சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 2 February 2026

கந்தர்வன்


கந்தர்வன் பிப்ரவரி 3, 1944 - ஏப்ரல் 22, 2004 

***********

1982 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்தில் ஒரு இலக்கியவாதி தொழிற்சங்க இயக்கங்களுக்காக அரசால் பழி வாங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளார்.போய் பாருங்கள்.. என்று ஒரு நண்பர்  கூறினார். 

நான் அவருடைய இயற்பெயரை மறந்து இலக்கியத்திற்காக வைத்துக் கொண்ட கந்தர்வன் என்ற புனைப்பெயரை சொல்லி, சார்நிலை கருவூலத்தில் பணியாற்றிய எனக்கு அறிமுகமான நண்பரிடம் போய் கேட்டேன். அவர் "இந்த மாதிரி பெயரில் யாரும் இங்கு இல்லையே" என்றார். 

"அவருக்கு வேறு பெயர் இருக்கிறது என்று சொன்னார்கள். அவர் இலக்கியவாதி" என்று சொன்னேன். 

அருகில் இருந்த இன்னொரு நன்பர் "சங்கத்துக்காரரா" என்று கேட்டார். 

"ஆமாம் அரசால் பழி வாங்கப்பட்டு இங்கு வந்திருக்கிறார்" என்று சொன்னேன். 

உடனே அவர் "கொக்கி, கொக்கியை பார்க்க வந்திருக்கிறார்" என்று சிரித்தார். 

அவர் எனக்கு ஏற்கனவே கொக்கி என்று பட்டப் பெயர் வைத்திருந்தார். தம்பி பக்கத்து அறையில் மாவட்ட கருவூலத்தில் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் பெயர் நாகலிங்கம் என்று சொல்லி அனுப்பினார். 

நானும் போய் விசாரித்தேன் அந்த ஹாலின் நடுநாயகமாக கம்பீரமாய் அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டினார்கள். நல்ல சிவந்த முகம் அருமையான மீசை . புன்னகைத்தவாறே வாருங்கள் என்று அழைத்து விசாரித்தார். நான் பொது சுகாதார துறையில் பணியாற்றுகிறேன் என்று சொல்லி விட்டு, என்னை அனுப்பிய நண்பரின் பெயரை சொல்லி உங்களை பார்க்க சொன்னார் சொன்னேன். உடனே முகம் மலர்ச்சி அடைந்தது. அருகில் உள்ள ஸ்டூலில் அமர பேச வைத்து பேச ஆரம்பித்தார். எளிதில் கவர்ந்து விடும் முகம். யாரையும் கவர்ந்து விடும் வசீகரமான பேச்சு ஒரு முறை அவரிடம் பேசினாலும் மறக்க முடியாத நிகழ்வை உண்டாக்கும் நளினம். 

பொதுவான விஷயங்களையும் வேலை இருப்பிடம் போன்ற விஷயங்களையும் பேசிவிட்டு பிரிந்தோம். அடிக்கடி வாருங்கள் என்றார். 

அரசுத் துறையில் சங்கங்கள் மிகவும் பலவீனமாக இருந்த நேரம் அது. அரசு ஊழியர்களுக்கு பொது சங்கமாக இருந்த என் ஜி ஓ யூனியன் மிகவும் பலவீனமாக இருந்தது. கருவூலக்கணக்குத்துறை ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திவிட்டு அரசின் மிகப்பெரிய தாக்குதல்களை சந்தித்து நிலை குலைந்து போயிருந்த நேரம் அது. கருவூல கணக்கு துறை போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்றதற்காக 540 அரசு ஊழியர்கள் சிறை சென்று தண்டிக்கப்பட்ட நேரம். கருவூல கணக்கு துறை சங்க நிர்வாகி நவநீதகிருஷ்ணன் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தார். நாகமணி, மற்றொருவர் என இரு கருவூல கணக்கு துறை ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தனர். தலைமை தாங்கிய தலைவர்கள் நீண்ட நாள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு ஊதிய நிறுத்தங்களுடன் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டனர். கிட்டத்தட்ட எல்லா அரசு ஊழியர்களும் அரண்டு போன நேரம். அந்த நேரத்தில் தான் நான் அவரை சந்தித்தேன். அவரை நான் அடிக்கடி சென்று பார்த்து வர ஆரம்பித்தேன். 

