சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 28 February 2026

அறம் கூறு அவையம்

 எல்லா காலத்திலும், எல்லா சமுதாயமும் பன்முகத்தன்மை கொண்டதாகவே இருக்கும். பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு சமயங்கள், பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவராகவே மக்கள் வசிப்பர். ஆனால் அரசும், அரசு நிர்வாக இயந்திரங்களான நீதி, காவல் உள்ளிட்ட அமைப்புகள் எல்லாருக்கும் பொதுவானதாக  வெறுப்பு வெறுப்பின்றி சார்பு நிலை கடந்து  செயலாற்றினால் தான் அந்த சமூகம் சிறந்த சமூகமாக இருக்க முடியும். குறிப்பாக நீதித்துறை மக்கள் அச்சமின்றி அணுகக்கூடிய தங்களுக்கு பாதுகாப்பு, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டும். இதைத்தான் தமிழ் கூறும் நல் உலகம் சங்க கால இலக்கியங்கள் மூலமாக வலியுறுத்துகின்றன. நீதி தவறி தீர்ப்பளித்த மதுரை மன்னன் மாண்டதும், பொற்கை பாண்டியன் கையிழந்ததும் இலக்கியங்கள் காட்டும் உதாரணங்களாகும். 

இதை விளக்கும் அற்புதமான பாடல் ஒன்று மதுரைக்காஞ்சியிலே வருகிறது... 

நடுவுநிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறமாட்டாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவருக்குத் தோல்வியால் நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி,  ஒரு கூற்றில் செற்றம் செய்யாமல், ஒரு கூற்றில் உவகை செய்யாமல் நெஞ்சினைப் பாதுகாத்து, துலாக்கோலைப் போல நடுவு நிலைமையுடையவராய் இக்குணங்களால் சிறந்த விரதங்களையுடைய அறநூலைச் சொல்லும் சான்றோர்களும் – மதுரை நகரில் வாழ்ந்தனர்.

( அறம் கூறு அவையம் – நீதி மன்றம் அறநூல் முறைப்படி அறம் கூறும் தருமசனத்தார் அமர்ந்து நீதி அளிக்குமிடம் ) 

 *********************

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி

சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்

                            மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி 6 : 489 – 49

***************

 

Friday, 27 February 2026

தேசிய அறிவியல் தினம்


இப்பூவுலகில் வசிக்கக்கூடிய எல்லா ஜீவராசிகளிடமிருந்தும் மாறுபட்ட ஜீவனாக மனிதன் மட்டுமே இருக்கிறான் என்றால், அதற்கு ஒரே காரணம் அவன் சிந்திக்க தெரிந்தவன், செயலாக்க தெரிந்தவன், இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றக்கூடிய வல்லமை உடையவன் என்பதுதான் .

 ஏனெனில் எல்லா ஜீவராசிகளும் இயற்கையில் உள்ளதை அப்படியே பயன்படுத்திக்கொண்டு வாழும் போது, மனிதன் மட்டுமே ஒவ்வொரு நிகழ்ச்சியையும், செயலையுமே பகுத்தறிந்து தனக்கு சாதகமாக பயன்படுத்தி வாழ ஆரம்பித்தான். 

இயற்கையில் நெருப்பின் சக்தியை, நீரின் சக்தியை புரிந்து கொண்டு கண்டுபிடிப்புகளை உருவாக்கி வாழ ஆரம்பித்தான். அவன் கண்டுபிடித்த முதல் கண்டுபிடிப்பான நெருப்பின் தொடர்ந்து விவசாயம் என பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு முன்னேறலானான். 

பிரபஞ்சத்தின், இயற்கையின் சக்தியினை, ஆற்றலை, சீற்றத்தை கண்டு ஆராய்ச்சிகள் செய்து முன்னேறியவன் அறிவியலாளர் ஆனான். 

பயந்து வணங்கியவன் மத நம்பிக்கையாளன் ஆனான். 

மனிதன் கண்டுபிடித்த அனைத்து அறிவியல் சாதனைகளும் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இயந்திரப் புரட்சி வந்த பின், காப்புரிமைகள் என்று வந்தபின், உலகமெங்கும் கண்டுபிடிப்புகள் என்பது ஏதோ மேலை நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானது போல ஒரு பிரமை உண்டாயிற்று. நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு அது இன்னும் உறுதிப்படுத்தப்பட்டது.

 ஆசியாவில் முதன்முதலாக கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு பெற்றவர் இந்திய இயற்பியலாளர் சர் சி.வி. ராமன். 

 ஒளி சிதறலில் இந்த முன்னேற்றத்திற்காக, ராமன் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் - அறிவியலில் வென்ற முதல் ஆசியர் அவரே. 

 சனாதனவாதிகள் விண்வெளியில் கடவுளர்களைத் தேடிக் கொண்டிருக்கையில், சர் சி வி ராமனுக்கு கடவுள் தெரியவில்லை. ஒளிச்சிதறலே தெரிந்தது. அவர் கண்டுபிடித்த அந்த ஒளி சிதறல் ராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது. 

திரைப்படங்களில் விருப்பம் இல்லாத அவர், நண்பர்கள் வலியுறுத்தலுக்காக வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணருடைய அவதாரத்தை பற்றிய கிருஷ்ண விஜயம் என்ற திரைப்படத்தை காணச் சென்றார். அரை மணி நேரம் கூட அவரால் அந்த அவதார கூத்துக்களை காண பிடிக்க முடியாமல் Absurd... அபத்தம்.. என்று கூறிவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறி, தனது ஆய்வரங்கம் சென்று விட்டார். 

பிப்ரவரி 28, 1928 அன்று ராமன் விளைவைக் கண்டுபிடித்தது நினைவு கூர்ந்து தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

1986 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதற்காக தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில் (NCSTC) பிப்ரவரி 28 ஐ தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது

 2026 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் 'அறிவியலில் பெண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பாரதத்தை ஊக்குவிப்பது' என்பது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கை எடுத்துக்காட்டுகிறது. 

2026 தேசிய அறிவியல் தினம் இப்போது ஏன் முக்கியமானது?

அடுப்பங்கரையில் அடைபட்டு கிடப்பதும், பிள்ளை பெற்று தருவதுமே பெண்களின் கடமை என்று காலம் காலமாக சொல்லப்பட்ட நாட்டில் பெண்களுக்கான கல்வி, சமூகத்தில் முன்னெடுப்பு என்பது தடுக்கப்பட்டே வந்துள்ளது. பல்வேறு சமூக சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூக போராளிகள் ஆகியோரது கடுமையான முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் பிறகுதான், பெண்கள் கல்வி கற்கவும் சமூகத்தில் பல வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்றலும் என்பது தொடங்கிய ள்ளது. இதற்கு ஏராளமான இலக்கிய, வரலாற்று ஆவண சான்றுகளை காண முடியும்.

 இவ்வளவுக்கு பிறகும் ஆராய்ச்சியில் பெண்களுக்கான பங்கு என்பது குறைவாக உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற இந்தியா கடுமையாக முயற்சித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான துறைகளில் ஆராய்ச்சியாளர்களில் பெண்கள் சுமார் 20-22% மட்டுமே உள்ளனர், மேலும் உலகளவில் ஆராய்ச்சியில் சுமார் 31% பேர் மட்டுமே உள்ளனர். இருப்பினும், 46% இளம் பெண்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர், மேலும் அறிவியல் பட்டதாரிகளில் 35% பேர் பெண்கள். இந்த இடைவெளியை நிரப்புவது சுகாதாரம், காலநிலை மாற்றம், சுத்தமான எரிசக்தி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தீர்வுகளை விரைவுபடுத்தும்.

இந்தக் கருப்பொருள் சரியான நேரத்தில் வருகிறது. உலகளாவிய பெண்கள் அறிவியல் தினத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, இது உத்வேகத்தை உருவாக்குகிறது. வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார தொழில்நுட்பத்தில் பெண்கள் தலைமையிலான தொடக்க நிறுவனங்கள் முதல் உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கும் எளிய அறிவியல் மாதிரிகளை உருவாக்கும் பள்ளி மாணவிகள் வரை - அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களுடனும் இது இணைகிறது.

