சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 4 December 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 18

" உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வனென்று அப்பால் நாற்கூற்றே மருந்து" 

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.- திருக்குறள். (950)

"மருந்துகள் மட்டுமே சுகாதாரப் பராமரிப்பை வழங்க போதுமானதாக இல்லை. இருப்பினும், பகுத்தறிவுடன் பயன்படுத்தப்பட்டால், அவை மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் மீட்டெடுப்பதிலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்திய மருந்தியல் தொழில் மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.” -மருந்துக் கொள்கை- 1986

மருத்துவர்-நோயாளி சங்கிலியில் ஒரு மருந்தாளுனர் ஒரு முக்கிய இணைப்பாகும். மருந்து அறிவைப் பரப்புவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். சுகாதாரப் பராமரிப்பில் திறமையான நபராக மருந்தாளுநர்களின் பங்கை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது மருந்தகம் என்பது நாட்டின் சுகாதாரப் பராமரிப்பில் நேரடியாக தொடர்புடையது என்பதால் அது ஒரு தனித்துவமான தொழிலாகும்.

  சர்வதேச மருந்தக சமூகத்தில் மருந்தாளுநர் "மருந்துகளின் ஆலோசகர்" என்று கருதப்படுகிறார். மருத்துவர் மருந்துச் சீட்டை எழுதினால் போதும் . மக்கள் பெரும்பாலும் மருந்தாளுநரைச் சார்ந்து ஆலோசனை பெறுவதையே நம்பியிருக்கிறார். சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் மருந்தாளுநரின் பங்கு “மேலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது –

மருந்தாளுநரின் அவசியம் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புக்கு தற்செயலான தேவை அல்ல. அது ஒரு வரலாற்றுத் தேவை என்பதை பல்வேறு வரலாற்று பின்னணிகளோடு காணலாம். 

நான் இயக்குனரகத்தில் மருந்து கிடங்கு அலுவலராக பணியாற்றியபோது இயக்குனரின் உத்தரவின்படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து பயன்பாடு. அதனுடைய பராமரிப்பு  போன்றவற்றை பார்வையிட்டு மருந்தாளுனர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்திடுமாறு பணித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனேகமாக எல்லா மாவட்டங்களிலும், 300க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டுள்ளேன். அதேபோல எல்லா மாவட்டங்களிலும் மருந்தாளுனர்களுக்கு மாவட்ட அளவில் புத்தாக்க பயிற்சி அளித்து வந்தேன். 

துரதிஷ்டவசமாக நான் பார்வையிட்ட போது நான் கண்ட சில விஷயங்களை இங்கு பரிமாறினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிய மருந்தாளுனர் பணியிடமே உருவாக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை  கண்டேன். அதேபோல ஒரு மாவட்டத்தில் நான் பார்வையிட்டபோது மூன்றே மூன்று மருந்தாளுநர்கள் மட்டுமே பணியில் இருந்தார்கள். மீதி உள்ள அனைத்து இடங்களிலும் மருந்தாளுனர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. மற்ற பணியாளர்களைக் கொண்டு மருந்து கொள்முதல், விநியோகித்தல் போன்ற மருந்தகம் தொடர்பான அனைத்து வேலைகளையும் செயல்படுத்தி வந்தனர். 

இதுதான் பொதுவாக தமிழகமெங்கும் உள்ள நிலை

மருந்தாளுனர் பதவி என்பது அரசால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மை மருந்தாளுநர்கள் மட்டுமல்லாது, மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் அரசுக்கும் தெரியாமல் போனது துரதிஷ்டவசமே. மருந்தியல் சட்டம் 1948 ஏன் உருவானது மருந்தாளுநர் பதவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். 

இந்திய சுதந்திரத்திற்கு முன்னதாக இந்தியாவில் மருந்துகளின் தரத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில், மருந்துகளில் பெரிய அளவில் கலப்படம் செய்யப்பட்டது, 1926 ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற மிகப்பெரிய (Quinine scam) குயினின் மோசடி உச்சத்தை எட்டியது, மேலும் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 4, 1928 அன்று சட்டமன்றத்தின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரான லெப்டினன்ட் கர்னல் எச்.ஏ.ஜே. கிட்லி, போலி மற்றும் கலப்பட மருந்துகளின் அச்சுறுத்தல், மற்றும் தகுதியற்ற நபர்களால் விநியோகிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார், மேலும் பிரிட்டிஷ் உணவு மற்றும் மருந்துச் சட்டம் மற்றும் மருந்தகம் மற்றும் விஷச் சட்டத்தை வெளியிட பரிந்துரைத்தார். மருந்தகத் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான முழு விஷயத்தையும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக 1930 ஆம் ஆண்டு இந்திய அரசு விசாரணைக் குழு குழுவை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் குழு மற்றவற்றுடன் பின்வரும் மூன்று முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது.

