சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 26 December 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 21

நான் வேலைக்கு போன பொழுது என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்பார்கள்

 "பார்மசிஸ்ட்" என்று பதிலளிப்பேன்

"அப்படி என்றால்" 

 "மாத்திரை கொடுக்கிறது" 

பழைய ஆட்கள் மருந்து கலக்குற வேலை என்பார்கள். 

வெறுமனே மாத்திரை கொடுப்பதுதான் மருந்தாளுனரது வேலையா?! 

உண்மையில் மருந்தை வெறுமனை எடுத்துக் கொடுப்பவர் அல்ல, அவர் ஒரு ஆலோசகர் என்கிறது மருத்துவத்துறை. 

 மருந்தாளுநர்களால் வழங்கப்படும் நோயாளி ஆலோசனை என்பது, நோயாளிகளுக்கு அத்தியாவசியமான மருந்துத் தகவல்களை வழங்குதல், சிகிச்சை குறித்த அவர்களின் புரிதலை மேம்படுத்துதல் மற்றும் சிகிச்சையை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் மருந்தாளுநர்கள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் குறித்து, அவற்றின் நோக்கம், அளவு, உட்கொள்ளும் முறை மற்றும் சிகிச்சை காலம் போன்ற விரிவான மற்றும் தொடர்புடைய தகவல்களை நோயாளிகளுக்கு வழங்குகிறார்கள். அந்த மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், நோயாளியின் நிலையை நிர்வகிப்பதில் அதன் சாத்தியமான நன்மைகளையும் அவர்கள் விளக்குகிறார்கள்  என்று விரிவாக கூறுகிறது மருந்தியல்.

நோயாளிகளுக்கு கனிவோடு மருந்தினை எடுத்துக் கொடுத்து சாப்பிடும் முறை கூறி அனுப்புவது தான் மருந்தாளுனது பணி நான் வேலைக்கு சென்ற புதிதில் அதை சரியாக செய்தேனா என்பது சந்தேகம் தான். 

கூட்டம் நிறைய இருக்கும் போது பொறுமையாக சொல்லிக்  கொடுப்பது நம் கடமை. ஒரு சிலர் திரும்பத் திரும்ப புரியாமல் கேட்பார்கள் , குறிப்பாக முதியவர்கள் காதும் சரியாக கேட்காது, புரிந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள் அவர்களது நிலைமை புரிந்தால் கனிவாக எடுத்துக் கொடுப்பது பெரிய சிரமம் அல்ல. 

நான் வேலைக்கு போன புதிதில் ஒரு பாட்டி மருந்து சீட்டை நீட்டியவாறு திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் மருந்து கொடுத்த பிறகு அவர்கள் சீட்டை நீட்டி என்ன செய்வது என்று கேட்டார்கள். நான் கொஞ்சம் பொறுமை இழந்து அந்த சீட்டை பிய்த்து ஆறு வேலைக்கு சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்று கடுப்பாக சொல்லி விட்டேன். அந்த பாட்டியும் போய்விட்டார்கள். 

மறுநாள் என்னுடைய அம்மா "கொஞ்சம் பொறுமையாக வேலை செய்யப்பா, யாராவது புரியாமல் பேசினால் கோபப்படாதே" என்றார்கள். 

எனக்கு புரியவில்லை. அம்மா குளத்திற்கு குளிக்க சென்றபோது அங்கு ஒரு கிழவி, நம்ம ஆஸ்பத்திரிக்கு ஒரு சின்ன பையன் வேலைக்கு வந்திருக்கான், ஏதாவது கேட்டா சிடு சிடுன்னு சொல்றான். நான் மருந்து எப்படி சாப்பிடுவது என்று தான் கேட்டேன். அவன் இந்த சீட்டை பிச்சு 6 வேளைக்கு சாப்பிடுன்னு சொல்றான். 

இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் என் அம்மா அந்தக் கிழவியிடம் என் பையன் தான் அவன். தெரியாம  பேசிட்டான், மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்த பாட்டி சிரித்துக்கொண்டு என் பேரனா இருந்தாலும் இப்படித்தான் பேசுவான், எனக்கு வருத்தம் எல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லி இருக்கிறார்கள். 

என் அம்மாவும் என் பையனை கண்டித்து வைக்கிறேன் சொல்லிட்டு வந்துட்டாங்க. என் அம்மா வீட்டில் என்னிடம் சொல்லும் போது நானே இன்னும் கிழவி ஆகி போய் காது கேட்காமல் திரும்பத் திரும்ப கேட்டால், யாராவது என்னை திட்டினால் உன்னால் சகித்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார்கள் எனக்கு பட்டென்று உரைத்தது. நாம் சொல்லுகிற வார்த்தை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்று..

