சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 11 December 2025

மகா கவி பாரதி பிறந்த நாள்.


சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 டிசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921)

"மாற்றம் ஒன்றே மாறாதது" என்கிற சொற்றொடர் மிகவும் அற்புதமானது அறிவியல்பூர்வமானது, அறிவுபூர்வமானது. ஏனெனில் உலகில் வாழும் பெரும்பாலானோர் தங்களுடைய நிலையே நிரந்தரமானது என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், உலவி கொண்டிருக்கிறார்கள். 

ஒரு தலைவரைப் பற்றியோ, அல்லது கவிஞரைப் பற்றியோ, கலைஞரைப் பற்றியோ விமர்சனம் செய்யும் போது, ​​அவரவர் சார்ந்திருக்கும் இயக்கத்தையோ, கொள்கையையோ, எண்ணத்தையோ கொண்டு தான் பார்க்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். தாங்கள் விமர்சனம் செய்யக்கூடிய தலைவர் வாழ்ந்த காலம், சூழ்நிலை, அரசியல் நிலை, நாம் வாழும் சூழ்நிலை, அரசியல் நிலை ஆகிய மாற்றங்களை கணக்கில் கொண்டு காண்பதில்லை. 


நம் தமிழகத்தில் பிறந்த எத்தனையோ கவிஞர்கள் இடையே பாரதியார் மட்டும் மிக உயர்ந்து நிற்கிறார் என்றால், அவர் தனது எழுத்துக்களை மிக எளிமையான முறையில் மக்களிடையே கொண்டு சேர்த்தார் என்பதுதான்.

 

அவர் முழுமையான புரட்சிக்காரர் என்றோ, முழுமையான சிந்தனையாளர் என்றோ, அல்லது மிகவும் பிற்போக்கான சனாதன தர்மத்தை இறுகப் பிடித்துக் கொண்டு கட்டி அழ கூடிய ஆள் என்றோ சொல்லிவிட முடியாது. 

அவர் நிறைய முரண்பாடுகளையும் மாற்றங்களையும், உயரிய சிந்தனைகளையும், காலம் காலமாக இருந்து வந்த பிற்போக்கு சிந்தனைகளின் படிமங்களையும் சேர்த்தே கொண்டு இருந்தவர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அவர் பாடிய பாடல்களில் ஏராளமானவை பக்தி சார்ந்தவை, சனாதனம் சார்ந்தவை என்றாலும் பிறந்த நாட்டின் அடிமைத்தனம் , இங்கிருக்கும் பிற்போக்கான மூடப்பழக்க வழக்கங்கள், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றில் இருந்து விடுபடும் போராட்டக் கவிதைகள் தான் ஏராளம். அவர் காளியைப் பார்த்து பாடும்போதும், கடவுளை வேண்டும் போதும் விடுதலை, முற்போக்கு ஆகிய சிந்தனைகளையும், பெண் விடுதலை போன்ற எண்ணத்தையும் சேர்த்தே தான் பாடியிருக்கிறார்.


அவருடைய இறுதிக்கால, ஏன் அனேகமாக கடைசியில் பாடியதாக சொல்லப்படும் பாடலோடு அதற்கு முன்னால் பாடிய பாடல்களை ஒப்பிட்டே பார்க்கலாம்.

உயிர் பெற்ற தமிழர் பாட்டு என்ற பாடலில் சாதியத்தைப் புறந்தள்ளி அனைவரும் ஒன்றே சமமே என்ற நோக்கில் முதல் பகுதியில் எழுதி இருப்பார்.

"மனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;

கனிதரும் மாமரம் ஒன்று-அதில்

காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு. 

பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப்

பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு

நாவிற் கினியதைத் தின்பார்-அதில்

நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார். 

ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று

உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;" 


பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே பரங்கியை துறை என்ற காலமும் போச்சே" 

" பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்

பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,"... என்று பாடிய பாரதி தான்.,

" நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்த நாட்டில் இல்லை;குணம் நல்லதாயின்,

எந்தக் குலத்தின ரேனும்-உணர்

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். ".. 

" ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ?' என்றும் பாடியிருக்கிறார்.


தமிழின் பெருமையை பாடிய பாரதி அகத்தியரை பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 "ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்."

என ஆன்மீக பெருமை பேசிய பாரதி தான் இறுதி காலத்தில், 

"உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது

உள்ள மறைகள் கதையெனக் கண்டோம். 

கடலினைத் தாவும் குரவும்-வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்

வந்து சமன்செயும் குட்டை முனியும், 

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த-திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம். 

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்

உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்

நன்று புராணங்கள் செய்தார்-அதில்

நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;

புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை

போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம். "

என புராணங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் என முழக்கம் இடுகிறார்.. 


நல்ல வேலையாக சனாதனவாதிகள் இன்று அதை படித்து புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாததால் பாரதியாரை இன்னும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 


எல்லா காலத்திற்கும் பொருந்தும்படியான தத்துவங்களோ, வழிகாட்டு நெறிமுறைகளோ இருக்க முடியாது. காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே தான் இருக்கும் என்பதை கீழ்க்கண்டவாறு பாரதி குறிப்பிடுகிறார். 


" பின்னும்(ஸ்)மிருதிகள் செய்தார்-அவை

பேணும் மனிதர் உலகினில் இல்லை;

மன்னும் இயல்பின வல்ல-இவை

மாறிப் பயிலும் இயல்பின ஆகும். 

காலத்திற் கேற்ற வகைகள்-அவ்வக்

காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்

ஞால முழுமைக்கும் ஒன்றாய்.எந்த

நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை "


தாங்கள்தான் மேலோர், ஆண்ட பரம்பரை, எல்லாம் தெரிந்தவர்கள், பிறவியிலேயே அறிவு ஞானம் பெற்றவர்கள் என்று பீற்றிக் கொண்டிருப்பவரை அறிவு சாட்டையால் அடித்து துரத்துகிறார் பாரதி. 


சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;

சாத்திரம் சொல்லிடு மாயின்-அது

சாத்திரம் அன்று சதியென்று கண்டோம். 

மேற்குலத்தார் எவர்?

வையகம் காப்பவ ரேனும்-சிறு

வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,

பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்." 


தாங்கள் தவம் செய்பவர்கள் யோகிகள், ஞானிகள், சாமியார்கள் என்று பீற்றிக் கொள்ளும்  அரைவேக்காடுகளுக்கு பின்வருமாறு பதில் அளிக்கிறார் பாரதி.. 


"உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு

உண்மைகள் கூறி இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம்-இதில்

நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை. 


பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி. 

ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ் ஞானம். "


இவ்வாறு சிந்தனையில் செயலில் அனைத்திலும் தொடர்ச்சியாக மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சீர்திருத்த கருத்துக்களில் வளர்ச்சிகளையும் கண்டு வந்த பாரதியின் பிறந்தநாள் இன்று.. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...