சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 20 February 2026

உலக தாய்மொழி தினம்

 


உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் தமக்கென்று தத்த மொழியில் தம்முடைய இனத்தாருக்கு கருத்துக்களை தெரிவிக்கின்றன. 

அது நமக்கு புரியாது போனாலும்,ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு, பேசும் வல்லமையும் தமது கருத்துக்களை எடுத்துரைக்கும் வல்லமையும் கொண்ட சாதனம் தான் மொழி.

 மனிதகுலம் தோன்றியதில் இருந்து ஏராளமான குழுக்களாக வாழ்ந்திருக்கிறார்கள். பின்பு சமுதாயங்களாக மாறி, இனங்களாக, நாடுகளாக, பல மாற்றங்களை கண்டுள்ளன. 

தாய்மொழி  என்பதற்கு ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன

உலகெங்கும் 6000 மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டதாக மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். அவற்றுள் குறிப்பிடத் தகுந்த மொழிகள் மட்டுமே, ஏராளமான மக்களால் பேசப்பட்டு, தொன்மை வாய்ந்ததாக, இலக்கண, இலக்கியங்கள் கொண்டுள்ளதாக தனிச்சிறப்புள்ளதாக அமைந்தன. பல மொழிகள் கால வழக்கில் காணாமலே அழிந்து போயிருக்கின்றன, அல்லது அழித்தொழிக்கப்பட்டு இருக்கின்றன. ஆளுமை மிக்க ஆட்சியாளர்களால் பல மொழிகள் காணாமலே போயிருக்கின்றன என்பது வரலாறு. 

இருந்தாலும் அவரவர்க்கு அவரவர் தாய் மொழியே ஒசத்தி. அதைக் குறைத்து பேசுவதற்கோ, குறை கூறுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. தம்முடைய தாய் மொழியில் பேசவும், கற்கவும், எழுதவும் , கருத்துக்களை பரிமாறவும் உரிமை உண்டு என்பதை உலகிற்கு எடுத்து இயம்பிய நாள் தான் உலக தாய்மொழி தினம். இதற்கென்று நிறைய வரலாறுகள் உள்ளன.

 தாய்மொழிக்கு தீங்கு நேரிட்டபோது மாற்று மொழியை திணித்து, நம் மொழியை கீழ்மைப்படுத்திட, அடிமைப்படுத்திட, அலட்சியப்படுத்திட முயன்ற மத்திய ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பித்த பெருமை நம் தமிழினத்திற்கும் தமிழ் மொழிக்கும் உண்டு.

இப்போது உலக தாய்மொழி தின வரலாற்றுக்கு வருவோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் என்ற நாடு இஸ்லாமியர்களுக்கு என்று உருவாக்கப்பட்டது என்றாலும், பூகோள ரீதியாக மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. மேற்கு பாகிஸ்தான் இந்தியாவின் வடமேற்கு திசையில் உருது பேசும் பெரும்பான்மை மக்களை கொண்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானில் இருந்து வெகு தொலைவு தள்ளி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. 

1905-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் சுதந்திரப் போராட்ட உணர்வை மட்டுப்படுத்துவதற்காக வங்காளம் என்ற மாகாணத்தை முஸ்லிம்கள் பெரும்பகுதியான வாழ்ந்த பகுதியை கிழக்கு வங்காளம் என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதியை மேற்குவங்கம் என்றும் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சன் பிரித்தார். எங்களை மத ரீதியாக பிரிக்காதே என்று வங்க மக்களின் ஒன்றுபட்ட கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு. துரதிர்ஷ்டவசமாக இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது வங்க மாநிலத்தை இஸ்லாம் இஸ்லாமிய மக்கள் பெரும் பகுதியாக வாழும் கிழக்கு பகுதியை பிரித்து கிழக்கு பாகிஸ்தான்  என்றும், இந்தியாவோடு ஒருங்கிணைந்த பகுதியை மேற்கு வங்கம் என்றும் அழைத்தார்கள். கிழக்கு பாகிஸ்தான் மக்களது தாய்மொழி வங்கம். மத ரீதியாக ஒரே நாடாக இருந்தாலும் ,மேற்கு பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தானும் இனம் மொழி ஆகியவற்றால் முற்றிலும் வேறுபட்டனர் .