எனவே இந்த தேசிய அறிவியல் தினத்தில் இன்றைய குறிக்கோளை முன்னெடுத்து பெண்களை கல்வி கற்க ஊக்குவிப்பதும், ஆராய்ச்சி திட்டங்களில் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிப்பதே தினத்தை கொண்டாடுவதன் உண்மையான அர்த்தமாக இருக்க முடியும். 

 

Thursday, 26 February 2026

நட்பு தமிழ் வட்டம் மதுரை இணைய வழிக்கூட்டம்

 மதுரை நட்பு தமிழ் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற 261 ​​ஆவது இணையவழி கூட்டம் நிறுவனத் தலைவர் புலவர் நா நா ஆறுமுகம் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

கவிஞர் பொன் நாஅவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய "கொலைவாளினை எடடா" என்ற அமுத பாடலை பெண்ணாடம்  நிறைமதி நீலமேகம் அருமையாகப் பண்ணிசைத்து பாடினார். பொருளாளர் வழக்கறிஞர் மு. ஆசைத்தம்பி இணைப்புரை வழங்கினார்.

 பாவலர் சுப முருகானந்தம் இன்றைய தலைப்பு பற்றியும் சிறப்புரையாற்றுகின்ற பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து அறிமுக உரையாற்றினார் .. 


உலகமொழிகளில் தூய்மை இயக்கங்கள்" என்ற தலைப்பில் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.   


பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் எழுதிய உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள் மற்றும்  முனைவர் டாக்டர் சு. நரேந்திரன் அவர்கள் எழுதியஅறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்என்ற இரு அரிய நூல்களை மேற்கோள்காட்டி தனது உரையை துவங்கினார். 

25 நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வளரக்கூடிய செம்மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கான அடிப்படைக் காரணம் தொல்காப்பியர்   அமைத்துத்தந்த இலக்கண அடிப்படையும், தொடர் இயக்கங்களும் தான் காரணம் என்பதை வரலாற்று ரீதியாக எடுத்துரைத்தார். 

மொழிக் கலப்பு எவ்வாறெல்லாம் மொழிகளின் போக்கை மாற்றி விடுகின்றன என்பதற்கு உதாரணமாக, இதர திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை பிறமொழி கலப்பினால் சிதைந்து போனதை விளக்கினார் .. 

கலப்பிலிருந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட இயக்கங்களை விவரித்த அவர் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுவதற்கு அதிக தமிழ் தகுதி படைத்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரமாக புலவர் செந்தலை கௌதமன் அவர்கள் எழுதியது பேச வைத்த பெரியார் என்ற நூலை குறிப்பிட்டார் .


1938இல் சென்னை மாகாண முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்கிற ஆணை பிறப்பித்த போது, ​​அதை எதிர்த்து கிளர்ந்து எழுந்து இயக்கங்கள் நடத்தியது தந்தை பெரியார் தலைமையிலான மாபெரும் தமிழ் இயக்கங்கள். 

அந்த வெம்மை தாங்காமல் 1939இல் காங்கிரஸ் பதவியை துறக்க நேரிட்டது. அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபு அவர்கள் 21. 2. 1940 அன்று ஹிந்தி திணிப்பு ஆணையை ரத்து செய்து இனி இந்த திணிக்கப்பட மாட்டாது. என்ற உத்தரவாதத்தை அளித்தார். துரதர்ஷவசமாக அவர் பெயரால் இருந்த மதுரை அரசு எர்ஸ்கின் மருத்துவமனை என்பது பின்னாளில் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மதுரை ராஜாஜி மருத்துவமனை பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தி மொழி திணிப்பை தடுத்த எர்ஸ்கின் அவர்களின் பெயர் நீக்கி, இந்தி திணிப்பை கொண்டு வந்த திரு ராஜாஜி பெயரால் மருத்துவமனை பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார். 


 மொழிகளிலே தூய்மை இயக்கங்கள் என்றால் அதன் , மொழிகளின் மரபு, பெருமை சீர்குலைக்கப்படுவதை தடுக்கிறது என்ற பொருள். 

மொழிகளிலே திரிபு கலப்பு தோன்றுவதை தடுத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கோடு மொழி ஆர்வலர்கள் நடத்துகின்ற இயக்கங்கள் தனை உலகெங்கும் காண முடிகிறது. 


உதாரணமாக ஐரோப்பாவில் நடந்த மொழி தூய்மை இயக்கங்கள் பற்றி காணலாம்..


ஒரு மொழிக்குள் வேறு மொழிச்சொல் வருவது என்பது வெறும் சொல்லாக வருவதில்லை, அவை இனத்தின் மரபணுவை மாற்றும் விஷக்கிருமிகள் என்று பண்பாட்டு விஞ்ஞானி பெரியார் கூறியதாக தனது தமிழாற்றுப்படையிலே கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிட்டு இருப்பார்கள். 


கால்டுவெல் அவர்கள் தமிழ் மொழியில் உள்ள பிற மொழிக் கலப்புகளைப் பற்றி ஆய்வு செய்து சங்க கால இலக்கியங்களை நோக்கிப் பின்னோக்கிச் செல்லச் செல்ல மொழி கலப்பு என்பது குறைந்து கொண்டே இருக்கும் என்கிறார். 

சங்க கால இலக்கியத்தில் இரண்டு சதவீதம், பிற மொழி சொற்கள் உண்டு,திருக்குறளில் மூன்று சதவீதம், சிலப்பதிகாரம் மணிமேகலையிலே ஆறு சதவீதம், வில்லிபுத்தூரார் மகாபாரதம் கம்பராமாயணத்திலே 20 சதவீதம் தொடங்கி, தல புராணங்கள் மற்றும் திருப்புகழிலே 60 இல் 70% பிறமொழிக் கலவை இருப்பதைக் கண்டறிந்துள்ளது. தமிழறிஞர்கள் போராடியதனுடைய விளைவு பிறமொழிக் கலப்பு நிறுத்தப்பட்டது என்றார். 

யுனைடெட் கிங்டம் என்று அழைக்கப்படும் பிரிட்டன் இங்கிலாந்து, அயர்லாந்து ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு. அங்கு அவரவர்க்கென்று தனி மொழிகள் இருந்து, அவற்றின் மீது திணிக்கப்பட்ட பிற மொழி திணிப்புகளை எதிர்த்து நடத்திய போராட்டங்களை எடுத்துரைத்தார். 

இங்கு தனித்தமிழ் இயக்கங்கள் துவங்கப்பட்ட காலத்தில் அதை கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. 

ஆனால் பிற மொழி திணிப்பு என்பது தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு தான் அதன் பலன் நமக்குத் தெரிகிறது. 

ஆங்கில மொழி பிற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தியதன் விளைவாக அழிந்த மொழிகள், அழிந்து கொண்டிருக்கும் மொழிகள் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆங்கில மொழி திணிப்பால் ஆண்டுக்கு 20 மொழிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. 

ஆங்கிலம் பிற மொழிகளில் இருந்து சொற்களை கடனாகப் பெற்று வளர்ந்து வருகிறது என்று சொல்லும் போதே, அதனால் மட்டும் வளம் பெறவில்லை. அரசியல் ஆதிக்கம் வளர்கிறது. ஆதிக்கத்திற்குட்பட்ட மொழிகள் எல்லாம் அழிந்து போனதுதான் வரலாறு. ஆங்கிலமே பிற மொழி கலப்பினால் எட்டாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்திற்கு இன்று மொழி பெயர்ப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக ஷேக்ஸ்பியர்னுடைய நாடகங்கள் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டபோது மாணவர்களுக்கு அந்த ஆங்கிலம் அந்நியமாக பட்டதால் அதை கடுமையாக எதிர்த்து போராடியதன் விளைவு அவை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. 

