சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 30 November 2025

ஒரு மருந்தாளுனர் நினைவலைகள் 17

 2016 ஆம் ஆண்டு சென்னையை வர்தா புயல் ஆட்டிப்படைத்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது நான் பொதுச் சுவாதாரத்துறை இயக்குனரகத்தில் மருந்து கிடங்கு அலுவலராக பணிபுரிந்து வந்தேன். முதல் நாள் கடுமையான புயலுக்கு பின் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது. போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டிருந்தது

 ஆங்காங்கே மரங்கள் விழுந்தும் மின் கம்பங்கள் சாய்ந்தும், வீடுகள் நீரால் சூழப்பட்டும் இருந்தன. நான் இருசக்கர வாகனத்தில் இயக்குனரகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது  பொது சுகாதாரத் துறை இயக்குனர் திரு குழந்தைசாமி அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

உடனடியாக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து, வெள்ள நிவாரண பணிக்காக மருந்துகள் வாங்கிட தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்கு கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்திடுமாறும், அண்ணா நகரில் உள்ள மருந்து கிடங்கியிலிருந்து தேவையான மருந்துகளை பெற்றுக் கொண்டு எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி அலுவலகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கான முகாம்களை ஏற்பாடு செய்யச் சொன்னார். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், ஆண் செவிலி உதவியாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் மருத்துவக் குழுக்களையும் சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு குழுக்களை உருவாக்கிட ஏற்பாடுகள் செய்தார்.

என்னுடன் பணியாற்றிய மருந்தாளுனர்கள் சூரியகுமார், செந்தில் போன்றவர்கள் உதவியுடன் மருந்துகளை பெற்று தயாரிப்பு பணிகள் செய்து முடித்தேன். மறு நாளே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு , சுகாதார குழுவினர் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பெருமளவு நோய்த்தொற்று, உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

அப்போதைய சுகாதாரச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களும் இயக்குனர் திரு குழந்தை சாமி அவர்களும் ஏனைய உயர் அதிகாரிகளும் இடைவிடாது முகாம்களுக்கும் தலைமை இடத்திற்கும் வருகை தந்து உற்சாகப்படுத்தி மருத்துவ முகாம்கள் சிறப்புடன் நடத்தச்செய்தனர்.

இயக்குனர் அவர்கள் தினசரி வருகை தந்து ஆய்வுகள் நடத்தி புதிய தேவைகள் ஏதும் ஏற்பட்டால் கேட்டறிந்து தீர்வு கண்டார். இரண்டாம் நாள் முகாம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு மருந்தாளுனர் என்னிடம் வந்து சார் சில பெண்கள் தயங்கி மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கேட்டார்கள் என்று சொன்னார். இதை இயக்குனருடன் சொன்னவுடன் உடனடியாக அதற்காக ஏற்பாடுகள் செய்து தீர்வு கண்டார். 

ஏனென்றால் இதுபோன்ற காலங்களில் கீழ் மட்டத்தில் என்ன விதமான தேவைகள் ஏற்படும் எந்த விதமான நோய்கள் ஏற்படும் என்பதை உடனே ஆய்வுகள் செய்து தீர்வு காணும் போது தான் பிரச்சினைகள் ஏதும் வராமல் தடுக்க முடியும். 

அந்த அளவிற்கு எங்களுக்கு சுதந்திரமும் வழிகாட்டுதலும் உற்சாகம் அளித்தார். அந்த முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், ஆண் செவிலிய உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஒட்டுனர்கள் அனைவரது பங்கேற்பு மகத்தானவை.

அடுத்த ஆண்டு பெருமழை வந்த போதும் இதே போல ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக சாதித்தோம். 

அவ்வாறு செயல்படுவதற்கு ஏற்கனவே கும்பகோணம் மகா மகம் விழாவின்போது 12 நாட்கள் மருத்துவ முகாம்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

2013இல் முதன் முதலாக அப்போது தான் இயக்குனர் அலுவலகத்தில் சேர்ந்த நேரம். மருந்து கிடங்கு அலுவலருக்கு என்ன பணிகள் என்று வரைமுறை செய்யப்படாதிருந்த நிலையில் இயக்குனரகத்தில் மருந்துகள் தொடர்பான எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்து உதவி செய்வது தான் எங்களது பணி .