அந்தப் போராட்டத் தலைமை தாங்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். 19 மாத தற்காலிக பணி நீக்கத்திலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு, சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது பணியில் சேர்ந்து இருக்கிறார் என்ற விபரம் அப்போது தான் தெரிந்தது.

அவர் மீது இன்னும் ஈர்ப்பும் பிடித்தமும் உருவானது. 

ஏற்கனவே இயக்கப்பணிகளில் ஈடுபட்டிருந்த முத்துகிருஷ்ணன், ராஜேந்திர சிங், ராமச்சந்திரன்,கிட்டன்னா,சீனி கார்த்திகேயன், பாலமுருகன்,முருகானந்தம், தேவேந்திரன்,   போன்ற   ஒத்த கருத்து உடையவர்களை மெல்ல மெல்ல திரட்ட ஆரம்பித்தார்.

 புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்தில வெளியே இருந்த திண்டில் தினசரி சாயங்காலம் அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு நண்பர்களுடன் அமர்ந்து சங்க பரிபாலனம் செய்ய ஆரம்பித்தார். அந்த இடத்திற்கு சங்கப்பலகை என்று பெயரிட்டிருந்தார். பொது சங்கமான என் ஜி ஓ யூனியன்  அரசிடம் சரணடைந்திருந்ததால் போராட்ட குணம் உடைய சங்க ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். புறக்கணிக்கப்பட்ட சங்க தலைவர்கள் தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த பணியை புதுக்கோட்டையில் கந்தர்வன் மிகச் சிறப்பாக செய்து வந்தார். தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய போராட்ட குணம் உடையோர் ஒன்றிணைந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கிய போது, அதனுடைய மாவட்ட தலைவராக பணியாற்றி ஏராளமான சங்க உணர்வுள்ளவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் கந்தர்வன்.

1975ல் உருவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். புதுக்கோட்டையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினை  முத்து நிலவனுடன்  இணைந்து மிகப்பெரிய வீச்சுக்கு கொண்டு வருவதற்கு காரணகர்த்தாவாக திகழ்ந்தார். ஏராளமான கலை இலக்கிய  ஆர்வலர்களை கவர்ந்திருக்கக்கூடிய மாபெரும் சக்தியாக புதுக்கோட்டையில் திகழ்ந்தார். நிறைய எழுத்தாளர்களை பேச்சாளர்களை நடிகர்களை ஆர்வமூட்டி முன்னுக்கு கொண்டு வந்த சிறப்பான முன்னோடி அவர். திக்கு வாயாக இருந்த என்னை கூட பேச்சாளராக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு இலக்கிய கூட்டங்களில் முன்னிறுத்தி வளர்த்ததில் பெரும்பங்கு அவருக்குண்டு.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓராண்டிற்குள்ளேயே அவர் காலமானது இலக்கிய உலகிற்கு பேரிழப்பு. 

கிழிசல்கள்,மீசைகள்,சிறகுகள்,கந்தர்வன் கவிதைகள் போன்ற கவிதை நூல்கள் மற்றும் சாசனம்,பூவுக்குக் கீழே,கொம்பன்,ஒவ்வொரு கல்லாய்,அப்பாவும் மகனும், தண்ணீர் என சிறுகதைத் தொகுப்பு நூல்கள் ஆகியவை அவர் படைத்த படைப்புகளாகும். அவர் படைத்த படைப்புகளில் நிறைய கையெழுத்து பிரதிகளாக நான் படித்திருக்கிறேன். எழுதியவுடன் அருகில் உள்ளவர்களிடம் கொடுத்து கருத்துக்களை கேட்பார். இந்த இலக்கிய ரசனை எல்லோரிடமும் இருக்க வேண்டுமென விரும்புவார்.

 எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். அவரது சாசனம் என்ற கதை பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் அவர்களால் திரைப்படமாக்கப்பட்டது. 

