும் உறவுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

உண்மையான தொடர்பு இரு வழிகளிலும் பாயும், இல்லையெனில் அது அமையவே அமையாது.

 வெறுமனே கொடுப்பவர் ஆகவோ அல்லது பெறுபவராகவோ இருப்பது எப்பொழுதுமே தவறான விளைவுகளையே அளிக்கும்.... 

9. அடையாள எல்லை

மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை வைத்து உங்கள் மதிப்பு அளவிடப்படுவதில்லை.

நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் தேவைகளுக்கு முன்பே நீங்கள் இருந்தீர்கள். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்கள்.

மற்றவர்களுக்காக நீங்கள் செய்வதிலிருந்து வேறுபட்ட ஒரு சுயத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் அவர்களுக்கு உங்களைத் தேவைப்படாது நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.உங்கள் சுயத்தினை இழந்து பிறருக்கு உழைக்காதீர்கள். மற்றவர்களுக்கு தேவைப்படும் வரையே நீங்கள் மதிக்கப்படுவீர்கள். 

10. எல்லை மீறும் புள்ளி

சரிவு ஏற்படுவதற்கு முன் வரும் எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்: மனக்கசப்பு, சோர்வு, உணர்ச்சியற்ற நிலை.

நீங்கள் உடைந்து போவதற்கு முன் ஒரு படி பின்வாங்குங்கள்.

சிறிது காலத்திற்கு உங்களில்லாமல் இந்த உலகம் இயங்கும். ஆனால், எல்லோருக்கும் எல்லாமாய் இருக்க முயற்சித்தால், உங்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் போகலாம்.

சரிவு வருவதற்கு முன்பே விழித்துக் கொள்ளுங்கள்... 


Sunday, 28 December 2025

செந்தமிழ்ப் பாவை 12

மை தீட்டிய கண்ணுடையாளே! உயர்ந்த குடிப்பிறந்தவளே!! உயிரினும் மேலான நல்ல உரிமைகளை, அற்ப விலைக்கே விற்றதனால், அறிவற்ற விலங்குகளைப்போல் படுசேற்றில் வீழதலைப்பட்டார் மனவுறுதியற்ற ஆடவர்... 

இவ்வாறிருக்கையில் பள்ளி கொண்டிருக்கிறாயே, பாவையரின் படையை திரட்டி  பெருவெள்ளம் போல் பாய்ந்து தமிழைக் காத்திட வெற்றி கொள்ள புறப்படுவாய் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் செந்தமிழ் பாவையை அழைக்கிறார்... 


உள்ளம் மலையாத ஆடவரும் தாமலைந்தார்", மன உறுதியற்ற (மலையாத) ஆண்களும் (ஆடவரும்) வீழ்ந்து போனார்கள் (தாமலைந்தார்) அல்லது சரிந்தார்கள், ஏனெனில் அவர்கள் கள்ளத்தனமான விலைமதிப்பிற்கு (கள்ள விலை) நல்லுரிமைகளை விற்று, பள்ளங்களில் இறங்கி, சேற்றில் சிக்கிக் கொண்டனர் (உள்ளம் ஒருப்பட்டார்) என்பதாகும். இது சோம்பல், சுயநலம், மற்றும் ஒழுக்கமின்மையால் மனிதர்கள் வீழ்ச்சியடைவதைக் குறிக்கும், கனிச்சாறு  என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலின் ஒரு பகுதியாகும். 


உள்ளம் மலையாத ஆடவர்: மனம் உறுதியற்ற, தளராத, சோம்பேறித்தனமான மனிதர்கள்.

தாமலைந்தார்: வீழ்ந்து போனார்கள், அழிந்தார்கள்.

கள்ள விலைவாங்கி: நேர்மையற்ற வழியில் (கள்ளத்தனம்) விலைக்கு வாங்கிக்கொண்டு.

நல்லுரிமைக் கால்துணித்தார்: நல்லுரிமைகளை காலால் மிதித்து, பறித்துக்கொண்டார்கள்.

பள்ளத் திறங்கிப் படுசேற்றில் தாம்புரள உள்ளம் ஒருப்பட்டார்: பள்ளத்தில் இறங்கி, சேற்றில் புரள சம்மதித்தார்கள். 

