சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 23 February 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 எவை உயர்ந்த பண்புகள்

எந்த சமுதாயம் உயர்ந்ததென்றால் நல்ல, உயர்ந்த பண்புகளைக் கொண்ட மக்கள் நிறைந்த சமுதாயமே உயர்ந்தது, என்று தமிழ் கூறும் நல் உலகம் சங்ககால இலக்கியங்கள் மூலமாக பறைசாற்றுகிறது.  


நல்லந்துவனார் எனும் புலவர் சங்க இலக்கியமான கலித்தொகை வழியாக "ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்களுக்கு உதவுதல்" என்ற உயரிய வரிகளை கொண்ட பாடல் மூலம் உயர்ந்த பண்புகளைப் பட்டியலிடும்போது குறிப்பிடுகிறார். 

வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி தேடி அலைவோருக்கு அலைக்கழிவோருக்குத் தொண்டாற்றி உதவுதல் ஆற்றுதல் என்ற உயர்ந்த பண்பாகும். 

தம்மையே சார்ந்து இருப்பவருக்கு, தமக்கு தொண்டாற்றுபவருக்கு, தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தலே போற்றுதல் என்ற பண்பாகும். 

 பெருமை தரத்தக்கது எது என அறிந்து, அதன்படி நடத்தலே பண்பு என்று சொல்லப்படும். 

தன் உறவுக்காரர்களை, நட்பாய் இருப்போர் விட்டு விலகாமையே அன்பு எனப்படுவதாகும். 

கற்று அறிவது மட்டுமே அறிவு ஆகாது, அறியாமை நிறைந்தவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதலே அறிவு என்று சொல்லப்படுகிறது . 

 சொன்ன சொல்லை மறுத்துப் பேசாமை செறிவு எனப்படும். செறிவு என்பது இறுகுதல், நெருங்குதல் என்னும் பொருளுடையது. 

தான் மறைக்கவேண்டடிய நிகழ்வுகளை பிறர் அறியாவண்ணம் நடந்துகொள்ளுதல் நிறை எனப்படும். 

 அரசனுக்கு எது முறை என்றால் விருப்பம் வெறுப்பின்றி, குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் அவன் உயிரை வாங்குதலேயாகும்.

தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைக்கூட பொறுத்துக் கொள்ளுதலே பொறை எனப்படும். 

எந்த சமுதாயத்தில் ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை ஆகிய உயர்ந்த பண்புகள் நிறைந்துள்ளன. சமுதாயம் ஆகும் என நல்லந்துவனார் கூறுகிறார்.... 

****************** 

ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;

'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;

'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;

'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;

'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; 

'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;

'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;

'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;

'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;

கலித்தொகை – நெய்தற்கலி, பாடல் 133

பாடியவர் – நல்லந்துவனார்

திணை - நெய்தல்

கி.மு. காலத்துப் பாடல்




No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...