மருந்தாளுனர்களுக்கு களப்பணி இருந்தது யாருக்காவது தெரியுமா? முன்னாள் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களுக்கு நினைவிருக்கிறதா?!
நான் வேலைக்கு வந்த காலத்தில் மாதாந்திர நிரந்தர பயணப்படி Fixed tour allowance வழங்கப்பட்டது.மாதாந்திர பயணப்படி மருந்தாளுனர்களுக்கு 30 ரூபாய் வழங்கப்பட்டது. 20 நாளைக்கு பயணித்தால் முப்பது ரூபாய். அதற்கு குறைவான நாட்கள் என்றால் விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும். பயணத்திட்டம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. மகப்பேறு மையங்களுக்கும், பள்ளி நல திட்டத்தில் மருத்துவரோடு சென்று மாத்திரைகள் வழங்குதல் மட்டுமே நமது வேலை. சுயமாக ஒன்றும் கிடையாது. மாதாமாதம் ஒரு பயணம் செய்த பட்டியலை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேதியில், இந்த ஊருக்கு மருத்துவ அலுவலருடன் சென்றேன்(Accompanied with medical officer ) என்பதுதான் அதில் உள்ள சாராம்சம்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் வாகனத்தில் மருத்துவ அலுவலரோடு காலை நேரம் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை முடிந்த பின் மதிய நேரம் சென்று வருவோம்..
எங்கள் மருத்துவர் என்.எஸ். கண்ணன் அவர்கள் அவரது நண்பரான மாவட்ட காசநோய் அலுவலருக்கு சொந்தமான புல்லட்டில் ஆய்வுக்கு என்னை அழைத்துச் செல்வார். சில நேரம் மருத்துவர் கோபண்ணா அவர்கள் அலுவலக வாகனம் அல்லது அவரது ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வார்.
நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் 108 பஞ்சாயத்துகளைக் கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம். அதன் ஒரு எல்லை தஞ்சைக்கு அருகில் இருக்கும். பிற்காலத்தில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட அந்த ஒன்றியம், அவ்வளவு பெரிதானது.
நிரந்தர பயணப்படி ஒன்றும் அதிக தொகை இல்லை அவ்வளவு தூரத்திற்கு சொந்த வாகனத்தில் பெட்ரோல் போட்டு சென்றால் கூடுதல் செலவு தான் ஆகும் இருந்தாலும் மருத்துவர்கள் அதை பொருட்படுத்தாமல் தங்கள் கடமையை செய்வதற்காக பயணித்து வருவார்கள் அப்படி சேவை மனப்பான்மை நிறைந்திருந்த காலம் அது.
செல்லும் இடங்களில் நமக்கும் செலவு செய்து நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள். மருத்துவர் என் எஸ் கண்ணன் அவர்கள் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளை ஆய்வு செய்து மாணவர்கள் மத்தியில் சுத்தம், சுகாதாரம் சுற்று புறச்சூழல் பற்றி என்னையும் பேச சொல்லுவார். ஓரளவு கூட்டங்களில் கூச்சமின்றி பேசுவதற்கு அந்த பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது.
சாதாரணமாக மாத்திரை மருந்து வழங்குவதை தாண்டி பல்வேறு சுகாதார திட்டங்களில் மக்களோடு இணைந்து பணியாற்ற கூடிய வாய்ப்புகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறையவே இருந்தது.
பின்னர் நடமாடும் மருத்துவப் பிரிவு ஆரம்ப சுகாதார நிலையங்களில் துவக்கப்பட்ட பின்னர் மருத்துவருடன் களப்பணி செல்லும் பணியும், பிக்சட் டூர் அலவன்ஸ் வழங்கப்படுவதும் நின்று போனது.
நடமாடும் மருத்துவ பிரிவில் ஒரு வாகனம் வழங்கப்பட்டு, இரு மருத்துவ அலுவலர்களும் இரண்டு மருந்தாளுனர்களும் ஊர்தி ஓட்டுநர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
நேர்மையாக சொல்வதானால் நடமாடும் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய மருத்துவ அலுவலர்களும், பணியாளர்களும் களத்திற்கு செல்லாமலேயே காலத்தை கடத்தியதால், அந்த நடமாடும் மருத்துவப் பிரிவு திட்டமே கலைக்கப்பட்டு விட்டது. அதனால் களப்பணி என்பது காணாமல் போய்விட்டது.
No comments:
Post a Comment