சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 25 November 2025

இந்திய அரசியல் அமைப்பு சட்ட தினம்

மனித குல வரலாற்றில் எழுதப்பட்ட சட்ட உருவாக்கம் இரு முறை பெரிதாக கருதப்பட்டு வருகிறது. 

 உலகில் எழுதப்பட்ட முதல் சட்டம் எது என்பதற்கு ஹம்முராபியின் சட்டத்தொகுப்பு (கி.மு. 1754) மற்றும் மாக்னா கார்ட்டா (கி.பி. 1215). ஆகிய இரு தொகுப்புகளுமே முக்கியமானவை ஆகும். 

ஹம்முராபியின் சட்டத்தொகுப்பு என்பது பாபிலோனிய அரசர் ஹம்முராபியால் உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தொகுப்பு, உலகின் பழமையான மற்றும் முழுமையான சட்டத்தொகுப்பாக கருதப்படுகிறது. இது கி.மு. 1754-ல் எழுதப்பட்டது.

மாக்னா கார்ட்டா என்பது இங்கிலாந்தின் மன்னர் ஜான் என்பவரால் கி.பி. 1215-ல் கையெழுத்திடப்பட்டது. இது முதலில் எழுதப்பட்ட அரசியலமைப்பாகக் கருதப்படும் ஐரோப்பா மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான முதல் ஆவணமாகும். இது மன்னரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது.


இந்திய துணைக்கண்டம் பல நூற்றாண்டுகளாக அங்கம், வங்கம், கலிங்கம், மகதம்...... சேர சோழ பாண்டிய நாடுகள் என ஐம்பத்தாறு தேசங்களாக சில நூற்றாண்டுகள், பல ஆயிரம் தேசங்களாக சில நூற்றாண்டுகள், மௌரிய, குப்த, முகலாய.... பேரரசுகள் என சில நூற்றாண்டுகளாக ஆளப்பட்டு வந்திருக்கிறார்கள். 

பல காலமாக சனாதனவாதிகள் வழிகாட்டலோடு வர்ணாசிரம கோட்பாட்டையும், பெண்களுக்கும், சூத்திரர்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு மனு நீதி அடிப்படையிலும், மன்னர்கள், அரசவை சொல்லும் சட்டங்களின் அடிப்படையில், இஸ்லாமிய, அல்லது சனாதன மத கோட்பாடுகளின் அடிப்படையில் ஆட்சிகள் நடைபெற்றுள்ளது. ஒரே சீரான, அனைவருக்கும் பொதுவான, எழுதப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஒருபோதும் ஆட்சிகள் நடைபெற்றதில்லை. 

இன்றைய நவீன இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னால் இருந்து அரசியலமைப்புச் சட்டத்திற்கான முன்னோடிகளாக 1773 முதல் 1950 வரை பல்வேறு மாற்றங்களைக் கண்டு, சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1948 இல் உருவாக்கப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது அரசியலமைப்புச் சட்டமாக உள்ளது. 


கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் 1773 இல் தி ரெகுலேஷன் ஆக்ட் என்பது முதலில் துவக்கமாக இருந்தது.

ஒழுங்குமுறை சட்டம்1773, நீதித்துறை சட்டம்1781, அறிவிப்புச் சட்டம்1788, 1793 ஆம் ஆண்டு சாசனச் சட்டம், 1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டம்,  1833 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் என ஏராளமாய் கிழக்கிந்திய கம்பெனிகள் சட்டங்கள் மாறி மாறி வந்து, இந்திய மக்களை கொடுமைப்படுத்தி வந்ததன் விளைவாக 1857 இல் சிப்பாய் கலகம் என்னும் முதல் சுதந்திரப் போர் நடைபெற்றது. அப்போர் தோல்வியடைந்து ஆங்கில ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு, இந்தியா ஆட்சி நேரடியாக பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடிப் பார்வையின் கீழ் வந்தது. 

இந்திய அரசு சட்டம் 1858 உருவாக்கப்பட்டது, பிரிட்டிஷ் மகாராணியாரின் ராணியின் பிரகடனம் 1858 என்ற அறிவிப்பு மூலம் நேரடியாக ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டது. 

அதன்பிறகு ஏற்பட்ட கால மாற்றங்கள், உருவான அரசியல் விழிப்புணர்ச்சிகள், பல்வேறு மக்கள் எழுச்சி போராட்டங்களுக்குப் பிறகு இந்திய மக்களுக்கான அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க வேண்டிய தேவை உருவானது. 

