சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 6 November 2025

நினைவலைகள் 11

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததைப் போல நான் சேர்ந்த காலங்களில் சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் போன்றவை மிகக் குறைவாகவே  இருந்தது.நோயாளிகளும் குறைவாகவே இருந்தனர். சர்க்கரை நோய்க்கு Tolbutamide, Chlorpropamide மாத்திரைகளும் ரத்த அழுத்த நோய்களுக்கு Reserpine, methyldopa மாத்திரைகளும்  வழங்கப்பட்டன,

சிறிது காலம் கழித்து தான் டையோனில் என்று அழைக்கப்பட்ட Glybenclamide வர ஆரம்பித்தது. கண்ணை மூடிக் கண் திறப்பதற்குள், ஒரு 20 30 ஆண்டுகளில் தாறுமாறாக சர்க்கரை நோய்களும், ரத்த அழுத்த நோய்களும், அது தொடர்பான நோய்களும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

ஒரு காலத்தில் வேடிக்கையாக சொல்வார்கள் சர்க்கரை நோய் இதய நோய் வந்துவிட்டால், பணம் சேர்ந்து விட்டது போல.... 

அதாவது பணக்காரர்களுக்கு மட்டுமே உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் இதய நோய்கள் வரும் என்கிற மாதிரியான ஒரு எண்ணம் இருந்தது.

ஆனால் உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும், நடுத்தர வசதி உள்ள மக்களுக்கும் தான் இன்றைக்கு சர்க்கரை நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன... 

இதற்கு காரணம் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தங்கள் என்று எவ்வளவோ சொல்லலாம்.

நான் வேலைக்கு வந்த காலத்தில் கிராமப்புறங்களில் திரைப்படம் பார்ப்பதற்கு அடுத்த ஊருக்கு, அல்லது அடுத்த நகருக்கு தான் செல்ல வேண்டும். இவ்வளவு ஏன் வானொலி பெட்டியை வைத்திருக்கக்கூடிய வீடுகளே கிராமங்களில் இல்லாமல் இருந்தது. ஒன்று இரண்டு பேர் அல்லது ஊர் பஞ்சாயத்தில் வைக்கப்பட்டுள்ள வானொலிப்பெட்டி தான்.

அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை தான் திரைப்படப் பாடல்கள் ஒலிக்கும்.

 அன்றைய மனிதனுக்குத் தேவை என்பது உணவு, உடை, இருப்பிடம் என்பதுதான் பெரும் பகுதியாக இருந்தது. உழைப்பு சிந்தனை, அதற்கு மேல் பெரிதாக கிடையாது. எப்போது வேண்டுமானாலும் கோயில் திருவிழாக்கள் அல்லது பொது நிகழ்ச்சிகள் அவ்வளவுதான்... அதிகமான தேவைகளும், சிந்தனைகளும் கிடையாது. மனிதர்களுக்கு இடையிலான உறவு முறை மிகவும் நன்றாகவே இருந்தது. 

முன்னேறி உலகம் மிக சுருங்கிவிட்டது ஆனால் நேர் எதிர்நிடையாக மனிதர்களுக்கு இடையே உள்ள உறவு முறை விரிசலாகிப் போனது மன அழுத்தங்களும் மன உளைச்சல்களும் அதிகமாகிப் போயின. உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டாலும் புதுப்புது நோய்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின..

சுகாதாரத்துறை தொற்றக்கூடிய நோய்கள் எனும காலரா, பிலேக், மலேரியா, அம்மை போன்ற தொற்று நோய்களுக்கு செலுத்திய கவனத்தைக் காட்டிலும் தொற்றாத நோய்கள், சர்க்கரை நோய் இதய நோய் மகளிர் காண மார்பக கட்டி உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அதன் விளைவாகத்தான் NCD எனும் தொற்றா நோய்களுக்கான திட்டங்கள் உருவாக வேண்டிய காலகட்டமானது.

