எந்தவொரு அரசியல்வாதிக்கும், நீங்கள் ஒன்று கருவியாக இருப்பீர்கள் அல்லது எதிரியாக இருப்பீர்கள். ஒரு மனிதன் என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.
ஃபிரெட்ரிக் நீட்சே.
சட்டசபை தேர்தல்கள் முடிந்த சில நாட்கள் வரைக்கும் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. எந்த விதமான வழமையான கட்டமைப்பு இல்லாமல், பிரச்சார முறைகள் இல்லாமல், மக்கள் சந்திப்பு, போராட்டங்கள், என எந்த முயற்சிகளும் இல்லாமல் சினிமா துறையில் புகழ் பெற்ற ஒரே விடயத்தை மட்டுமே கொண்டு ஒருவர் முதலமைச்சராக ஆசைப்பட முடியுமா, அது சரியா, நிறைவேறுமா என்றெல்லாம் நிறைய யோசிக்க வைத்தது.
சற்று அறிவுபூர்வமாக பொறுமையாக, லாஜிக்காக, யோசித்துப் பார்த்ததில் இதில் ஒன்றும் அதிசயம் இல்லை என்று புரிந்தது.
உதாரணமாக ஒரு புகழ் பெற்ற நடிகராக இருந்து முதலமைச்சரான ஒருவரின் ஜோடியாக நடித்த ஒருவரே, திரைப்படத்திலும் மிகுந்த அறிமுகம் இருந்து ஒருவருக்கு முதலமைச்சர் ஆக தகுதியாக அமைந்த போது, அவர் தோழியாக, வீட்டு வேலைக்காரராக இருந்து ஒருவருக்கு முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதுவும் கைகூடக் கூடிய சந்தர்ப்பம் இருந்தது உண்மை என்றால், அதை பின்பற்றி மற்றவர்கள் யோசிக்க கூடாது.. ஆசைப்படக்கூடாது என்று நினைக்கிறேன். அதில் ஒன்றும் தவறு இல்லை என்று தெரிகிறது.
அது சரி மக்கள் ஓட்டு போட்டுதானே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.
ஏன் என்றால் இதுவரை மனித குலம் சந்தித்த ஆட்சியாளர்கள் பற்றி சற்று பின்னோக்கி திரும்பி பார்த்தால் நமக்கு எதார்த்தம் தெரியும்.
ஆதியில் ஆயுத பலம் படைத்த, போர்த்தந்திரம் மிகுந்த ஆட்களே மன்னனாக, பேரரசனாக, சக்கரவர்த்தியாக ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே தகுதி போர், யுத்ததந்திரம், இன்ன பிற...
இன்ன பிற என்பதற்கு குறுக்குவழிகள், சூழ்ச்சி, கையூட்டு, துரோகம், படுகொலை, திருமண பந்தங்கள் போன்று எவ்வளவோ சொல்ல முடியும்.
மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கூட போர்களில் வெற்றி பெற என்னென்ன மாதிரி தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதை நம்மால் காண முடியும்.
வெறும் 200 பீரங்கிகளையும் ஒரு சிறு வலிமையான குதிரை படையை வைத்திருந்த பாபரால் இப்ராஹிம் லோடியை எளிதில் வென்று டெல்லியை கைப்பற்றியது, மிகச் சிறிய படையை வைத்து ராபர்ட் கிளைவ் மீர்ஜாபர் போன்ற துரோகிகளுக்கு 24 பர்கானா நிலம் கையூட்டாக வங்கத்தை கைப்பற்றியது என யுத்த தந்திரம் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வரலாறுகள் நிறைய...
இவ்வளவு ஏன்... வியாபாரம் செய்ய வந்து இங்குள்ள மன்னர்களுக்கெல்லாம் கடன் கொடுத்து, அவர்களது பலவீனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு சண்டை மூட்டி குறுக்குச் ஓட்டி அந்நிய நாட்டு கம்பெனிகள் இந்நாட்டு கைப்பற்றவில்லையா என்ன? ஆட்சி மாற்றங்கள் நிகழவில்லையா என்ன? சரி அதெல்லாம் பழைய கதை.