இயக்குனர் அவர்கள் என்னை அழைத்து மகாமகம் போய் வருகிறீர்களா என்று கேட்டார் .போய் வேலை செய்கிறேன் சார் என்றேன். எத்தனை நாட்கள் அங்கு இருக்க முடியும் என்று கேட்டார். சார் எத்தனை நாட்கள் இருக்கச் சொல்கிறீர்கள் அவ்வளவு நாட்களும் இருக்கிறேன் என்றேன். 12 நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன இரண்டு நாள் முன்னாடியே சென்று விடுங்கள் அங்கு உள்ள துணை இயக்குனரோடு இணைந்து கொண்டு உருவாக்கப்பட்ட மருத்துவ முகாம்கள் சிறப்புடன் செயல்பட பணியாற்றுங்கள் என்று அனுப்பி வைத்தார். 

அங்கு மிகப் பெரிய அளவில் ஏராளமான உயர்நிலை அதிகாரிகள் அடுத்த நிலை அதிகாரிகள் என பெரும் பட்டாளமே துரித கதியில்  வேலை செய்து கொண்டிருந்தார்கள். . அவர்களோடு இணைந்து கிட்டத்தட்ட 100 முகாம்களை உருவாக்கி செயல்பட்டோம். என்ன மருந்து தேவையோ எது தேவையோ வாங்கிக் கொள்ளுங்கள், தகவல் மட்டும் சொல்லி விடுங்கள் என்று உயர் அதிகாரிகள் சுதந்திரம் கொடுத்தார்கள். 

தமிழகமெங்கும் இருந்தும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் வந்து சேர்ந்தார்கள். மருத்துவர்கள் மருந்தாளுனர்கள் ஆண்செவிலி உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார உதவியாளர்கள், பணியாளர்கள் என ஏராளமான பணியாளர்கள் குறிக்கப்பட்டு ஆங்காங்கே முகாம்களை அமைத்து செயல்பட்டோம். இதில் இறுதி நாள் அன்று பல்ஸ் போலியோ வேறு வந்து சேர்ந்தது. 100% குழந்தைகளையும் பல்ஸ் போலியோவில் சொட்டு மருந்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டது. 

அதன் விளைவாக அந்த மகாமகத்தில் எந்த விதமான உயிர் சேதமோ, கொள்ளை நோய் தொற்றோ ஏற்படாமல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது.

இம்மாதிரி மக்கள் சேவையில் மருத்துவ முகாம்களில் பணியாற்றி அனுபவம் பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது அதற்கு வாய்ப்பளித்த வழிகாட்டிய ஊக்கமளித்து உயர்நிலை அலுவலர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

என்னை போலவே ஏராளமான மருந்தாளுனர்களுக்கு வெள்ள நிவாரண பணி, சுனாமி பாதிப்பு நிவாரண பணி, மகாமகம் பணி போன்று பல்வேறு நிவாரண பணிகளில் ஈடுபட்ட அனுபவங்கள் உண்டு. ஒரு மருந்தாளுனர் என்ற வகையில் இம்மாதிரி முகாம்களில்  சிறப்பாக பணியாற்ற முடியும் என்பது பெருமைக்குரிய விஷயம் தானே.... 

Saturday, 29 November 2025

மழை வருது- கற்றுக் கொள்வோமா பாடங்களை?!

 வருடா வருடம் மழை வருதலும், வறட்சி வருதலும் அதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திக்கும் அவதிகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் தொடர் நிகழ்வுகளாக உள்ளது . அது குறித்து என்றாவது முறையாக நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியே மிஞ்சும்.

