சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 6 November 2025

நினைவலைகள் 12

 பழைய திரைப்படங்களில் காச நோய் என்றாலே மிக பயங்கரமான நோய் போல காட்டி இருப்பார்கள் கிட்டத்தட்ட வாழ்க்கையை முடிந்தது போல காட்சிகள் இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி மூன்றில் ஒரு பகுதியினருக்கு காச நோய் தொற்றும் அபாயம் இருந்து கொண்டே இருக்கிறது..

இந்தத் தொற்று நோய் ஒழிப்பில் சுகாதாரத் துறையும் அதில் பணியாற்றும் பல பணியாளர்களுக்கும் மிகச் சிறந்த பங்கு உள்ளது என்பதை அறிவோம்.ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளில் காசநோய் ஒழிப்பும் ஒன்று. காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்குதல், அட்டைகள் பராமரித்தல், நோயாளிகள் தொடர்ச்சியாக மருந்து பெறாவிட்டால் அவர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்புதல் ஆகிய பணிகள் மருந்தாளுனர்கள் தான் செய்ய வேண்டும். 

நான் பணிக்கு சேர்ந்த காலத்தில் மாவட்ட காசநோய் கழகத்தில் இருந்து, மாவட்ட காசநோய் அலுவலர் அவ்வப்பொழுது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து ஆய்வுகள் செய்வார். அப்போது மாவட்ட காசநோய் அலுவலராக இருந்தவர் எங்கள் மருத்துவர் அவர்களின் நெருங்கிய நண்பர். அதனால் அவர் வருவதை நாங்கள் மகிழ்வோடு எதிர்பார்ப்போம். நன்றாக பேசுவார் மக்களுக்கு நிறைய அறிவுரைகள் வழங்குவார். புகை பிடிக்கக் கூடாது, புகையிலை போடக்கூடாது என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் அவர் மட்டும் சார்மினார் சிகரட்டை விடாமல் புகைத்து தள்ளுவார். வேடிக்கையாக இருக்கும்..

பின்னாளில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் காசநோய் பிரிவில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. உண்மையில் காச நோயாளிகளை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கும். எலும்பு கூடாக, கண்கள் குழி விழுந்து, இருமிக் கொண்டே திரிவார்கள்.

ஒருமுறை இருமினால் கூட நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளை பரப்பக்கூடிய ஆபத்து உடையவர்கள் அவர்கள்.

கற்பனை செய்து பாருங்கள்... மருந்து வழங்கக்கூடிய இடத்தில் நோயாளிகள் முகத்திற்கு நேராக இருமும் போது மருந்தாளுனர்களுக்கு காசு நோய் தொற்றிக் கொள்ளக்கூடிய ஆபத்து எந்த அளவுக்கு இருக்கும் என்று... காசநோய் மருந்தகங்களில் வேலை பார்க்கக் கூடிய அனைத்து தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருந்தாளுனர்களுக்கு மட்டும் எந்த விதமான சலுகையும் வழங்கப்படுவதில்லை.

நிதி பயனளிக்கக்கூடிய ஊக்கத்தொகை ஒன்றும் கேட்கவில்லை, குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு வழங்கப்படக்கூடிய அந்த விடுமுறையாவது வழங்கலாமே என்று பலமுறை முயற்சி செய்தும் இதுவரை கிட்டவே இல்லை. நானே துறைசெயலாளர்களில் இருந்து துறை இயக்குநர்கள் வரை கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளில் பலமுறை பங்கேற்று இருக்கிறேன். இது ஒரு பெரிய விஷயமா, உடனே ஏற்பாடு செய்து விடுவோம் என்று வாக்குறுதிகள் மட்டும் விடாமல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இதுவரை நம் மாதிரி எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. 

அது என்னவோ தெரியவில்லை, இத்துறையில் மருந்தாளுனர்கள் மட்டும் அனாதை பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். அவர்களது கோரிக்கைகளும் சாகாவரம் பெற்றவைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன...

காசநோய் தடுப்பு திட்டத்தில் மருந்தாளுனர் பங்கேற்பு இருந்தபோதிலும் அதற்கான மதிப்பு தெரியாமலே மறைந்து விடுகிறது..... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...