போர்களெல்லாம் நடத்தி சாணக்கியத்தனம் செய்து ஆட்சியை கைப்பற்றியது, அதன்பிறகு வம்சாவழியினர் ஆட்சி செய்ததெல்லாம் பழைய காலம்.
கிட்டத்தட்ட நூறாண்டு காலமாக அதெல்லாம் ஒழிந்து போய், மக்கள் வாக்களித்து தங்களது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை வந்துவிட்டது. பெரும்பான்மை மக்களுக்கு சுயமாக முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது யாருடைய குற்றம்?!
தேர்தல் மூலம் ஆட்சிக்கு வருவதற்கு என்று கட்சிகள் தோன்றின. கட்சிகள் தங்களுக்கென்று கொள்கைகளை உருவாக்கி மக்களை கவர்வதற்கு முயற்சி செய்தன. ஆட்சிக்கு வருவதற்கு என்று சகல விதமான தந்திரங்களை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றுகின்றனர்.
ஜாதி, மதம், இனம், மொழி என்று எல்லாவிதமான கோட்பாடுகளையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர் கடந்த காலங்களில் , ஆள்பலம் உள்ளவர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கூட ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வுகள் உண்டு. பண பலம் உள்ளவர் பணத்தை பயன்படுத்தி வாக்குக்கு பணம் கொடுப்பது, எதிரிகளை விலைக்கு வாங்குவது என சகல தில்லுமுல்லுகளை செய்வது வழக்கமாகிவிட்டது.
அதற்கு மேல் ஊடகங்களை பயன்படுத்தி கருத்துத்திணிப்பு பிரச்சாரம் செய்தல், கிட்டத்தட்ட மூளைச்சலவை செய்து ஒருவிதமான கருத்தியல் உருவாக்குவது என்ற போக்கு நிலவியது.
ஆனால் இந்த தேர்தல் அதையும் தாண்டி புதுமுறை யுத்தமாக மாறிவிட்டது. புதியதாக தோன்றியுள்ள தேர்தல் வியூக அமைப்பாளர்கள் என்ற நச்சரவம் தேர்தல் முறைகளை கேலிக் கூத்தாக, சூதாட்ட களமாக மாற்றியுள்ளது .
தேர்தல் வியூகம் அமைத்திட வார் ரூம் என்ற அமைப்பை உருவாக்கி மக்களுடைய மனநலம் ,பலம், பலவீனம், கட்சிகளுடைய செல்வாக்கு, பலம், பலவீனம், வேட்பாளர்கள் பற்றிய கணிப்புகளை ஆய்வு செய்து மக்களைக் கவர்வதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிடும் முறை உருவாகியுள்ளது. எந்த ஒரு அரசியல் சித்தாந்தம், ஞானமோ, மக்களைப் பற்றிய அக்கறையோ, தேசத்தைப் பற்றிய அக்கறையோ, முன்னேற்றத்திற்கான பாதை பற்றிய அறிவு எதுவுமே தேவையில்லை. வெற்றி பெறுவதற்கு எந்த விதமான சாணக்கியத்தனம் செய்வது, பிறருக்கு குழி தோண்டுவது, மக்களை குழப்புவது, பொய் பிரச்சாரம் செய்வது, தாங்கள் விரும்பிய வேட்பாளர்கள் கட்சி பற்றிய ஒரு பிம்பத்தை, மாயையை உருவாக்குவது, எதிராளியினுடைய பெயரைக் கெடுத்து அதல பாதாளத்தில் தள்ளுவது போன்ற சகுனி தனமான வேலைகள் மட்டுமே செய்தால் போதுமானது .இதற்கு பயன்பட்டது தான் கோயபல்ஸ் தத்துவம்.