சுருக்கமாக, உறுதியற்ற மனதுடைய மனிதர்கள் தங்கள் நல்ல குணங்களை இழந்து, சுயநலத்திற்காக வீழ்ச்சியடைவதைக் கண்டிக்கிறார்

**********************

உள்ளம் மலையாத ஆடவரும் தாமலைந்தார்;

கள்ள விலைவாங்கி நல்லுரிமைக் கால்துணித்தார்!

பள்ளத் திறங்கிப் படுசேற்றில் தாம்புரள

உள்ளம் ஒருப்பட்டார்! உண்கண்ணாய்! நீயெழுந்தே

எள்ளல் தவிர்க்க இசையாயின் இம்மண்ணும்

கொள்ளல் தவிரார்! குலக்கொடியே ஈங்கின்னும்

பள்ளிக் கிடத்தியே! பாவைப் படைகூட்டி

வெள்ளம்போல் பாய்வாய் விரைந்தேலோ ரெம்பாவாய்! 12

Saturday, 27 December 2025

இந்தியா கேட்

டெல்லி என்றதும் நம் நினைவிற்கு வருவது இந்தியா கேட், பாராளுமன்ற கட்டிடம், குதுப்பினார் போன்ற புகழ்பெற்ற கட்டிடங்கள் தான். புதுடில்லி மாநகரத்தை சுற்றி வந்தால் ஏராளமான புராதான நினைவு சின்னங்களை காணலாம். இந்த அளவுக்கு ஒரு மாநகரில் புராதன சின்னங்கள் வேறு எங்காவது இருக்குமா என்பது சந்தேகமே. ஒரு ஊர் சுற்றியாக இந்தியாவில் பல பகுதிகளை சுற்றி பார்த்த எனக்கு புதுடில்லியில் வசித்த நான்கு ஆண்டு காலத்தில் நான் பார்த்து ரசித்த சில இடங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.....

 இந்தியா கேட் என்றழைக்கப்படும் அகில இந்திய போர் நினைவு சின்னம், புது தில்லியின் "சடங்கு அச்சின்" Ceremonial axis கிழக்கு விளிம்பில் ராஜ்பாத் அருகே அமைந்துள்ள ஒரு போர் நினைவுச்சின்னமாகும் . இது 1914 மற்றும் 1921 க்கு இடையில் முதல் உலகப் போரில் , பிரான்ஸ் , ஃபிளாண்டர்ஸ் , மெசொப்பொத்தேமியா , பெர்சியா , கிழக்கு ஆப்பிரிக்கா , கல்லிபோலி மற்றும் அருகிலுள்ள மற்றும் தூர கிழக்கின் பிற இடங்களிலும், மூன்றாம் ஆங்கிலோ-ஆப்கான் போரிலும் இறந்த இந்திய இராணுவத்தின் 74,187 வீரர்களின் நினைவுச்சின்னமாக நிற்கிறது. ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சில வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 13,300 படைவீரர்களின் பெயர்கள் வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளன.அதில்12, 357 இந்திய வீரர்கள், அதிலும் நிறைய இஸ்லாமிய வீரர்கள் அடக்கம்... 

இந்த நினைவு வாயிலை புது டெல்லி தலைமை கட்டிடக் கலைஞர், இம்பீரியல் போர்க் கல்லறைகள் ஆணையத்தின் உறுப்பினர், ஐரோப்பாவின் முன்னணி போர்க் கல்லறைகள் மற்றும் நினைவிடங்களை வடிவமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்த எட்வின் லூட்டியன்ஸ் வடிவமைத்தார். 
  இந்த செனோடாஃபை வடிவமைப்பதற்காக, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமரான டேவிட் லாயிட் ஜார்ஜ் அவரைக் கேட்டுக்கொண்டார். லண்டனில் உள்ள செனோடாஃபைப் போலவே, புது டெல்லியில் உள்ள இந்த நினைவிடமும் ஒரு மதச்சார்பற்ற நினைவிடமாகும்; இது மத மற்றும் "சிலுவைகள் போன்ற கலாச்சார-குறிப்பிட்ட சின்னங்கள்" அற்றது. 

