சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 4 February 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 தலைமை தாங்க தகுதி படைத்தவர் யார் என சங்க காலத்தில் இலக்கணம் படைத்த தமிழ் கூறும் நல்லுலகம் விளம்புகிறது. 

பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்த "கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி" இயற்றிய புறநானூறு பாடலிது. 

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால் தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தை விவரிக்கிறார். 

இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார், பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார், தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார், நல்லோர் அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர், உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பார், பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார், செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி, வலிமையான முயற்சி  உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர்.

மேற்கூறிய நற்குணங்கள் படைத்தவர்களால் தான் உலகம் சிறப்பாக இயங்குகிறது, இவரே சிறந்த தலைவராவார்.

 இவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தால் நாடு செழிக்கும். 

நம் அதிர்ஷ்டம் என்னவென்று சொல்லவும் வேண்டுமோ?! 


********************

உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி; புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !"

       ----புறநானூறு 182.

திணை பொதுவியல்;                   துறை பொருண்மொழிக் காஞ்சி.

கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி 

பாட்டு.

(கடற்கோளின்போது 

பிறர் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் 

உயிர் நீத்தவன் என 

இவனை அறிஞர்கள் கருதுகின்றனர்)

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு



1 comment:

  1. அருமை கார்த்தி. தொடர்ந்து முயற்சிக்கவும்

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...