ஒவ்வொரு ஆண்டும் சாதாரண மழை பெய்தால் கூட ஆங்காங்கே தண்ணீர் வடியாமல் நிற்பது, சாலைகள் அரித்து செல்லப்படுவது, வீடுகள் நீரால் சூழப்படுவது, வீட்டிற்குள் தண்ணீர் புகுவது, சாலைகளில் தண்ணீர் நிற்பது , சேதமடைவது, போக்குவரத்து பாதிக்கப்படுவது, விபத்துக்குள்ளாவது, வேலைக்குச் செல்ல முடியாமல் திண்டாடுவது, உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, ஆள் சேதம், பொருள் சேதம், என அன்றாடங்காய்ச்சியில் இருந்து நடுத்தர வசதி வாழ் மக்கள் வரை அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். 

இதனால் மக்கள் படும் அவதி கொஞ்சநஞ்சம் அல்ல. ஆனால் இவ்வாறு நிகழ்வுகள் நடைபெறும் போது மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைப்பது என்னமோ தொலைக்காட்சிகள் தான். 

முன்பெல்லாம் மழை வெள்ளம் வந்தால், அரசுக்கு கிடைத்திருக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் தண்டோரா போட்டு மக்களை எச்சரிப்பார்கள். வருவாய் துறை அலுவலர்கள், ஊரகத் துறை, தீயணைப்பு, காவல்துறை ஊழியர்கள் வெள்ள அபாய காலங்களில் களத்தில் நின்று பணியாற்றுவார்கள். 

அரசியல் தலைவர்கள், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தொண்டர்கள் என அனைத்து பிரிவினரும் பார்வையிட்டு , நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள். 


தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு வானொலி, தொலைக்காட்சிகள் மூலமாக இதுகுறித்த எச்சரிக்கைகளும் செய்திகளும் வர ஆரம்பித்தன. 


அப்பொழுது எல்லாம் ரமணன் என்ற பெயர் மட்டும் தான் மழை வந்தாலே அடிபடும். ஆனால் தற்பொழுது தொலைக்காட்சிகளில் ஆளாளுக்கு நம் கலாச்சாரத்திற்கு பொருத்தமே இல்லாமல் கோட், சூட், கவுன் அணிந்து கொண்டு ஆண், பெண் வானிலை நிபுணர்கள்?! என்ற பெயரில், பெரிய வரைபடங்களோடு மக்களை பீதியில ஆழ்த்துகிற மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


நேரலை ஒளிபரப்பு என்ற பெயரில் கேமராமேன் சகிதமாக நிருபர்கள் களத்தில் இறங்கி வெள்ளம் சேதம், பொதுமக்கள் துயரம் என காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.


 உண்மையில் துயரங்களை காட்டி எச்சரிக்கை செய்வது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது என்றால் தவறு இல்லை. ஆனால் அதிகமாக பீதியை கிளப்பிக்கொண்டு லேசான சேதத்தையும் மிக பயங்கரமாக காட்டிக் கொண்டு சில மணிநேரத்தில், அல்லது சில நிமிடங்களில் உலகமே அழிந்து விடுவதைப் போன்ற பிரமையை உண்டாக்குவது எந்த வகையில் நியாயம்.


முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் இதற்கு முன் எல்லாமே நன்றாக இருந்தது போலவும் இப்போதுதான் நாசமாய் போனது போல கதை விடுவதும், நேற்று எல்லாமே மோசமாய் இருந்தது, இன்றைக்கு எல்லாம் சரி பண்ணி சேதமே இல்லை என்பது போல புருடா விடுவது இன்னாள் ஆளுங்கட்சிக்காரர்களின் செயலாக உள்ளது.


இதில் விவாதம் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு ஒரு ஜால்ரா, எதிர்க்கட்சிக்கு சண்டையிடுவதற்கு ஒரு ஆள், நடுநிலைமையாளர் என்ற போர்வையில் மிக வேண்டிய பக்கம் கதை விடும் ஆசாமிகள் கூப்பாடு போடுவதும், உண்மையில் அனுபவம் மிகுந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒரு பக்கம் போராடுவதும் நடக்கின்ற கூத்துக்கள் காண சகிக்க இயலாததாக உள்ளது.