 வேறு வழி இல்லாமல் உருவாக்கப்பட்ட 1919 ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள், மக்களுடைய தேவைகள், அபிலாசைகளை பூர்த்தி செய்யாததால் நடைபெற்றது போராட்டங்களுக்குப் பிறகு 1927 இல் சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. 

சுதந்திரம் பெற இந்திய சுதந்திர போராட்டத்திற்கான இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பிறகு 1936 ஆம் ஆண்டிலும், மற்றும் 1939 ஆம் ஆண்டிலும் இருமுறை இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைத்தது. அதன்பின்பு 1946 ஆம் ஆண்டு மே மாத அரசியல் நிர்ணய சபை பரிந்துரைக்கப்பட்டு, 1946 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது.

 அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இன்று நடைபெறுவதைப் போன்று அனைத்து மக்களும் வாக்களிக்க கூடிய தேர்தலாக நடைபெறவில்லை. பட்டாதாரர்கள், பட்டதாரிகள். நிலச்சுவான்தாரர்கள் என குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வாக்களித்து அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர். 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். பின்னர் சுதேச சமஸ்தானங்களின் 93 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தார். அரசியலமைப்பை உருவாக்குதல், 165 நாட்கள் வரையிலான கூட்டத் தொடர்கள் கொண்ட கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது.

9 டிசம்பர் 1946 அன்று அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. தனி நாடு கோரி இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. சச்சிதானந்த சின்கா கூட்டத்திற்கு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

11 டிசம்பர் 1946 அன்று இராசேந்திர பிரசாத் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராகவும், ஹரேந்திர குமார் முகர்ஜி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆலோசகராக பி. என். ராவ் நியமிக்கப்பட்டார்.

13 டிசம்பர் 1946 அன்று மன்றத்தில் ஜவகர்லால் நேரு அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறிக்கோளுடன் வந்தார்.

22 ஜனவரி 1947 அன்று நேருவின் குறிக்கோள் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

22 சூலை 1947 அன்று இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதுவரை நடைபெற்ற அத்தனை நிகழ்ச்சிகளும் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திற்கான நிகழ்வுகளே.. 

15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் முதல் இடைக்கால அரசு அமைந்தது. 562 சமஸ்தானங்கள் பெரும்பாலானவை உடனடியாகவும், சில படிப்படியாகவும் சுதந்திர இந்தியாவில் இணைந்தன. 

29 ஆகஸ்டு 1947 அன்று அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவு குழுவிற்கு அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார். 16 சூலை 1948 அன்று அரேந்திர குமார் முகர்ஜி மற்றும் வி. டி. கிருஷ்ணமாச்சாரி அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26 நவம்பர் 1949 அன்று, அம்பேத்கர் முன்மொழிந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த நாளையே இந்திய அரசியல் அமைப்பு சட்டதினமாக கொண்டாடுகிறோம். 

பல்வேறு மொழிகளையும், இனங்களையும், மத, சாதிய வேறுபாடுகளையும் கொண்ட மக்கள் வாழும் நாடான இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுகிறது என்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. 

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்கள் அலசி ஆராயப்பட்டு, அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை உள்ளடக்கி ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. 

இது குறித்து இருவிதமான கருத்தோட்டங்கள் அன்று நிலவின. உலக நாடுகளில் பல்வேறு முற்போக்கன் அம்சங்களையும் இந்திய சூழலுக்கு தகுந்தவாறு உருவாக்கப்பட்ட சிறந்த சட்டம் என்று ஒரு கருத்தோட்டமும், பல்வேறு முரண்பாடுகளைக் (Bundle of controversies) கொண்ட அவியல் சட்டம் என விமர்சனக் கருத்தோட்டமும் உண்டு. 

வேற்றுமையில் ஒற்றுமை, மதசார்பின்மை, ஆண் பெண் பாலின சமத்துவம், அனைவருக்குமான வாக்குரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என பல்வேறு முற்போக்கான கருத்துக்களை கொண்ட அரசியலமைப்பு சட்டமாக உருவாக்கப்பட்டது. 


எனினும் மதவெறி, சாதி வெறி, இனவெறி போன்ற கோட்பாடுகள் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கக் கூடிய உரிமைகளையும் பாதுகாப்பையும் தகர்க்கின்ற வேலையை செய்து வருகின்றது. 

பாடுபட்டு போராடி பெற்ற சுதந்திரத்தையும், போராடி பெற்ற உரிமைகளையும், பாதுகாக்க, மத நல்லிணக்கத்தை சாதிபேதமற்ற சமத்துவத்தை பாதுகாக்க , இந்த அரசியல் அமைப்பு சட்ட தினத்தில் அனைவரும் உறுதியேற்போம். 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...