நான் படிக்கின்ற காலத்திலே ஒரு திருக்குறளை படிக்கும் போது எனக்கு சிரிப்பு வரும்.
"இடுக்கண் வருங்கால் நகுக...."
அந்த காலத்தில் சிவாஜி கணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில் துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வச்சான் வள்ளுவனும், சரிங்க என்ற வரிகள் வரும்.
என் அப்பாவிடம் கேட்டேன் "அது எப்படிப்பா துன்பம் வரவேளையில் சிரிக்க முடியும், வள்ளுவர் எப்படிப்பா சொல்லி இருப்பார்.
அவர் சொன்னார்" திருக்குறளை முழுதாக படி, அர்த்தம் புரியும்.. "
எல்லோருமே அந்த முதல் வரியோடு நிறுத்தி விடுவார்கள், முழுதாக சொல்ல மாட்டார்கள். "இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்து அஃதுப்பது இல்"
துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்பதே அதன் பொருள்.
சாதாரணமாக உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் எது என கேட்டால் ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனை கேற்றவாறு சொல்லுவார்கள். ஜவஹர்லால் நேருவை கேட்டபோது என் தாயின் மடியில் படுத்திருந்த நாட்கள் தான் மறக்க முடியாத நாட்கள் என்றார்.
கலைஞர்களை கேட்டால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்த காலத்தை மறக்க முடியாத நாட்கள் என்று சொல்வார்கள்.
காதலர்களை கேட்டால் தாங்கள் காதலில் வீழ்ந்த நாட்களைச் சொல்வார்கள்.
மனைவியை நேசிக்கும் கணவனை கேட்டால் திருமணம் புரிந்த காலத்தை சொல்வார்கள்.
சாப்பாட்டு ராமன்களை கேட்டால் அவர்கள் வகைவகையாய் தின்ற கதையை சொல்லுவார்கள்.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி ஐயாவை கேட்டால் தான் மிசாவில் சிறையில் இருந்த காலத்தை சொல்லுவார்.
எல்லோரும் மகிழ்ந்த காலத்தையே சொல்லுவார்களே.. நீங்கள் துன்பப்பட்ட காலத்தினை மறக்க முடியாத நாட்கள் என்று சொல்கிறீர்களே என்று கேட்டதற்கு, வாழ்க்கையில் அதைவிட மோசமான துன்பத்தை காண முடியாது. எதிர்த்துப் போராடி வெற்றி கண்டால், இதைவிட துன்பமான காலம் ஒன்று வந்து விடாது., அப்படியே வந்தாலும் எதிர்த்து போராடும் வல்லமை வரும் என்று கூறினார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் தன் வாழ்நாளில் ஐயாயிரம் நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த காலத்தை, பயனுள்ளதாக படிக்கவும், ஏராளமாய் எழுதவும் ஜவஹர்லால் நேரு பயன்படுத்திக் கொண்டார். துன்பத்தை பயனுள்ளதாக எதிர்கொண்ட மாமனிதர் அவர்.
அதேபோல தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக போராடி வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா துன்பத்தை இலகுவாக எடுத்துக்கொண்டு வெற்றி கண்டார்.
மாபெரும் சிந்தனையாளரும், இந்திய தத்துவ இயல் ஆய்வாளரும், எழுத்தாளருமான ராகுல்ஜி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போது, மூன்று ஆண்டுகள் ஹிஜாரிபாக் பீகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது வால்காவிலிருந்து கங்கை வரை எனும் மாபெரும் சரித்திர நாவலை எழுதி மக்களுக்கு அளித்தார்.
மக்கள் நலன், சமூக நலன் பற்றி மட்டுமே சிந்திக்க கூடியவர்களால் மட்டும் தான் துயரங்களையும், துன்பங்களையும் மிக எளிதாக தாங்கிக் கொள்ள இயலும்.
நாம் வாழும் காலத்தில் நிறைய பேர் புலம்புவதை கேட்டிருக்கிறோம்.
"எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது" .
ஒரு சிறு துன்பத்தை கூட தாங்க இயலாமல் புலம்புகின்ற மக்கள் வாழும் காலமிது.
வள்ளுவரின் வாக்கும், அந்த மகா மனிதர்களுடைய துன்பங்களை எதிர்கொண்ட வீர வரலாறும் நமக்குத் தரும் மனவலிமையைத் தரும்.
No comments:
Post a Comment