தொழில்நுட்ப அறிஞர்கள் கூறுகிற மாதிரி புவி அமைப்பானது விழுகின்ற ஒவ்வொரு துளி நீருக்கும் கணக்கு வைத்து வடிந்து சென்று, வடிகால், ஓடைகள்,குளம், ஏரி, கண்மாய், சிற்றாறு, ஆறு,கடலிலே கலக்கிற மாதிரி இருந்தது.


மனித குல வளர்ச்சியில் குடியிருப்புகள், நகரங்கள், மாநகரங்கள் உருவாகும் காலத்திலே தங்கள் வசதிக்கு தகுந்த மாதிரி நீர் செல்கின்ற பாதை எல்லாம் ஆக்கிரமித்து, நீர் தேங்குகிற இடங்களை காணாமல் ஆக்கி மாற்றி அமைத்ததால் பெருகிவரும் நீரானது சேதத்தை விளைவிக்கிறது.


இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல், ஆளாளுக்கு பொதுமக்களிடம் இருந்து, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என மொத்த கட்டமைப்புமே பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு, மழை வெள்ள காலத்தில் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது.


விவசாயத் தொழில் நஷ்டமாகி போனதால் விவசாயிகள் விளை நிலங்களை விற்றுவிட்டு பிழைப்பு தேடி சென்று விடுகிறார்கள். விளை நிலங்கள் எல்லாம் குடியிருப்பு மனைப்பகுதிகளாக மாறிப் போய் நீர் செல்லும் பாதைகள் எல்லாம் அடைக்கப்பட்டு வழி மாறி போகின்றது. 


சென்னை போன்ற பகுதிகளின் மண்ணின் மைந்தர்கள், வழியில்லாமல் கரை பகுதிகளில் குடிசை போட்டு வாழ்ந்த காலம் போய், தீ விபத்துகளில் குடிசைகள் எரிந்தும் வெள்ளத்தால் குடிசைகள் போயும் வெளியேறி, அல்லது வெளியேற்றப்பட்டு விட்டனர்.

 மனை பட்டாக்களோடு சேர்த்து புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டுகின்றன. நீர் படுகையிலே அரசே குடியிருப்பு மனைகளாக மாற்றியதால் குளங்களும் ஏரிகளும் காணாமல் போய், குடியிருப்பு பகுதிகளால் மாறிவிட்டன. திடீர் கல்வி தந்தைகள் கல்லூரி வளாகங்கள் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளை, ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து கட்டியதன் விளைவாகவும் , அரசே அரசு அலுவலகங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டியதன் விளைவாகவும், வெள்ள நீர் செல்வதற்கு வழி இன்றி சென்னை பெருநகரம் போன்ற பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கடாய் மாறும் நிகழ்ச்சிகளை ஆண்டாண்டு காலமாய் கண்டு வருகிறோம். 

இவற்றைத் தடுக்க வேண்டிய பொதுத்துறை பொதுப்பணித்துறை அலுவலகங்களும் நீதிமன்றங்களும் கூட குளங்களை ஏரிகளையும் அழித்து கட்டப்படுவதைக் காண்கிறோம்.

முன்பெல்லாம் மழை வந்தாலே வீட்டிற்கு ஒருவர் மண்வெட்டி எடுத்து ஏரிகள் குளங்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பாதைகளை மண்வெட்டி போட்டு ஊர் பொது வேலையாகவே செய்ததை கண்டிருக்கிறோம். ஆனால் இப்போது அதற்கென திட்டங்கள் வகுத்து அரசே நடைமுறைப்படுத்தினாலும் 100 நாள் வேலை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் பணியாற்றுபவர்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் கடனுக்கு அந்த வேலையை செய்து தீர்க்கிறார்கள்.

எல்லா திட்டங்களிலும் ஒதுக்கப்படக்கூடிய நிதி முழுமையாக செலவழிக்கப்பட்டது, நேர்மையுடனும் அந்தரங்க சுத்தியுடனும், சமூக நலனுடனும் செயல்படுத்தப்பட்டிருந்தால் இம்மாதிரி வடிகால் திட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்க முடியுமா என்ன.

