பொதுவாக நம் காலத்தில் சான்றோன் எனப்படுபவன் நிறைய கற்றவன் அதாவது ஏராளமான பட்டங்களை பெற்றவன் என்கிற பொருள் தான் கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழ் கூறும் நல்லுலகு சான்றோன் என்ற சொல்லுக்குப் கல்வி, ஒழுக்கம், அறிவு மற்றும் நற்பண்புகளில் சிறந்து விளங்கும் மேலோன் அல்லது சிறந்த மனிதன் என்று பொருள் கூறுகிறது.
சால்புடையவர் அறிவு, நற்குணம் மற்றும் நல்லொழுக்கங்கள் நிறைந்தவர் அறிஞர், வீரர், கற்றோன் போன்ற பல சிறப்புகளைக் குறிக்கப் பயன்படுகிறது.
சான்றாண்மை என்னும் சொல் அன்பு, நாண் (பழிக்கு அஞ்சுதல்), ஒப்புரவு (பிறருக்கு உதவுதல்), கண்ணோட்டம் (இரக்கம்), வாய்மை ஆகிய ஐந்து நற்பண்புகளைக் கொண்டு, பிறர் பின்பற்றும்படி சான்றோராக வாழ்வதாக உரைக்கிறது.
சங்க இலக்கியங்களில் கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், போர்க்களத்தில் வீரராகவும் சான்றோன் போற்றப்படுகிறார்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள் 69) - மகன் பிறக்கும்போது அடைந்த மகிழ்ச்சியை விட, அவனைச் சான்றோன் எனப் பிறர் பாராட்டும்போது தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள்.
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்கிறது புறநானூற்று பாடல் ஒரு சமூகத்தில் யார் யாருக்கு என்னென்ன கடமை என்று குறிப்பிடுகிறது
நல்ல மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் தாயின் தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் செய்து, பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை.
சான்றோனாக ஆக்குவது தந்தையின் கடமை என்றால் ஒழுக்கமுள்ள குடிமகனாக வளர்த்தெடுப்பது அரசின் கடமை என்கிறது புறநானூறு.
சான்றோன் என்றால் - அறிஞனா , வீரனா ? தமிழ் நூல்களிலே சான்றோன் என்னும் சொல் பயின்று வருகிறது . கல்வி கேள்விகளில் சிறந்தவன் , நற்குண நல் லொழுக்கம் உடையவன் என சொல்லப்பட்டாலும் சங்க இலக்கியங்களில் சான்றோர் என்ற சொல்லிற்கு வேறு வேறு பொருள்களும் அமைகின்றன.
பண்டைக் காலத்திலே சான்றோன் என்னும் இச்சொல் போர்வீரன் என்றும் அரசன் என்றும் வேறு இரண்டு பொருள்களையும் கொண்டிருந்தது . ...
சான்றோர் என்ற சொல்லிற்குக் கல்வி கேள்விகளில் சிறந்தவர், அறிஞர், சால்புடையவர் போன்ற விளக்கங்கள் அமையப்பெறுவதுண்டு. ஆனால் சங்க இலக்கியங்களில் சான்றோர் என்ற சொல்லிற்கு வேறு வேறு பொருள்களும் அமைகின்றன. .
மயிலை சீனி வேங்கடசாமி சான்றோன் என்ற சொல் சங்கப் புற இலக்கியங்களிலும் அற இலக்கியங்களில் நாலடியார், திருக்குறளிலும் வில்லிபுத்தூரார் பாரதத்திலும் வீரன் என்பதைக் குறிப்பதாக கூறுகிறார்.
சான்றோர் என்ற சொல் அமைச்சன் என்ற பொருளிலும் அமைகிறது (புதிய பனுவல், பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் இணையவழி ஆய்விதழ், காலாண்டிதழ், நவம்பர்2008, ப.85) இக்கட்டுரை சங்க அக இலக்கியங்கள் பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் சான்றோர் (சான்றாள், சான்றோன், சான்றோய்) என்ற சொல் உணர்த்தும் பொருளை ஆராய முற்படுகிறது.
தொல்காப்பியத்தில் சான்றோர் என்ற சொல் இரண்டு இடங்களில் அமையப்பெறுகின்றது.
“பகட்டினானும் ஆவினானும்
துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்” (தொல். பொருள்.75)
யானை மற்றும் பசுக்களின் மூலம் கிடைக்கும் குற்றமற்ற சிறப்பினை உடைய, தூய அறிவுடைய சான்றோர்களைப் போற்றும் துறை.
பகட்டால் புரை தீர்ந்த வேளாளர் ஆவால் குற்றம் நீங்கிய வணிகர் இவர்கள் குலத்தில் சிறப்பினையுடைய சான்றோர் ஆவர். அவர்கள் நம்மீது எந்தவொரு தீமையான எண்ணமும் எண்ணுதல் கூடாது. அவ்வாறு இருத்தலே ஒரு வகை வாகை(வெற்றி)யாகுமென புறத்தினை இயலில் வாகைத்துறை யில் கூறப்பட்டுள்ளது.
"அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும்" (தொல்காப்பியம், பொருள்144) என்பது, அந்தணர், சான்றோர் மற்றும் புகழ்மிக்க பிற தகுதியுடையோரைப் போற்றுதல், அவர்களுக்கு உணவு மற்றும் பூ அளித்து கௌரவித்தல், அறிவார்ந்த செயல் மற்றும் உயர்ந்த பண்புகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பாடல் வரி இது.அந்தணர் என்றால் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு, அறநெறி வழுவாமல் வாழும் அறவோர் எனப்படுவோர் முனிவர்கள் அல்லது சான்றோர் ஆவர். "அந்தம்" எனப்படும் முடிவு அறிந்தவர் அல்லது செந்தண்மை (அருள் நலம்) பூண்டவர் எனப் பொருள் படும்.
ஆக, தொல்காப்பியம் சான்றோர் என்ற சொல்லிற்குத் தன்னிகரற்ற சிறப்பு குணங்கள் நிறைந்தவர் என்பதையே பொருளாக்க் கொள்கிறது.
சான்றோர் என்ற சொல் நிறைவுடையவர், அறிவொழுக்கங்களால் சிறந்தவர், பேராளன், சூரியன், சங்க காலத்துப்புலவர், வீரர் போன்ற பொருளைக் குறிக்கிறது (தமிழ்ப் பேரகராதி பாகம்.3 பக்.1397).
“சால்“ என்ற அடிச்சொல் தொல்காப்பியத்தில் ஒரு இடத்தில் (தொல்.பொருள்.1010-12) மட்டும் அமைகிறது. அச்சொல் “நிறைந்த“ என்ற பொருளைத் தருகிறது. (தொல்காப்பியச் சிறப்பகராதி ப.149)
கலித்தொகையில் “சான்றாள்” என்ற சொல் ஒரு இடத்தில் (கலித்தொகை) மட்டுமே அமைகிறது.
“இவள்தான், வருந்த நோய் செய்திறப்பி னல்லால் மருந்தல்லள்
யார்க்கும் அணங்காதல் சான்றாளென் றூர்ப்பெண்” (முல்லைக்கலி.109. 21-22)
ஆயமகள் ஒருத்தியின் அழகைத் தலைவன் வருணிப்பதாக அமைகிறது இப்பாடல். இவள்தான் பார்ப்பவர் வருந்த அவருக்குத் துன்பத்தைச் செய்து போவாளன்றி யார்க்கும் மருந்தாக மாட்டாள். ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள் . இவளைக் கண்டு ஊர்ப்பெண்கள் அவள் சுமந்து வரும் மோர் வேண்டாம் புளிப்பு மாங்காய் ஊறுகாய் வைத்துக்கொள்வோம். இந்த பக்கமே அவள் வரவேண்டாம் வந்தால் தத்தம் கணவர் அவள் அழகில் மயங்கிவிடுவர் ஆதலால் வரவேண்டாம் என்பதாகவும் இவ்வளவு நோய் செய்யினும் அவள் மருந்தாகமாட்டாள் என்றும் பாடல் அமைகிறது. (சான்றாள் – அழகால் வருத்தம் செய்பவள்)
கம்பராமாயணத்தில் சான்றாள்
கம்பராமாயணம் சுந்தரகாண்டம் திருவடி தொழுத படலத்தில் சான்றாள் என்ற சொல் சால்புடையவள் (சீதை) என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
“உன் பெருந்தேவி என்னும் உ ரிமைக்கும் உன்னைப்பெற்ற
மன்பெருமருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன்பெருந்தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்
என்பெருந்தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி என்பான்” (6032)
சீதையைக் கண்ட அனுமன் இராமனிடம் ஐயனே, எனது சிறந்த தெய்வமாகிய பிராட்டி உனது சிறந்த மனைவி என்ற தகுதிக்கும் உன்னை மகனாகப் பெற்ற அசரான தசரத சக்கரவர்த்தியின் சிறந்த மருமகள் என்னும் சிறப்புக்கும் மிதிலை நகரத்து அரசனாகிய சனகனுடைய சிறந்த மகள் என்ற குணச்சிறப்புக்கும் தலைமை உள்ளதற்கு ஏற்பச் சால்புடையவள் இன்னும் நான் சொல்வதைக் கேட்பாயாக என்று மேலும் கூறுவானானான் என்பது இப்பாடல் வெளிப்படுத்தும் கருத்து.
இங்கு சான்றாள் என்ற சொல் சால்புடையவள் என்ற பொருளில் சீதையைச் சிறப்பிக்குமிடத்து அமைகிறது.