1. மருந்துகளின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் (மருந்துகள்.) ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல்

2. மருந்துகளின் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துதல்.

3. மருந்தகத் தொழில் மற்றும் நடைமுறையை ஒழுங்குபடுத்துதல்.

இந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான சட்டத்தை குழு பரிந்துரைத்தது.

இருப்பினும், மக்களின் நல்வாழ்வுக்கான மருந்துகளின் தரக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது என்று இந்திய அரசு கருதியது, மேலும் பிற பரிந்துரைகள் பின்னர் செயல்படுத்தப்படுகிறது என்று கருதியது.

இந்தத் தொடரில் மருந்தகத் துறையை ஒழுங்குபடுத்தும் பல்வேறு சட்டங்கள்

* மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940,

* மருந்தகச் சட்டம் 1948,

* மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரம்) சட்டம், 1954

* போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985

* மருந்து மற்றும் கழிப்பறை தயாரிப்புகள் (கலால் வரிகள்) சட்டம், 1956

* மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை 1995 (அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ்) அறிமுகப்படுத்தப்பட்டது.

 #மருந்தியல் சட்டம் 1948 இன் படி, இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பில் மருந்தாளுநர் மட்டுமே திறமையான நபர் என பரிந்துரைக்கப்பட்டு கல்வி திட்டம் உருவாக்கப்பட்டது. 

உலகில் பல்வேறு நாடுகளில் பட்டப்படிப்பு இருக்கின்ற நேரத்தில், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அதனுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏராளமான பட்டதாரிகளை உருவாக்க இயலாது என்பதால் மருந்தியல் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் மூன்றாண்டு கல்வித்திட்டத்தை இரண்டு ஆண்டு காலத்திற்குள் கல்வி நேரத்தை  அதற்கேற்றாற் போல் அதிகப்படுத்தியும் மூன்று மாத பயிற்சியோடு பட்டய படிப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி அனைத்து மருத்துவ நிலையங்களிலும், மருந்துக்கடைகளிலும் மருந்தாளுநர் மட்டுமே மருந்தினை கையாள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

தமிழ்நாடு மாநில அரசு சேவைகளில், மருத்துவக் குறியீட்டில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வெளிநோயாளர் பிரிவுக்குத் தேவையான பணியாளர்கள் ஒவ்வொரு வழக்கின் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார்கள், அதாவது மருந்தாளுநர்கள்: - ஒவ்வொரு 100 வெளிநோயாளிகளுக்கும் ஒருவர் மற்றும் ஒவ்வொரு 75 பேருக்கும் ஒரு கூடுதல் மருந்தாளர் என ஆணையிடப்பட்டது. 

அப்படி  விகிதாச்சாரப்படி மருந்தாளுநர்கள் பணியிடங்கள், வளர்ந்து வரும் தேவைக்கேற்ப உருவாக்கப்படாமல் இருக்கின்ற மருந்தாளுனர்களே கூடுதல் பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் காலி பணியிடங்களை மற்ற மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு அரசு மருந்தகப்பணிகளை கையாளுகிறது என்றால், அரசு தான் உருவாக்கிய மருந்தியல் சட்டத்தை தானே நடைமுறைப்படுத்தாமல் தவறான முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது என்றுதானே அர்த்தம். 

இந்தியா, அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே, WHO ஆல் அத்தியாவசிய மருந்துகளை அடையாளம் காணப்பட்ட மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்குதல், தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகளின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஏழைகள் எளிதாக அணுகக்கூடிய வகையில், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் அனைத்து இயந்திர உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை சிகிச்சை பொருட்களை வழங்கியது. தமிழ்நாட்டில் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்காக மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், இயந்திர உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள் கோடிகள் செலவிடப்பட்டன.

  இவ்வளவு சிறப்பாக மருத்துவ சேவைகள் தமிழகத்தில் வளர்ந்து வந்த போதிலும் மருந்தாளுனர்களுக்கு மட்டும் உரிய முக்கியத்துவம் தராமல் ஓரவஞ்சனையோடு அரசு செயல்படுவது என்பது மிக்க வருத்தத்தை தருகிறது. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...