மேலும் மக்காத பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை உபயோகித்து விட்டு நீர் செல்லும் பாதைகளில் கொட்டி விடுவதனால் அவை அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. மழை நீர் பூமிக்குள் செல்லாதவாறு தடுக்கின்றன. 

இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை, நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், நீர் செல்கின்ற பாதையை அடைத்தவர்கள், ஏரி குளங்களை தூர்த்தவர்கள், வடிகால்களை அமைக்க ஒதுக்கப்பட்ட செலவு பணத்தை ஏப்பமிட்டவர்கள் என பொதுமக்கள், அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள், இதை தடுக்க தவறிய அல்லது வெளிப்படுத்த தவறிய ஊடகங்கள், நீதித்துறை என ஒட்டுமொத்த சமூகமே இதற்கு பொறுப்பாவார்கள். இதையெல்லாம் உணர்ந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறோமா என்ன. குறை சொல்வதற்கு யாரையாவது தேடிக் கொண்டிருப்போம் அல்லது அடுத்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதைப்பற்றி பேசிக் கொண்டிருப்போம் அவ்வளவுதான்... 

Thursday, 27 November 2025

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

 பொதுவாகவே பெண்கள் தனியாகவோ, கூட்டம் கூட்டமாகவோ, குடும்பத்திலோ அல்லது வெளியிலோ வன்முறைக்கு ஆளாவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

குடும்பத்தில் குடும்ப வன்முறை என்ற பெயரிலோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ, உள்நாட்டு போர் அல்லது போர், கலகங்கள், என பெண்கள் வன்முறைக்கு ஆளாவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது.

 மனைவி அழகாக இல்லை, வரதட்சனை கொடுக்கவில்லை, நடத்தையில் சந்தேகம் என்ற பெயரில் ஏதோ ஒரு வகையில், கல்லூரியில் படிக்கும் பெண் அல்லது தனியாக இருந்த பெண், பயணம் செய்த பெண் வன்முறைக்கு ஆளானாள் என்ற மாதிரி செய்திகளை அன்றாடம் கேட்டு வருகிறோம். 


புராணக் கதைகளில் தொடங்கி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் என எங்கு பார்த்தாலும், எல்லா காலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மனிதகுலம் கண்டு கொண்டே இருக்கிறது. 

மகாபாரதத்தில் கணவன்மார்கள் பாண்டவர்கள் சூதாடி தோற்றதாலே, கௌரவர்கள் பாஞ்சாலியின் தலைமுடியை இழுத்து ஆடையை களைந்து அவமானப்படுத்தியதாகட்டும், சகோதரி சூர்ப்பனகை மானபங்கப்படுத்தப்பட்டதால் ராம, லட்சுமனரை பழிவாங்க சீதையை ராவணன் தலைமுடியை தூக்கிச் சென்றதாக, டிராய் நகரத்திலே ஹெலன் என்ற பேரழகியை எதிரிகள் தூக்கிச் சென்றது போன்ற புராணப் புனைவுகளைப் பார்த்திருக்கிறோம். 

செங்கிஸ்கான்கள் படை எடுப்பு மாதிரி ஏராளமான படையெடுப்புகளிலிருந்தும், உள்நாட்டு போர்களிலும், எதிரிகளைக் கொன்று பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டு சென்றதான கதைகளை நிறைய கேட்டிருக்கிறோம். 2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், 'உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நம் நாட்டில் கூட மணிப்பூரில் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது பெண்களின் நிர்வாணமாக இழுத்துச் சென்ற காட்சிகளை புகைப்படங்கள் செய்தித்தாள்கள் வழியாக கண்டிருக்கிறோம். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் என்ற பெயரில் வாச்சத்தி கிராமத்தில் 18 பெண்களை வனத்துறையினரும் அரசு ஊழியர்களும் இழுத்துச் சென்று காட்டிலே வன்புணர்வு செய்ததை எதிர்த்து நடைபெற்ற ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகு 200க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தாலே தண்டிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நம் காலத்திலேயே பார்த்திருக்கிறோம். 