மேற்கூரை - நுழைவாயிலிலிருந்து சுமார் 150 மீட்டர் (490 அடி) கிழக்கே, ஆறு சாலைகள் சந்திக்கும் இடத்தில், மகாபலிபுரத்தில் உள்ள ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மண்டபத்தால் ஈர்க்கப்பட்ட, 73 அடி (22 மீ) உயரமுள்ள ஒரு குவிமாடக் கூரை உள்ளது. லூட்டியன்ஸ் இந்தக் குவிமாட மேற்கூரையும் அதன் சஜ்ஜாவையும் தாங்குவதற்காக நான்கு டெல்லி வரிசைத் தூண்களைப் பயன்படுத்தினார்.

புதுடெல்லியின் முக்கிய அடையாள சின்னமாக விளங்கும் "இந்தியா கேட்" டை, புதுடெல்லிக்கு சென்று வந்தவர்கள் யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

 நான் புதுடெல்லியில் வாழ்ந்த காலத்தில் பலமுறை அந்த இடத்திற்கு சென்று கொண்டு அப்போது நான் வரைந்த அல்லது கிறுக்கிய ஓவியம் இது... 





செந்தமிழ்ப் பாவை 11

மின்னலைப் போன்ற இடையும் வேல் போன்ற கண்களை உடையவளும் ஆகிய அழகிய பெண்ணே! இத்தனை காலமாக அடிமைப்பட்டு கிடந்ததாலே பேச்சும் அடங்கி, இயல்பான வீரத்தையும், சினத்தையும் அடக்கி, உணர்வும் மழுங்கி உறங்குகிறாயோ?! இத்தனை நாள் அறியாமையில் கிடந்ததற்காக வெட்கி, சீறும் புயலாக கிளம்பி, உரிமைப் போரைத் துவங்கிட வெற்றி பெறும் படையென விழித்தெழுவாய் பசும்பொன்னே!! என அறைகூவல் விடுகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்..... 


 அடிமைத்தனத்தால் ஏற்பட்ட சோர்வு நீங்கி, வீரம், உணர்ச்சி, உரிமைப் போர் உணர்வை மீண்டும் எழுப்பத் தூண்டும் வரிகள்; 'அடிமைத்தனம்', 'உணர்ச்சி மழுங்கல்' ஆகியவற்றை விடுத்து, 'மின்னிடும் இடை', 'வேல்போன்ற கண்கள்' கொண்ட வீரம் நிறைந்த பெண்ணே (கற்பனைப் பாத்திரம்), எழுந்து கோபத்துடனும், வீரத்துடனும் போர் தொடு' எனப் போர்க்குரல் எழுப்புகின்றன.

விளக்கம்:

இந்நாளாப் பட்ட அடிமைக் கிறக்கத்தால்...: இத்தனை நாள் நீ அனுபவித்த அடிமைத்தனத்தின் மயக்கத்தால், உணர்ச்சியின்றிப் போய் விட்டாயா.

செந்நா வடக்கிச் சினமடக்கி உள்ளுணர்வைக் கொன்னே மடக்கி உறங்குதியோ? கொல்பிடியே!: உன் செந்நா (பேச்சு) அடங்கி, கோபம் அடங்கி, உள்ளுணர்வை அழித்து உறங்குகிறாயா? (அப்படி உறங்காதே!).

மின்னே இடையாக வேற்கண்ணே வெல்படையா இன்னே எழுந்தே எரிபுயலாச் சீறுதியே!: மின்னல் போன்ற இடையுடன், வேல் போன்ற கண்களுடன், வெல்லும் படையுடன் இன்றே எழுந்து, எரிமலை போலச் சீறிப் பாய வேண்டும்.

அந்நாள் அயர்ந்த அறியாமைக் குள்நாணி, நன்னர் உரிமைப்போர் நாட்டுதியே!: அந்தக் காலத்தில் நீ அயர்ந்து கிடந்த அறியாமைக்காக வெட்கப்பட்டு, நல்ல உரிமைப் போரைத் தொடங்க வேண்டும்.

செய்யபசும் பொன்னே! பொழுதும் புலர்ந்தேலோ ரெம்பாவாய்!: பசிய பொன்னே! காலம் கடந்துவிட்டது, விழித்தெழு! (பகல் வந்துவிட்டது). 

