காண்டோன் -இ ஜாஹிஸியே (2015)
(வரதட்சணையின் சர்க்கரை கிண்ணம்) இரானிய திரைப்படம்.
**********************************
ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான தேவை உணவு, உடை, இருப்பிடம் இவற்றை அடைவதற்கான நல்ல ஒரு வேலை அல்லது வருமான வாய்ப்பு.
ஒரு நல்ல வேலை அல்லது ஓரளவிற்கு வருமான வாய்ப்பு இல்லை என்றால், வசிக்கும் வீடு இல்லாமல் எப்படி எல்லாம் அல்லல் பட வேண்டி இருக்கும் என்பதை ஒட்டிய கதை தான். அதுவும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர் என்றால் கூடுதல் சிரமம் தான்...
அட்டாவும் மசூமேவும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கிறார்கள். அவர்களின் குத்தகை காலம் முடிந்துவிட்டது, மேலும் அவர்களால் கூடுதல் வாடகையை செலுத்த முடியாது எனினும் அவர்கள் இந்த வீட்டில் தங்கி வாழ விரும்புகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை விவரிப்பது தான் இந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம்.
அட்டா ஒரு மெக்கானிக். அவன் மனைவி மசுமே ஹவுஸ் வைஃப். இவனது தம்பி திருமணமாகாத எதைப்பற்றியும் கவலைப்படாத தூங்குமூஞ்சி,வெகுளி....
இவர்கள் ஒரு நடுத்தரமான வீட்டில் வசிக்கிறார்கள். இவர்களது வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கிறார். இவர்கள் அவரை பார்த்தது கூட கிடையாது.
அட்டா, சயீத் என்பவர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
திடீரென்று அந்நிறுவனத்தினர் அட்டாவிற்க்கு போன் செய்து வாடகை ஒப்பந்தம் இரண்டு மாதத்தில் நிறைவடைகிறது. கூடுதலாக 700 தோமான்கள் செலுத்தினால் ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம் என்கிறார்கள் அட்டாவை பொருத்தம் மட்டுமே 700 தோமன்கள் என்பது மிக அதிகமான தொகை.
கூடுதல் வாடகைக்கான பணத்தை தயார் செய்வதற்கு அட்டாவும் அவர் மனைவியும் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். எந்த வகையிலும் அவர்களால் புரட்ட முடியவில்லை.
வீட்டு உரிமையாளரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஏஜென்சி உரிமையாளர் சயீது மூலமாக முயற்சிகள் தோல்வியில் முடிகிறது.
வேறு வீடு பார்க்க முயற்சியில் கடுமையாக ஈடுபடுகிறார்கள். வசதிகள் இருந்தால், வாடகை அதிகமாக இருக்கிறது. வாடகை குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வசதி கூட இல்லாத நிலை. இருவரும் மிகவும் தடுமாறிப் போகிறார்கள்.
ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் மிகவும் நெருக்குகிறார்.
அவரே குறுக்கு வழி ஆலோசனை ஒன்றை தெரிவிக்கிறார். அந்த வீட்டில் திரைப்படம் எடுக்கும் குழுவினர் திரைப்படம் எடுக்க அனுமதித்தால் கூடுதலாக பணம் கிடைக்கும், அதை வைத்து சமாளிக்கலாம் என ஆலோசனை கூறுகிறார்கள். முதலில் ஒப்புக்கொள்ள மறுக்கிறான். பிறகு வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறான். திரைப்பட குழுவினர் இவனுடைய சொந்த வீடு என்று நினைத்து வந்தவர்கள் இவனே வாடகைக்கு குடியிருப்பவன் என்பதால் அவர்கள் பின் வாங்குகிறார்கள்.
ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்தி அவனது குடியிருப்பில் திரைப்படம் எடுக்க ஒத்துக் கொள்ள வைக்கிறான். அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விடுகிறான். கமிஷன் தொகையை வாங்கிக்கொண்டு ரியல் எஸ்டேட் ஏஜென்சி முகவர் சயீது கழன்று கொள்கிறார்.
அங்கிருந்துதான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. திரைப்படம் எடுப்பவர்களால் ஏற்படக்கூடிய தொந்தரவுகள். இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்.அதனால் வரும் எதிர்ப்புகள் அவர்களை சமாளிக்க அட்டா படும் பாடு. இவ்வளவு கூத்துக்களுக்கு இடையே திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
வாடகையை ஒழுங்காக கொடுக்காமல், வீட்டை வாடகைக்கு விட்ட குற்றத்திற்காக கைது செய்யப்படுவதாக, கனவுகள் கண்டு பயந்து சாகிறார்..
இதற்கிடையில் வீட்டு உரிமையாளர் இவர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார் தொடர்பில் அகப்படாமல் தவிர்த்துக் கொண்டே இருக்கிறார்.
உண்மையில் வீட்டு உரிமையாளர் மனிதநேயமிக்கவர். உங்களால் இயன்ற வாடகை கொடுங்கள் என்று சொல்வதற்காக தான் இவரை சந்திக்க முயற்சி செய்கிறார். அது தெரியாமல் இவர் அவரை சந்திக்காமலே தவிர்க்கிறார்.
வீட்டு உரிமையாளரும் அட்டாவும் சந்திக்கிறார்களா, இவனது பிரச்சனைக்கு தீர்வு என்பதுதான் திரைப்படத்தின் கதை.
குடித்தனக்காரர்கள் படும்பாடு, நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள். அத்தனையையும் மிகவும் நகைச்சுவையாகவும் அதே நேரம் பிரச்சனைகளின் ஆழங்களையும் மிக அழகாக இத்திரைப்படம் விளக்குகிறது.
அலி மொல்லகோலி பவுர், எழுதி, இயக்கியுள்ளார்.
அட்டாவாக சபர் அபார், மசுமேவாக நெகர் ஜவஹேரியன், பக்கத்து வீட்டுக்காரர் பஜாங்காக அக்பர் அப்தி, வீட்டு உரிமையாளர் எப்தேஹாஜாக கரீம் அக்பரி மொபராகே, என மொத்த குழுவினர் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.
சயீத் சாடி படத்தை தயாரித்துள்ளார்.

No comments:
Post a Comment