வெறும் 12 நூற்றாண்டு கால வரலாறை கொண்ட ஆங்கில மொழிக்கு இந்த அவல நிலை தான். மாற்றங்களை கண்டு கொண்டே இருப்பதால் அதனுடைய தூய்மை என்பது காணாமல் போய்விட்டது என்பதற்கு ட்ரெய்டன் என்ற 17 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் தான் எழுதி ஆங்கில படைப்புகளுக்கு இலக்கண ரீதியில் சரியாக உள்ளதா என்பதை அறிந்து அவற்றை லத்தினுக்கு மொழிமாற்றம் செய்து லத்தீன் மொழியில் இலக்கணப்படி அவை சரியாக இருந்தால் அதை சரி செய்து அதை ஆங்கிலத்தில் படைப்பதாக கூறியிருந்தார். 


யுனைடெட் கிங்டமின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அயர்லாந்து நாட்டினுடைய மொழி ஐரிஷ் பாரம்பரியமிக்கது. அம்மொழியைக் கண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் பயந்த காலம் உண்டு. 

பொதுவாக ஒரு மொழிக்குள் இன்னொரு மொழி புகுந்து ஆதிக்கம் செய்வதற்கு இரண்டு காரணிகள் உண்டு. 


ஒன்று அரசு அதிகாரத்தின் மூலமாகவும் இரண்டாவது கோயில்கள் மூலமாகவும் தான் அதிகம் நடைபெறும். 


இங்கு ஆரியர்கள் பிராமணர்கள் அரசர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அரசு நடவடிக்கைகளில் தங்கள் மொழியை திணித்தது ,கோயில்கள் மூலமாக தங்கள் மொழி திணித்ததும் இங்குள்ள வரலாறு. 

 உலகமெங்கும் இதே வரலாறு தான். அயர்லாந்து பகுதியில் ஐரிஷ் மொழி பேசும் துறவிகளுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதில் ஆரம்பித்து, ஐரிஷ் பெயர்கள் நீக்கம், ஆங்கில மொழி திணிப்பு, பைபிளை ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு. 

அதேபோலத்தான் ஸ்காட்லாந்து மக்களின் தாய்மொழி ஸ்காட். ஏழாம் நூற்றாண்டில் துவங்கி இருபதாம் நூற்றாண்டு  வருவதற்குள் பழங்கால ஸ்காட், இடைக்கால ஸ்காட், தற்கால ஸ்காட்மொழி என்று மூன்றாகியது.

 அதுவும் ஆங்கில மொழி திணிப்பால் சிதைவுக்குள்ளானது. அங்கேயும் பைபிள் ஸ்காட்டில் படிக்க தடை செய்யப்பட்டு ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. 

ஆனால் தமிழை ஒப்பிட்டுப் பார்த்தால் 25 நூற்றாண்டுகளாக உயிரோடு இருக்கக் கூடிய மொழியாக இருப்பதால் அன்று எழுதப்பட்ட அதே திருக்குறளை இன்று படித்தாலும் பொருள் புரியும் அளவிற்கு அதனுடைய தொன்மையையும் தொடர்ந்து காப்பாற்றி வைத்திருக்கிறோம் என்பதால்தான்.


அதேபோலத்தான் வெல்டிக் மொழி குடும்பத்தைச் சார்ந்த வேல்ஸ் மொழி யுனைடெட் கிங்டமால் மறுக்கப்பட்ட போது, ​​1962 இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பலகைகளை அழித்தல் வானொலி கட்டணங்களை கட்ட மறுத்தல் என்று போராட்டங்கள் நடத்தி தங்களது மொழியை காப்பாற்றினர். 

இங்கு நம் தமிழர்கள் மட்டும் பெயர் பலகைகளில் இந்தியை அழிக்கவில்லை . இது உலகம் எங்கும் நடக்கும் போராட்ட உத்தி தான். 

அதேபோலத்தான் பிரான்சிலும் பிரெஞ்சு மொழி, ஆங்கிலத்தால் அழிந்து விடும் என்று பிரெஞ்சுகாரர்களும், பிரெஞ்சு மொழியால் ஆங்கிலம் அழிந்து விடும் என்று ஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக பயந்தனர். 


1939இல் பிரான்சில் லத்தீன் மொழி நீக்கப்பட்டு பிரெஞ்சு மொழி நடைமுறைப்படுத்தப்பட்டது. 

1637 இல் துவங்கி பிரெஞ்சு புரட்சி காலத்தில் பிரெஞ்சு தான் மக்களை ஒன்றிணைக்க கூடிய மொழி என அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1967-இல் வணிகத் தளங்கள் மற்றும் அனைத்து விளம்பர பலகைகளிலும் பிரஞ்சு மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் வந்தது. 

1977-ல் கனடாவில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்ட கியூபக் பகுதியில் பிரஞ்சு மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. 

1982ல் வணிகம் சார்ந்த விஷயங்களில் ஆங்கிலம் நீக்கி பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. 

அதற்கு முன்னரே மன்னர் ஆட்சி காலத்தில் பாராளுமன்றத்தில் ஆங்கில மொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் தண்டனை என்று அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி முதுகலை படிப்பவர்கள் அவசியம் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்த்து அவர்களின் மூலமாகத்தான் தேர்வுகளை சந்திக்க இயலும் என்கிற நடைமுறை உள்ளது. 

அதேபோல ஆங்கிலக் குடியேற்றங்களின் மூலம் உருவான அமெரிக்காவில் தங்களுடைய அமெரிக்க மொழியால் சிதைகிறது என்கிற எதிர்ப்புக்குரலை மக்கள் எழுப்புகின்றனர். 


ஆகவே உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அந்தந்த மொழிக் குடும்பங்கள் தங்களது மொழியினை காப்பாற்ற போராட்டங்கள் நடத்தி காப்பாற்றும்போது, ​​தொன்மை வாய்ந்த தமிழ் மொழி பேசும் தமிழர்கள் தனித்தமிழ் இயக்கம் நடத்துவது மிகவும் நியாயமானது. இது உரிமை காக்கும் போர் என தனது உரையிலே ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.


தலைமை உரையாற்றிய நட்பு தமிழ் வட்ட நிறுவனத் தலைவர் நா நா  ஆறுமுகம் ஐயா பேசியதாவது. வாழ்க்கைச் சூழலில் மக்கள் இடம் பெயர்தலும், பிற மொழி மக்களோடு கலந்து பழகுதலும், வாழ்தலுமான சூழ்நிலையில் மொழிக் கலப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் உருவாவது இயற்கையே. ஆனால் ஆட்சி அதிகாரம், மதம் ஆகியவற்றின் அழுத்தத்தால் மொழிக் கலப்பு ஏற்படுவது, மொழிக்கு இடையூறு ஏற்படுவது ஏற்கத்தக்கது அல்ல. மரபு பேணாததால் மொழிக் கலப்பில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் சிதைந்து, பிரிந்து போனது என்பது வரலாறு. 

ஐரிஷ் இன மக்கள்"நாங்கள் ஐரிஷ்" ஐரிஸ் மொழி காப்பதற்காக போராடுவதை கண்டு தான் ஆதித்தனார் அவர்கள் நாம் தமிழர் என்ற அமைப்பை உருவாக்கினார். இன்று அந்த பெயர் கொண்ட அமைப்பினர் தான் உட்பகையினராக தமிழ் மொழியை அழிக்கின்ற வேலையை தமிழ் மொழி விரோதிகளோடு இணைந்து செய்கிறார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள்.

 ஏனெனில் ஏழாம் நூற்றாண்டில் வந்த  ஆரியர்கள் தான் இங்கிருந்த பாலி மொழியை அழித்து பௌத்த சமண சமயங்களை அழித்து, தமிழையும் அழிக்க முயற்சி செய்தார்கள். 

சிந்து சமவெளி நாகரிக பகுதிகளில் தமிழர்கள் தான் வாழ்ந்தார்கள் என்பதற்காக ஏராளமாய் வரலாற்றுச் சான்றுகள் உண்டு அதிலிருந்து கிளைத்த மொழிகள்தான் இதர மொழிகள் மொழிகள் திராவிட மொழிகள். அதனை ஆய்வு செய்து அறிவித்தவர் திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள். 

ஆனால் இங்குள்ளோர் திட்டமிட்டு திராவிட என்ற சொல்லை நீக்கி மொழி ஞாயிறு என்று மட்டுமே சொல்லுகிறார்கள். 