மொத்தத்தில், இது பெண்களின் வீரம், உரிமை உணர்வு, விடுதலை வேட்கையைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான வரிகள்.

*******************

இந்நாளாப் பட்ட அடிமைக் கிறக்கத்தால் செந்நா வடக்கிச் சினமடக்கி உள்ளுணர்வைக் கொன்னே மடக்கி உறங்குதியோ? கொல்பிடியே! மின்னே இடையாக வேற்கண்ணே வெல்படையா இன்னே எழுந்தே எரிபுயலாச் சீறுதியே! அந்நாள் அயர்ந்த அறியாமைக் குள்நாணி, நன்னர் உரிமைப்போர் நாட்டுதியே! செய்யபசும் பொன்னே! பொழுதும் புலர்ந்தேலோ ரெம்பாவாய்!


Friday, 26 December 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 21

நான் வேலைக்கு போன பொழுது என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்பார்கள்

 "பார்மசிஸ்ட்" என்று பதிலளிப்பேன்

"அப்படி என்றால்" 

 "மாத்திரை கொடுக்கிறது" 

பழைய ஆட்கள் மருந்து கலக்குற வேலை என்பார்கள். 

வெறுமனே மாத்திரை கொடுப்பதுதான் மருந்தாளுனரது வேலையா?! 

உண்மையில் மருந்தை வெறுமனை எடுத்துக் கொடுப்பவர் அல்ல, அவர் ஒரு ஆலோசகர் என்கிறது மருத்துவத்துறை. 

 மருந்தாளுநர்களால் வழங்கப்படும் நோயாளி ஆலோசனை என்பது, நோயாளிகளுக்கு அத்தியாவசியமான மருந்துத் தகவல்களை வழங்குதல், சிகிச்சை குறித்த அவர்களின் புரிதலை மேம்படுத்துதல் மற்றும் சிகிச்சையை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் மருந்தாளுநர்கள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் குறித்து, அவற்றின் நோக்கம், அளவு, உட்கொள்ளும் முறை மற்றும் சிகிச்சை காலம் போன்ற விரிவான மற்றும் தொடர்புடைய தகவல்களை நோயாளிகளுக்கு வழங்குகிறார்கள். அந்த மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், நோயாளியின் நிலையை நிர்வகிப்பதில் அதன் சாத்தியமான நன்மைகளையும் அவர்கள் விளக்குகிறார்கள்  என்று விரிவாக கூறுகிறது மருந்தியல்.

நோயாளிகளுக்கு கனிவோடு மருந்தினை எடுத்துக் கொடுத்து சாப்பிடும் முறை கூறி அனுப்புவது தான் மருந்தாளுனது பணி நான் வேலைக்கு சென்ற புதிதில் அதை சரியாக செய்தேனா என்பது சந்தேகம் தான். 

கூட்டம் நிறைய இருக்கும் போது பொறுமையாக சொல்லிக்  கொடுப்பது நம் கடமை. ஒரு சிலர் திரும்பத் திரும்ப புரியாமல் கேட்பார்கள் , குறிப்பாக முதியவர்கள் காதும் சரியாக கேட்காது, புரிந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள் அவர்களது நிலைமை புரிந்தால் கனிவாக எடுத்துக் கொடுப்பது பெரிய சிரமம் அல்ல. 

நான் வேலைக்கு போன புதிதில் ஒரு பாட்டி மருந்து சீட்டை நீட்டியவாறு திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் மருந்து கொடுத்த பிறகு அவர்கள் சீட்டை நீட்டி என்ன செய்வது என்று கேட்டார்கள். நான் கொஞ்சம் பொறுமை இழந்து அந்த சீட்டை பிய்த்து ஆறு வேலைக்கு சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்று கடுப்பாக சொல்லி விட்டேன். அந்த பாட்டியும் போய்விட்டார்கள். 

மறுநாள் என்னுடைய அம்மா "கொஞ்சம் பொறுமையாக வேலை செய்யப்பா, யாராவது புரியாமல் பேசினால் கோபப்படாதே" என்றார்கள். 