அதுவும் ஒரு பெண்ணரசி ஆட்சி செய்த காலத்திலேயே தமிழ் கூறும் நல் உலகில் இந்த கேவலத்தை கண்டோம். கணவனின் திருட்டு குற்றத்திற்காக சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண்மணி காவல் நிலையத்தில் கற்பழிக்கப்பட்ட கொடுமையையும், அதன் விளைவாக நடந்தது போராட்டங்களின் பின்னணியில் லத்திகா சரண் என்ற காவல்துறை பெண் அதிகாரி விசாரணை நடத்தி குற்றத்தை உறுதி செய்து, காவல் துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் தண்டனை பெற்று தந்த நிகழ்ச்சியும் நம் காலத்தில் நடந்தது. இத்தகைய பெண்களுக்கெதிரான வன்முறை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும், ஒரு நாள் நிகழ்வாகவோ, பல நாட்களாகவோ நடைபெற்ற தாக்குதல்கள் வாழ்நாள் முழுக்க உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு உண்டாக்கக்கூடிய பேரழிவு கொடுமை இது. 

உலகில் சரி பாதி எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும் கல்வி அறிவும் நாகரிகமும் பெருத்து விட்ட இந்த காலத்திலே கூட உலகெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கெலும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகள் எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நாள் சர்வதேச அளவில் கொண்டாடப்படுவதின் பின்னணி இதுதான். 


டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிரபல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராக இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.

 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னால் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரானவர்கள் வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 

1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை வன்முறை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.

இந்த நாளில் பாலின சமத்துவத்திற்காகவும் சம உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் சமதர்ம கோட்பாடுகளுக்காகவும் உழைக்கின்ற அனைவரும் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்போம். 


... சற்றே தாமதமாக கட்டுரை வெளியிடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.... 

எங்கள் 
வீட்டு மகாலட்சுமிக்கு 
இனிய 
பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்.. 





 

Wednesday, 26 November 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 16

 என்னுடைய அரசு பணியில் நான்காண்டுகள் புது டெல்லி திகார் சிறையில் முகாமிட்டிருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எட்டாம் அணியின் மருந்தகத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்தேன்.


நிறைய பேருக்கு சந்தேகம்... டெல்லி சிறைச்சாலையில் இவர்களுக்கு என்ன வேலை?! அப்படி எல்லாம் கூட இருக்குமா என்று!!!. 

திகார் சிறைச்சாலை மட்டுமல்ல, அதற்கு வெகு காலத்திற்கு முன்னரே இருந்து, தமிழகத்தின் காவல் படையில் ஒரு அணி பட்டாலியன் வெளிமாநில பணியாக எல்லை பாதுகாப்பு பணி, மற்றும் தேசிய பாதுகாப்பு பணியில் நீண்ட வருடங்களாக பணியாற்றுவது நிறைய பேருக்கு தெரியாது.

60ல் சீன போருக்கு முன்னரே இருந்து மலபார் போலீஸ் என்று அழைக்கப்படும் தமிழக ரிசர்வ் படையின் ஓரணி படைப்பிரிவு, வடகிழக்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. சீனப் போருக்கு பின்னால் தான் எல்லை பாதுகாப்பு படை என்ற ஒரு தனிப்பிரிவு துவக்கப்பட்ட பிறகு அந்த அணி புது டெல்லிக்கு மாற்றப்பட்டது.

அவ்வாறு அனுப்பப்பட்ட, முன்னாளில் மலபார் போலீஸ் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு புதுடில்லியில் துணை ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம், அந்நிய தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தனது காவல் பணியை செய்து வந்தது. கிங்ஸ் வே கேம்ப் எனப்படக்கூடிய இடத்தில் முகாமிட்டிருந்த அந்த அணியானது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ​​அனைவரையும் மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட அரசு திட்டமிட்டதாகவும், இப்படைப்பிரிவின் பணியை மிகச் சிறப்பாக உணர்ந்த கிரண்பேடி அவர்கள் திகார் சிறைச்சாலை பொறுப்பில் இருந்ததால் தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணியை திகார் சிறைச்சாலையில் பணிபுரிய ஏற்பாடு செய்ததாகவும் சொல்லுவார்கள்.

