2016 ஆம் ஆண்டு சென்னையை வர்தா புயல் ஆட்டிப்படைத்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது நான் பொதுச் சுவாதாரத்துறை இயக்குனரகத்தில் மருந்து கிடங்கு அலுவலராக பணிபுரிந்து வந்தேன். முதல் நாள் கடுமையான புயலுக்கு பின் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது. போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டிருந்தது
ஆங்காங்கே மரங்கள் விழுந்தும் மின் கம்பங்கள் சாய்ந்தும், வீடுகள் நீரால் சூழப்பட்டும் இருந்தன. நான் இருசக்கர வாகனத்தில் இயக்குனரகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது பொது சுகாதாரத் துறை இயக்குனர் திரு குழந்தைசாமி அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
உடனடியாக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து, வெள்ள நிவாரண பணிக்காக மருந்துகள் வாங்கிட தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்கு கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்திடுமாறும், அண்ணா நகரில் உள்ள மருந்து கிடங்கியிலிருந்து தேவையான மருந்துகளை பெற்றுக் கொண்டு எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி அலுவலகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கான முகாம்களை ஏற்பாடு செய்யச் சொன்னார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், ஆண் செவிலி உதவியாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் மருத்துவக் குழுக்களையும் சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு குழுக்களை உருவாக்கிட ஏற்பாடுகள் செய்தார்.
என்னுடன் பணியாற்றிய மருந்தாளுனர்கள் சூரியகுமார், செந்தில் போன்றவர்கள் உதவியுடன் மருந்துகளை பெற்று தயாரிப்பு பணிகள் செய்து முடித்தேன். மறு நாளே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு , சுகாதார குழுவினர் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பெருமளவு நோய்த்தொற்று, உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
அப்போதைய சுகாதாரச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களும் இயக்குனர் திரு குழந்தை சாமி அவர்களும் ஏனைய உயர் அதிகாரிகளும் இடைவிடாது முகாம்களுக்கும் தலைமை இடத்திற்கும் வருகை தந்து உற்சாகப்படுத்தி மருத்துவ முகாம்கள் சிறப்புடன் நடத்தச்செய்தனர்.
இயக்குனர் அவர்கள் தினசரி வருகை தந்து ஆய்வுகள் நடத்தி புதிய தேவைகள் ஏதும் ஏற்பட்டால் கேட்டறிந்து தீர்வு கண்டார். இரண்டாம் நாள் முகாம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு மருந்தாளுனர் என்னிடம் வந்து சார் சில பெண்கள் தயங்கி மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கேட்டார்கள் என்று சொன்னார். இதை இயக்குனருடன் சொன்னவுடன் உடனடியாக அதற்காக ஏற்பாடுகள் செய்து தீர்வு கண்டார்.
ஏனென்றால் இதுபோன்ற காலங்களில் கீழ் மட்டத்தில் என்ன விதமான தேவைகள் ஏற்படும் எந்த விதமான நோய்கள் ஏற்படும் என்பதை உடனே ஆய்வுகள் செய்து தீர்வு காணும் போது தான் பிரச்சினைகள் ஏதும் வராமல் தடுக்க முடியும்.
அந்த அளவிற்கு எங்களுக்கு சுதந்திரமும் வழிகாட்டுதலும் உற்சாகம் அளித்தார். அந்த முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், ஆண் செவிலிய உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஒட்டுனர்கள் அனைவரது பங்கேற்பு மகத்தானவை.
அடுத்த ஆண்டு பெருமழை வந்த போதும் இதே போல ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக சாதித்தோம்.
அவ்வாறு செயல்படுவதற்கு ஏற்கனவே கும்பகோணம் மகா மகம் விழாவின்போது 12 நாட்கள் மருத்துவ முகாம்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
2013இல் முதன் முதலாக அப்போது தான் இயக்குனர் அலுவலகத்தில் சேர்ந்த நேரம். மருந்து கிடங்கு அலுவலருக்கு என்ன பணிகள் என்று வரைமுறை செய்யப்படாதிருந்த நிலையில் இயக்குனரகத்தில் மருந்துகள் தொடர்பான எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்து உதவி செய்வது தான் எங்களது பணி .
இயக்குனர் அவர்கள் என்னை அழைத்து மகாமகம் போய் வருகிறீர்களா என்று கேட்டார் .போய் வேலை செய்கிறேன் சார் என்றேன். எத்தனை நாட்கள் அங்கு இருக்க முடியும் என்று கேட்டார். சார் எத்தனை நாட்கள் இருக்கச் சொல்கிறீர்கள் அவ்வளவு நாட்களும் இருக்கிறேன் என்றேன். 12 நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன இரண்டு நாள் முன்னாடியே சென்று விடுங்கள் அங்கு உள்ள துணை இயக்குனரோடு இணைந்து கொண்டு உருவாக்கப்பட்ட மருத்துவ முகாம்கள் சிறப்புடன் செயல்பட பணியாற்றுங்கள் என்று அனுப்பி வைத்தார்.
அங்கு மிகப் பெரிய அளவில் ஏராளமான உயர்நிலை அதிகாரிகள் அடுத்த நிலை அதிகாரிகள் என பெரும் பட்டாளமே துரித கதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். . அவர்களோடு இணைந்து கிட்டத்தட்ட 100 முகாம்களை உருவாக்கி செயல்பட்டோம். என்ன மருந்து தேவையோ எது தேவையோ வாங்கிக் கொள்ளுங்கள், தகவல் மட்டும் சொல்லி விடுங்கள் என்று உயர் அதிகாரிகள் சுதந்திரம் கொடுத்தார்கள்.
தமிழகமெங்கும் இருந்தும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் வந்து சேர்ந்தார்கள். மருத்துவர்கள் மருந்தாளுனர்கள் ஆண்செவிலி உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார உதவியாளர்கள், பணியாளர்கள் என ஏராளமான பணியாளர்கள் குறிக்கப்பட்டு ஆங்காங்கே முகாம்களை அமைத்து செயல்பட்டோம். இதில் இறுதி நாள் அன்று பல்ஸ் போலியோ வேறு வந்து சேர்ந்தது. 100% குழந்தைகளையும் பல்ஸ் போலியோவில் சொட்டு மருந்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டது.
அதன் விளைவாக அந்த மகாமகத்தில் எந்த விதமான உயிர் சேதமோ, கொள்ளை நோய் தொற்றோ ஏற்படாமல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது.
இம்மாதிரி மக்கள் சேவையில் மருத்துவ முகாம்களில் பணியாற்றி அனுபவம் பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது அதற்கு வாய்ப்பளித்த வழிகாட்டிய ஊக்கமளித்து உயர்நிலை அலுவலர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
என்னை போலவே ஏராளமான மருந்தாளுனர்களுக்கு வெள்ள நிவாரண பணி, சுனாமி பாதிப்பு நிவாரண பணி, மகாமகம் பணி போன்று பல்வேறு நிவாரண பணிகளில் ஈடுபட்ட அனுபவங்கள் உண்டு. ஒரு மருந்தாளுனர் என்ற வகையில் இம்மாதிரி முகாம்களில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்பது பெருமைக்குரிய விஷயம் தானே....
No comments:
Post a Comment