எனக்கு புரியவில்லை. அம்மா குளத்திற்கு குளிக்க சென்றபோது அங்கு ஒரு கிழவி, நம்ம ஆஸ்பத்திரிக்கு ஒரு சின்ன பையன் வேலைக்கு வந்திருக்கான், ஏதாவது கேட்டா சிடு சிடுன்னு சொல்றான். நான் மருந்து எப்படி சாப்பிடுவது என்று தான் கேட்டேன். அவன் இந்த சீட்டை பிச்சு 6 வேளைக்கு சாப்பிடுன்னு சொல்றான். 

இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் என் அம்மா அந்தக் கிழவியிடம் என் பையன் தான் அவன். தெரியாம  பேசிட்டான், மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்த பாட்டி சிரித்துக்கொண்டு என் பேரனா இருந்தாலும் இப்படித்தான் பேசுவான், எனக்கு வருத்தம் எல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லி இருக்கிறார்கள். 

என் அம்மாவும் என் பையனை கண்டித்து வைக்கிறேன் சொல்லிட்டு வந்துட்டாங்க. என் அம்மா வீட்டில் என்னிடம் சொல்லும் போது நானே இன்னும் கிழவி ஆகி போய் காது கேட்காமல் திரும்பத் திரும்ப கேட்டால், யாராவது என்னை திட்டினால் உன்னால் சகித்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார்கள் எனக்கு பட்டென்று உரைத்தது. நாம் சொல்லுகிற வார்த்தை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்று..

அதேபோல நான் ஒரு முக்கியமான வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு நோயாளி மருந்து சீட்டை நீட்டி சீக்கிரம் குடுங்க என்று அவசரப்படுத்தினார். 

நான் சீட்டு வாங்கி பார்த்தபோது ஒரே ஒரு மாத்திரை தான் எழுதப்பட்டிருந்தது. அதை எடுத்து கொடுத்துவிட்டு இந்த சுண்டைக்காய் மாத்திரை இப்படி அவசரப்படுத்தினீங்க என்றேன். அந்த நோயாளி அதென்ன சுண்டைக்காய் மாத்திரை என்று கோபமாய் திட்டி விட்டு மருத்துவரிடம் போய் சொல்லிவிட்டார்.

 மருத்துவர் கோபண்ணா என்னை அழைத்து விசாரித்து அறிவுரை கூறினார். உங்களுக்கு அந்த மாத்திரை விலை குறைவானதாக இருக்கலாம், எளிமையானதாக கூட இருக்கலாம் ஆனால் அவருக்கு அந்த நேரத்தில் மிகவும் அத்தியாவசியமானது. அந்த பொறுப்பை உணர்ந்து பேசுங்கள் என்று கண்டித்து அனுப்பினார் அப்போதுதான் எனக்கு அது உரைத்தது. சில நேரங்களில் மாத்திரை மனோதத்துவ ரீதியில் கூட வேலை செய்யும் விட்டமின் மாத்திரை கூட சொல்கிற விதமாய் சொன்னால், அது மிகப்பெரிய உயிர் காக்கும் மருந்து போல நோயாளிக்கு நம்பிக்கை கொடுத்து உதவி செய்யும். ஆதலால் மருந்தாளுனருடைய பணி என்பது மிக நுட்பமானது கவனமாக பேச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். 

வேலைக்கு சேர்ந்த புதிதில் நிறைய குசும்பான வேலைகள் செய்வதுண்டு. ஒரு நோயாளி ஆங்கிலத்தில் ஹவ் மெனி டைம்ஸ் சாப்பிடணும் என்று கேட்டார் .

அதில் ஒன்றும் தவறில்லை. நான் கொழுப்பாக லத்தீனில் "டெர் டை சொமண்டம், போஸ்ட் சிபாஸ்" என்றேன். அதேபோல சில நேரங்களில் வேண்டுமென்றே மலையாளத்தில் ஈ குலுசை மூணு வேள ஊனு கழிஞ்ச பின்னே என்று சொல்வதுண்டு, இல்லாவிட்டால் இந்தியில் சுபே துபே சாம்கோ தீன் டைம் கானே கா பாத் என்று சொல்வதுண்டு அல்லது வேண்டும் என்று ஸ்லாங் மாற்றி சென்னை தமிழிலோ, நெல்லை தமிழிலோ, கொங்கு தமிழிலோ பேசுவதுண்டு. அந்தப் பகுதியில் இலங்கையில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள் இலங்கைத் தமிழிலே பேசுவார்கள் நானும் அதே ஸ்லாங்கில் பேசுவதுண்டு. இந்த சேட்டைகள் எல்லாம் எப்படியோ மருத்துவரின் காதுக்கு போய் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை எல்லாம் நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலை செய்யுங்கள் என்று சொல்லுவார். அதெல்லாம் தவறு என்று உணர்ந்து ஒழுங்காக நோயாளிகளிடம் பேச ஆரம்பித்தேன். இருந்தாலும் சிரித்துக் கொண்டு பேசுவதாலும், கனிவாக பேசுவதாலும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.