அவரது நினைவாக இன்று புதுக்கோட்டையில் கலை இரவு நடத்துவது என்பது அவருக்கு செய்யக்கூடிய மாபெரும் அஞ்சலி ஆகும். 

**********

மண்ணை கல்லாக்கி

கல்லை சிலையாக்கி

சிலையையும் பேச, 

சிந்திக்க வைக்கும்

மகா வித்தகன் ... 


புல் பூண்டு முளையா 

பொட்டல் தரையிலும்

விதைத்து பயிர் செய்யும் 

வித்தைகள் தெரிந்தவன். 


கதை கவிதை, நாடகமென

கலை பல கற்றவன்- பிறர்

கற்றிட வகை செய்திட்ட

கலைஞன் அவன்... 


அரசுப்பணி யோடு- சிவப்பு 

அரசியல் பணி செய்து

அகிலம் மாறிட, புரட்சி மலர

அவனி சிவந்திட உழைத்தவன்.. 


அன்பு, அரவனைப்பு

ஆனந்தம், ஆவேசம். சினமென

எதனையும் மறைக்கா

சிறு குழந்தையவன்... 


அவன் தான் மனிதன் 

அவன் ஒரு கலைஞன்

அவன் ஒரு புரட்சியாளன்

அவன் பெயர் தானே 

கந்தர்வன்.. கந்தர்வன்... 



10 comments:

  1. இப்படி பட்ட உயர்ந்த மனிதரை சந்திக்காதது வருந்த தக்கது.☺

    ReplyDelete
  2. எழுத்தாளர் கந்தர்வன் குறித்த சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சிறப்பான அறிமுகம் நன்றி சார்

    ReplyDelete
  5. Sooper anna nanum parthirukiren

    ReplyDelete
  6. Very good summury on g n

    ReplyDelete
  7. நா.முத்துநிலவன்Saturday, February 07, 2026

    1982ஆம் ஆண்டு புதுக்கோட்டை தமுஎச சார்பில் தசுலுதி (அப்போது டிஇஎல்சி) மேநி. பள்ளியில் பாரதி நூற்றாண்டு விழா நடத்தினோம். அதற்குப் பிறகே கந்தர்வன் புதுக்கோட்டை வந்தார். 1984அரசு ஊழியர் சங்கம் தோன்றிய மதுரை விழாவுக்கு இங்கிருந்து ஒரு பெரும் பட்டாளமே போனோம்! ஆரம்ப ஆண்டுகளில் ஆசிரியர்களும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்ட போது, அவர் மாவட்டத் தலைவராக, நானும் துணைத் தலைவர்களில் ஒருவராகப் பணியாற்றினோம்...அப்போது சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பைப் புதுக்கோட்டையில் தான் உருவாக்கினோம். முதல் கூட்டம் கீழ் 4ஆம் வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. ஜி என் தலைமையில் நானும் பா.கிருஷ்ண குமாரும் பேசினோம்...பெரும் வரலாறு!

    ReplyDelete
    Replies
    1. ஆம். 1982 கடைசில வந்தார்.

      Delete
  8. பெருமையாக இருக்கிறது ..
    1980 ஜனவரி4ம் நாளில் வாலிபர் சங்கத்தின் சார்பிலே ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்கின்ற பதாகையின் கீழ் நடந்த .. தேர்தல் அரசியல்
    பேரணியில் தோழர் குட்டி ஜெயபிரகாசை பறிகொடுத்தோம் .
    1982ல் அனுப்பானடியின் விடிவெள்ளியாகத் தோன்றிய தோழர் சீனி .கார்த்திகேயன் மருந்தாளுனராக புதுக்கோட்டை சென்று.. கட்சியை வளர்த்து.. பல தளங்களில் சுழன்று விளையாடி.. ஓர் முத்தாய்ப்பை பதித்திருக்கிறார் .
    ..என்று நினைக்கும் போது உண்மையிலேயே எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது .
    வாழ்த்துக்கள் தோழர் ...
    தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள் ..

    ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டே இருப்போம்...விடியும் போது விடியட்டும்...என்ற
    ஜீவாவின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும்..
    தொடர்க ..எழுத்து.. கருத்துப் பணியினை...

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...