கோயபல்ஸ் தத்துவம் என்பது நாஜி ஜெர்மனியின் பிரச்சார அமைச்சராக இருந்து ஜோசப் கோயபல்சால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் உளவியல் பிரச்சாரம் ஆகும்.
"ஒரு பொய்யை திரும்பத் திரும்ப, உரக்கச் சொல்லும்போது, மக்கள் அதை உண்மை என்று நம்பத் தொடங்குவார்கள்."என்பதே இதன் முக்கியக் கோட்பாடு.
ஒரு பொய்யை மக்கள் மனதில் பதிய வைக்கும் வரை அதை திரும்பத் திரும்பப் பரப்புவது தான் இந்தக் கொள்கையின் முக்கிய உத்தியாகும்.
மக்கள் எளிதில் நம்ப முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான பொய்களைச் சொல்வதன் மூலம் அப்பொய்யின் மதிப்பை உண்மையாக்கி விடுகிறது.
அல்பமானன விஷயங்களை கூட மிகவும் எளிமையாக, மக்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் மாற்றிச் சொல்வது ஒரு வகை யுத்தம். உதாரணமாக டாஸ்மாக் கடையில் பிராந்தி கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூட வாங்குவது ஒரு மிகப்பெரிய விஷயமாக, நாட்டினுடைய வாழ்வாதார பிரச்சனை போல பூதாகரமாக பிரச்சாரம் செய்தது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்ற சிறிய விஷயங்களை கூட பூதாகரமாக எல்லா இடங்களையும் நடப்பது போல சித்தரிப்பது, நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது, பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது, எங்கு பார்த்தாலும் அக்கிரமங்கள் என்று கற்பனைக்கெட்டாத அளவிற்கு பிரச்சாரம் செய்தது இத்தேர்தலில் காண முடிந்தது.
மாற்றம் வேண்டும் என்ற பிரச்சாரம் செய்ய பிரமாதமாக ஈடுபட்டது. எதை மாற்ற வேண்டும், எந்த விதமான மாற்றம் வேண்டும், ஏற்கனவே இருந்ததில் என்ன குறை இருக்கிறது, என்றெல்லாம் அறிவுபூர்வமான பிரச்சாரம் எல்லாம் கிடையாது.
அவனும் சரி இல்லை, இவனும் சரியில்லை புதிதாக இவருக்கு வாய்ப்பு கொடுப்போமே என்றொரு பிரச்சாரம்...
புதிதாக வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு இவரிடம் என்ன கொள்கை இருக்கிறது? என்ன சாதிக்கப் போகிறார்? என்ன அமைப்பு வைத்திருக்கிறார் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது.
ஒரே யுத்த தந்திரம் தான். 15 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம்... பொய் பிரச்சாரம்... திட்டமிட்ட பொய் பிரச்சாரம்... பிரம்மாண்டமான பிரச்சாரம்.... மூளை சலவை செய்து அடிமுட்டாளாக கூடிய அளவிற்கு பிரச்சாரம்.... அது மட்டுமே நடந்தது.
யாரிடமும் என்ன குறை? எதற்காக மாற்றம்? மாற்றம் நிகழ்ந்தால் எந்த விதமான பாதிப்புகள் ஏற்படும்? கடந்த காலம் தாண்டி வந்த பாதைகள்,செய்த சாதனைகள், அதற்குக் கொடுத்த விலை, எதிர்காலத்தில் கடந்த காலத்தில் பெற்றவைகளை தக்க வைக்க முடியுமா என்ற அறிவாற்றல் இல்லாமல், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மொழி பாதுகாப்பு, மாநில உரிமைகள் அத்தனையும் காவு கொடுக்கும் அளவிற்கு மிகப்பெரிய சரிவினை உண்டாக்கியுள்ளது இப்பிரச்சாரமும் அதன் விளைவுகளும்...
தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டும். வேறு வழி இல்லை. ஆனால் இருப்பதெல்லாம் ஒரே கேள்விதான் எதிர்காலம் என்னவாகும்?!.