தற்பொழுது 24 மணி நேர சேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த காலத்திலும் எப்போது நோயாளிகள் வந்தாலும் சென்று அவர்களுக்கு முதலுதவி அல்லது தேவையான உதவி செய்ததால் அதனால் மக்கள் மிகவும் அன்பாக இருப்பார்கள்.

நிறைய வருடங்கள் கழித்து அந்த ஊர் பக்கமாக இரு சக்கர வாகனத்தில் சென்று வரும்போது எரிபொருள் இல்லாமல் வாகனம் நின்று விட்டது.  அருகில் உள்ள கடைப்பக்கம் சென்று வண்டியை நிறுத்திவிட்டு பெட்ரோல் வாங்கி வரலாம் என்று வண்டியை தள்ளிக் கொண்டு வந்தேன். அந்த கடையில் உள்ளவர்கள் என்னை பார்த்தவுடன் வணக்கம் செலுத்தி என்ன சார் நலமா இருக்கீங்களா, என்ன வண்டியை தள்ளிட்டு வர்றீங்க என்று கேட்டார்கள் பெட்ரோல் தீர்ந்து விட்டது என்றவுடன் உடனே அந்தப் பக்கம் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து பெட்ரோலை பிடித்து எனது வாகனத்தில் ஊற்றினார்கள்.

எனக்கு ஆச்சரியமாய் போய்விட்டது என்னை தெரிகிறதா என்று கேட்டேன் என்ன சார் கார்த்திகேயன் சார் தானே மறக்க முடியுமா இந்த வேலை பார்த்த போது எல்லோருக்கும் நல்ல உதவி செய்தீர்களே என்று சொன்னார்கள் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய பாராட்டு சான்றிதழாக அதை நினைக்கிறேன்.

அந்த காலத்தில் மாத்திரைகள் எல்லாம் டப்பாவில் உதிரிகளாக அடைக்கப்பட்டு வரும் அதாவது லூஸ் பேக்கிங் மாத்திரைகள் கையில் கொடுப்போம். 

ஒரு வயதான பாட்டி ஏன்பா இந்த மாத்திரை கையில் கொடுக்குறீங்களே கைல எவ்வளவு அழுக்கோடு நாங்கள் வரோம் வேலைக்கு போயிட்டு வரோம் அப்படியே வெறுங்கையில் கொடுத்தால் சரியா என்று கேட்டார்கள். 

நான் அரசாங்கத்தில் மாத்திரையை மடிக்க காகிதம் எல்லாம் தருவதில்லை என்றேன். மறுநாளைக்கு அந்த அம்மா ஏராளமான பழைய புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கொடுத்தார். இனிமேல் காகிதத்தில் மடித்து கொடுக்க ஆரம்பித்தேன். இதைப் பார்த்ததும் ஆளாளுக்கு பழைய புத்தகங்களை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். ஸ்டிரிப் பேக்கிங் வரும் வரை நான் காகிதத்தில் தான் மடித்துக் கொடுத்துள்ளேன். இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும் சரியான அனுகுமுறை என்று கருதினேன்.

அதேபோல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மாத்திரையை மருந்துகளை பிரித்து சொல்லித்தான் கொடுப்பதென்ற வழக்கத்தை கடைசி வரை நடைமுறைப்படுத்தினேன். ஒருமுறை மிகவும் வயதான ஒருவர் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். "I wholeheartedly bless you, because you are kind enough to the patients, especially elders"

அந்த ஆசீர்வாதத்தை என் வாழ்நாள் சாதனையாகவே கருதுகிறேன் உண்மையில் அவரைக் கண்டால் என்னுடன் பணிபுரிந்தவர்கள் எரிச்சல் ஆவார்கள். ஆனால் நான் பொறுமையாகவே அவரை கையாண்டேன். அவர் மட்டுமல்ல அவரை போல ஏராளமான மக்களை சந்தித்ததுண்டு. 