வரலாற்று ரீதியாக பாண்டியர்கள் ஏராளமாய் கல்விச்சாலைகளை உருவாக்கினார்கள். ஆனால் சனாதனவாதிகள் கையில் சிக்கிய சோழ மன்னர்கள் ராஜராஜ சோழனிலிருந்து பலரும் ஆரிய மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர். உழவர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து பிராமணர்கள் வசம் நிலங்களை அளித்து சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினர். 

ஆக அரசு, மதம் ஆகிய இரண்டுமே தமிழை சிதைக்கின்ற வேலையை செய்தது என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. 


இங்கிலாந்து உலகில் கனடா மலேசியா சிங்கப்பூர் என பல நாடுகளில் பல மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கும் போது இங்கு ஹிந்தி என்ற ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழியாக்குவது என்பது திட்டமிட்ட சதியாகும். 


ஒரு இனத்தை அழிக்க, அடிமையாக்க மொழியை அழித்தால் தான் பின் பண்பாட்டை, கலாச்சாரத்தை முடியும் என்பது  அவர்களின் திட்டம். அதனால் தான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் நூலகத்தை சிங்களவர்கள் எரித்தனர். 

அதற்காகத்தான் இங்கு இருக்கக்கூடிய உணவு பழக்க வழக்கங்களில் கூட மாமிசம் சாப்பிடாதே என்று பிரசாரம் செய்து, உணவு பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 தேவைப்படும்போது எல்லோருமே இயல்பாகவே எத்தனை வேண்டுமானாலும் கற்றுக் கொள்வார்கள். திணித்தல் என்பது கூடாது. உலகம் முழுவதும் தூய்மையை காப்பாற்றுவதற்காக இயக்கங்கள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி முன்னோடியாக 1938லேயே பெரியாரும் பல்வேறு தமிழ் பற்றாளர்களும் தமிழ் தூய்மை இயக்கத்தை நடத்தியது . ஆனாலும் உள்பகையாக புல்லுருவிகள் அன்றைய வையாபுரியில் இருந்து இன்றைய சீமான்கள் வரை இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மொழியை காக்க ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். 



கருத்துரை வழங்கிய சீனி கார்த்திகேயன் இந்தி திணிப்பை தடுத்து நிறுத்திய எர்ஸ்கின் பிரபு பேரை நீக்கி ஹிந்தியை திணித்த ராஜாஜியின் பெயரால் மதுரை மருத்துவமனையின் பெயர் மாற்றம் வரலாற்று நகை முரண் என்றார். 

துவக்க கால தமிழ் திரைப்படப் படங்களில் வடமொழி கலந்த சொற்கள் நிறைந்த வசனமும் பாடல்களும் இருந்த நிலைமாறி, திருவாளர்கள் இளங்கோவன் அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி உள்ளிட்ட திராவிட எழுத்தாளர்கள் தலையெடுத்த பின் தான் நல்ல தமிழ் முழங்கியதை நினைவு கூர்ந்தார். 


இந்தி திணிப்பை ஏற்றுக்கொண்டதால் மராட்டி, பிஹாரி ராஜஸ்தானி, ஒடியா மொழிகள் முற்றிலும் சிதைந்து அம்மாநிலங்களில் இந்தி புழக்கத்திற்கு வந்துவிட்டன. மைதிலி, போஜ்புரி, மஹாகி போன்ற மொழிகள் முழுமையாகவே அழிந்து விட்டன. அந்நிலை இங்கு வந்து விடாதிருக்க விழிப்புணர்வு கொண்டு போராட வேண்டும் என்றார். 


திரு  நாகராசன் அவர்கள் ஆங்கில மொழி பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் பெற்றாலும், ஆட்சி அதிகாரத்தின் மூலமே பரவியது. மொழி கலப்பினில் இருந்து தமிழைக் காக்க இயக்கங்கள் நடத்தி விட வேண்டும் என்றார். 

கவிஞர் கலைச்செல்வன் அவர்கள் உலக மொழி வரலாறு கேட்ட மாபெரும் நிறைவு ஏற்பட்டது. நிறைமதி நீலமேகம் அவர்கள் காலத்திற்கு ஏற்ற சிறப்பான உரை என்றார். 

மல்லிகா ஆசிரியை தமிழகத்தில் உள்ள பெற்றோர் தமிழ் மொழியைப் புறந்தள்ளி ஆங்கிலத்தில் மொழிக் கல்வி கற்க தமது பிள்ளைகளை அனுப்புவது கவலைக்குரியது என்று கூறினார் சத்திய பிரியா மிக நிறைவான உரை என உரைத்தார். 

ஆசைத்தம்பி உலகம் மொழி போராட்டத்தினுடைய வரலாறு அறிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

அழகேஸ்வரி அவர்கள் பாரதிதாசன் பாடல்கள் பற்றியும் பெண்ணியம் பற்றியும் சிறப்பாக உரையாற்றினார்.


 குழந்தைகள் மதுரை ஜெயஸ்ரீ குறள் பற்றிய கதை, மதுரை மகாலட்சுமி, மதுரை வினிதாஸ்ரீ, மதுரை கோயல், வடசேரி முருகானந்தம், மோ. முருகானந்தம் , தனுஸ்ரீ, கோவிந்தபுத்தூர் அ. ஸ்வாதி, கேசவன், தினேஷ் , பேரரசன், கோஷிகாதேவி,  ஆகியோர் குறள், கதை, கவிதை என தமிழ்ச்சரத்தை தொடுத்து மகிழ்ந்தனர். 


இறுதியாக விருதை கவிஞர் சிறீராம் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பானதோர் நன்றியுரை நிகழ்த்தினார்.


தொகுத்தளித்தவர் சீனி கார்த்திகேயன் புதுக்கோட்டை. 


Wednesday, 25 February 2026

எளிமையின் சின்னம்






 இரு நூற்றாண்டுகளின் ரத்த சாட்சியாக இந்தியாவின் விடுதலைக்கு, இந்தியாவில் பொதுவுடமை மலர்வதற்கு, 

அல்லும் பகலும் போரிட்ட அருமை தோழருக்கு வீரவணக்கம்

Entry and exit prohibited.

நுழைவு மற்றும் வெளியேறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது (2023) ("Entry and Exit Prohibited") என்பது ஈரானிய திரைப்படம். 

சிறைச்சாலை என்பது வெறுமனே கைதிகளை அடைத்து அடைத்து வைப்பதற்கான இடம் அல்ல, அவர்களை கலாச்சார ரீதியாக திருத்தி மேம்படுத்துவதே சரியான வழிமுறை என்று பெரிதும் நம்பக்கூடிய யூனுஸ் எனும் மதகுருமார் சிறைச்சாலையில் கலாச்சார அலுவலராக பணியாற்றுகிறார். 

2023 ஆம் ஆண்டு அர்மான் ஸார்ரின்கூப் இயக்கிய, மோர்டெசா ஷாயெஸ்தே தயாரித்த, நடிகர்கள் அலி சதேகி மற்றும் அக்பர் அப்தி ஆகியோர் நடித்த ஈரானிய நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் சிறைச்சாலையின் மதத் தலைவராகப் பணியாற்றும் ஒரு மதகுரு மற்றும் பல்வேறு கைதிகளைக் கையாளும் விதம், அந்த சூழலில் நிகழும் நகைச்சுவை நிகழ்வுகளை இது மையமாகக் கொண்டுள்ளது. 

அவர் மதத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்கள் சிறைச்சாலையில் இருக்கக் கூடாது என்ற கைதிகளிடம் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகிறார். அதே நேரம் மனிதாபிமானமும் பிறருக்கு உதவக்கூடிய எண்ணமும் உடையவர் அவர். அவரது கட்டுப்பாடுகளை வெறுக்கும் கைதிகளில் சிலர் அவரது மனிதாபிமான உதவிகளை பயன்படுத்திக் கொண்டு சிறையிலிருந்து தப்பி விடுகிறார்கள். அவர்கள் தப்புவதற்கு இவர் தான் உதவி செய்தார் என்று இவரை கைது செய்து அதே சிறையில் அடைக்கிறது அரசு. 

