பைந்தமிழின் இனிமையை அழகாய் எடுத்துரைத்து, அதற்கு நேரிடும் இடர்களைய சமர்புரிய அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்...
பைந்தமிழை எண்ணும் போது மனதானது இனித்திடும், வாயால் உரைத்திடும் போது வாயும் இனித்திடும், இனிமையான தமிழை கேட்டாலே செவியும் இணைத்திடும். அப்படிப்பட்ட பைந்தமிழை அழித்திட நஞ்சிட்டார் நயவஞ்சகர்.. பொன் வளையணிந்திடும் பெண் பாவையரே, பெண்ணாக பிறந்து விட்டோமே நாம் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணி துவண்டு விடாதீர். கண் போன்ற எழுத்தையும், கருத்தையும் அழிக்க நினைப்பாராகின் தாய் மண்ணின் உரிமையையும், மொழியின் உரிமையையும் மீட்டெடுக்க விண்ணதிர போர்ப்பரணிபாடி ஆர்த்தெழுந்து, தமிழ் மறப்பெண்ணின் பெண்ணுரிமையை நாட்டுகின்ற புகழைப்பெற்றிட எழும்பிடுவாய் தமிழ்ப்பாவையே என அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்...
*************************
"எண்ணற் கினிக்கும்; எடுத்தியம்ப வாயினிக்கும்;
பண்ணு மொழிகேட்பார் செவியினிக்கும் பைந்தமிழை
உண்ணும் சுவடியிலே நஞ்சிட்டார் ஒண்டொடியீர்!
கண்ணென் எழுத்தும் கருத்தும் கலைப்பாரால்
பெண்ணென் பிறவியினைப் பெற்றேமென் றெண்ணாமே
விண்ணதிர ஆர்த்துப் பிடிக்கூட்டம் போலெழுந்து
மண்ணின் உரிமை மொழியுரிமை மீட்குதிரேல்
பெண்ணுரிமை நாட்டுகின்ற பெற்றியலோ ரெம்பாவாய்!" 6
No comments:
Post a Comment