சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 19 May 2026

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள்

 நமது தமிழகத்தில் வேடந்தாங்கல் என்ற ஒரு அருமையான சரணாலயம் இருக்கிறது . உலகின் பல்வேறு திசைகளில் இருந்து ஏராளமான பறவைகள் தங்கள் வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதியாக வந்து சேர்ந்து செல்வார்கள். விதவிதமான பறவைகள் அழகழகான பறவைகள், சிறியது முதல் பெரியது வரை உருவங்கள் மாறுபட்டவை . ஆனாலும் ஒற்றுமையாக தங்கள் வாழ்க்கை பயணத்தை அருமையாக கழிப்பதற்காக வந்து செல்வார்கள்.

 அது மாதிரியான புகழ்பெற்ற ஓரிடம் எங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி . சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதே காலகட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்தியல் பட்டய படிப்பு படிப்பதற்காக நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்தோம். அந்தமானில் இருந்து வந்த வயது முதிர்ந்த ஜக்கு ஹரிநாத் பாபாவில் இருந்து, ஆனந்த பிரேம் ராஜூ, நாகரத்தினம் என பணியில் இருந்து படிக்க வந்த பெரியவர்களிடமிருந்து, நேற்று முளைத்த சுள்ளானாக வந்த நான் என பல்வேறு வயதுடையவர்கள், பட்ட மேல்படிப்பு படித்த பி.சி.டி நடராஜன் முதல் பட்டப்படிப்பு முடித்து வந்த சுரேஷ்குமார், பன்னீர்செல்வம், பலராமன், மார்டின், புதுமுக வகுப்புத் தேர்வு(பி யு சி) முடித்தவர்கள், பள்ளி இறுதி தேர்வு(பதினோராம் வகுப்பு) முடித்தவர்கள் என பலரகமாக.......

நான் மருந்தியல் பட்டய படிப்பு படிக்க வந்ததே ஒரு வேடிக்கையான கதை தான். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கிற மாதிரியான ஒரு மிகக் கட்டாயமான சூழ்நிலையில் எனது குடும்பம் இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது விருப்ப பாடமாக கணிதம், வேதியல், பௌதீகம், உயிரியல், கணக்கியல் என்று ஏதேனும் ஒன்றை எடுக்க வேண்டிய கட்டாயம் எங்கள் காலத்தில் இருந்தது. நான் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றதால் விருப்ப பாடமாக கணிதம் ஒதுக்கப்பட்டது. பெயரளவுக்குத்தான் விருப்பப் பாடமே தவிர, பெரும்பாலும் ஆசிரியர்களைத் தீர்மானித்து விடுவார்கள். நாம் எடுக்கக்கூடிய மதிப்பெண்களுக்கு தகுந்தவாறு ஒரு விருப்ப பாடம் நம் தலையில் திணிக்கப்பட்டு விடும். அவ்வாறு எனக்கு கணிதம் ஒதுக்கப்பட்டது. எங்களது குடும்ப நண்பர் ஒருவர் மருந்தாளுனர் படிப்பு படித்தால் உடனே வேலை கிடைத்து விடும், எனவே கணிதத்தில் இருந்து உயிரியலுக்கு மாற்றி விடுங்கள் மருந்தியல் பட்டய படிப்பு படிப்பதற்கு ஒதுக்கீடு சாத்தியமாகும் என்று கூறினதன் அடிப்படையில் நான் கணிதத்தில் இருந்து உயிரியலுக்கு தாவினேன். அந்த மாதிரியே நடந்தது உயிரியலை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்தல் ,மருந்தியல் பட்டைய படிப்பு கிடைத்தது. ஒருவேளை வேதியலோ பௌதிகமோ விருப்ப பாடமாக எடுத்திருந்தால் மருந்தியல் பட்டய படிப்பு கிடைத்த மாதிரியே, பொறியியல் பட்டய படிப்பு படித்திருக்கலாமா என்னவோ.