அது சரி, இதில் மருந்தாளுனர்களுக்கு என்ன வேலை என நினைக்கிறீர்களா?!.

வடகிழக்கு எல்லைப் பகுதி ஏஜென்சி - NEFA என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக காவல் படை அணி ஒரு மருத்துவப் பிரிவு இணைக்கப்பட்டது. இம்மருத்துவ பிரிவில் ஒரு மருத்துவர், இரு மருந்தாளுநர்கள், இரு ஆண் செவிலி உதவியாளர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். இம்மருத்துவக் குழு இந்த படைப்பிரிவு அணியோடு முகாமிட்டிருக்கும் இடத்தில் அவர்களுடன் தங்கி, இணைந்து பணியாற்றும்.

இப்படை பிரிவில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளுக்கு மருத்துவ உதவி செய்வதுதான் இம்மருத்துவக் குழுவின் பணியாகும் உடனடி முதலுதவி மருத்துவ பரிசோதனை வைத்தியம் செய்வது தேவைப்பட்டால் மேல் மருத்துவத்திற்கு அழைத்துச் சென்று உதவி செய்வது இக்குழுவின் வேலை.

எனது நண்பரும், மிக மூத்த மருந்தாளுனருமான சுப்பையா அண்ணாச்சி, புதுக்கோட்டையில் மூத்த மருந்தாளுநர் ரகுபதி ஆகியோர் அந்த காலத்தில் நேபாவில் பணியாற்றியவர்கள் தான். ரகுபதி அவர்கள் பட்டாளத்தில் வேலை பார்த்தவர் என்று அடிக்கடி சொல்லுவார்கள் அது இந்த பணி தான் என்று அப்போது எனக்கு தெரியாது.

இந்த பட்டாளம் எங்கெல்லாம் மாற்றலாகி முகாமிடுகிறதோ அவர்களுடைய இந்த மருத்துவ அணியும் செல்லும்.வழக்கமான மருந்தக பணிகளுடன்  காவலர்களுக்கு ஊசி போடுவதிலிருந்து, கட்டு போடுவது, முதலுதவி செய்தல் போன்ற எல்லா வேலைகளையும் மருந்தாளுனர் செய்ய வேண்டும்.ராணுவத்திலும் மருந்தாளுனரின் பணி அது தான். 

அவ்வாறு இந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு எட்டாம் அணி திகார் சிறைச்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அதனுடன் இணைக்கப்பட்டது மருத்துவ அணியில் நான்கு ஆண்டுகள் நானும் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

திரு பாலசுப்ரமணியம் என்ற மூத்த மருந்தாளுநர், திரு தங்கப்பன் பிள்ளை திரு சிவமணி ஆகிய ஆண் செவிலிய உதவியாளர்களோடும், குலா நந்தா சர்மா என்ற உதவியாளர் கொண்ட மருத்துவ அணியோடு நான் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

மரு. கிரிஜா அம்மையார் எங்கள் மருத்துவ அலுவலராக பணிபுரிந்தார். அவரது கணவர் சி ஆர் பி எஃபில் துணை இயக்குனராக பணிபுரிந்ததால் அவர்கள் வெளியில் இருந்து தினசரி வந்து செல்வார். மற்றபடி எங்கள் அணி திகார் சிறைச்சாலையில் காவலர் குடியிருப்பு பகுதியில் தங்கி பணிபுரிந்தோம். 

காவலர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் பணிபுரிகிறார்கள் என்பதை அவர்களோடு வாழ்ந்த போதுதான் என்னால் உணர முடிந்தது. எவ்வளவு கொடூரமான தட்பவெட்ப நிலையில் அவர்கள் 24 மணி நேரமும் இடைவிடாது பணி புரியக்கூடிய சூழலை நேரடியாக அனுபவிக்க முடிந்தது. 