நோயாளிகளும் வெளிப்புற நோயாளிகளுக்கான சீட்டு வைத்து வைத்தியம் பார்த்த நிலைமை மாறி, நோட்டு புத்தகம் போட்டு மாத்திரைகள் வாங்கக்கூடிய காலமாக மாறிவிட்டது. இதில் சில நோயாளிகள் தாங்கள் வைத்தியம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு மருத்துவமனையிலும், உதாரணமாக ஆரம்ப சுகாதார நிலையம், அருகில் உள்ள தாலுகா மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை என மூன்று இடங்களிலும் நோட்டு போட்டு மருந்து வாங்கி பாதி சாப்பிட்டது போக, மீதியை வீட்டிலேயே குப்பையாக சேர்த்து வைக்கும் பழக்கமும் வந்துவிட்டது. இதை யாராலும் கண்டுபிடிக்க, தடுக்க முடியாது. இந்த லட்சணத்தில் ஒரே மருத்துவமனையில் இரண்டு மூன்று நோட்டுகள் போட்டு வாங்குகிற ஆசாமிகளும் உண்டு..

நான் திருமயம் அரசினர் மருத்துவமனையில் பணியாற்றிய போது பல நோயாளிகள் துண்டு துண்டாக சிறு நோட்டுகளோடு வருவார்கள். அவர்களால் காசு கொடுத்து வாங்குவதற்கு வழி இல்லை. அதனால் நான் மருத்துவர் கோபாலிடம் எனது கருத்தைச் சொன்னேன். யாராவது ஸ்பான்சர் ஷிப் செய்தால் நாமே ஒரே மாதிரியான நோட்டுகளை தயாரித்து அவர்களுக்கு வழங்கலாம் என்றேன்.

அவரும் ஒப்புக்கொண்டு சிலரை ஸ்பான்சர் செய்ய வைத்தார். அதன் படி மூன்று வண்ணங்களில் நோட்டுகள் தயாரித்தது, சர்க்கரை நோய்க்கு சிவப்பு வண்ணத்தில், இதய நோயாளிகளுக்கு மஞ்சள் நிறத்தில், இரண்டும் உள்ளவர்களுக்கு ஊதா என்ற மூன்று வண்ணங்களில் நோட்டுகள் தயாரித்து, தனி பதிவேடு உருவாக்கி, இந்த நோயாளிகளுக்கு தனி எண் கொடுத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஏற்பாடு செய்தோம். ஓரளவுக்கு ஒழுங்குபடுத்தி சிறந்த சேவையை செய்ய முடிந்தது. 

இதன் பின்னர் அரசே என் சி டி மூலமாக தனியாக வெளி நோயாளிகள் அட்டை வழங்கியதாக அறிகிறேன்.


ஆனாலும் இஷ்டத்திற்கு ஆங்காங்கே சர்க்கரை இதய நோய்களுக்கான மாத்திரைகள் மக்கள் நோட்டு போட்டு வாங்குகிறார்கள் இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் படவேண்டும்.

நான் கூட இயக்குனரகத்தில் பணிபுரிந்த காலத்தில், எல்லா இதய நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும் ஒரு யூனிக் நம்பர், அது ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டு போன்ற ஏதேனும் ஒன்றில் இணைக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட எண் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தேன். 

ஆனால் அது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல என்பது எனக்கு தெரியும். ஆனால் எப்படி இருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்கிற கருத்தில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காது என நினைக்கிறேன். 

1 comment:

  1. அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே. 50 வருடங்களுக்கு முன்பு நம்மை அச்சுறுத்துக் கொண்டிருந்த வியாதி காலரா, மலேரியா, பெரியம்மை, எலும்புருக்கி நோய் எனப்படும் (TB ), தொழுநோய், யானைக்கால் வியாதி போன்றவைகள். மலேரியாவை ஒழிப்பதற்கு NMEP, தொழுநோயை ஒழிப்பதற்கு NLEP போன்ற திட்டங்களை ஏற்படுத்தி முழுமையாக அதை கட்டுப்படுத்தி விட்டார்கள்.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...