பொதுவாக மற்ற கல்லூரி படிப்புகளில் மாணவர்களுக்கு இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு வேண்டுமானால் வயது ஏற்றத்தாழ்வு, கல்வித்தகுதி என்று பெரிய அளவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

மருந்தியல் பட்டய படிக்க வாய்ப்பு கிடைத்தது கல்லூரியில் நுழையும் போது ஒரே வேடிக்கையாக தான் இருந்தது. ஏனெனில் படிப்பில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகளோடு நிறைய பேர் இருந்தோம். பள்ளி இறுதித் தேர்வு, புதுமுக படிப்பு, பட்டப் படிப்பு, மேல்பட்ட படிப்பு என பலதரப்பட்ட நிலையில் மாணவர்கள் இருந்தோம். அதேபோல வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு வயது வித்தியாசமும் இருந்தது. அரசு பணியில் இருந்து கொண்டே படித்து வந்த வயது முதிர்ந்தவர்களில் இருந்து, வெறும் 16 வயது மட்டுமே நிரம்பிய மாணவர்களும் இருந்தோம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், இரு பாலர் கல்வி என புதிய அனுபவம். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் படிக்க வந்திருந்த மாணவர்கள் அதிகம். உள்ளூர் மாணவர்கள் குறைவு. மாணவர் விடுதியில் இருந்து தங்கிப் படிப்பவர்கள், உள்ளூரில் வீட்டிலிருந்து வருபவர்கள், அந்தந்த ஊர்க்காரர்கள் என வித்தியாசமான குணாம்சங்களோடு ஏராளமான குழுக்களோடு வித்தியாசமான கலவையாக எங்கள் வகுப்பு இருந்தது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படிப்பவர்கள் ஒருபுறம், தனியாக மருந்தியல் பட்டப்படிப்பு ஒருபுறம். பட்டய படிப்பு படிப்பவர்கள் நாங்கள் தனிரகம். பார்க்க வேடிக்கையாக தான் இருந்தது. அதைவிட மருத்துவக் கல்லூரியில் கட்டுப்பாடு மிக அதிகம்.அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் படித்ததால் மிகவும் கட்டுப்பாடாக கல்லூரி நடந்தது. கொஞ்சம் முறைத்துக் கொண்டாலும் அரியர்ஸ்களும் பரிசாகக் கிடைக்கும். இரண்டு ஆண்டு மருந்தியல் பட்டய படிப்பை நான்கண்டுகள் படித்தவர்கள் கூட உண்டு. பயந்து பயந்து தான் இருக்க வேண்டும். புத்தகங்கள் கிடையாது. வகுப்பில் குறிப்புகள் எடுத்துக் கொண்டு சென்று முறையாக படித்து தேர்வு எழுதினால் மட்டுமே தப்பிக்க முடியும். . இரண்டாம் ஆண்டு முடித்து வெளிவரும் போது நிறைய பேருக்கு அரியர்ஸ் வழங்கப்பட்டது. 

மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் படிப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காமல் இரண்டாம் தரப்பிரஜையாக நடத்தப்பட்டதால் தனியாக மருந்தியல் கல்லூரி வேண்டுமென்று ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை பிரிவு எங்களுடையது. மருந்தியல் பட்டய படிப்பு படிப்பதற்கு ஸ்டைபெண்டு கல்வி உதவித்தொகை உண்டு. துரதிர்ஷ்டவசமாக எங்கள் பிரிவிற்கு மட்டும் வழங்கப்படவே இல்லை. வேலை நிறுத்தத்தில் அது ஒரு முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது. போராட்டத்தின் பயனாக எங்களுக்கு பிந்திய பிரிவிற்கு கிடைத்தது எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் வறுமையில் கஷ்டப்பட்டு படித்த எத்தனையோ பேருக்கு உதவியாக இருந்திருக்கும். வேலை நிறுத்தத்தின் பயன் நிர்வாகத்தின் வெறுப்பை சம்பாதித்ததை தவிர எங்களுக்கு ஒன்றும் பயன் கிடைக்கவில்லை.வேண்டுமானால் அரியர்ஸை பரிசாக எடுத்துக்கொள்ளலாம். எப்படியோ அரியர்ஸ் இல்லாமல் இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்ததால் 18 ஆவது வயதிலேயே அரசு பணியில் சேர்ந்தேன்.வறுமையின்கோரப்பிடியிலிருந்து தப்ப உதவியாக இருந்த மருந்தியல் பட்டய படிப்புக்கு நன்றி..



No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...