மத குருவாக, கைதியாக என இரு வேறு சூழ்நிலைகளில் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையாக திரைப்படமாக்கியுள்ளனர். அதேபோல இருசூழ்நிலைகளில் கைதிகள் அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கிறது. 

பெர்லினில் நடைபெறும் உலக மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய அவர் சிறைச்சாலையில் அவதிப்பட நேர்கிறது தப்பி சென்றவர்களை போலீஸ் கைது செய்ததா? இவர் சிறையில் இருந்து மீள்கிறாரா? மாநாட்டில் கலந்து கொள்கிறாரா என்பதை விறுவிறுப்பாகவும் வேடிக்கையாகவும் காட்டி இருக்கிறார் இயக்குனர் .

சிறை வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடத்தை மதகுரு மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்"இந்த சிறைச்சாலை எனக்கு ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாறிவிட்டது.ஒரு முஸ்லிமாக இருப்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல, ஆனால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது உங்கள் தொழுகைப் பாயை தரையில் வைத்தால் நீங்கள் முஸ்லிம் அல்ல என்பதை நான் கற்றுக்கொண்டதில்லை.காயமடைந்த ஒருவர் உங்களிடம் உதவி கேட்கிறார், நீங்கள் உதவலாம், ஆனால் நீங்கள் செய்ய வில்லை எனில் நீங்கள் ஒரு முஸ்லிம் இல்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன்.நீங்கள் மிகப்பெரிய பாவத்தைச் செய்து, கடவுள் மீது சிறிதளவு நம்பிக்கையை இழந்தாலும், நீங்கள் ஒரு முஸ்லிம் அல்ல.நீங்கள் யாரோ ஒருவராகிவிட்டதாக நினைத்து, மக்களை அற்பமானவர்களாகவும் பயனற்றவர்களாகவும் பார்க்கத் தொடங்கினால், நீங்கள் ஒரு முஸ்லிம் அல்ல.இந்த நம்பிக்கையில், மக்கள் புனிதமானவர்கள், மக்களின் உடைமைகள் புனிதமானவை, அவர்களின் உயிர்கள் புனிதமானவை, அவர்களின் கண்ணியம் புனிதமானது, அவர்களின் இதயங்கள் புனிதமானவை, நம் அன்பு நண்பர் மசூன் சொல்வது போல், உடைந்த எக்காளத்தால் ஒருவரின் இதயத்தைத் திருடினால் - ஹாஜி என்றால் மண்வெட்டி என்று பொருள். ஒருவரின் இதயத்தை மண்வெட்டியால் திருடுபவர்கள், முஸ்லிம்கள் இல்லை..."

மதவெறி மக்களை ஆட்டிப்படைக்கின்ற காலத்தில் ஒரு மதகுருவின் சமூக பார்வையை விவரிக்கும் திரைப்படம் இது.. 

வெளியீட்டு தேதி: டிசம்பர் 15, 2023 (ஈரான்).

முக்கிய நடிகர்கள்: முகமதுரேசா ஷெரிஃபினியா, அலி சதேகி, அக்பர் அப்தி, யாசர் ஜஃபாரி.சயீத், அமீர்சோலைமானி, செப்பந்த் அமீர்சோலைமானி, முகமது ரெசா ஹெடாயாதி, அலி கரிமி, ஹாடி கசெமி, பூரியா பர்சோர்க்,  மற்றும் நியுஷா ஜிகாமி ஆகியோர் அடங்குவர்.

தயாரிப்பு: மோர்டெசா ஷாயெஸ்தே தயாரித்தார். 

 

தாத்தாவின் 125 ஆவது பிறந்த நாள்

 இன்று என் தாத்தா (அம்மாவின் அப்பா)ஆ.சிதம்பரம் அய்யா அவர்களின் 125 ஆவது பிறந்த நாள்(25.2.1901) 


இவர் மதுரை மாவட்டம் ,மேலூர் வட்டம்,வெள்ளலூர் கிராமத்தில் ஆண்டியப்பன் மருதாயி ஆச்சி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர், பள்ளிக்கல்வி முடித்த கையோடு சுதந்திரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் பெரியவர்கள் கண்டித்ததால் சிறிது காலம் துறவியாக தேசாந்திரியாக திரிந்த பிறகு, இலங்கை சென்று தொழில் செய்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி இருக்கிறார். அங்குள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக தனது ஸ்டோர் மற்றும் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பினார்.  


அவர் முதல் மனைவி மீனாட்சி ஆச்சிக்கு உமையாள் (என் தாயார்) மற்றும் ராமர், லக்ஷ்மணர் ஆகியோர் பிறந்தனர். திடீரென்று உடல் சுகவீனமுற்று மீனாட்சி ஆச்சி காலமானதால், மீனாட்சி ஆச்சியின் சகோதரியான சௌந்தரம் ஆச்சியை திருமணம் செய்தார். அவர்களுக்கு சாந்தா சுந்தரமூர்த்தி ஆகிய இரு குழந்தைகளுக்கு பிறந்தனர். 


சொந்தமாக டிபார்ட்மெண்ட் ஸ்டோரை நடத்தியவர் நாடு திரும்பிய பிறகு வறுமையின் காரணமாக சிறு கடை வைத்து பிழைப்பு நடத்தி இருக்கிறார். சொந்தக் கடை நடத்தியவன் பிறரிடம் வேலைக்கு செல்வதா என்று எண்ணி கடைசி வரை பிடிவாதமாக சுய சம்பாத்தியத்தில் காலத்தை கடத்தினார் வாழ்நாள் முழுக்க யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் சொந்த காலில் வாழ்ந்தவர், என் மீதும் எனது மனைவி முத்துமணி மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது 85வது வயதில் (1986) என்னுடன் ஆதனக்கோட்டையில் இருந்த போது காலமானார்.

.1957ல் இந்தியா திரும்பியபோது தனுஷ்கோடி துறைமுகம் வழியாக நாடு திரும்பினார். அவர் வந்த பின் சிறிது காலத்தில் தனுஷ்கோடி துறைமுகம் கடல் சீற்றம் மற்றும் புயலால் அழிந்தது தற்செயலாக அவரது பாஸ்போர்ட்டை பார்த்தபோது கிடைத்தது விபரங்கள்..

ன்றென்றும் எங்கள் நினைவில் இருந்து ஆசீர்வதித்து கொண்டிருக்கிறார். 







Monday, 23 February 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 எவை உயர்ந்த பண்புகள்

எந்த சமுதாயம் உயர்ந்ததென்றால் நல்ல, உயர்ந்த பண்புகளைக் கொண்ட மக்கள் நிறைந்த சமுதாயமே உயர்ந்தது, என்று தமிழ் கூறும் நல் உலகம் சங்ககால இலக்கியங்கள் மூலமாக பறைசாற்றுகிறது.  


நல்லந்துவனார் எனும் புலவர் சங்க இலக்கியமான கலித்தொகை வழியாக "ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்களுக்கு உதவுதல்" என்ற உயரிய வரிகளை கொண்ட பாடல் மூலம் உயர்ந்த பண்புகளைப் பட்டியலிடும்போது குறிப்பிடுகிறார். 

வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி தேடி அலைவோருக்கு அலைக்கழிவோருக்குத் தொண்டாற்றி உதவுதல் ஆற்றுதல் என்ற உயர்ந்த பண்பாகும். 

தம்மையே சார்ந்து இருப்பவருக்கு, தமக்கு தொண்டாற்றுபவருக்கு, தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தலே போற்றுதல் என்ற பண்பாகும். 

 பெருமை தரத்தக்கது எது என அறிந்து, அதன்படி நடத்தலே பண்பு என்று சொல்லப்படும். 

தன் உறவுக்காரர்களை, நட்பாய் இருப்போர் விட்டு விலகாமையே அன்பு எனப்படுவதாகும். 

கற்று அறிவது மட்டுமே அறிவு ஆகாது, அறியாமை நிறைந்தவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதலே அறிவு என்று சொல்லப்படுகிறது . 

 சொன்ன சொல்லை மறுத்துப் பேசாமை செறிவு எனப்படும். செறிவு என்பது இறுகுதல், நெருங்குதல் என்னும் பொருளுடையது. 