சங்கஇலக்கியத்துள் சான்றோள் என்ற சொல் எங்கும் இடம் பெற்றதாக தெரியவில்லை. மாறாக சான்றாள் என்ற சொல் மட்டுமே வருகிறது. அடுத்தபடியாக கம்பராமாயணத்தில் சான்றாள் என்ற சொல் இடம்பெறுகிறது. இவ்விரு இலக்கியத்திலும் இடம்பெறும் சான்றாள் என்ற சொல்லின் பொருள் முற்றிலும் முரண்பட்டதாக அமைகிறது.
தமிழ்ப் பேரகராதியில் சான்றாள் என்ற சொல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
நற்றிணையில் சான்றோர், சான்றோன், சான்றோய்
நற்றிணையில் சான்றோர் என்பதற்குத் தலைவியைக் கைவிடாத பண்புடையவன் என்றும் தாம் செய்யும் கடமையில் குறைவுபடாதவர் என்றும் தலைவனையேச் சான்றோன் என்றும் தலைவிக்கு உதவி செய்பவர் (மேகம்- தலைவன் பொருட்டுத் தூதாக அமைவது) என்றும் மேலவர் செல்லும் நெறியில் சென்று வாழ்பவன் என்றும் இகழ்ச்சிக்குறிப்புத் தோன்ற ஒன்றும் அறியாதவர்களைச் சான்றோன் என்றும் தம்மைச் சேர்ந்திருப்போர் படும் துன்பத்திற்கு அஞ்சுவதே சான்றோர் மதிக்கும் செல்வம் என்றும் பொருள் அமைகிறது. சான்றோர் என்ற சொல்லிற்குப் பொருளுரைக்காமல் சான்றோருடைய பண்புகளை எடுத்தியம்பும் வகையில் பெரும்பான்மையான பாடல்கள் அமையப்பெறுகின்றன.
“நெடிய மொழிதலுங் கடிய ஊர்ந்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்” (நற்.210.5-7)
அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர்முன்பாக விரைந்த செலவையுடைய குதிரை, தேர், யானை முதலாகியவற்றை ஏறிச் செலுத்துதலும் செல்வமெனப்படுவதன்று அவையனைத்தும் முன்பு தாம்செய்த வினைப்பயனான் பெறப்படுகிறது.
சான்றாரால் செல்வம் எனப்படுவது யாதெனின் தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் காப்பதுவே இனிய செல்வமாகுமென சான்றோர் செல்வம் என்பதற்குத் தரும் விளக்கமே இங்கு கூறப்படுகிறது. சான்றோர் என்ற சொல்லிற்குப் பொருள் இல்லை. சான்றோர் என்பவரைத் தலைசிறந்தவராகக் கருதியுள்ளதையே இங்கு காணமுடிகிறது.
“மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்
பெரிதுஞ் சான்றோர் மன்ற விசிபிணி
முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண்” (நற்.220.4-6)
தோழி, தலைவன் மடலூர்தலைக் கூறி யாம் பின்னே சென்றபோது என்னை நோக்கி இவ்வூரினர் அயலோர் என்றுரைப்பவர் சான்றோரே என இகழ்ந்து கூறுகிறாள். ஆக இவ்விடத்தும் சான்றோர் என்பவர் அனைத்தும் அறிந்தவரைக் குறிக்கும் சொல்லாகப் பயிலப்பட்டு வந்துள்ளது.
“நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல்நெறி வழாச்
சான்றோன் ஆதல்நன்கு அறிந்தனை தெரிமே” (நற்.233.7-9)
இப்பாடலில் சான்றோன் என னகர ஈறு பெற்று நேரடியாக ஆணொருவனைக் குறிப்பதாக இச்சொல் அமைகிறது.
இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் (தலைவன் வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுவதால்) யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள்பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பிலன் ஆதலை நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்.
தலைவன் சான்றோனல்லன் என்கிறாள் தோழி. வரைவு கால நீட்டித்தமையால் தலைவனைச் சான்றோனல்லன் என்று கூறுவது கோபத்தின் வெளிப்பாடே தவிர அது உண்மையாகக் கூறுவதில்லை. ஆகையால் இவ்விடத்துத் தலைவனே சான்றோனாக விளங்குகிறான்.
“பருவஞ் செய்த கருவி மாமழை
அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே மான்றுடன்” (நற்.238.5-7)
அந்திமாலையில் யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவுத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே, நீ அவர் (தலைவன்) நிலைமையை இங்கு நான் கூற அறிந்துகொள் என்று வருதல் சான்றோர் செய்கையை ஒத்ததாகமாட்டாது.
தலைவியின் களவொழுக்கத்திற்கு உதவி செய்கின்ற மேகத்தைச் சான்றோர் என்கிறாள். ஆனால் களவிற்கு முழுவதும் உதவுகிற தோழியைச் (பெண்) சான்றோர் என புலவன் எங்குமே படைத்ததாக தெரியவில்லை.
No comments:
Post a Comment