டெல்லியில் வெயில் காலம் மிகவும் கொடுமையான வெயிலாக, வெப்பமாக இருக்கும். குளிர் காலமோ நேர் எதிரிடையாக சில சமயங்களில் மைனஸ் 4 டிகிரி அளவுக்கு கூட கொடூரமான குளிராக இருக்கும். இதில்  சிறைச்சாலை சுற்று பகுதி, காவல் கோபுரங்களில் நின்று பணியாற்றுவது என்பது மிகவும் கடுமையான ஒன்று. குளிர்காலத்தில் லேசான காற்று கூட நிலை குலைய செய்து விடும். 

இதில் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம், மோசமான குணம் கொண்ட கைதிகள் போன்ற கடினங்களையும் சந்தித்துக் கொண்டுதான் காவலர்கள் அங்கு பணிபுரிந்து வந்தனர். 

அவர்களுடைய கடினமான வாழ்க்கையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 

அங்கு பணிபுரிந்த 1100 காவலர்களின் கிட்டத்தட்ட பெரும்பாலான காவலர்களின் பெயர்கள் எனக்கு மனப்பாடமாக இருந்தது. ஆளை பார்த்தவுடனே பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பணிபுரிந்தேன். அதுதான் எனக்கும் அவர்களுக்குமான நட்பை, நெருக்கத்தை உருவாக்கியது. 

அங்கிருந்து மாற்றலாகி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு கூட, எத்தனையோ வருடங்கள் கழித்து கூட என்னை பார்த்த உடனே வந்து என்னுடைய பெயரை சொல்லி ஐயா நலமாக இருக்கிறீர்களா என்று என்னிடம் பேசும் அளவிற்கு அந்த நெருக்கம் இருந்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. 

அங்கு பணிபுரிந்த காலத்தில் அனைவருக்கும் ஆன மருத்துவ பரிசோதனை முகாம் ஒன்று ஒருமாத காலமாக நடைபெற்றது. அனைவருக்கும் இசிஜி எடுத்து, ரத்த அழுத்தம், நாடி துடிப்பு பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என அனைத்தையும் செய்து ஒரு பதிவேடு தயார் செய்துதேவைப்படுபவருக்கு மேல் பரிசோதனைக்கு டி டி யு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வது அல்லது சிறப்பு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்வது போன்ற வேலைகளை நாங்கள் செய்ய வேண்டி வந்தது. 

அதனால் மேல் அதிகாரிகளில் இருந்து கீழ்நிலை காவலர்கள் வரை எல்லோரும் எங்கள் மீது மிகவும் அன்பாக இருந்தார்கள். இப்படி எல்லா வேலைகளும் முடிந்ததற்கு முதன் முதலில் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் வேலை செய்யும் போது ஊசி போடுவது, கட்டு கட்டுவது, தையல் போடுவது, பிபி பார்ப்பது என்று எல்லா வேலைகளையும் செய்து பழகியதால், திகார் சிறைச்சாலையில் இந்த வேலை செய்வது எனக்கு சிரமமாக  தெரியவில்லை. 

அங்கு பணியாற்றிய போது கிடைத்த மிக நல்ல அனுபவங்களோடு, நான் வேலை பார்த்த காலத்தில் அங்கு பணிபுரிந்த காவலர்கள் மற்றும் பணியாளர்கள் எட்டு பேர் குளிர் மற்றும் வெப்பம் போன்ற தாக்குதல்களால் மரணம் அடைந்தது தான் மிகவும் துயரமான அனுபவம். 

அதேபோல காவலர்கள் யாருக்கேனும் உடல்நிலை மோசமானால் அருகில் உள்ள டி டி யு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம் அங்கு நோயாளியினுடையது பிரச்சனைகளை ஆங்கிலத்தில் எடுத்து விவரிப்போம். அங்குள்ள மருத்துவர்கள் ஆங்கிலம் தெரிந்தால் கூட இந்தியில் மட்டுமே கேள்வி கேட்பார்கள். அப்படி ஒரு இந்தி வெறி அவர்களுக்கண்டு. 

தனிப்பட்ட முறையில் ஒரு மருந்தாளுனராக பல்வேறு இடங்களில் பணி புரிந்த எனக்கு காவல்துறையிலும் பணியாற்றிய அந்த நான்காண்டு காலம் வாழ்நாளில் மறக்க முடியாது முடியாத அனுபவம் தான். 

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...