தான் மறைக்கவேண்டடிய நிகழ்வுகளை பிறர் அறியாவண்ணம் நடந்துகொள்ளுதல் நிறை எனப்படும். 

 அரசனுக்கு எது முறை என்றால் விருப்பம் வெறுப்பின்றி, குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் அவன் உயிரை வாங்குதலேயாகும்.

தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைக்கூட பொறுத்துக் கொள்ளுதலே பொறை எனப்படும். 

எந்த சமுதாயத்தில் ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை ஆகிய உயர்ந்த பண்புகள் நிறைந்துள்ளன. சமுதாயம் ஆகும் என நல்லந்துவனார் கூறுகிறார்.... 

****************** 

ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;

'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;

'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;

'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;

'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; 

'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;

'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;

'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;

'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;

கலித்தொகை – நெய்தற்கலி, பாடல் 133

பாடியவர் – நல்லந்துவனார்

திணை - நெய்தல்

கி.மு. காலத்துப் பாடல்




இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

நனி நாகரிகர்
***************'' 
நாகரீக மிக்கவர் என்பதற்கு என்ன எடுத்துக்காட்டு என்ற கேள்விக்கு தமிழ் கூறும் நல் உலகு மிக நயம்பட எடுத்துரைக்கிறது...
முன்பு பழகி நட்புக் கொண்டவர் கொடுத்தால், அது நஞ்சு என்று தெரிந்திருந்தாலும், மிக்க பண்பாடு (நாகரிகம்/கண்ணோட்டம்) உடையவர்கள் அதை மறுக்காமல் அருந்துவர். அதாவது, உண்மையான நட்பின் மீது கொண்ட நம்பிக்கையில் நண்பர்கள் எதைக் கொடுத்தாலும் ஏற்பார்கள்...
 சங்க கால இலக்கியமான நற்றிணை எட்டுத்தொகை நூல்களுக்குள் வருகிறது.
இப்பாடலை இயற்றியவர் கபிலர் ஆவார். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகில் மாந்தர் எவ்வாறு செல்வ செழிப்போடு வாழ்ந்தனர், அவரது வாழ்க்கை முறை, வாழ்க்கை நெறி, எவ்வாறு சிறப்பாக இருந்தது என்பதை விளக்குகிறது.
அழகான நற்புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய தமிழ் மகளானவள் தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைக்க, அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல, காந்தளின் பூக்கொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின் மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும். இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருக நிற்கும் மலைநாடனே! நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீயிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும், நட்பு மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்...
நீ அப்பேர்ப்பட்ட குணமுடையவனாக இருந்தும், அத்தகைய நட்புடையனாயிருந்தும் அழகிய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டவனாக இல்லையே! அவ்வாறு கொள்ளாயேயாயினும் என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு முகமலர்ந்து அன்பினை காட்டுவாயாக! இவள்தான் உன்னிடம் அடைக்கலமாக வந்தவள் அல்லது வேறொரு குறையும் இல்லாதவள் என்ற கான்பாயாக என்று தன் தலைவி படும் துயரினை தோழியானவள் காவிய தலைவனுக்கு எடுத்துரைக்கிறாள்.
தலைவன் தலைவியுடன் ஊசலாடி, தழையுடை அணிந்து அருவியில் ஆடிய மகிழ்ச்சியான நாட்களை நினைவூட்டி, விரைவில் மணம் முடிக்க வலியுறுத்துகிறாள்.
*********************
"புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட! . . . .
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ
என் கண் ஓடி அளிமதி . . . .
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே!" நற்றிணை 355

Sunday, 22 February 2026

தத்துவ தரிசனம்

அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்க்கும் தலைவணங்குவதைப்போல வெட்கக்கேடான விஷயம் உலகில் இல்லை. - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 

எது உயிர் என்பது தெரியுமா?! எந்த ஜீவராசி தனக்கு அநீதி இழைக்கப்படும்போது எதிர்த்து போராடுகிறதோ அது தான் உயிர். சுவாமி விவேகானந்தர்



 ஜீன்-பால் சார்த்ர்

" தங்களை வதைப்பவர்களை மதிக்கும் பாதிக்கப்பட்டவர்களை நான் வெறுக்கிறேன்."

சார்த்ர் உடந்தையாக இருப்பதையும் அடிபணிவதையும் விமர்சிக்கிறார். ஒடுக்குபவர்களைப் போற்றுவது சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் குறைக்கிறது. இந்தக் கூற்று எதிர்ப்பு, விமர்சன சிந்தனை மற்றும் தார்மீக தைரியத்தை வலியுறுத்துகிறது. உண்மையான விடுதலைக்கு அநீதிக்கு எதிரான எதிர்ப்பு அவசியம். மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டும், கட்டாயப்படுத்தப்படக்கூடாது.

 “வண்ணங்கள் மங்கிவிடும், கோயில்கள் நொறுங்குகின்றன, பேரரசுகள் வீழ்ச்சியடைகின்றன, ஆனால் ஞானமான வார்த்தைகள் நிலைத்திருக்கும்.” — எட்வர்ட் தோர்ன்டைக்

மனித கைகளால் கட்டப்பட்ட அனைத்தையும் விட உண்மையான ஞானம் நிலைத்திருக்கும். உடல் சாதனைகள் எவ்வளவு பிரமாண்டமாகத் தோன்றினாலும் இறுதியில் சிதைந்துவிடும் என்பதை தோர்ன்டைக் நமக்கு நினைவூட்டுகிறார். ஆனால் தெளிவான, நேர்மையான மற்றும் சிந்தனையுடன் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், அவற்றை உருவாக்கிய உலகம் மறைந்த பிறகும் மக்களை வழிநடத்தும். 



Saturday, 21 February 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 எது உண்மையான செல்வம்.. 

ஒருவருடைய செல்வம் என்பது எதனைக் குறிக்கும்?! 

வீடு, மனை, வயல், வாகனங்கள், ஆடை, பொன், நவரத்தினங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள், போன்ற அசையும் அசையா சொத்துகளா என்ற கேள்விக்கு தமிழ் கூறும் நல் உலகில், சங்க கால இலக்கியம் மூலமாக ஒரு அறம் சார்ந்த பதிலை தந்திருக்கிறது. 

எத்தனை  எத்தனை செல்வங்கள் நிறைந்திருந்தாலும், உடன் இருப்பவர், தம்மை நம்பி இருப்பவர், தம்மை சார்ந்து இருப்போர் அனைவரது துன்பத்தையும் உரிய வகையில் நீக்குதலே சான்றோருக்கான உயர் செல்வமாக நற்றிணை கூறுகிறது. 

நற்றிணை 210-வது பாடலில் இடம்பெற்றுள்ள (மிளைகிழான் நன்னன் சேய் நன்னன் பாடியது) இப்பாடல், தன்னைச் சார்ந்தோரின் துயரத்தைக் கண்டு, அந்தத் துயரத்திற்கு அஞ்சி அதனைப் போக்கும் தன்மையை, கருணை கண்ணோட்டத்தை கொண்டிருப்பதே ஒருவன் பெற்ற உண்மையான செல்வம் என்று சான்றோர் கருதுவர் என்ற கருத்தை வலியுறுத்துகிறது... 

வளம் மிக்க ஊரின் தலைவனிடம், தலைவியின் துன்பத்தைப் போக்கி, தன்னைச் சார்ந்தோரின் துயரத்தைக் கண்டு அஞ்சுவதே உண்மையான செல்வம் என்று தோழி அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

*************

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்

மறு கால் உழுத ஈரச் செறுவின்,

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர!

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே

** *********

நெல் அறுவடை செய்யப்பட்ட ஈரமான வயலில், வித்து விதைக்கச் சென்ற கூடை, மீனோடு திரும்பி வரும் வளம் மிக்க ஊரனே!பெருமையாகப் பேசுதலும், விரைவாக ஊர்தியில் செல்லுதலும் உண்மையான செல்வம் அல்ல; அது அவரவர் செய்த முயற்சியின் பயனே.

உண்மையான செல்வம் என்பது, தன்னைப் பிரிந்து/சார்ந்து வருந்துபவரின் துன்பத்தைக் கண்டு தானும் வருந்தி அதைப் போக்கும் அருளுடைமையே ஆகும்.