அதேபோல நான் ஒரு முக்கியமான வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு நோயாளி மருந்து சீட்டை நீட்டி சீக்கிரம் குடுங்க என்று அவசரப்படுத்தினார். 

நான் சீட்டு வாங்கி பார்த்தபோது ஒரே ஒரு மாத்திரை தான் எழுதப்பட்டிருந்தது. அதை எடுத்து கொடுத்துவிட்டு இந்த சுண்டைக்காய் மாத்திரை இப்படி அவசரப்படுத்தினீங்க என்றேன். அந்த நோயாளி அதென்ன சுண்டைக்காய் மாத்திரை என்று கோபமாய் திட்டி விட்டு மருத்துவரிடம் போய் சொல்லிவிட்டார்.

 மருத்துவர் கோபண்ணா என்னை அழைத்து விசாரித்து அறிவுரை கூறினார். உங்களுக்கு அந்த மாத்திரை விலை குறைவானதாக இருக்கலாம், எளிமையானதாக கூட இருக்கலாம் ஆனால் அவருக்கு அந்த நேரத்தில் மிகவும் அத்தியாவசியமானது. அந்த பொறுப்பை உணர்ந்து பேசுங்கள் என்று கண்டித்து அனுப்பினார் அப்போதுதான் எனக்கு அது உரைத்தது. சில நேரங்களில் மாத்திரை மனோதத்துவ ரீதியில் கூட வேலை செய்யும் விட்டமின் மாத்திரை கூட சொல்கிற விதமாய் சொன்னால், அது மிகப்பெரிய உயிர் காக்கும் மருந்து போல நோயாளிக்கு நம்பிக்கை கொடுத்து உதவி செய்யும். ஆதலால் மருந்தாளுனருடைய பணி என்பது மிக நுட்பமானது கவனமாக பேச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். 

வேலைக்கு சேர்ந்த புதிதில் நிறைய குசும்பான வேலைகள் செய்வதுண்டு. ஒரு நோயாளி ஆங்கிலத்தில் ஹவ் மெனி டைம்ஸ் சாப்பிடணும் என்று கேட்டார் .

அதில் ஒன்றும் தவறில்லை. நான் கொழுப்பாக லத்தீனில் "டெர் டை சொமண்டம், போஸ்ட் சிபாஸ்" என்றேன். அதேபோல சில நேரங்களில் வேண்டுமென்றே மலையாளத்தில் ஈ குலுசை மூணு வேள ஊனு கழிஞ்ச பின்னே என்று சொல்வதுண்டு, இல்லாவிட்டால் இந்தியில் சுபே துபே சாம்கோ தீன் டைம் கானே கா பாத் என்று சொல்வதுண்டு அல்லது வேண்டும் என்று ஸ்லாங் மாற்றி சென்னை தமிழிலோ, நெல்லை தமிழிலோ, கொங்கு தமிழிலோ பேசுவதுண்டு. அந்தப் பகுதியில் இலங்கையில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள் இலங்கைத் தமிழிலே பேசுவார்கள் நானும் அதே ஸ்லாங்கில் பேசுவதுண்டு. இந்த சேட்டைகள் எல்லாம் எப்படியோ மருத்துவரின் காதுக்கு போய் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை எல்லாம் நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலை செய்யுங்கள் என்று சொல்லுவார். அதெல்லாம் தவறு என்று உணர்ந்து ஒழுங்காக நோயாளிகளிடம் பேச ஆரம்பித்தேன். இருந்தாலும் சிரித்துக் கொண்டு பேசுவதாலும், கனிவாக பேசுவதாலும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.

தற்பொழுது 24 மணி நேர சேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த காலத்திலும் எப்போது நோயாளிகள் வந்தாலும் சென்று அவர்களுக்கு முதலுதவி அல்லது தேவையான உதவி செய்ததால் அதனால் மக்கள் மிகவும் அன்பாக இருப்பார்கள்.

நிறைய வருடங்கள் கழித்து அந்த ஊர் பக்கமாக இரு சக்கர வாகனத்தில் சென்று வரும்போது எரிபொருள் இல்லாமல் வாகனம் நின்று விட்டது.  அருகில் உள்ள கடைப்பக்கம் சென்று வண்டியை நிறுத்திவிட்டு பெட்ரோல் வாங்கி வரலாம் என்று வண்டியை தள்ளிக் கொண்டு வந்தேன். அந்த கடையில் உள்ளவர்கள் என்னை பார்த்தவுடன் வணக்கம் செலுத்தி என்ன சார் நலமா இருக்கீங்களா, என்ன வண்டியை தள்ளிட்டு வர்றீங்க என்று கேட்டார்கள் பெட்ரோல் தீர்ந்து விட்டது என்றவுடன் உடனே அந்தப் பக்கம் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து பெட்ரோலை பிடித்து எனது வாகனத்தில் ஊற்றினார்கள்.

