சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 2 December 2025

புதுக்கோட்டையில் ஒரு அணை..

இயற்கை தந்த அருள் கொடையான மழை நீரை குளங்கள், ஏரிகள், ஆறுகள், மூலமாக அணைகள் கட்டி நீரை தேக்கி வைப்பதன் மூலம் மனித குலம் வாழ்ந்து வருகிறது. விவசாயம், குடிநீர் ஆதாரம் என அனைத்து அடிப்படை தேவைக்குமான நீரை நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கிணறுகள் ஆகியவற்றின் மூலமாக மனிதன் நம்பியே வாழ்ந்து வருகிறான்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய ஆறுகளோ அணைகளோ கிடையாது .காவிரி ஆற்றின் ஒரு கிளை பாசன வாய்க்கால் மட்டும் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் தாலுகாவில் ஒரு பகுதியில் மட்டும் செல்கிறது. 
மற்றபடி வெள்ளாறு அக்னி ஆறு குண்டாறு என சிற்றாறுகள் மட்டும் ஓடுகின்றன. அவையும் பெருமழை வந்தால் மட்டுமே நீர் பார்க்கும் சிற்றாறுகள். 
புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்த காலத்தில் சிறுசிறு தடுப்பணைகள் ஆங்காங்கே கட்டப்பட்டன. அவ்வாறு புதுக்கோட்டை அருகே 1933ல் தான் ஹோல்ஸ் வேர்ட் அணை கட்டப்பட்டது. அதை அணை என்று சொல்ல முடியாது. சிறு தடுப்பணை மட்டுமே. குண்டாறும், வெள்ளாறும் இணைந்து ஓடக்கூடிய ஒரு சிற்றாற்றில் கடையக்குடி அருகே தடுப்பணை மூலமாக நீர் தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். 


11.11. 1933 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது இந்த ஹோல்ஸ்வொர்த் அணை. 

பொறியாளர் ரங்கசாமி, உதவி பொறியாளர் நடராஜர் சாஸ்திரிகள் மேற்பார்வையாளர் கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் பூவரச குடியை சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் அருணாசலம் அம்பலக்காரர் குத்தகைதாரர் மூலமாக இந்த தடுப்பணை கட்டப்பட்டது.  இங்கு பொதுமக்கள் வந்து பொழுதுபோக்க சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது.
கஜா புயல் வந்த போது அங்கிருந்த சிறிய கட்டிடங்களும் பூங்காவும் சேதம் அடைந்த பிறகு, பூங்கா இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் போனது தற்பொழுது புதரும், கொடிகளும் மண்டி போய் பாழடைந்த நிலையில் உள்ளது. 
அதைவிட கொடுமை என்னவென்றால் மொத்த பரப்புமே ஆகாயத்தாமரை என்று அழைக்கப்படும் ஒரு விதமான நீர்த்தாவரங்கள் பறந்து கிடக்கின்றது. நீர் நிற்பதற்கான அடையாளமே தெரியவில்லை. துர்நாற்றமாக இருந்தது. அங்கிருந்தவர்களிடம் என்ன சாக்கடை போல நாற்றம் அளிக்கிறது என்று கேட்டேன். சந்தேகமே வேண்டாம், இது முழுக்க முழுக்க சாக்கடை நீர் தான். புதுக்கோட்டை நகர் பகுதியில் இருந்து குண்டாறு மூலமாக வரக்கூடிய சாக்கடை தான் நிரம்பி இருக்கிறது என அங்குள்ளவர்கள் கூறினர். 

எங்கெங்கோ வரும் புயல் மழை இங்கு வரவில்லையே என்று அங்கிருந்த ஒருத்தர் வருத்தப்பட்டார். 
என்ன இவ்வாறு வருத்தப்படுகிறீர்கள் என்று கேட்டேன். 
அப்படி மழை வெள்ளம் வந்தாலாவது இந்த ஆகாயத்தாமரை குப்பைகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு ஓரளவு சுத்தமாக விடுமே என்று கூறினார். 
ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை இருக்கும் என்றால் அவருடைய கவலை இவ்வாறு இருக்கிறது. 
நீதிபதி ஒருவர் இங்கு வந்தபோது இந்த தடுப்பணையின் நிலையைப் பார்த்து வருத்தப்பட்டு சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு வருவதற்கு முயற்சி செய்ததாக கூறினார்கள். இன்று விடிவு காலம் வரவில்லை .
அந்த காலத்தில் சிரமப்பட்டு கட்டப்பட்ட இந்த அணை, நீர் பாசன முறை எல்லாம் தூர்ந்து போய் உள்ளன அரசும், அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வார்களா?!... 

 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...