சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 2 February 2026

இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் விலை போய்க்கொண்டிருக்கிறார்கள்?

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் எது? நீர் வளமா.. நிலவளமா.. கனிம வளமா அல்லது மனித வளமா?

மனித வளம் என்பது அள்ள அள்ள ஊறிவரக்கூடிய ஊற்று.... அது ஒரு வளர்ந்து வரும் அறிவு சுரங்கம்.. 

ஒரு நாட்டின் மிகப்பெரிய செல்வமாக கருதப்படுவது இளைஞர் பட்டாளமும் அவரது அறிவு செல்வமும் தான். 

அதனால் தான் "பாரதி ஒளி படைத்த கண்ணினாய் வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா 

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா என்று இளைஞர்களை பார்த்து வா" என்று வென்று அழைத்தான். 

அதே நோக்கில் தான் புரட்சிக்கவி பாரதிதாசனம் சிறுத்தையே வௌியில் வா!

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வியில் வா! என்று இளைஞர்களை சீறிடச் சொன்னான். 

ஏனெனில் இளைஞர்களுடைய வலிமை என்பது மகத்தானது. 

ஆனால் இன்று நம் தேசத்தில் எவ்வாறு உள்ளது? 

ஒரு கவிஞன் பாடினார்" நீர்வளம் இருந்தும் நிலவளமிருந்தும் கேவலம் தானே மிஞ்சியது எமக்கு" என்று! இதற்கு என்ன காரணம்? 

இளைஞர்கள் தங்களுடைய சக்தியை எல்லாம் விரயமாக்கிக் கொண்டு பல்வேறு வீண் செயல்களில் ஈடுபட்டு, தீய சக்திகளுக்கு விலை போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமான விஷயம்..

 எந்தெந்த விஷயங்களெல்லாம் விலை போகிறார்கள் என்று பட்டியலிட்டு பார்த்தால் போய்க்கொண்டே இருக்கிறது . 

பிரதானமாக மதவெறியை குறிப்பிடுவோமே. இந்நாட்டில் மதவெறியின் விளைவால் ஏற்பட்ட தீங்குகள் எவ்வளவென்று? அனைவருக்கும் தெரியும். பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்தவர்கள், ஆசிபாவை கோவிலிலே கெடுத்தவர்கள், மணிப்பூரிலே மகளிரை நிர்வாணம் ஆக்கியவர்கள், ஊரை நாசமாக்கியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் பெரும்பகுதி யார் என்று நினைக்கிறீர்கள்?முதியவர்களா இல்லை.... தூண்டி விடப்பட்ட இளைஞர்கள் தானே!

 இங்கு கூட கேவலமான ஒருவன் விளக்கேற்றலாம் வா என்று சொன்னவுடன், அறிவு ஜோதியை ஏற்றுவதை விட்டுவிட்டு தீப்பந்தத்தோடு திரிகின்ற இளைஞர்கள் எத்தனை பேர்? நினைத்துப் பாருங்கள்! மதவெறிக்கு விலை போய் நல்லிணக்கத்தை தொலைத்து விட்டு இளைஞர்கள் நாட்டை நாசமாக்குவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

காதலும் வீரமும் பழம் தமிழருக்கு அழகு என்பார்கள். இங்கு சனாதன சக்திகளை உருவாக்கி வைத்த சாதிய தீயிலே கருகிய காதல்கள் எவ்வளவு? 

காதல் காதல் காதல் 

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல் 

என்று பாடினார் பாரதியார் 

ஆனால் இன்றோ காதல் என்றாலே சாதி பார்த்து மோதலும் ஆணவ படுகொலையும் தானே நடக்கிறது 

இயற்கை நீதியான உயரிய காதலை அழிக்க துடித்திடும் இளைஞர் பட்டாளம் எவ்வளவு பேர்? ஆணவக் கொலை செய்திடுவோர் அதிகம் பேர் இளைஞர் தானே?

அறிவு ஜோதி ஏற்றிடும் கல்விக் கூடம் தன்னிலே ஜாதிய வெறி கொண்டு கையில் கட்டும் கயிற்றில் கூட அடையாளம் வைத்து தாக்கி திரிவது இளைஞர்கள் தானே?

அத்தனையும் எதனால்... இளைஞர்கள் சாதிய வெறிக்கு விலை போய் வீணானது தானே காரணம்.. 

அறிவை வளர்த்திடும் வேலையை விட்டு விட்டு அதிகம் போதையிலே அவதிப்படுபவர் இளைஞர் பட்டாளம் தானே? எங்கு நோக்கினும் மதுக்கடைகளும், திருட்டுத்தனமாய் போதை மருந்துகளுமாய் சீரழிந்த இளைஞர் பட்டாளத்தை தான் காண்கிறோமே ஆங்காங்கே போதை மீட்பு மையங்களுக்கான விளம்பரங்கள் தோன்றிடுதல் எதற்காக? ஆயிரம் ஆயிரம் கதைகளை அம்மையங்கள் சொல்லிடுமே..

கலை என்பது மக்களுக்காக. மக்களின் முன்னேற்றத்திற்காக.. ஆனால் கலை என்ற பெயரிலேயே திரைப்படங்கள் இளைஞர்களை சீரழித்து வருவதை கண்கூடாகக் காண்கிறோம். புத்தியை மழுங்கடிக்கும் படங்கள் தானே அதிகம் வருகின்றன. சினிமா கவர்ச்சிக்கு விலை போய் சிந்தனையை சிதற விட்டு சீரழிந்த இளைஞர்கள் எத்தனை பேர்...

அரசியலில் சிலர் சம்பாதிக்க பல இளைஞர்கள் விலை போய்க் கொண்டிருக்கிறார்கள்... 

இன்று மத சார்பு அமைப்புகளிலும், சாதிச்சங்கங்களிலும்... இதுபோன்ற பிற்போக்கு அமைப்புகளிலும் இளைஞர்கள் தானே திரட்டப்படுகிறார்கள்

இன்றைய இளைஞர் கூட்டத்தில் முன்னேறுவதற்காக கல்வி வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் போட்டி போட்டு வருகிறவர்களுடையது எண்ணிக்கை சிறுபான்மையினராக இருக்கையிலே பெரும்பான்மையினர் தவறான வழிகளில் வழிகாட்டப்பட்டு விலை போய்க்கொண்டிருக்கிறார்கள்... தோட்டத்தில் பாதிக்கு மேல் களைகளாக இருந்தால் விளைச்சல் எப்படி இருக்கும்? நன்கு வீரியம் கொண்ட விதைகள் குறைவாக தானே இருக்கும்? இந்நிலை மாறி இளைஞர் விலைபோய் விடாமல் தடுத்து, எதிர்காலத்திற்கு நாட்டின் நல்முத்துக்களால் மாற்றிட வேண்டியது தேசத்தின் மீது, சமாதான சக வாழ்வின் மீது, மத நல்லிணக்கத்தின் மீது, முன்னேற்றத்தின் மீது, நம்பிக்கை கொண்டுள்ள அனைவரது கடமையாகும்...

(இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் விலை போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற தலைப்பில் 1.2.2026 அன்று நட்பு தமிழ் வட்டம் மதுரையின் சார்பில் இணையவழியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் நான் பேசியதன் சுருக்கம்...) 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...