எது உண்மையான செல்வம்..
ஒருவருடைய செல்வம் என்பது எதனைக் குறிக்கும்?!
வீடு, மனை, வயல், வாகனங்கள், ஆடை, பொன், நவரத்தினங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள், போன்ற அசையும் அசையா சொத்துகளா என்ற கேள்விக்கு தமிழ் கூறும் நல் உலகில், சங்க கால இலக்கியம் மூலமாக ஒரு அறம் சார்ந்த பதிலை தந்திருக்கிறது.
எத்தனை எத்தனை செல்வங்கள் நிறைந்திருந்தாலும், உடன் இருப்பவர், தம்மை நம்பி இருப்பவர், தம்மை சார்ந்து இருப்போர் அனைவரது துன்பத்தையும் உரிய வகையில் நீக்குதலே சான்றோருக்கான உயர் செல்வமாக நற்றிணை கூறுகிறது.
நற்றிணை 210-வது பாடலில் இடம்பெற்றுள்ள (மிளைகிழான் நன்னன் சேய் நன்னன் பாடியது) இப்பாடல், தன்னைச் சார்ந்தோரின் துயரத்தைக் கண்டு, அந்தத் துயரத்திற்கு அஞ்சி அதனைப் போக்கும் தன்மையை, கருணை கண்ணோட்டத்தை கொண்டிருப்பதே ஒருவன் பெற்ற உண்மையான செல்வம் என்று சான்றோர் கருதுவர் என்ற கருத்தை வலியுறுத்துகிறது...
வளம் மிக்க ஊரின் தலைவனிடம், தலைவியின் துன்பத்தைப் போக்கி, தன்னைச் சார்ந்தோரின் துயரத்தைக் கண்டு அஞ்சுவதே உண்மையான செல்வம் என்று தோழி அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.
*************
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே
** *********
நெல் அறுவடை செய்யப்பட்ட ஈரமான வயலில், வித்து விதைக்கச் சென்ற கூடை, மீனோடு திரும்பி வரும் வளம் மிக்க ஊரனே!பெருமையாகப் பேசுதலும், விரைவாக ஊர்தியில் செல்லுதலும் உண்மையான செல்வம் அல்ல; அது அவரவர் செய்த முயற்சியின் பயனே.
உண்மையான செல்வம் என்பது, தன்னைப் பிரிந்து/சார்ந்து வருந்துபவரின் துன்பத்தைக் கண்டு தானும் வருந்தி அதைப் போக்கும் அருளுடைமையே ஆகும்.
🙏 🙏 🙏 🙏 🙏
No comments:
Post a Comment