🙏 🙏 🙏 🙏 🙏 


Friday, 20 February 2026

உலக தாய்மொழி தினம்

 


உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் தமக்கென்று தத்த மொழியில் தம்முடைய இனத்தாருக்கு கருத்துக்களை தெரிவிக்கின்றன. 

அது நமக்கு புரியாது போனாலும்,ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு, பேசும் வல்லமையும் தமது கருத்துக்களை எடுத்துரைக்கும் வல்லமையும் கொண்ட சாதனம் தான் மொழி.

 மனிதகுலம் தோன்றியதில் இருந்து ஏராளமான குழுக்களாக வாழ்ந்திருக்கிறார்கள். பின்பு சமுதாயங்களாக மாறி, இனங்களாக, நாடுகளாக, பல மாற்றங்களை கண்டுள்ளன. 

தாய்மொழி  என்பதற்கு ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன

உலகெங்கும் 6000 மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டதாக மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். அவற்றுள் குறிப்பிடத் தகுந்த மொழிகள் மட்டுமே, ஏராளமான மக்களால் பேசப்பட்டு, தொன்மை வாய்ந்ததாக, இலக்கண, இலக்கியங்கள் கொண்டுள்ளதாக தனிச்சிறப்புள்ளதாக அமைந்தன. பல மொழிகள் கால வழக்கில் காணாமலே அழிந்து போயிருக்கின்றன, அல்லது அழித்தொழிக்கப்பட்டு இருக்கின்றன. ஆளுமை மிக்க ஆட்சியாளர்களால் பல மொழிகள் காணாமலே போயிருக்கின்றன என்பது வரலாறு. 

இருந்தாலும் அவரவர்க்கு அவரவர் தாய் மொழியே ஒசத்தி. அதைக் குறைத்து பேசுவதற்கோ, குறை கூறுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. தம்முடைய தாய் மொழியில் பேசவும், கற்கவும், எழுதவும் , கருத்துக்களை பரிமாறவும் உரிமை உண்டு என்பதை உலகிற்கு எடுத்து இயம்பிய நாள் தான் உலக தாய்மொழி தினம். இதற்கென்று நிறைய வரலாறுகள் உள்ளன.

 தாய்மொழிக்கு தீங்கு நேரிட்டபோது மாற்று மொழியை திணித்து, நம் மொழியை கீழ்மைப்படுத்திட, அடிமைப்படுத்திட, அலட்சியப்படுத்திட முயன்ற மத்திய ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பித்த பெருமை நம் தமிழினத்திற்கும் தமிழ் மொழிக்கும் உண்டு.

இப்போது உலக தாய்மொழி தின வரலாற்றுக்கு வருவோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் என்ற நாடு இஸ்லாமியர்களுக்கு என்று உருவாக்கப்பட்டது என்றாலும், பூகோள ரீதியாக மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. மேற்கு பாகிஸ்தான் இந்தியாவின் வடமேற்கு திசையில் உருது பேசும் பெரும்பான்மை மக்களை கொண்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானில் இருந்து வெகு தொலைவு தள்ளி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. 

1905-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் சுதந்திரப் போராட்ட உணர்வை மட்டுப்படுத்துவதற்காக வங்காளம் என்ற மாகாணத்தை முஸ்லிம்கள் பெரும்பகுதியான வாழ்ந்த பகுதியை கிழக்கு வங்காளம் என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதியை மேற்குவங்கம் என்றும் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சன் பிரித்தார். எங்களை மத ரீதியாக பிரிக்காதே என்று வங்க மக்களின் ஒன்றுபட்ட கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு. துரதிர்ஷ்டவசமாக இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது வங்க மாநிலத்தை இஸ்லாம் இஸ்லாமிய மக்கள் பெரும் பகுதியாக வாழும் கிழக்கு பகுதியை பிரித்து கிழக்கு பாகிஸ்தான்  என்றும், இந்தியாவோடு ஒருங்கிணைந்த பகுதியை மேற்கு வங்கம் என்றும் அழைத்தார்கள். கிழக்கு பாகிஸ்தான் மக்களது தாய்மொழி வங்கம். மத ரீதியாக ஒரே நாடாக இருந்தாலும் ,மேற்கு பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தானும் இனம் மொழி ஆகியவற்றால் முற்றிலும் வேறுபட்டனர் .

மேற்கு பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக கிழக்கு பாகிஸ்தானில் உருது மொழியை ஆட்சி மொழியாக திணித்தது. தங்களது வங்க மொழி புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்க மொழி பேசும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் இறங்கினார்கள்.மதம் மட்டுமே மக்களை ஒருமைப்படுத்திட முடியாது என்பது உலகிற்கு மீண்டும் நிரூபணம் ஆனது. 

1952 ஆம் ஆண்டு, பிப்ரவரி 21 ஆம் நாளன்று அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தின் போது உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக, அந்நாளைப் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் என்பவர் 1998 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் (யுனெஸ்கோ) முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, வங்காள தேச அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பல்வேறு நாட்டு அமைப்புகளின் ஆதரவுகள் காரணமாக, 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நிலையான சமூகங்களுக்கு கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை யுனெஸ்கோ நம்புகிறது. அமைதிக்கான அதன் கட்டளையின் கீழ், சகிப்புத்தன்மையையும் மற்றவர்களுக்கு மரியாதையையும் வளர்க்கும் கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளில் உள்ள வேறுபாடுகளைப் பாதுகாக்க அது செயல்படுகிறது.  

பன்மொழி மற்றும் பன்முக கலாச்சார சமூகங்கள் அவற்றின் மொழிகள் மூலம் நிலவுகின்றன, அவை பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரங்களை நிலையான முறையில் பரப்பி பாதுகாக்கின்றன.

மேலும் மேலும் மொழிகள் மறைந்து வருவதால் மொழியியல் பன்முகத்தன்மை அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

உலகளவில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் மொழியில் கல்வி பெறுவதற்கான அணுகலைப் பெறவில்லை. ஆயினும்கூட, பன்மொழிக் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது, குறிப்பாக ஆரம்பக் கல்வியில் அதன் முக்கியத்துவம் குறித்த புரிதல் அதிகரித்து வருகிறது, மேலும் பொது வாழ்வில் அதன் வளர்ச்சிக்கு அதிக அர்ப்பணிப்பும் காணப்படுகிறது.

இன்று உலகம் எங்கும் அவரவர் தாய் மொழியை காத்திட உலக தாய்மொழி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.. 

நம்முடைய தொன்மை வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு இடர் நேரிட்டபோது தமிழகத்திலே கடுமையான போராட்டங்களை நடத்தி உயிர்த்தியாகம், பொருள் தியாகம் என பல்வேறு தியாகங்களை செய்து மொழியை காப்பாற்றி வருகிறோம். 

இந்த உலக தாய்மொழி தினத்திலே நம் தாய்த் தமிழை காத்திட சபதம் ஏற்போம்! கீழ்கண்ட உறுதிமொழி ஏற்போம்!! 

"தாய்மொழியைப் போற்றிப் புவிப்பந்தம் காப்போம்!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம்.

தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம்.

அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம்.

குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் பெயா் சூட்டப் பரப்புரை செய்வோம்.

தாய்மொழியான தமிழ் மொழியைக் காக்க, தரம் உயர்த்துவோம். "


சாகிது மினார் (உயிரீந்த மாணவர் நினைவுத் தூண்) 1952, பிப்ரவரி, 21 வங்காள மொழிப் போராட்டத்தைக் கொண்டாடுகிறது.
*********

தமிழுக்கு கானம் பாடிய வானம்பாடிகளுக்கு முதல் வணக்கம்.... தமிழின் சீவனைக்காத்திட. தம் உயிரை பலி கொடுத்த. தமிழ் வீரருக்கு வீர வணக்கம்

எம்மொழி தமிழ் மொழி ஈடு இணை இல்லா எழில் மிகு தொன்மை மொழி எந்நாளும் வாழும் மொழி. ஏற்றம்மிகு இலக்கியங்கள் இயற்றிட்ட அழகு மொழி

அறம் பொருள் இன்பமென அத்தனையும் கண்டதமிழ் அகம் புறம் என வாழ்வியல் அற்புதம் கண்ட தமிழ். ஐவகை நிலம் கண்டு. ஆட்சி செய்த தமிழ்..