மேற்கு பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக கிழக்கு பாகிஸ்தானில் உருது மொழியை ஆட்சி மொழியாக திணித்தது. தங்களது வங்க மொழி புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்க மொழி பேசும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் இறங்கினார்கள்.மதம் மட்டுமே மக்களை ஒருமைப்படுத்திட முடியாது என்பது உலகிற்கு மீண்டும் நிரூபணம் ஆனது. 

1952 ஆம் ஆண்டு, பிப்ரவரி 21 ஆம் நாளன்று அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தின் போது உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக, அந்நாளைப் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் என்பவர் 1998 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் (யுனெஸ்கோ) முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, வங்காள தேச அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பல்வேறு நாட்டு அமைப்புகளின் ஆதரவுகள் காரணமாக, 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நிலையான சமூகங்களுக்கு கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை யுனெஸ்கோ நம்புகிறது. அமைதிக்கான அதன் கட்டளையின் கீழ், சகிப்புத்தன்மையையும் மற்றவர்களுக்கு மரியாதையையும் வளர்க்கும் கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளில் உள்ள வேறுபாடுகளைப் பாதுகாக்க அது செயல்படுகிறது.  

பன்மொழி மற்றும் பன்முக கலாச்சார சமூகங்கள் அவற்றின் மொழிகள் மூலம் நிலவுகின்றன, அவை பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரங்களை நிலையான முறையில் பரப்பி பாதுகாக்கின்றன.

மேலும் மேலும் மொழிகள் மறைந்து வருவதால் மொழியியல் பன்முகத்தன்மை அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

உலகளவில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் மொழியில் கல்வி பெறுவதற்கான அணுகலைப் பெறவில்லை. ஆயினும்கூட, பன்மொழிக் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது, குறிப்பாக ஆரம்பக் கல்வியில் அதன் முக்கியத்துவம் குறித்த புரிதல் அதிகரித்து வருகிறது, மேலும் பொது வாழ்வில் அதன் வளர்ச்சிக்கு அதிக அர்ப்பணிப்பும் காணப்படுகிறது.

இன்று உலகம் எங்கும் அவரவர் தாய் மொழியை காத்திட உலக தாய்மொழி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.. 

நம்முடைய தொன்மை வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு இடர் நேரிட்டபோது தமிழகத்திலே கடுமையான போராட்டங்களை நடத்தி உயிர்த்தியாகம், பொருள் தியாகம் என பல்வேறு தியாகங்களை செய்து மொழியை காப்பாற்றி வருகிறோம். 

இந்த உலக தாய்மொழி தினத்திலே நம் தாய்த் தமிழை காத்திட சபதம் ஏற்போம்! கீழ்கண்ட உறுதிமொழி ஏற்போம்!! 

"தாய்மொழியைப் போற்றிப் புவிப்பந்தம் காப்போம்!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம்.

தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம்.

அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம்.

குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் பெயா் சூட்டப் பரப்புரை செய்வோம்.

தாய்மொழியான தமிழ் மொழியைக் காக்க, தரம் உயர்த்துவோம். "


சாகிது மினார் (உயிரீந்த மாணவர் நினைவுத் தூண்) 1952, பிப்ரவரி, 21 வங்காள மொழிப் போராட்டத்தைக் கொண்டாடுகிறது.
*********

தமிழுக்கு கானம் பாடிய வானம்பாடிகளுக்கு முதல் வணக்கம்.... தமிழின் சீவனைக்காத்திட. தம் உயிரை பலி கொடுத்த. தமிழ் வீரருக்கு வீர வணக்கம்

எம்மொழி தமிழ் மொழி ஈடு இணை இல்லா எழில் மிகு தொன்மை மொழி எந்நாளும் வாழும் மொழி. ஏற்றம்மிகு இலக்கியங்கள் இயற்றிட்ட அழகு மொழி

அறம் பொருள் இன்பமென அத்தனையும் கண்டதமிழ் அகம் புறம் என வாழ்வியல் அற்புதம் கண்ட தமிழ். ஐவகை நிலம் கண்டு. ஆட்சி செய்த தமிழ்..

அண்ணைத்தமிழ் புகழ் பாடிடுவோம்..
அவரவர் தாய்மொழி காத்திடும் உரிமை 
அனைவருக்கும் உண்டென்று
அகிலம் அதிர உழைத்திடுவோம்.. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...