எனக்கு என் தந்தையார் சொன்ன அறிவுரை இதுதான். 

"நீ எங்கு சென்றாலும் உனக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ, அதை மட்டும் நீ செய்தால் போதுமானது. அதற்கு மேல்  உன் சக்திக்கு மேல் ஒன்றும் சிரமப்பட வேண்டாம்" 

செந்தமிழ்ப் பாவை 10

மனம்வீசி சோலையாய், நல் விளைநிலமாய் திகழ்ந்த தமிழ்மண்ணில், ஆரியமொழி களையாய் வேரூன்றி வளர்ந்ததால் தமிழ் மொழியின் தொன்மைக்கும், பெருமைக்கும் இடையூறாக உள்ளது. வாள் போன்ற கூர்மையான, ஒளி பொருந்திய அல்லது கவர்ச்சியான கண்கள் கொண்ட வளையனிந்த ஆரணங்கே, அரும் முயற்சிகள் செய்து காக்க போராடாமல் போனால், தமிழும் வீழும், தமிழினமும் வீழும். அதற்கு இடந்தருதல் வாய்மை தானா, இதை மறந்து நித்திரை கொள்ளலாமா, விழித்தெழுவாய் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார். 

தமிழ்மொழியை களைகளைப் போல வேரூன்றி, முளைத்து நிற்கும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி, அதை செழிக்கச் செய்ய வேண்டும், இல்லையென்றால் தமிழ் வீணாகிவிடும் என்பதாகும். இது தமிழ் மொழியின் பெருமையையும், அதைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது இப்பாடல் .

** வரிகளின் பொருள்**

களையாய்த் தமிழ்வயலுள்: தமிழ் என்னும் வயலில் களைகளைப் போல (தீய சக்திகள்/போலி மொழிகள்)

காலிடவேர் ஊன்றி: வேரூன்றி (ஆழமாகப் பரவி)

முளையாக் கிடக்கின்ற: முளைத்துக்கொண்டிருக்கும்

மூங்கை மொழியை: மூங்கில் போல வலிமையற்ற/அழிந்துபோகக்கூடிய மொழியை (தமிழைக் குறிக்கிறது)

உளையாப் பெருமுயல்வால்: அரும்பெரும் முயற்சியால்

ஊழ்த்துத் தமிழை: தமிழை வளர்த்தெடுக்க வேண்டும்.

விளையாமற் போவோமேல் வீணானோம்; வீழ்ந்தோம்!: அப்படிச் செய்யாமல் போனால், தமிழ் வீணாகிவிடும், நாம் அழிந்துவிடுவோம்! 

** சுருக்கமாக இதன் பொருள்**: தமிழ் வயலில் களைகள் போலப் பரவி, வேரூன்றி, முளைத்து நிற்கும் அழிவு சக்திகளிடமிருந்து தமிழைப் பாதுகாக்க, பெரும் முயற்சி செய்து அதைக் காக்க வேண்டும், இல்லையேல் தமிழ் அழிந்துவிடும், நாமும் அழிவோம் என்பதே இப்பாடலின் சாராம்சம். இது தமிழைப் போற்றும், பாதுகாக்கும் ஒரு புரட்சிகரமான வரிகளாகும். 

***********************

களையாய்த் தமிழ்வயலுள் காலிடவேர் ஊன்றி

முளையாக் கிடக்கின்ற மூங்கை மொழியை

உளையாப் பெருமுயல்வால் ஊழ்த்துத் தமிழை

விளையாமற் போவோமேல் வீணானோம்; வீழ்ந்தோம்!

கிளைபரப்பி நின்ற கிளர்தமிழைக் கீழோர்

களையமுற் பட்டாங்கே கள்ளியினை ஊன்ற

வளையாய்! இடந்தரலும் வாய்மையோ? வாட்கண்

இளையாய் உறங்கேல் எழுகேலோ ரெம்பாவாய்! 10

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...