எனக்கு ஆச்சரியமாய் போய்விட்டது என்னை தெரிகிறதா என்று கேட்டேன் என்ன சார் கார்த்திகேயன் சார் தானே மறக்க முடியுமா இந்த வேலை பார்த்த போது எல்லோருக்கும் நல்ல உதவி செய்தீர்களே என்று சொன்னார்கள் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய பாராட்டு சான்றிதழாக அதை நினைக்கிறேன்.

அந்த காலத்தில் மாத்திரைகள் எல்லாம் டப்பாவில் உதிரிகளாக அடைக்கப்பட்டு வரும் அதாவது லூஸ் பேக்கிங் மாத்திரைகள் கையில் கொடுப்போம். 

ஒரு வயதான பாட்டி ஏன்பா இந்த மாத்திரை கையில் கொடுக்குறீங்களே கைல எவ்வளவு அழுக்கோடு நாங்கள் வரோம் வேலைக்கு போயிட்டு வரோம் அப்படியே வெறுங்கையில் கொடுத்தால் சரியா என்று கேட்டார்கள். 

நான் அரசாங்கத்தில் மாத்திரையை மடிக்க காகிதம் எல்லாம் தருவதில்லை என்றேன். மறுநாளைக்கு அந்த அம்மா ஏராளமான பழைய புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கொடுத்தார். இனிமேல் காகிதத்தில் மடித்து கொடுக்க ஆரம்பித்தேன். இதைப் பார்த்ததும் ஆளாளுக்கு பழைய புத்தகங்களை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். ஸ்டிரிப் பேக்கிங் வரும் வரை நான் காகிதத்தில் தான் மடித்துக் கொடுத்துள்ளேன். இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும் சரியான அனுகுமுறை என்று கருதினேன்.

அதேபோல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மாத்திரையை மருந்துகளை பிரித்து சொல்லித்தான் கொடுப்பதென்ற வழக்கத்தை கடைசி வரை நடைமுறைப்படுத்தினேன். ஒருமுறை மிகவும் வயதான ஒருவர் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். "I wholeheartedly bless you, because you are kind enough to the patients, especially elders"

அந்த ஆசீர்வாதத்தை என் வாழ்நாள் சாதனையாகவே கருதுகிறேன் உண்மையில் அவரைக் கண்டால் என்னுடன் பணிபுரிந்தவர்கள் எரிச்சல் ஆவார்கள். ஆனால் நான் பொறுமையாகவே அவரை கையாண்டேன். அவர் மட்டுமல்ல அவரை போல ஏராளமான மக்களை சந்தித்ததுண்டு. 

எனக்கு என் தந்தையார் சொன்ன அறிவுரை இதுதான். 

"நீ எங்கு சென்றாலும் உனக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ, அதை மட்டும் நீ செய்தால் போதுமானது. அதற்கு மேல்  உன் சக்திக்கு மேல் ஒன்றும் சிரமப்பட வேண்டாம்" 

6 comments:

  1. அருமையான ப(திவு)ணி! இன்றைய நிலையில் தேவையான ஒன்று. (யாரிடமும் இல்லை!)

    ReplyDelete
  2. Essential and Ethical advice to the pharmacy professional. narrated with true incidents by the author. V r expecting topics and just like this type of writings in future. Best wishes. Keep going like this.

    ReplyDelete
  3. உண்மை கார்த்தி நண்பா.. நானும் வேலைக்கு சேர்ந்தபோது இதே போல் நிறைய சேட்டைகள் செய்துள்ளேன்... அப்போது நாம் மிகவும் சிறிய வயதில் பணியில் சேர்ந்ததால், அந்த வயதிருக்கு உள்ள குசும்புகள் இருந்தது.. நாளைடைவில் நான் வாழ்க்கை அனுபவத்தை கட்றபின் நம்மை திருத்திக்கொண்டு சமூகத்திருக்கு என்னால் முடிந்த சேவைகள் செய்து, நிறைய ஆசீர்வாதம் பெற்றேன்.. நிறைய அனுபவங்கள் மறந்தும் போய்விட்டது. உங்கள் எழுத்துக்கள் நிறையவற்றை நினைவுவுக்கு கொண்டுவருகிறது. மிகவும் நன்றி நண்பா. தங்கள் கட்டுரைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள் 🥰🌹❤️

    ReplyDelete
  4. தங்களின் பதிவு எனது மருந்தாளுநர் பணியை கண் முன் நிறுத்தியது! நம் பணி செய்த ஊர் மக்களின் வாழ்த்துக்களே நமக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த பரிசு!

    ReplyDelete
  5. Excellent & prifessional ethics explained in a simple manner that all pharmacist should follow niwadays.

    ReplyDelete
  6. அருமையான பதிவு

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...