அண்ணைத்தமிழ் புகழ் பாடிடுவோம்..
அவரவர் தாய்மொழி காத்திடும் உரிமை 
அனைவருக்கும் உண்டென்று
அகிலம் அதிர உழைத்திடுவோம்.. 

உலக சமூக நீதி தினம்

இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அல்லது பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் எல்லாமே, வாழும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.

 வனத்தில் வசிக்கும் விலங்குகள் கூட தம்முடைய தேவைக்காக வேட்டையாடுவதைத் தவிர மற்ற விலங்குகளை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டுமே ஒட்டுமொத்த உலகையுமே தன்னுடைய லாபத்திற்கு, சுகத்துக்கு மட்டும் என்று ஒதுக்கிக்கொண்டு பிறருக்கான வாய்ப்புகளை மறுப்பதும், துன்புறுத்துவதும் இயற்கை நியதிக்கு முரணானது.

 உலகெங்கும் சமூக நீதி என்பது அறவே இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை  உலக சமூக நீதி தினம் என ஆண்டுதோறும் பிப்ரவரி 20 அன்று கொண்டாடுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையால் 2007-ல் அறிவிக்கப்பட்ட இத்தினம், வறுமை, வேலையின்மை, பாலின சமத்துவமின்மை மற்றும் மனித உரிமை மீறல்களை ஒழித்து, அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை வலியுறுத்துகிறது. 

சமூக வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துதல் என்பதையே இத்தினத்தின் நோக்கமாக கொண்டு,  வறுமை ஒழிப்பு, முழு வேலைவாய்ப்பு, மற்றும் சமூக பாதுகாப்பை வலியுறுத்துகிறது.

சமூக நீதி என்பது சமூகத்தின் ஆதாரங்கள் மற்றும் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் கொள்கையை கொண்டது. 

சமூகத்தில் உள்ள சாதி, மதம், இனம், பாலினம், பொருளாதார நிலை போன்றவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைந்து, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், உரிமைகள் மற்றும் வளங்களை நியாயமாகப் பகிர்ந்தளிப்பதே சமூக நீதி ஆகும். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை வழங்கி, மாண்புடன் வாழ வழிவகை செய்கிறது.

சமூக நீதியின் முக்கிய அம்சங்கள்:

சம வாய்ப்பு: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நன்மைகளில் அனைவருக்கும் சம உரிமை.

பாகுபாடற்ற நிலை : சாதி, பாலினம் அல்லது பொருளாதார நிலைகளின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்க்காத நிலை.

வளங்களை நியாயமாகப் பிரித்தல் : சமுதாயத்தின் பொருளாதார வளங்கள் ஒரு சிலரிடம் மட்டும் குவிந்துவிடாமல், அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.

சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்: பின்தங்கிய மக்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது, அவர்களை மற்றவர்களுக்கு இணையாகக் கொண்டு வருதல். 

சமூக நீதி, வறுமையை ஒழித்தல், வேலையின்மை போன்ற சிக்கல்களைக் களைந்து, அமைதியான மற்றும் சமமான சமுதாயத்தை உருவாக்க உதவுகிறது

தோஹா அரசியல் பிரகடனம் (Doha Political Declaration) என்பது மார்ச் 2023 இல் கத்தாரில் நடைபெற்ற 5-வது ஐக்கிய நாடுகள் சபையின் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (LDC5) மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய சர்வதேச உடன்படிக்கையாகும். 'சாத்தியத்தில் இருந்து செழிப்புக்கு' என்ற கருப்பொருளில், 2022-2031 ஆம் ஆண்டிற்கான தோஹா செயல் திட்டத்தை (DPoA) செயல்படுத்துவதன் மூலம் 46 ஏழை நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடையவும், வறுமையை ஒழிக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இது வழிவகை செய்கிறது.

2026 ஆம் ஆண்டு, உலக சமூக நீதி தினம் " சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு " என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது . இந்த ஆண்டு சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாடு மற்றும் தோஹா அரசியல் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு முக்கியமான கட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது . 1995 கோபன்ஹேகன் பிரகடனத்தின் உறுதிமொழிகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் , உறுப்பினர் நாடுகள் வறுமை ஒழிப்பு, முழுமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் ஒழுக்கமான வேலை, மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை சமூக வளர்ச்சியின் ஒன்று தொடர்புடையது தூண்களாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இந்த கருப்பொருள், அடையப்பட்ட முன்னேற்றத்தை அங்கீகரித்தல் மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் சவால்களை அங்கீகரித்தல் ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது. வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள், தொழிலாளர் சந்தை முறைசாரா தன்மை, பாலின ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வரும் நம்பிக்கை ஆகியவை அடங்கும் மற்றும் நிலையானது வளர்ச்சியைத் தொடர்ந்து தடுக்கின்றன. எனவே புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு என்பது பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களின் கொள்கை ஒத்திசைவை வலுப்படுத்துதல், பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய கொள்கை வகுப்பின் மையத்தில் சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வைப்பதை உள்ளடக்கியது.

தோஹா அரசியல் பிரகடனம் மற்றும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அறுபத்தி நான்காவது அமர்வின் முடிவுகளால் வழிநடத்தப்பட்டு , 2026 அனுசரிப்பு, அரசியல் உறுதிமொழிகளை உறுதியான மற்றும் அளவிடக்கூடிய விளைவுகளாக மொழிபெயர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 

சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதியை முன்னேற்றுவதற்கு, மேக்ரோ பொருளாதாரம், தொழிலாளர், காலநிலை, டிஜிட்டல் மற்றும் தொழில்துறை உத்திகள் முழுவதும் சமூக பரிமாணத்தை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த, சமமான மற்றும் உள்ளடக்கிய கொள்கைகள் தேவை.

இது சம்பந்தமாக, ஒழுக்கமான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை ஊதியங்களை உருவாக்கும், தொழிலாளர் சந்தை நிறுவனங்களை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் பெரிய பொருளாதார கட்டமைப்புகளின் அவசியத்தை நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், முறைசாரா பொருளாதாரத்திலிருந்து முறையான பொருளாதாரத்திற்கு மாறுவதை ஆதரித்தல் மற்றும் டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரங்களில் நியாயமான மற்றும் உள்ளடக்கிய மாற்றங்களை உறுதி செய்தல் ஆகியவற்றில் குறிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், சமூக கூட்டாளிகள் மற்றும் சிவில் சமூகம் இடையே பல பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டது, வளங்கள் திரட்டுவதற்கும், கொள்கை கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கும், யாரையும் பின்தங்குவதற்கும் வைக்காமல் அவசியம். ஆனால் இன்றைய உலக நாடகங்கள் மிகவும் கவலையூட்டுவதாகவே உள்ளன. இயற்கை கனிம வளங்களை சூறையாடுவதற்காக பிற நாடுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கிய அச்சுறுத்துவது சுற்றுச்சூழலை நாசம் செய்வது, உலக மக்களுக்கான உணவு இருப்பிடம் சுகாதாரம் கல்வி வேலை வாய்ப்பு அனைத்திலும் மறுக்கப்படுதலும் அவல நிலையில் வைத்திருப்பதுமான சூழலே நிலவுகிறது. 


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) ஆண்டறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட உலகளாவிய இராணுவச் செலவு தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக 2.4 டிரில்லியன் டாலரைத் தாண்டியது. அதாவது 240 கோடி கோடி டாலர்கள். 

இத்தொகையை உலகம் முழுமைக்கும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தினால், உலகில் பஞ்சம் என்பது காணாமல் போய்விடும். சுகாதாரம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றம் நிகழ்ந்திருக்கும். 

அத்தகைய நாளை அடைய வேண்டும் என்கிற லட்சியத்தை நினைவுபடுத்துவதே இன்றைய உலக சமூக நீதி நாள் ஆகும்...

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...